Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை ஆரம்பிக்க பங்குச் சந்தை உச்சத்தில் இருக்க வேண்டுமா?

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்ட்

கேள்வி - பதில்

அ.கமல், ஆழ்வார்பேட்டை, சென்னை.

மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முதலீட்டை ஆரம்பிக்க பங்குச் சந்தை உச்சத்தில் இருக்க வேண்டும் என்கிறான் என் நண்பன். இது சரிதானா?

ஆர்.வெங்கடேஷ், நிறுவனர், www.gururamfinancialservices.com

“பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் (ஈக்விட்டி ஃபண்டுகள்) அதிக வருமானம் கொடுக்க ஆரம்பிப்பது பங்குச் சந்தை உச்சத்திலிருக்கும்போதுதான். அப்போதுதான் பலரும் ஈக்விட்டி ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை ஆரம்பிக்கிறார்கள். சந்தை உச்சத்தில் இருக்கும்போது எஸ்.ஐ.பி முதலீட்டை ஒருவர் ஆரம்பித்தால், அவர் அடுத்தடுத்து செய்யும் முதலீட்டுக்கு அதிக யூனிட்டுகள் கிடைக்க வாய்ப்புண்டு. சந்தை ஏறிக்கொண்டிருக்கும் காலத்தில் எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை ஆரம்பித்தால், அடுத்தடுத்து செய்யும் முதலீட்டுக்குக் குறைவான யூனிட்டுகளே கிடைக்கும். ஆக, சந்தை இப்போது உச்சத்தில் இருக்கிறதா, ஏற்றத்தில் இருக்கிறதா, இறக்கத்தில் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்காமல், நீண்ட காலத்துக்கு நீங்கள் தொடங்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை உடனடியாக ஆரம்பிப்பது நல்லது.’’

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை ஆரம்பிக்க பங்குச் சந்தை உச்சத்தில் இருக்க வேண்டுமா?

பி.சாய் பிரனேஷ், உடுமலைப்பேட்டை.

டாக்டர் ரெட்டீஸ், சிட்டி யூனியன் பேங்க் பங்குகளில் நீண்ட கால முதலீட்டை மேற்கொள்ளலாமா?

ஜி.எஸ்.ராஜேஷ் குமார், ஈக்விட்டி அனலிஸ்ட், Rkgcapitalgains.com

“நீண்ட கால முதலீட்டுக்கு டாக்டர் ரெட்டீஸ் பங்குகள் ஏற்றது அல்ல. இந்த நிறுவனத்தில் அதன் நிறுவனர்களின் பங்கு மூலதனம் குறைவாக இருப்பது கவலை அளிக்கக்கூடிய விஷயமாகும். 2015-ம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்துக்கு பணவரத்து என்பது நெகட்டிவ்வாக இருந்து வருகிறது. மேலும், விற்பனை வளர்ச்சியும் குறைந்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளாகப் பங்கு மூலதனம் வாயிலாக வருமானமும் குறைவாக இருக்கிறது.

சிட்டி யூனியன் பேங்க் பங்கும் நீண்ட காலத்துக்கு ஏற்ற முதலீடாக இல்லை. பெரும்பாலான வருமானம் வங்கி சார்ந்து இல்லாமல், இதர வருமானம் மூலம் வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாக இதன் வருமான வளர்ச்சி சராசரி 7 சதவிகிதமாகவே உள்ளது.”

எல்.வித்யா, நாணயம் விகடன் முகநூல் மூலம்.

எனக்கு அலுவலக பாலிசியில் ரூ.3 லட்சம் கவரேஜ் இருக்கிறது. இது போக தனியே ரூ.5 லட்சத்துக்கு தனியார் நிறுவனத்தில் பாலிசி எடுத் திருக்கிறேன். ரூ.4 லட்சம் இழப்பீடு கோருவது எனில், இரு பாலிசிகளில் எப்படி க்ளெய்ம் செய்ய முடியும்?

எஸ்.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், Wealthladder.co.in

“அலுவலக பாலிசியில் கவரேஜ் ரூ.3 லட்சம் இருப்பதாகக் கூறியுள்ளீர்கள். ஆகவே, உங்களது அலுவலக பாலிசியில் ரூ.3 லட்சம் க்ளெய்ம் செய்த பிறகு, மீதமுள்ள தொகைக்கு நீங்கள் எடுத்திருக்கும் தனியார் நிறுவன பாலிசி மூலம் க்ளெய்ம் செய்யலாம். அலுவலக பாலிசி யில் க்ளெய்ம் செய்யும்போது, ரூ.3 லட்சம் உள்ள ரசீதைத் தந்து விட்டு மீதமுள்ள ரசீதுகளைத் தனியார் பாலிசியில் க்ளெய்ம் பெறலாம்.”

ஆர்.வெங்கடேஷ், எஸ்.ஶ்ரீதரன், சுரேஷ் பார்த்தசாரதி, ஏ.கே.நாராயண், ரெஜி தாமஸ்
ஆர்.வெங்கடேஷ், எஸ்.ஶ்ரீதரன், சுரேஷ் பார்த்தசாரதி, ஏ.கே.நாராயண், ரெஜி தாமஸ்

விஜயன், ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நான் எஸ்.ஐ.பி முறையில் மாதம் ரூ.1 லட்சம் முதலீடு செய்ய விரும்புகிறேன். இந்த முதலீட்டைக் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு மேற்கொள்ள விரும்பு கிறேன். நல்ல லாபம் தரும் சில பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளைச் சொல்லுங்கள்.

சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர், Myassetsconsolidation.com

“இந்த முதலீட்டின் மூலம் நீங்கள் எவ்வளவு வருமானம் எதிர்பார்க்கிறீர்கள், எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியும் என்ற அளவைக் கொடுக்கவில்லை. ஆனால், முதலீட்டுக் காலம் ஐந்து ஆண்டுகள் என்று சொல்லியிருக் கிறீர்கள். அதன் அடிப்படையில், கனரா ராபிகோ லார்ஜ்கேப் ஃபண்ட், பிஜிம் இந்தியா ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட், எடில்வைஸ் மிட்கேப், பிஜிம் இந்தியா ஹைபிரிட் இந்தியா ஆகிய ஐந்து ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்ய நீங்கள் முயற்சி செய்யலாம். தேவை இருப்பின் ஒரு நிதி ஆலோசகரைக் கலந்தா லோசிப்பது நல்லது.’’

பாலமுருகன், கடையம்.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டை டீமேட் கணக்கு முதலீடு செய்வதா அல்லது மொபைல் ஆப் வழியாகச் செய்யலாமா, டீமேட் கணக்கு வழியாக டைரக்ட் பிளான்களில் முதலீடு செய்ய முடியுமா?

ஏ.கே.நாராயண், நிறுவனர், Aknarayanassociates.com

“முதலீட்டாளரின் வசதிக்கேற்ப மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளைக் காகித வடிவில் அல்லது ஆன்லைன் வடிவில் (டீமேட்) வைத்துக்கொள்ளலாம். தற்போதைய நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு டீமேட் கட்டாயம் இல்லை. டீமேட் கணக்கு மூலம் முதலீடு செய்யும்போது ஆண்டுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை பராமரிப்புக் கட்டணம் இருக்கும். இது சிறு முதலீட்டாளர் களுக்கு செலவு வைப்பதாக இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு வசதிகளைச் செய்துவருகிறார்கள். அதில் ஒன்றாக மொபைல் ஆப் இருக்கிறது.

முதலீடு செய்யப்போகும் ஃபண்ட் பற்றி முதலீட்டாளருக்கு நன்கு தெரிந்திருக்கும்பட்சத்தில், அவர் டீமேட் கணக்கு மூலம் டைரக்ட் பிளான்களில் முதலீடு செய்யலாம். முதலீட்டு அனுபவம் இல்லை எனில், விநியோகஸ்தர்கள் மூலம் ரெகுலர் பிளானில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.”

கே.பாஸ்கரன், உடுமலைப்பேட்டை.

என்.ஹெச்.பி.சி & சுஸ்லான் நிறுவனப் பங்குகளில் நீண்ட கால முதலீட்டைச் செய்யலாமா?

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்.

“இந்த இரு நிறுவனங்கள் நீர்மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரத்தைக் கையாள்கின்றன. இவை இரண்டும் மாற்று எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் மாசுபடுத்தாத, பசுமை எரிசக்தி ஆதாரங்களைச் சேர்ந்தவை ஆகும். இந்த நன்மை தவிர, சூரிய ஆற்றலுடன் ஒப்பிடும்போது அவை பருவ காலத்தைச் சார்ந்தும் சில சமயங்களில் நிச்சயமற்றதாகவும் இருக்கும். இந்தியாவின் எரிசக்தித் தேவைகளில் 68% வெப்ப ஆற்றலிலிருந்து பூர்த்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 32 சதவிகிதத்தில், தோராயமாக 15% நீர் மின்சாரம், அணு, காற்று மற்றும் பிற ஆதாரங்கள் மீதமுள்ள 17% ஆகும். எனவே, நீர் மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சார நிறுவனங்களில் நீண்ட கால முதலீட்டைத்தான் மேற்கொள்ள வேண்டும். நீர் மற்றும் காற்றாலையைவிட சூரிய சக்தி நிறுவனங்கள் நன்றாக லாபம் ஈட்ட வாய்ப்பிருக்கிறது. எனவே, நீங்கள் குறிப்பிட்டுள்ள பங்குகளுடன் சூரிய சக்தி தொடர்பான நிறுவனப் பங்குகளைச் சேர்த்துக்கொள்வதைப் பரிசீலிக்கலாம்.”