Published:Updated:

பஞ்சாயத்து அப்ரூவல் மனையை விற்பனை செய்ய முடியுமா..?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

அஞ்சனா ஶ்ரீனிவாஸ், திருச்சி

திருச்சி அருகே 2015 ஜூன் மாதத்தில் பஞ்சாயத்து அப்ரூவ்டு மனை வாங்கினேன். அந்த மனையை ஒழுங்குமுறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் நான் டி.டி.சி.பி மனையாக மாற்றவில்லை. அந்த மனையை நான் இப்போது விற்க முடியுமா?

ஆ.ஆறுமுக நயினார், வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம், முன்னாள் கூடுதல் தலைவர், பதிவுத்துறை.

“ஏற்கெனவே உங்கள் இடம் வீட்டுமனையாகப் பதிவு செய்யப் பட்டிருப்பதால், அதை மீண்டும் மனையாக விற்கத் தடையில்லை. அதாவது, 2016 அக்டோபர் 20-ம் தேதி மற்றும் அதற்கு முன் பத்திரப் பதிவு செய்யப்பட்ட பஞ்சாயத்து அப்ரூவல் மனைகளை விற்பனை செய்யவோ, வாங்கவோ தடை எதுவும் இல்லை. ஆனால், டி.டி.சி.பி அங்கீகாரம் பெறாத மனையை விலை குறைவாகத்தான் கேட்பார்கள். அதற்கு நீங்கள் தயார் எனில், விற்பனை செய்யலாம்.”

பஞ்சாயத்து அப்ரூவல் மனையை 
விற்பனை செய்ய முடியுமா..?

இளங்கோ, நாணயம் விகடன் முகநூல் மூலம்.

வங்கி வைப்பு நிதி அல்லது எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் திட்டம்... எதில் பணம் போடலாம்?

வி.கோபாலகிருஷ்ணன், நிறுவனர், https://www.moneyavenues.in/

“வங்கி வைப்பு நிதியும் எண்டோவ்மென்ட் காப்பீட்டுத் திட்டமும் ஒப்பிட முடியாத வெவ்வேறு நோக்கங் களுக்கானவை. அதிலும் குறிப்பாக, எண்டோவ்மென்ட் திட்டங்கள் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களால் வழங்கப்படும் மிக நீண்டகாலத் திட்டம் ஆகும். இது காப்பீடு மற்றும் சேமிப்பு ஆகிய இரண்டும் இணைந்த திட்டம் ஆகும். ஆனால், இந்த இரண்டின் மூலமும் கிடைக்கும் பலன்களும் குறைவாகவே இருக்கும். எனவே, எண்டோவ்மென்ட் பாலிசியைத் தவிர்த்து, ஆயுள் காப்பீட்டு நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள டேர்ம் பிளான் எடுத்துக்கொள்ளவும்.

வங்கி வைப்பு நிதி என்பது சில ஆண்டுகளுக்கு மட்டும் முதலீடு செய்யக்கூடிய திட்டமாகும். உங்கள் முதலீட்டுக் காலம் ஒரு சில ஆண்டுக்குள் எனில், வங்கி வைப்புத் திட்டத்தில் பணம் போடலாம். முதலீட்டுக் காலம் 5, 10, 15, 20 ஆண்டுகள் எனில், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களான நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம். இதுவே மூன்று ஆண்டுக்கு உட்பட்ட குறுகிய கால முதலீடு என்கிறபட்சத்தில், கடன் சார்ந்த ஃபண்ட் திட்டங் களில் முதலீடு செய்யலாம்.”

பி.பழனியப்பன், திருவொற்றியூர்

சிறிய அளவில் ஒரு நகைக்கடையை நடத்தி வருகிறேன். என்னிடம் வரும் வாடிக்கையாளரிடமிருந்து பழைய தங்க நகைகளை வாங்கி சுத்தம் செய்து, பாலீஷ் போட்டு உருமாற்றம் செய்யாமல் அப்படியே விற்பனை செய்தால், அதற்கு ஜி.எஸ்.டி செலுத்த வேண்டுமா?

சு.செந்தமிழ்ச் செல்வன், ஜி.எஸ்.டி ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர்

“பொருள்களின் தன்மையை மாற்றம் செய்யாமல் விற்பனை செய்யப்படும் பயன்படுத்தப் பட்ட பொருள்களுக்கு, விதிமுறை 32(5)-ன் படி, விற்பனை விலைக்கும் கொள்முதல் விலைக்கும் உள்ள வித்தியாசத் தொகைக்கு ஜி.எஸ்.டி செலுத்தினால் போதுமானது. பயன் படுத்தப்பட்ட பொருள்களை வாங்கும்போது உள்ளீட்டு வரி வரவைப் (Input tax) பயன்படுத்த முடியாது.”

கேசவமூர்த்தி, ட்விட்டர் மூலம்.

நான் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதற்குப் பதில் சந்தை இறக்கத்தில் எல்லாம் முதலீடு செய்யலாம் எனத் திட்டமிட்டிருக் கிறேன். இது சரியான முதலீட்டு முறையாக இருக்குமா?

ஆர்.வெங்கடேஷ், நிறுவனர், www.gururamfinancialservices.com

“பங்குச் சந்தையைக் கணித்து நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யும் திறன் எனக்கு இருக்கிறது எனப் பலர் எஸ்.ஐ.பி முதலீட்டை மேற்கொள்வதில்லை. அவர்கள் இடையிடையே சந்தையின் இறக்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். ஒருவரால் எத்தனை முறை சந்தையின் இறக்கத்தை மிகச் சரியாகக் கணிக்க முடியும்? யாராலும் சந்தையின் போக்கை 100% துல்லியமாகக் கணிக்க முடியாது. தவிர, பங்குச் சந்தை அல்லது பங்கு விலை ஏற அல்லது இறங்க பல காரணங்கள் இருக்கலாம். எனவே, பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டில் நீண்ட காலத்தில் நல்ல லாபம் பார்க்க எஸ்.ஐ.பி-யைவிட சிறந்த முதலீட்டு முறை வேறு இல்லை.”

பொன் குமார், கோயம்புத்தூர்.

பொது சேமநல நிதித் திட்டத்தில் (PPF) முதலீடு செய்து வருபவர், திட்டக் காலம் 15 ஆண்டுகளுக்குள் இறந்துவிட்டால், நாமினி அந்தத் தொகையை எடுத்துக்கொள்ள முடியுமா?

ஆ.ஆறுமுக நயினார், வி.கோபாலகிருஷ்ணன், சு.செந்தமிழ்ச் செல்வன், ஆர்.வெங்கடேஷ், அனிதா ஆர் பட், டி.ஜீவா, த.முத்துகிருஷ்ணன்
ஆ.ஆறுமுக நயினார், வி.கோபாலகிருஷ்ணன், சு.செந்தமிழ்ச் செல்வன், ஆர்.வெங்கடேஷ், அனிதா ஆர் பட், டி.ஜீவா, த.முத்துகிருஷ்ணன்

அனிதா ஆர் பட், நிதி ஆலோசகர், http://aniram.in/

“பி.பி.எஃப் சந்தாதாரர் இடையில் இறந்துவிட்டால், அந்தத் தொகையை நாமினி க்ளெய்ம் செய்யும் வரை முதலீட்டுத் தொகைக்கு வட்டி தரப்படும். அதே நேரத்தில், சந்தாதாரர் இறந்துவிட்டால், அந்தக் கணக்கில் முதலீட்டைத் தொடர முடியாது. அப்படியே இறந்த பிறகு, அந்தக் கணக்கில் முதலீடு செய்யப்பட்டிருந்தால், அதற்கு வட்டி அளிக்கப்படாது. பி.பி.எஃப்-லிருந்து ஏதாவது கடன் வாங்கப்பட்டிருந்தால் அந்தத் தொகை மற்றும் அதற்குரிய வட்டி கழிக்கப்பட்டு, மீதித் தொகைதான் நாமினிக்கு வழங்கப்படும். முதலீட்டுத் தொகை ரூ.1 லட்சத்துக்குள் இருந்தால், வாரிசுகளுக்கு இறங்குரிமை சான்றிதழ் (succession certificate) இல்லாமல் தொகை வழங்கப்படும். நாமினியாக யாரை நியமித்திருந் தாலும், சட்டப்படியான வாரிசு பி.பி.எஃப் தொகையை இறங்குரிமை சான்றிதழ் அளித்து கோரி பெற முடியும்."

மோகன், இ-மெயில் மூலம்.

என் உறவினரான ஒரு பெண்ணின் கணவர் தன் சுய சம்பாத் தியத்தில் ஒரு வீட்டை தன் பெயர் மற்றும் மனைவி பெயரில் கூட்டாக வாங்கிய, சில வருடங்களில் இறந்துவிட்டார். அதற்கு முன்னரே அவர் பெற்றோரும் இறந்துவிட்டனர். என் உறவுக்காரப் பெண்ணுக்கு குழந்தைகள் இல்லை. எந்த வருமானமும் இல்லாத காரணத்தால் வீட்டை விற்க நினைக்கிறார். கணவரின் சகோதர, சகோதரிகளுக்கு மேற்படி வீட்டில் பங்கு உள்ளதா?

டி.ஜீவா, வழக்கறிஞர், நோட்டரி பப்ளிக், சென்னை.

“இந்து வாரிசு சட்டப்படி மற்றவர்களுக்கு இதில் பங்கு கிடையாது. முழு உரிமையும் மனைவிக்கே உண்டு. வாரிசுச் சான்று பெற்று அவரின் மனைவி வீட்டை விற்கலாம்; இதில் எந்தத் தடையும் கிடையாது.”

ராமசந்திரன், இ-மெயில் மூலம்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் எஸ்.பி.ஐ முறையில் முதலீடு செய்து வருகிறேன். இந்த முதலீட்டில் மூலதனம் பாதுகாப்பானதா?

த.முத்துகிருஷ்ணன், சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர்.

“மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மூலதனம் மற்றும் வருமானத்துக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. திட்டத்தின் மூலமான லாபம் மற்றும் இழப்பு முதலீட் டாளரைச் சேர்ந்ததாகும். ஆனால், உங்கள் பணத்துக்கு ரிஸ்க் கிடையாது. யாரும் பணத்தை எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள் என பயப்படத் தேவையில்லை. சந்தையின் செயல்பாட்டுக்கேற்ப உங்களின் ஃபண்ட் மூலமான வருமானம் மற்றும் இழப்பு இருக்கும்.’’