Published:Updated:

கோடீஸ்வரர் கனவு நனவாக ஓர் எளிய தீர்வு..!

கோடீஸ்வரர் கனவு...
பிரீமியம் ஸ்டோரி
News
கோடீஸ்வரர் கனவு...

மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 3

என் வாழ்க்கை முழுக்கவுமே நிதிச் சேவைகள் மற்றும் நிதி ஆலோசனை சார்ந்ததாக இருக்கிறது. ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப், சிட்டி பேங்க் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களில் 15 ஆண்டுகள் வேலை பார்த்திருக்கிறேன்.

எம்.சதீஷ் குமார் 
நிறுவனர், 
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

கடந்த ஐந்து ஆண்டுகளாக கிரியேட்டிங் வெல்த் கம்பெனி (Creating Wealth Company) என்கிற நிறுவனத்தை நிறுவி செயல்படுத்தி வருகிறேன். இந்த இருபது ஆண்டுக் காலத்தில் ஆயிரக்கணக்கான தனிநபர் முதலீட்டாளர் களைச் சந்தித்திருக்கிறேன்.

ஒரே மாதிரியான ஆசை...

பொதுவாக, மக்களில் பலருக்கும் கிட்டத் தட்ட ஒரே இலக்குகள், தேவைகள், கனவுகள், ஆசைகள் இருப்பதைக் கவனித்திருக்கிறேன். இவர்கள் அனைவரிடமும் காணப்படும் ஒரு பொதுவான ஒற்றுமை, ஒரே ஒரு வருமானத்தைக் கொண்டு பல்வேறு நிதி இலக்குகளை நிறைவேற்றப் போராடிக்கொண்டிருப்பதுதான்.

ஓய்வுக்காலத் தொகுப்பு நிதி, பெண் பிள்ளைகளின் கல்யாணம், மகன்களின் உயர் கல்வி, கனவு இல்லம் வாங்குதல், வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கார் வாங்குதல் என்பன போன்ற அனைத்து இலக்குகளையும் நிறைவேற்ற பணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் மகிழ்ச்சியான ஓய்வுக்காலத்தை அனுபவித்துக்கொண்டிருக்கலாம் அல்லது மகிழ்ச்சியான ஓய்வுக்காலத்தில் இருக்கும் சிலரைப் பார்த்திருக்கலாம். அவர்கள் உண்மை யிலேயே நிதிச் சுதந்திரம் பெற்றவர்களாக, நிதித் திட்டமிட்டவர்களாக இருப்பார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை, சுமார் 65% பேர் பணி ஓய்வுக்காலத்துக்குப் பிறகும் வேலை பார்த்து வருகிறார்கள். பணி ஓய்வுக்குப் பிறகும் வேலை பார்ப்பது மகிழ்ச்சியான விஷயமாக நிச்சயம் இருக்காது. பெரும்பாலான பணி ஓய்வு பெற்றவர்கள், பிள்ளைகளைச் சார்ந்து அல்லது கூட்டுக் குடும்ப உறுப்பினர் களாகவே இருக்கிறார்கள். இவர்கள் தங்களின் பிள்ளைகள் சிறப்பான கல்வியைப் பெற அதிக தொகையைச் செலவிட்டவர்களாக இருக்கிறார்கள்.

மேலும், இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் 67 ஆண்டுகள் என்பது 77 ஆண்டுகளாக அதிகரித்திருக்கிறது. ஒருவர், தோராயமாக 80 ஆண்டுகள் உயிர் வாழ வேண்டியிருக்கிறது. போதுமான அளவுக்குப் பணம் சேர்த்து வைக்கவில்லையெனில், கையில் பணம் இல்லாமல் ஓய்வுக்காலத்தைச் சமாளிப்பது பெரும் கஷ்டமாக இருக்கும்.

கோடீஸ்வரர் கனவு நனவாக ஓர் எளிய தீர்வு..!

இளமையிலேயே நிதித் திட்டமிடல்...

இந்த நிலை ஒவ்வொருவருக்கும் வராமல் இருக்க வேண்டுமெனில், அவர்கள் அவசியம் என்ன செய்ய வேண்டும்?

ஓய்வுக்காலத்துக்கான திட்டமிடலை இளமையிலேயே ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் கோடீஸ்வரராக ஓய்வு பெற முடியும்.

பத்து ஆண்டுகளுக்கு முன், நடுத்தரக் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் என்பது பெரிய விஷயம். ஆனால், ஒரு கோடி என்பதெல்லாம் மிகச் சாதாரண விஷயமாக மாறிவிட்டது. ஒரு மில்லியன் டாலர், அதாவது சுமார் ரூ.7 கோடி இருந்தால்தான் ஓய்வுக்காலம் ஒளிமயமாக இருக்கும்.

முதலீட்டை இளம் வயதில் ஆரம்பிக்கும்போது உங்களிடம் ஓர் ஆற்றல் மிகுந்த ஆதாரம் (Powerful Resource) இருக்கும். அந்த ஆதாரம் என்பது காலம் (Time) ஆகும். நீண்ட காலத்தில் முதலீடு என்பது பவர் ஆஃப் காம்பவுண்டிங் (Power of Compounding) என்கிற மிக அதிக அளவில் பணம் பெருகும் அதிசயத்தை அளிக்கும்.

தனிநபர் நிதி மேலாண்மை மற்றும் ஓய்வுக்காலத் திட்ட மிடலில் உங்களுக்கு நீங்களே பணம் செலுத்திக்கொள்வது (Paying yourself) என்பது நிரூபிக்கப்பட்ட நல்ல கருத்தாக்கமாக (concept) இருக்கிறது. அதாவது, உங்களின் வருமானத்தில் 20 சதவிகிதத் தொகை தொடர்ந்து முதலீடாக மாறும்போது ஓய்வுக்காலத்தில் அது பெரும் தொகையாகச் சேர்ந்திருக்கும். ஒருவர் மாதம்தோறும் தொடர்ந்து நிலையாக முதலீடு செய்யும்பட்சத்தில் இது நிச்சயம் சாத்தியமான விஷயமாகும்.

கோடீஸ்வரர் கனவு நனவாக ஓர் எளிய தீர்வு..!

உலகின் மிகப் பெரிய வெற்றி ரகசியங்கள் எல்லாம் எளிய விஷயங்களில் மறைந்திருக்கிறது. இளமையில் நீங்கள் மேற்கொள்ளும் எளிய மற்றும் சீரான சேமிப்பு முறை உங்களின் ஓய்வுக்காலத்தை வளமானதாக மாற்றும் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.

முன்கூட்டியே முதலீட்டை ஆரம்பிப்பது அல்லது பணம் சம்பாதிப்பவர் ஆரம்பம் முதலே தனது எதிர்கால இலக்குகளுக்கென ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை எடுத்து வைப்பது என்பது நம்மவர் களிடையே பெரும்பாலும் நடப்பதில்லை.

பெரும்பாலானவர்கள் நடுத்தர வயதை அடையும் போது எதிர்காலத்துக்காக குறிப்பாக, ஓய்வுக்காலத்துக் கான முதலீட்டைத் தொடங்கு கிறார்கள். நிதித் திட்டமிடல் எதையும் மேற்கொள்ளாமல், கூடுதல் பணப் பற்றாக்குறை இருக்கும்போதுதான் தொடங்கு கிறார்கள்.

இந்த நடைமுறை தவிர்க்கப் பட வேண்டும். முன்கூட்டியே, இளமையிலேயே முதலீட்டை ஆரம்பிப்பது அதிக ரிஸ்க் எடுக்கும் திறனையும், மூலதனத்தில் ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் அதைச் சீர்செய்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. கூடவே கூடுதல் தொகுப்பு நிதியையும் வழங்குகிறது.

ஓர் எளிய முதலீட்டு ஒழுங்கு உங்களை நிதிச் சுதந்திரம் அடைய வைக்கவும் ஓய்வுக் காலத்தில் பணத்துக்காக யாருடைய கையையும் ஏந்தாமல் சுதந்திரமாகச் செயல்படவும் வைக்கிறது.

(கோடீஸ்வரர் ஆவோம்)