Published:Updated:

10-ம் வகுப்பு படித்தவர்கள் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா..?

கேள்வி - பதில்

பிரீமியம் ஸ்டோரி

ரவிக்குமார், அயனாவரம், சென்னை.

டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க 10-ம் வகுப்புக்கு மேல் படித்திருக்க வேண்டுமா, ஆண்டு வருமானம் குறைந்தது எவ்வளவு இருக்க வேண்டும், டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேறு ஏதாவது சிறப்புத் தகுதி அல்லது சான்றிதழ் தேவையா?

சி.கேசவன், பிசினஸ் டெவலப்மென்ட் மேனேஜர், ஆதித்ய பிர்லா கேப்பிடல்.

“ஆம், இப்போது அனைத்துக் காப்பீட்டு நிறுவனங்களும் டேர்ம் இன்ஷூரன்ஸுக்குக் குறைந்தபட்ச கல்வித் தகுதி பட்டப்படிப்பு (Graduate) என நிர்ணயித்திருக்கின்றன. தவிர, ப்ளஸ் டூ மற்றும் மூன்றாண்டு பட்டயப்படிப்பை (Diploma) பட்டப்படிப்புக்கு இணையாக ஏற்றுக்கொள்கின்றன.

மாதச் சம்பளம் வாங்குபவர்களின் ஆண்டு வருமானம் குறைந்தபட்சம் ரூ. 3 லட்ச ரூபாயும் தொழில்முனைவோருக்கு ரூ.5 லட்ச ரூபாயும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க் கின்றன. சிறப்புத் தகுதி எதுவும் தேவையில்லை. நன்கு வருமானம் ஈட்டுபவராகவும் அதை நிரூபிக்கும் வகையில் தகுந்த ஆவணங்களைக் கொண்டிருப்பவராகவும் இருக்க வேண்டும். டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வருமானச் சான்றிதழ் கட்டாயம் ஆகும்.”

10-ம் வகுப்பு படித்தவர்கள் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா..?

எஸ்.சுரேஷ்குமார், சேலம்.

நான் நீண்ட கால மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர். ரெகுலர் பிளானில் நான் செய்துவரும் எஸ்.ஐ.பி-யை நிறுத்துவிட்டு, அதே ஃபண்டில் டைரக்ட் பிளானுக்கு மாறத் திட்டமிட்டுள்ளேன். இப்படிச் செய்வதால் எதிர்காலத்தில் ஏதாவது சிக்கல் வர வாய்ப்புள்ளதா?

ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in

“இப்படிச் செய்வதால் எதிர்காலத்தில் எந்தவொரு நடைமுறைச் சிக்கலும் வராது. இருப்பினும் ஓரிரு விஷயங்களை நீங்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்.

முதலில், நீங்கள் வைத்திருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டமானது நன்கு நிர்வகிக்கப்படுகிறதா, லாபம் கொடுக்கக் கூடிய ஃபண்டா என்று முதலில் உறுதி செய்துகொள்ளுங்கள். இரண்டாவதாக, பிற்காலத்தில் இந்த ஃபண்டைத் தொடர்ந்து கண்காணித்து வரும் பொறுப்பு உங்களுடையது என்பதையும் ஏற்றுக்கொள்ளுங்கள். அந்த ஃபண்டின் செயல்பாட்டை உங்களால் சரியாகக் கணிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், இந்த மாற்றம் உங்களுக்கு செலவைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும். இல்லையெனில், ஒரு நிதி ஆலோசகர் துணை கொண்டு ரெகுலர் பிளானில் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள்.’’

எஸ்.முத்துகுமார், மதுரை.

சூரியோதை ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் பங்குகளைத் தொடர்ந்து வைத்திருக்கலாமா? ஆலோசனை வழங்கவும்.

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்.

“ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சரியில்லை என்பதால் இந்த வங்கிப் பங்கின் விலை இறக்கத்தில் இருந்து வருகிறது. இந்த வங்கியின் நிகர வாராக் கடன் என்பது 9.5% அளவுக்கு மிகவும் அதிகமாக உள்ளது. இது மிகவும் மோசமான நிலையாகும். மேலும், இந்த வங்கியின் வரிக்கு முந்தைய லாபம் மிகவும் குறைந்துள்ளது.

இந்த வங்கிப் பங்கின் விலை தற்போது ரூ.175 மற்றும் ரூ.180 இடையே வர்த்தகமாகி வருகிறது. பங்கின் விலை ரூ.174-க்கு கீழே இறங்கினால், அது மேலும் கீழே இறங்கி, ரூ.150 வரை இறங்க வாய்ப்புள்ளது. இந்த வங்கியின் இரண்டாம் காலாண்டு முடிவு எப்படி வருகிறது என்பதைப் பொறுத்து பங்கின் விலையில் ஏற்ற இறக்கம் இருக்கும். வாராக் கடன் மிகவும் அதிகரிக்கும் பட்சத்தில் பங்கின் விலை மிகவும் இறங்க வாய்ப்புள்ளது. எனவே, சூழ்நிலையை அனுசரிந்து முடிவு எடுப்பது நல்லது.”

சி.கேசவன், ஶ்ரீகாந்த் மீனாட்சி, வி.தியாகராஜன், ஆடிட்டர் ஜி.கே.சீனிவாஸ்
சி.கேசவன், ஶ்ரீகாந்த் மீனாட்சி, வி.தியாகராஜன், ஆடிட்டர் ஜி.கே.சீனிவாஸ்

உ.முத்துசாமி, காஞ்சிபுரம்.

வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் செய்தபோது, தன் உறவினரை நாமினியாக நியமித்திருக்கிறார் ஒருவர். இந்த நிலையில், ஃபிக்ஸட் டெபாசிட் செய்தவரின் மறைவுக்குப் பின் நாமினி அந்த ஃபிக்ஸட் டெபாசிட் தொகையைப் பெற என்னென்ன வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்?

வி.தியாகராஜன், ஆடிட்டர், www.bizlane.in

“அந்த வங்கி வழங்கும் இழப்பீட்டுப் படிவத்தைப் (Claim Form) பூர்த்தி செய்து, அத்துடன் ஃபிக்ஸட் டெபாசிட் சான்றிதழின் அசல், ஃபிக்ஸட் டெபாசிட் தாரரின் இறப்புச் சான்றிதழ் நகல், உறவினரை நாமினியாகப் பதிவு செய்யப்பட்ட கடிதம் / சான்றிதழ் மற்றும் நாமினியான உறவினரின் அடையாளச் சான்றிதழ் மற்றும் முகவரிச் சான்றிதழின் நகல் ஆகியவற்றை இணைத்துக் கொடுக்க வேண்டும்.

இத்துடன் சில வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் இழப்பீடுப் பத்திரத்தையும் (Indemnity Bond) கேட்டுப் பெற்றுக் கொள்வார்கள்.

சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களின் உண்மைத் தன்மையைச் சரிபார்த்த பிறகு ஃபிக்ஸட் டெபாசிட் தொகை நாமினிக்கு வழங்கப்படும். இதில், நாமினி (Nominee) மற்றும் சட்ட வாரிசு (Legal Heir) இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும்.”

கோபி கிருஷ்ணா, ராஜபாளையம்.

மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பங்குகளில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.கள்) முதலீடு செய்வது எப்படி என விளக்கிச் சொல்லவும்?

ஆடிட்டர் ஜி.கே.சீனிவாஸ், கோவை.

“வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) மற்றும் இந்திய வம்சாவளியைச் சார்ந்த நபர்கள் (PIO) ஆகியோர் இந்தியாவில் செய்த முதலீடு மற்றும் லாபத்தைத் தாங்கள் வாழும் நாட்டுக்கே கொண்டுசெல்லும் வகையிலும் (Repatriation basis) மற்றும் இந்தியாவிலேயே வைத்திருக்கும் வகையிலும் (லாபத்தை எடுத்துச் செல்ல முடியாது - Non-Repatriation basis) இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய முடியும். இதற்கு என்.ஆர்.இ கணக்கு, என்.ஆர்.ஓ கணக்கு ஆகிய இரண்டு வகையான வங்கிக் கணக்குகளை ஏதேனும் ஒரு வங்கியில் தொடங்க வேண்டும்.

இந்தியாவில் செய்யப்படும் முதலீடு மற்றும் லாபத்தை தாங்கள் வாழும் நாட்டுக்கே கொண்டுசெல்லும் (Repartriation) வகையில் தொடங்கப்படும் கணக்குக்கு என்.ஆர்.இ கணக்கு என்று பெயர். இந்தியாவில் செய்யப் படும் முதலீடு மற்றும் லாபத்தை இந்தியாவிலேயே வைத்திருக்கும் அடிப்படையில் தொடங்கப்படும் கணக் குக்கு (Non-Repartriation) என்.ஆர்.ஓ கணக்கு என்று பெயர்.

வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் முதலீடு செய்வதற்கு முன்பு, உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் (KYC) போன்ற அனைத்து ஒழுங்குமுறைத் தேவைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகள், என்.ஆர்.ஐ மூலமாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் இருந்து முதலீடு செய்யக்கூடிய என்.ஆர்.ஐ-கள், தங்களின் முதலீட்டைச் செய்யும்முன் அதற்கான சாத்தியக் கூறுகளைத் தகுந்த நிதி ஆலோசகரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது அவசியம்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு