Published:Updated:

நின்றுபோன எஸ்.ஐ.பி மாதத் தவணை... மீண்டும் தொடர முடியுமா..?

கேள்வி - பதில்

பிரீமியம் ஸ்டோரி

உமா மகேஸ்வரி, களத்தூர்

கடந்த மூன்று மாதங்களாக எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர முடியவில்லை. அதை மீண்டும் தொடர வேண்டுமெனில், நான் என்ன செய்ய வேண்டும்?

ஶ்ரீநிதி, இயக்குநர், எம்.ஆர் டிஸ்ட்ரிபியூஷன் சர்வீசஸ், கோயம்புத்தூர்.

“மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி-யில் குறிப்பிட்ட தேதி யில் பணம் கட்டத் தவறினால், அதற்கு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அபராதம் எதுவும் விதிக்காது. தொடர்ந்து மூன்று தவணைகள் எஸ்.ஐ.பி முதலீட்டை மேற்கொள்ள வில்லை எனில், உங்கள் எஸ்.ஐ.பி முதலீடு தானாக ரத்தாகிவிடும். மீண்டும் தொடர வேண்டும் எனில், புதிதாக அதே ஃபண்டில், அதே ஃபோலியோ எண்ணில் எஸ்.ஐ.பி முதலீட்டை ஆரம்பித்துக்கொள்ளலாம். இதற்கு நீங்கள் ஏற்கெனவே எஸ்.ஐ.பி தொடங்கிய மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டரை அணுகவும்.”

நின்றுபோன எஸ்.ஐ.பி மாதத் தவணை... மீண்டும் தொடர முடியுமா..?

பழனிச்சாமி, பத்தமடை,

எனக்கு மாத வருமானமாக ரூ.13,000 கிடைக்கிறது. நான் வரி கட்ட வேண்டிய அவசியம் இருக்குமா எனத் தெளிவுபடுத்தவும்.

ஆர்.ஜெகதீஷ் ஆடிட்டர், தேனி.

“வரி கட்ட வேண்டிய தேவையில்லை. உங்களின் மாத வருமானம் ரூ.13,000 எனில், ஆண்டு வருமானம் ரூ.1,56,000 ஆகும். இந்திய வருமான வரிச் சட்டப்படி, 60 வயதுக்கு உட்பட்டவர்களின், வரிச் சலுகைகள், தள்ளுபடி கழித்ததுபோக உள்ள தொகை அதாவது, வரிக்கு உட்பட்ட வருமானம் நிதி ஆண்டில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் இருந்தால்தான் வரி கட்ட வேண்டும். இதுவே மூத்த குடிமக்களுக்கு (60 வயதுக்கு மேல் 80 வயதுக்குள்) ரூ.3 லட்சமாகவும், மிகவும் மூத்த குடிமக்களுக்கு (80 வயதுக்கு மேல்) ரூ.5 லட்சமாகவும் இருக்கிறது.

அந்த வகையில் உங்கள் வயது எதுவாக இருந்தாலும் நீங்கள் வருமான வரி கட்டத் தேவையில்லை. இதனால், நீங்கள் வரிக் கணக்கும் தாக்கல் செய்யத் தேவையில்லை.’’

எஸ்.பி.ஆனந்தராஜ், பாடியநல்லூர்.

ஜி.எஸ்.டி-யின்கீழ் பதிவு செய்து வியாபாரம் செய்துவருகிறேன். சில நேரங்களில் பதிவு செய்யாத நபர்களிடமிருந்து பொருள்களை வாங்கி விற்பனை செய்யும் சூழல் ஏற்படுகிறது. அப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

சு.செந்தமிழ்ச் செல்வன், ஜி.எஸ்.டி ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர்.

“ஜி.எஸ்.டி சட்டம் பிரிவு 9(4)-ன்படி, பதிவு செய்த ஒரு நபர், ஒரு பதிவு செய்யாத நபரிடமிருந்து ஒரு பொருளோ சேவையோ பெற்றால், பதிவு செய்த வரி செலுத்துபவர் ரிவர்ஸ் சார்ஜ் (ஆர்.சி.எம்) அடிப்படையில் ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும். இங்கு சப்ளை யருக்குப் பதிலாக, பெறுநர் வரி பொறுப்புகளை ஏற்கும் நிலை உள்ளது. ஆகவே, பதிவு செய்யாத நபர்களிடமிருந்து பொருள்களை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.”

ஶ்ரீநிதி, ஆர்.ஜெகதீஷ், சு.செந்தமிழ்ச் செல்வன்,  பா.பத்மநாபன், எஸ்.ஶ்ரீதரன், தி.ரா.அருள்ராஜன், ரெஜிதாமஸ்
ஶ்ரீநிதி, ஆர்.ஜெகதீஷ், சு.செந்தமிழ்ச் செல்வன், பா.பத்மநாபன், எஸ்.ஶ்ரீதரன், தி.ரா.அருள்ராஜன், ரெஜிதாமஸ்

சூரியகாந்த் ராதாகிருஷ்ணன், இ-மெயில் மூலம்.

என் வயது 36. மாதச் சம்பளம் ரூ.46,000. என்னால் மாதம் ரூ.10,000் முதலீடு செய்ய முடியும். மியூச்சுவல் ஃபண்டில் 10, 15 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 15% வருமானம் கிடைத்தால் என்ன தொகை கிடைக்கும்?

பா.பத்மநாபன், நிதிஆலோசகர், Fortuneplanners.com

“மியூச்சுவல் ஃபண்டில் வரும் 10 வருடங்களில் 15% ரிட்டர்ன் கொடுப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மாதம்தோறும் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அப்படிச் செய்தால் 10 வருடங்களில் 15% வருமானம் என எடுத்துக் கொண்டால் ரூ.27,86,500 கிடைக்கும். இதுவே, 15 வருடம் முதலீடு செய்தால் ரூ.67,68,650 கிடைக்கும்.

நீண்ட கால அடிப்படையில் அதுவும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) முறையில் முதலீடு செய்யும்போது ஏற்ற இறக்கத்தைப் பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை. இந்த 15% வருமான எதிர்பார்ப்பைவிட 12% வருமான எதிர்ப்பை வைத்துக் கொண்டால் நிதி இலக்குகளை சுலபமாக நிறைவேற்ற முடியும்.”

அ.தேன்மொழி, கல்லிடைக்குறிச்சி.

நான் ஒரு மாற்றுத்திறனாளி. சுமார் 50% ஊனம் இருக்கிறது. நான் டேர்ம் பிளான் எடுக்க முடியுமா?

எஸ்.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர்,Wealthladder.co.in

“நீங்கள் உங்களை ஒரு மாற்றுத் திறனாளி என்றுதான் சொல்லி இருக்கிறீர்களே தவிர, எந்த வித மான மாற்றுத்திறனாளி என்று சொல்லவில்லை. பொதுவாக, மாற்றுத்திறனாளிகளுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை காப் பீட்டு நிறுவனங்கள் வழங்கினாலும், மாற்றுத்திறனாளியின் தன்மையைப் பொறுத்தே இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் முடிவு செய்யும்.”

கே.துரைராஜ், இ-மெயில் மூலம்.

கான்ட்டிரேரியன் முதலீடு (Contrarian Investing) முதலீடு என்றால் என்ன, இது எந்தெந்த முதலீடுகளில் பயன்படுகிறது?

தி.ரா.அருள்ராஜன், முதன்மைச் செயல் அதிகாரி, Ectra.in

“ ‘கான்ட்ரா’ எனில், ‘எதிர்’ என்று அர்த்தம். பொதுவாக, பங்குச் சந்தை ஏற்றம் காணும்போது சில முதலீட் டாளர்கள் வாங்குவார்கள்; இறங்கும்போது விற்றுவிடுவார்கள். இதற்கு எதிர்மாறாகச் செயல்படுவதுதான் கான்ட்டிரேரியன் இன்வெஸ்ட்மென்ட். அதாவது, பங்குச் சந்தை பெரிய அளவில் இறங்கும்போது வாங்கி, நன்கு ஏறிய பிறகு விற்றுவிடுவார்கள்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு எல்.ஐ.சி நிறுவனம். சந்தை பெரும் வீழ்ச்சி காணும்போது எல்.ஐ.சி நிறுவனம் அதிகம் முதலீடு செய்யும். சந்தை நன்கு ஏறிய பிறகு விற்றுவிடும். மியூச்சுவல் ஃபண்டில் கான்ட்டிரேரியன் முதலீடு அடிப்படையில் செயல்படும் சில ஃபண்டுகள் உள்ளன.’’

சந்தியாகுமார், கோயம்புத்தூர்.

நான் ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) பங்குகளை நீண்ட கால முதலீட்டுக்கு வாங்கத் திட்டமிட்டுள்ளேன். இந்திய ரயில்வே தனியார்மயமானால் இந்தப் பங்கின் விலை குறையுமா?

ரெஜிதாமஸ், பங்குச் சந்தை நிபுணர்.

“இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டிக்கெட் முன்பதிவு சேவையை அளித்துவரும் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்துக்கு மாற்று எதுவும் இப்போது இல்லை. இந்த நிறுவனம், பட்ஜெட் ஹோட்டல்கள், சுற்றுலா சேவை போன்றவற்றையும் மேற்கொண்டு வருகிறது.

ரயில்வேயை தனியார் மயமாக்குவது ஒரே நாளில் நடக்கக்கூடிய விஷயமல்ல; தவிர, அதில் பல சவால்களும் உண்டு. தற்போதைய நிலையில், இந்த நிறுவனத்துக்கு அதிக பாதிப்பு இருக்காது. எல்லா நிறுவனப் பங்குகளிலும் இருக்கும் அதிக ஏற்ற இறக்கம் இந்த நிறுவனப் பங்குகளிலும் இருக்கும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு