Published:Updated:

18 கேள்விகள்... ‘பளிச்’ பதில்கள்... பணத்தை பல மடங்காக்கும் எஸ்.ஐ.பி!

கவர் ஸ்டோரி

பிரீமியம் ஸ்டோரி

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் நிர்வகிக்கப்படும் தொகை 2021 செப்டம்பர் நிலவரப்படி,ரூ. 36.73 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. இதில், எஸ்.ஐ.பி என சுருக்கமாக அழைக்கப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் முறையில் செய்யப்பட்டிருக்கும் முதலீட்டின் மதிப்பு ரூ.5.45 லட்சம் கோடியாக உள்ளது.

ஆர்.வெங்கடேஷ் 
நிறுவனர், 
www.gururamfinancialservices.com
ஆர்.வெங்கடேஷ் நிறுவனர், www.gururamfinancialservices.com

மொத்தம் 11.16 கோடி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக் கணக்குகள் உள்ளன. இதில், எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யப் பட்டிருக்கும் கணக்குகளின் எண்ணிக்கை 3.34 கோடியாக உள்ளது. 2021 செப்டம்பர் மாதத்தில் மட்டும் 26.79 லட்சம் புதிய எஸ்.ஐ.பி கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதுவரைக்கும் இல்லாத அளவாகக் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் எஸ்.ஐ.பி முறையில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு ரூ.10,351 கோடியாக உயர்ந்திருக்கிறது.

இந்த எஸ்.ஐ.பி முதலீட்டு முறை குறித்து பலருக்கும் பல விதமான கேள்விகள் உள்ளன. இந்தக் கேள்விகளுக்கான சரியான பதில்களை நாம் தெரிந்துகொண்டால், எஸ்.ஐ.பி முதலீட்டின் மூலம் கிடைக்கும் பயனை அனைவரும் அனுபவிக்க முடியும்.

18 கேள்விகள்... ‘பளிச்’ பதில்கள்... 
பணத்தை பல மடங்காக்கும் எஸ்.ஐ.பி!

கேள்வி 1: எஸ்.ஐ.பி என்பது ஒரு முதலீட்டுத் திட்டமா?

பதில்: மியூச்சுவல் ஃபண்டில் முதன்முதலில் முதலீடு செய்பவர்கள் எஸ்.ஐ.பி-யை ஒரு முதலீட்டுத் திட்டம் என்று நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. எஸ்.ஐ.பி என்பது ஒரு முதலீட்டுத் திட்டம் அல்ல; அது ஒரு முதலீட்டு முறையாகும். அதாவது, ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று, மொத்தமாக ஒரு தொகையை முதலீடு செய்வது. இரண்டாவது, குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை எனக் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்வது. இந்த முறையைத்தான் எஸ்.ஐ.பி என்று அழைக் கிறோம். இந்த முறையில் முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் இருந்து மாதம்தோறும் குறித்த தேதியில் குறிப்பிட்டத் தொகை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குச் செல்லும். உதாரணமாக, ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மாதம்தோறும் 1,000 ரூபாயை ஒவ்வொரு மாதத்தின் 5-ம் தேதி முதலீடு செய்து வருவதாகும். இந்த எஸ்.ஐ.பி முதலீடு என்பது தபால் அலுவலகம் மற்றும் வங்கி களில் செயல்படும் தொடர் வைப்புத் திட்டமான ஆர்.டி போன்றதுதான் என்பதை நினைவில்கொண்டால் போதும்.

கேள்வி 2: எஸ்.ஐ.பி முறை சிறு முதலீட்டாளர்களுக்குத்தானா?

பதில்: எஸ்.ஐ.பி முறையில் மாதம் ரூ.500கூட முதலீடு செய்யலாம் என விளம்பரப்படுத்துவதால் இது சிறு முதலீட் டாளர்களுக்கு மட்டும் ஏற்றது எனப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. ஒருவர் மாதம் ரூ.1 லட்சம்கூட எஸ்.ஐ.பி முறையில் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்துவரலாம். எஸ்.ஐ.பி முறையில் மாதம்தோறும் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் முதலீடு செய்துவரலாம். பல பெரும்பணக்காரர்கள் தங்கள் குடும்பத்தின் நிதி இலக்குகளை (பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் போன்றவற்றை) நிறைவேற்ற எஸ்.ஐ.பி முறையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள்.

கேள்வி 3: எஸ்.ஐ.பி பங்குச் சந்தை ஃபண்டுகளுக்கு மட்டும்தானா?

பதில்: பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தைச் சமாளிக்கும் விதமாகப் பங்குச் சந்தை ஃபண்டுகளில் மட்டும்தான் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய முடியும் என நினைக்கிறார்கள் முதலீட்டாளர்கள். எஸ்.ஐ.பி முறையில் கடன் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம். கடன் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வது ஆர்.டி போடுவதற்கு இணையானதாகும்.

கேள்வி 4: எஸ்.ஐ.பி ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு குறுகிய காலத்துக்குச் செய்தால் போதுமா?

பதில்: பங்கு சார்ந்த திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையில் ஒன்றிரண்டு ஆண்டுகள் எனக் குறுகிய காலத்துக்கு முதலீடு செய்வதால், பெரிய நன்மை எதுவும் கிடைக்காது. ஈக்விட்டி ஃபண்டுகளில் நீண்ட காலத்துக்கு எஸ்.ஐ.பி முறையில் பணம் போட்டு வரும்போது, பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம் மற்றும் சந்தையின் சுழற்சியைத் தாண்டி நல்ல வருமானம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், முதலீட்டாளர்கள் தங்களின் ரிஸ்க் எடுக்கும் திறன், நிதி இலக்குகள் மற்றும் முதலீட்டுக் காலத்தைப் பொறுத்து ஈக்விட்டி, டெப்ட், ஹைபிரிட் என அனைத்து வகை ஃபண்டு களிலும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வரலாம். நீண்ட கால இலக்கு மற்றும் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கு ஈக்விட்டி ஃபண்டுகளும், நடுத்தர கால இலக்கு மற்றும் ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கு ஹைபிரிட் ஃபண்டுகளும், குறுகிய கால இலக்கு மற்றும் ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்களுக்கு கடன் ஃபண்ட் எஸ்.ஐ.பி சரியாக இருக்கும்.

18 கேள்விகள்... ‘பளிச்’ பதில்கள்... 
பணத்தை பல மடங்காக்கும் எஸ்.ஐ.பி!

கேள்வி 5: ஒருமுறை பதிவு செய்துவிட்டால், எஸ்.ஐ.பி தொகை, முதலீட்டுக் காலத்தை மாற்ற முடியுமா?

பதில்: எஸ்.ஐ.பி முதலீட்டுக் காலத்தை ஒரு முதலீட்டாளர் எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தி விட்டு, அதே முதலீட்டுக் கணக்கில் (ஃபோலியோ எண்), அதே ஃபண்டில் ஏற்கெனவே செய்த முதலீட்டுத் தொகையை விடக் குறைவாகவோ, அதிக மாகவோ மீண்டும் முதலீடு செய்யலாம். சுருக்கமாக, எஸ்.ஐ.பி முதலீட்டுக் காலம் மற்றும் முதலீட்டுத் தொகையை எப்போது வேண்டுமானலும் மாற்றிக்கொள்ளலாம்.

கேள்வி 6: பங்குச் சந்தை ஏற்றத்தில் எஸ்.ஐ.பி முதலீடு ஏற்றதா?

பதில்: எஸ்.ஐ.பி முறையில் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மிகப் பெரிய வசதியே, பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை என்ப தாகும். பங்குச் சந்தை கரடியின் பிடியில் இருந்தாலோ, காளை யின் பிடியில் இருந்தாலோ, நீண்டகாலத்தில் எஸ்.ஐ.பி முதலீடு நல்ல லாபத்தைக் கொடுக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

சந்தை ஏற்றத்தில் இருக்கும் போது செய்யும் மொத்த முதலீடு பற்றித்தான் கவலைப்பட வேண்டும். காரணம், முதலீடு செய்த பிறகு சந்தை இறங்கினால், அதிலிருந்து மீண்டு வர அதிக ஆண்டுகள்கூட ஆகலாம்.

எஸ்.ஐ.பி முறையில் சந்தையின் ஏற்ற இறக்கத்தில் முதலீடு செய்வதால், சராசரியாக அதிக யூனிட்டுகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதை ‘ருபி காஸ்ட் ஆவரேஜ்’ (Rupee cost avarege) எனச் சொல்வார்கள். சந்தையின் போக்கைப் பார்க்காமல், அது எந்த இடத்தில் இருந்தாலும் எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை ஆரம்பிக்கலாம்.

கேள்வி 7: எஸ்.ஐ.பி முதலீட்டின் மூலம் உத்தரவாதமான வருமானம் கிடைக்குமா?

பதில்: இதில் சிறிதும் உண்மை யில்லை. மியூச்சுவல் ஃபண்டில் கடன் ஃபண்ட் தொடங்கி எந்த ஃபண்டிலும் இத்தனை சதவிகிதம் வருமானம் கிடைக்கும் என்கிற எந்த உத்தரவாதமும் கிடையாது.ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் குறுகிய காலத்தில் போட்ட பணம் குறையாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஈக்விட்டி ஃபண்டில் நீண்டகால நோக்கில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்தால், பணவீக்க விகிதத்தைத் தாண்டி நல்ல வருமானம் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

மியூச்சுவல் ஃபண்ட் மூலம் கிடைக்கும் லாபத்தை சிலர் வட்டி என்று குறிப்பிடுகிறார்கள். மியூச்சுவல் ஃபண்ட் மூலம் கிடைக்கும் வருமானத்தை லாபம் என்று சொல்ல வேண்டுமே தவிர, வட்டி என்று குறிப்பிடுவது தவறானது. எஸ்.ஐ.பி முறை, பங்குச் சந்தை முதலீட்டில் உள்ள ரிஸ்க்கைக் குறைக்க உதவுமே தவிர, உத்தரவாத வருமானம் பெற உதவாது.

கேள்வி 8: எஸ்.ஐ.பி முதலீட்டில் இழப்பு வராது என்பது நிஜமா?

பதில்: புதிதாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டை ஆரம்பிப்பவர்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் செயல்படும் விதம் பற்றி அதிகம் தெரியாதவர்கள் எஸ்.ஐ.பி முதலீட்டில் இழப்பு வராது எனத் தவறாக நினைக்கிறார்கள். பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள் என்கிறபோது, பங்குச் சந்தை மிகவும் வீழ்ச்சி காணும்போது, நஷ்டம் வர வாய்ப்புண்டு. ஆனால், நீண்ட காலம் முதலீட்டைத் தொடரும்போது, இந்த நஷ்டம் முழுவதுமாகக் குறைந்து, லாபம் கிடைக்கும்.

ஹைபிரிட் ஃபண்டுகளில் திரட்டப்படும் பணம், கடன் பத்திரங்கள் மற்றும் நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. இதில் நிறுவனப் பங்குகள் இருப்பதால், பங்குச் சந்தை அதிக இறக்கம் வந்தால் மூலதனம் குறைய வாய்ப்பிருக்கிறது. இங்கும் இந்த இழப்பு நீண்ட காலத்தில் சரியாகி லாபத்துக்கு வந்துவிடும்.

கடன் ஃபண்டுகளில் இந்த அளவுக்கு அதிக ரிஸ்க் இல்லை என்றாலும், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கும் ஓரிரு கடன் பத்திரங்களில் வட்டி அல்லது அசல் வரவில்லை எனில், போட்ட பணம் குறையக்கூடும். ஆனால், இந்தப் பிரச்னையை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் விரைவாகச் சரிசெய்துவிடும்.

கேள்வி 9: எஸ்.ஐ.பி முதலீட்டுத் தொகை மற்றும் முதலீட்டுக் காலத்தை மாற்றினால் அபராதம் விதிக்கப்படுமா?

பதில்: இது உண்மை இல்லை. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் எஸ்.ஐ.பி முறை என்பது மிகவும் நெகிழ்வானது (flexible) ஆகும். எஸ்.ஐ.பி முறையில் எப்போது வேண்டு மானாலும் முதலீடு செய்யலாம். அதை எப்போது வேண்டுமானலும் நிறுத்திக்கொள்ள முடியும்.

18 கேள்விகள்... ‘பளிச்’ பதில்கள்... 
பணத்தை பல மடங்காக்கும் எஸ்.ஐ.பி!

கேள்வி 10: எஸ்.ஐ.பி தவணைத் தேதி தவறினால் அபராதம் விதிக்கப்படுமா?

பதில்: சிலரால் தொடர்ந்து ஓரிரு தவணைகள் எஸ்.ஐ.பி முதலீட்டை மேற்கொள்ள முடியாமல் போகும். அப்போது அபராதம் எல்லாம் விதிக்கப்படாது. தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய வில்லை எனில், எஸ்.ஐ.பி முதலீட்டுக் கணக்கை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ரத்து செய்துவிடும்.

கேள்வி 11: வரிச் சேமிப்பு ஃபண்ட் எஸ்.ஐ.பி-யில் முதலீட்டை ஆரம்பித்து, மூன்று ஆண்டுகள் கழித்து மொத்தப் பணத்தையும் எடுத்துக்கொள்ளலாமா?

பதில்: வருமான வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்ட மான இ.எல்.எஸ்.எஸ்ஸில் பெரும்பாலானோர் எஸ்.ஐ.பி முறையில்தான் முதலீடு செய்து வருகிறார்கள். இதில், மூன்று ஆண்டுகளுக்குமுன் முதலீட்டை வெளியே எடுக்க முடியாது. ஒருவர் 2018 செப்டம்பர் மாதத்தில் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் ஒன்றில் மாதம் ரூ.5,000 வீதம் முதலீடு செய்துவருகிறார் என வைத்துக்கொள்வோம். மூன்று ஆண்டு முதலீட்டுக்குப் பிறகு 2021 செப்டம்பரில் இந்த எஸ்.ஐ.பி முதலீட்டை நிறைவு செய்கிறார். இவர் இதுவரைக்கும் செய்திருக்கும் மொத்த முதலீட்டையும் 2021 அக்டோபரில் வெளியே எடுத்துவிட முடியும் எனப் பலரும் நினைக்கிறார்கள். அப்படி எடுக்க முடியாது. எஸ்.ஐ.பி முதலீட்டைப் பொறுத்தவரை, ஒவ்வொரு தவணையும் ஒரு தனி முதலீடாகவே கருதப்படும். அந்த வகையில், 2018 செப்டம்பர் மாதம் செய்த ரூ.5,000-க்கு ஒதுக்கப்பட்ட யூனிட்டுகளை 2021 அக்டோபரில்தான் விற்று பணமாக்க அனுமதிக்கப்படும். மூன்று ஆண்டுகளில் மொத்தம் செய்திருக்கும் 1,80,000 ரூபாயை 2024 அக்டோபர் மாதத்தில்தான் வெளியே எடுக்க முடியும்.

மாதம்தோறும் பணத் தேவை இருப்பவர்கள் ஒவ்வொரு எஸ்.ஐ.பி தவணையும் மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்ற பிறகு, எடுத்துக்கொள்ளலாம். அப்படி இல்லாதவர்கள் தேவைக்கு ஏற்ப, லாக் இன் காலம் நிறைவைக் கணக்கிட்டு யூனிட்டுகளை விற்றுப் பணமாக்கிக் கொள்ளலாம். லாக் இன் பீரியட் கடந்த யூனிட்டுகளை ‘ஃப்ரீ யூனிட்டுகள்’ என்பார்கள். பணம் எடுக்கும் ரிடம்ஷன் படிவத்தில் ‘ஃப்ரீயூனிட்டு’கள் எனக் குறிப்பிட்டால், எத்தனை யூனிட்டுகள் லாக்இன் பீரியட் டைக் கடந்திருக்கிறதோ, அத்தனை யூனிட்டுகளையும் விற்றுப் பணமாகத் தந்து விடுவார்கள்.’’

கேள்வி 12: அனைத்து ஃபண்டு களிலும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய முடியுமா?

பதில்: குறிப்பிட்ட முதிர்வுக் காலத்தைக் கொண்ட குளோஸ்டு எண்டட் ஃபண்டுகளில் புதிய ஃபண்ட் வெளியீட்டின் (என்.எஃப்.ஓ) போது மட்டுமே முதலீடு செய்ய முடியும். அதனால், அந்த வகை ஃபண்டு களில் எஸ்.ஐ.பி முதலீட்டு முறை கிடையாது.’’

கேள்வி 13: சந்தை இறக்கத்தில் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்துவது லாபகரமானதா?

பதில்: இது உண்மை அல்ல. பங்குச் சந்தை இறங்கி இருக்கும் போது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மதிப்பு மற்றும் லாபம் குறைந்திருக்கும். சந்தை இன்னும் குறைந்தால் இவை இரண்டும் இன்னும் குறைந்துவிடும் என்கிற பயத்தில் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தி விடுகிறார்கள். இது மெகா தவறாகும்.

என்.ஏ.வி குறைந்திருக்கும் காலத்தில் முதலீடு செய்யும் போது, அதிக யூனிட்டுகள் கிடைக்கும். பின்னர், சந்தை சரியாகும்போது இது அதிக லாபம் கிடைக்க உதவிகரமாக இருக்கும். 2020 மார்ச் மற்றும் ஏப்ரல் மாத இறக்கத்தில் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தாமல், கூடுதலாக முதலீடு செய்தவர்கள் இப்போது நல்ல லாபத்தில் இருக் கிறார்கள். எஸ்.ஐ.பி-யை நிறுத்தி யவர்கள், அந்த வாய்ப்பைத் தவற விட்டவர்களாக இருக்கிறார்கள்.

கேள்வி 14: எஸ்.ஐ.பி முதலீடு குறைவான வருமானத்தைத் தருமா?

பதில்: நீண்ட காலத்தில் மொத்த முதலீட்டைவிட எஸ்.ஐ.பி முதலீடு அதிக வருமானத்தைக் கொடுத்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம், சந்தையின் ஏற்ற இறக்கத்தில் சராசரியாக அதிக யூனிட்டுகள் கிடைப்பதுதான். ஒருவர் மொத்த முதலீட்டை மேற்கொண்ட பிறகு, சந்தை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தால் மட்டுமே அந்த முதலீடு, எஸ்.ஐ.பி முதலீட்டைவிட அதிக வருமானம் பெற முடியும். ஆனால், பங்குச் சந்தை எப்போதும் தொடர் ஏற்றத்திலோ, தொடர் இறக்கத்திலோ இருப்பதில்லை; எதிர்காலத்தில் அப்படி இருக்கவும் வாய்ப்பு குறைவுதான்.’’

கேள்வி 15: எஸ்.ஐ.பி முதலீட்டுக்கு வங்கிக் கட்டணம் அதிகமா?

பதில்: சில வங்கிகள் எஸ்.ஐ.பி பதிவுக்கு ஒரு முறை கட்டணமாக ரூ.40 முதல் ரூ.200 வரை வசூலிக் கின்றன. பல வங்கிகள் இலவச மாகவே இந்தச் சேவையை அளிக்கின்றன. அப்படியே கட்டணம் இருந்தாலும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து கிடைக்கும் லாபத்துடன் ஒப்பிடும் போது இந்தக் கட்டணம் மிகக் குறைவுதான். எஸ்.ஐ.பி பதிவுக்குக் கட்டணம் இருக்கிறதா என வங்கியில் விசாரியுங்கள். நீங்கள் வங்கிக்கு மிகவும் முக்கியமான வாடிக்கையாளர் எனில், இந்தக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வாய்ப்பிருக்கிறது. மேலும், மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய ஆன்லைன் வசதி இருக்கிறது. ஏஜென்ட் மூலம் அல்லது குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இணையதளம் மூலம் நீங்களே ஆன்லைனில் முதலீடு செய்யும்போது, இந்தக் கட்டணங்கள் இருக்காது.

கேள்வி 16: எஸ்.ஐ.பி முதலீட்டில் பணத்தை எடுப்பது அவ்வளவு சுலபமல்ல என்கிறார்களே, உண்மையா..?

பதில்: இது உண்மையல்ல. எஸ்.ஐ.பி வசதி கொண்ட அனைத்து மியூச்சுவல் ஃபண்டுகளும் எப்போது வேண்டு மானாலும் முதலீடு செய்யலாம்; எப்போது வேண்டு மானாலும் பணத்தை வெளியே எடுக்கலாம்.

பணத்தை எடுக்க அதற்கென இருக்கும் ரிடம்ஷன் படிவத்தை நிரப்பி மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்டுகள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் கிளை அலுவலகங்களில் கொடுத்தால் வங்கிக் கணக்குக்கு பணம் வந்துவிடும். ஆன்லைன் கணக்கு இருக்கும்பட்சத்தில், இணைய வழியிலும் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். கேம்ஸ் போன்ற மியூச்சுவல் ஃபண்ட் சேவை நிறுவனங்கள் மூலமும் பணம் எடுத்துக்கொள்ளலாம். டீமேட் கணக்கு மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருந்தால் சில நொடிகளில் யூனிட்டுகளை விற்க முடியும். ஓரிரு நாள்களில் டிரேடிங் கணக்குக்கு பணம் வந்துவிடும். அதை நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கு மாற்றி, தேவைக்கேற்ப செய்து கொள்ளாலாம். இப்படிப் பணத்தை எடுக்கும்போது வெளியேறும் கட்டணம் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். இது ஃபண்டுகளைப் பொறுத்து 6 மாதம் அல்லது ஓராண்டுக்குள் யூனிட்டுகளை விற்றுப் பணமாக்கும்பட்சத்தில் எடுக்கும் பணத்தில் 0.5% முதல் 2% வரை வெளியேறும் கட்டணம் இருக்கும். சில ஃபண்டுகளில் முதலீடு செய்து குறிப்பிட்ட காலத்துக்குள் மொத்த முதலீட்டுத் தொகையில் 10 சதவிகிதத்துக்கு மேல் எடுக்கும்பட்சத்தில் கூடுதல் தொகை வெளியேறும் கட்டணம் இருக்கும். விற்கப்படும் யூனிட்டுகள் முதலில் முதலீடு செய்த யூனிட்டுகளாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். சராசரியாக 365 நாள் என்பது சில நேரங் களில் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, ஓரிரு நாள்கள் கழித்து யூனிட்டுகளை விற்றால் குழப்பங்கள் வராது.

கேள்வி 17: எஸ்.ஐ.பி முதலீட்டு முறையில்தான் டிவிடெண்ட் கிடைக்குமா?

பதில்: ஒருவர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டை ஆரம்பிக்கும்போது, வருமானம் எந்த முறையில் வேண்டும் என்பதைத் தெரிவிக்க வேண்டும். டிவிடெண்ட் ஆப்ஷன், குரோத் ஆப்ஷன் என்கிற இரண்டு முறை யில் வருமானத்தைப் பெற முடியும். இவற்றில் டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்தால் மட்டுமே டிவிடெண்ட் வழங்கப் படும். முதலீட்டாளர் ஆப்ஷன் எதையும் தேர்வு செய்யவில்லை எனில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமே குரோத் ஆப்ஷனை முதலீட்டாளர் சார்பாகத் தேர்வு செய்துகொள்ளும்.

கேள்வி 18: எஸ்.ஐ.பி முதலீட்டை மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்டால் மட்டுமே நிறுத்த முடியுமா?

பதில்: மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட் மூலமும் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்த முடியும். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத் தின் கிளை அலுவலகம், கேம்ஸ், கே ஃபின்டெக் போன்ற ரிஜிஸ்டரர் மற்றும் டிரான்ஸ்ஃபர் ஏஜென்ட் (RTA) மூலம் எஸ்.ஐ.பி முதலீட்டை அதற்குரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து நிறுத்த முடியும். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இணைய தளமும் இதைச் செயல்படுத்த முடியும்.

மேற்சொன்ன 18 கேள்வி களையும் அதற்கான பதில் களையும் படித்ததன்மூலம் எஸ்.ஐ.பி முதலீடு பற்றிய அடிப் படைகளை நன்கு புரிந்துகொண் டிருப்பீர்கள். இனி, அடுத்த மாதம் தொடங்கி நீங்களும் ஒரு எஸ்.ஐ.பி முதலீட்டை ஆரம்பிக்க என்ன தயக்கம்?

எஸ்.பி.ஐ முதலீடு: அதிகம் சம்பாதிப்பவர்களுக்கு ஏற்றதில்லையா?

எஸ்.ஐ.பி முறையில் மாதம்தோறும் ரூ.500கூட முதலீடு செய்யலாம் என விளம்பரம் செய்யப் படுவதால், இது சிறு முதலீட்டாளர்களுக்கான முதலீடு எனப் பலரும் நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல. ஒருவர் மாதம் ரூ.1 லட்சம் கூட எஸ்.ஐ.பி முறையில் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

பல பெரும்பணக்காரர்கள் தங்கள் குடும்பத்தின் நிதி இலக்குகளை (பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் போன்றவற்றை) நிறைவேற்ற எஸ்.ஐ.பி முறையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு