Published:Updated:

வீட்டுக் கடன்... சந்தேகங்களும் தீர்வுகளும்! - விரிவான விளக்கம்

பா.மணிவாசகம்
பிரீமியம் ஸ்டோரி
News
பா.மணிவாசகம்

கேளுங்கள், பதில் கிடைக்கும்!

வீட்டுக் கடன் குறித்து நாணயம் விகடன் வாசகர்களின் பலவிதமான கேள்விகளுக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ), சென்னை தலைமை அலுவலகத்தின் ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டுவசதி வாணிபப் பிரிவின் துணைப் பொது மேலாளர் பா.மணிவாசகம் பதிலளிக்கிறார்.

பிரதான சாலையிருந்து 100 அடி சந்துக்குள் இருக்கும் வீட்டுக்கு வீட்டுக் கடன் கிடைக்குமா?

- ஜெயபாலன், முகநூல் மூலம்

“பெரும்பாலான வங்கிகளில் நிலம் மற்றும் கட்டடத் திட்ட அனுமதி (பில்டிங் அப்ரூவல்) அதிகாரிகளின் ஒப்புதலின் அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது. பிரதான சாலையிலிருந்து சொத்து இருக்கும் இடத்தை அணுகுவது, இந்த அதிகாரிகளிடமிருந்து பெறப்படும் ஒப்புதலின் அடிப்படையில் முடிவெடுக்கப்படுகிறது.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வீட்டுக் கடன்
வீட்டுக் கடன்

சென்னை நகருக்குள் குறைந்தபட்சம் எத்தனை சதுர அடி மனையிருந்தால் வீடு கட்ட கடன் கிடைக்கும்?

- எல்.மோகன், சென்னை–17

“சென்னை பெருநகரப் பகுதிக்குள் கட்டுமானத்துக்காகக் குறைந்தபட்சம் 800 சதுர அடி பரப்பளவு மனையை (`இரண்டாவது மாஸ்டர் திட்டம்’ தொகுதி- II, சென்னை பெருநகரப் பகுதி 2,026, பக்கம் 22, பாரா 25-ஐ பார்க்கவும்) சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) பரிந்துரைத்துள்ளது. வீட்டுக் கடன்களை அனுமதிக்கும்போது வங்கிகள் மேற்கண்ட விதிமுறைகளை கவனத்தில் கொள்ளும்.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

என் மாத வருமானம் ரூ.70,000. நான் 2011-ம் ஆண்டு என் அலுவலகம் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனை வாங்கி, வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறேன். சென்ற வருடம் நான் இன்னொரு வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கி என் குடும்பத்துடன் வசித்துவருகிறேன். `ஒரே நேரத்தில் இரு வீட்டுக் கடன்கள் இருப்பது அதிக ரிஸ்க்’ என்று என் நண்பர்கள் கூறுகிறார்கள். குழப்பமாக இருக்கிறது. எனக்குத் தக்க ஆலோசனை கூறவும்.

- கிருஷ்ணகுமார், இ-மெயில் மூலம்

“நீங்கள் உங்களுக்குச் சொந்தமான இரண்டு வீடுகளில் ஒன்றில் வசிக்கிறீர்கள். ஒரு வீட்டிலிருந்து வாடகை மற்றும் வருமான வரியைச் சேமிக்கிறீர்கள். மற்றொரு வீட்டிலிருந்து வாடகை வருமானம் பெறுகிறீர்கள். உங்கள் மாத வருமானத்துக்குள் உங்கள் மாதச் செலவுகளை நிர்வகிக்க முடியும் எனில், ஒரே நேரத்தில் இரண்டு வீட்டுக் கடன்களை வைத்திருக்கலாம். இருந்தபோதிலும், எதிர்பாராத சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும், கடன் சுமையிலிருந்து உங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்கும் உங்கள் வீட்டுக் கடன்களை ஈடுகட்ட டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி அல்லது வீட்டுக் கடன் காப்பீட்டு பாலிசியை எடுப்பது நல்லது.”

பா.மணிவாசகம்
பா.மணிவாசகம்

என் சம்பளத்துக்கு ரூ.20 லட்சம்தான் வீட்டுக் கடன் கிடைக்கும் என்கிறார்கள். எனக்கு ரூ.25 லட்சம் கடன் தேவை. இதைப் பெற வேறு ஏதாவது வழியிருக்கிறதா?

- ச.விஜயகுமார், குற்றாலம்

“வீட்டுக் கடன் தொகை, திட்டச் செலவு மற்றும் கடன் வாங்குபவரின் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது. கடனை உங்கள் தகுதிக்கேற்ப வாங்குவது நல்லது. உங்கள் மனைவியும் சம்பாதிக்கிறாரென்றால், அவருடைய வருமானமும் கடன் தகுதிக்கு வருவதாகக் கணக்கிடப்படலாம். உங்களிடம் வேறு வருமான ஆதாரங்கள் இருந்தால், அதைக் கடன் வரம்புக்குக் கணக்கிட எடுத்துக்கொள்ளலாம்.

நீங்கள் `ஃப்ளெக்ஸி வீட்டுக் கடன்’ (Flexi Home Loan) என்று அழைக்கப்படும் கடன் திட்டத்தைத் தேர்வு செய்யலாம். அதில் உங்கள் தகுதிக் கடன் தொகையில் 1.2 மடங்கு கடன் கிடைக்கும். ஆரம்ப ஆண்டுகளில் குறைந்த இ.எம்.ஐ-களைச் செலுத்திவரலாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிக இ.எம்.ஐ செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தின்கீழ், 45 வயதுக்கு மிகாத மாதச் சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு மட்டுமே கடன் கிடைக்கும். எங்கள் வங்கி உள்ளிட்ட சில வங்கிகள், ரியாலிட்டி தங்கக் கடனை (Realty Gold Loan) வழங்குகின்றன. அதற்கு வரிச் சலுகையும் கிடைக்கிறது. அதை நீங்கள் கருத்தில்கொள்ளலாம். தற்போது ரியாலிட்டி தங்கக் கடன் திட்டத்துக்கு எஸ்.பி.ஐ ஆண்டுக்கு 7.25% வட்டி வசூலிக்கிறது. இது மாற்றத்துக்கு உட்பட்டது.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் வீட்டு வசதி நிறுவனம் ஒன்றில் வீட்டுக் கடன் வாங்கவிருக்கிறேன். `கடன் தொகைக்கு இணையாக டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்’ என்கிறார்கள். இந்த இன்ஷூரன்ஸை வாங்கித்தான் ஆக வேண்டுமா?

- விக்டர் ராஜ், கோட்டயம்

“வீட்டுக் கடன் காப்பீடு என்பது கடன் வாங்குபவர்களின் விருப்பத்தைப் பொறுத்து பெரும்பாலான வங்கிகளில் தரப்படுகிறது. மேலும், இது உங்கள் கடன் அனுமதி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்தும் இருக்கும். டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி அல்லது வீட்டுக் கடன் காப்பீட்டு பாலிசியை எடுத்து கடனைப் பாதுகாப்பது எப்போதும் நல்லது.”

வீட்டுக் கடன்
வீட்டுக் கடன்

நானும் என் மனைவியும் இணைந்து வீட்டுக் கடன் வாங்கவிருக்கிறோம். நானும், என் மனைவியும் தனியார் நிறுவன ஊழியர் என்ற நிலையில், எங்களுக்கு எந்த மாதிரியான சலுகைகள் கிடைக்கும்?

- கே.ராஜகுமார், திருச்செந்தூர்

“பெண்களுக்குப் பெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் சாதாரணமாக வசூலிக்கப்படும் வட்டி விகிதத்தைவிட 0.05% குறைவான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்குகின்றன. இருவரும் சொத்தின் இணை உரிமையாளராகவும், வீட்டுக் கடனை இணைந்து வாங்குபவராகவும் இருந்தால் இருவரும் வருமான வரிச் சலுகைகளைப் பெறலாம்.”

என் தந்தை பெயரில் வீட்டுப் பத்திரம் இருக்கிறது. அந்த இடத்தில் என் பெயரில் கடன் வாங்கி வீடு கட்ட எனக்கு வருமான வரிச் சலுகை கிடைக்குமா?

- வி.தியாகராஜன், திருவாரூர்

“உங்கள் தந்தைக்கு தனிப்பட்ட வருமான ஆதாரம் மற்றும் கடனைப் பெறுவதற்கான தகுதியான வயது வரம்பு இருக்க வேண்டும். உங்கள் தந்தையின் வருமானம், கடன் வாங்கும் தொகைக்குப் போதுமானதாக இல்லாவிட்டால் நீங்கள் அவருடன் இணைக் கடன் (Co-borrower) வாங்குபவராக இருக்கலாம். நிலத்தில் உங்களுக்கு எத்தனை சதவிகித உரிமை இருக்கிறதோ அதன்படி இருவரும் பெற்ற கடனுக்கு வரிச் சலுகைகளைப் பெறலாம்.’’

வீட்டுக் கடன் 9.5% ஃபிக்ஸட் வட்டி விகிதத்தில் வாங்கத் திட்டமிட்டுள்ளேன். இந்த வட்டி, கடன் செலுத்தும் காலம் முழுக்க ஒரே மாதிரி இருக்குமா?

- பொன்ராஜ், தூத்துக்குடி

“பொதுவாக, வங்கிகள் வீட்டுக் கடன்களை மாறுபடும் வட்டி விகிதத்தில் (Floating Rate) வழங்குகின்றன. கடனுக்கான வட்டி விகிதம் இறங்கிவருவதால், ஃப்ளோட்டிங் விகிதத்தில் கடன் பெறுவது லாபகரமாக இருக்கும். நிலையான வட்டி என்றால், பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும். கடன் ஆவணங்களின் விதிமுறைகளை நீங்கள் கவனமாகப் படிக்க வேண்டும்.”

கேளுங்கள், பதில் கிடைக்கும்!

பங்கு வர்த்தகம் குறித்த பலவிதமான கேள்விகள் உங்களுக்கு இருக்கக்கூடும். இவற்றுக்கு பங்குச் சந்தை நிபுணர் தி.ரா.அருள்ராஜன் (முதன்மை செயல் அதிகாரி, Ectra.in) பதில் அளிக்கிறார்.

தி.ரா.அருள்ராஜன்
தி.ரா.அருள்ராஜன்

உங்கள் கேள்விகளை navdesk@vikatan.com என்ற இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கலாம்.