Published:Updated:

மாதம் 100 ரூபாய்கூட முதலீடு செய்ய முடியும்: எஸ்.ஐ.பி ஈஸி டிப்ஸ்!

எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை ஆரம்பிக்க நேரம், காலம் பார்க்கத் தேவையில்லை. முதலீடு செய்யும் காலத்தில் ஃபண்டின் யூனிட் என்.ஏ.வி (நிகர சொத்து மதிப்பு) குறைவாக இருந்தால், கூடுதல் லாபம்.

எஸ்.ஐ.பி
எஸ்.ஐ.பி

இன்றைக்கு சாதாரண மக்களும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறார்கள். அதற்கு முக்கியக் காரணம், `சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்' என்ற எஸ்.ஐ.பி முதலீட்டு முறை. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2PtDoHV

எஸ்.ஐ.பி முறையில் இப்போது பல ஃபண்டுகளில் மாதம் 100 ரூபாய்கூட முதலீடு செய்ய முடியும். ஆரம்பத்தில் இந்தக் குறைந்தபட்ச முதலீடு ரூ.5,000 என இருந்தது. அதன் பிறகு ரூ.1,000, ரூ.500 எனக் குறைந்து இப்போது ரூ.100 ஆகியிருக்கிறது. எந்த நேரத்திலும் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்திக்கொள்ள முடியும். மேலும், எந்த நேரத்திலும் முதலீட்டுத் தொகையை அதிகரிக்கவோ குறைத்துக்கொள்ளவோ முடியும். இந்த வசதிக்காகவே பலரும் இதர முதலீடுகளைவிட எஸ்.ஐ.பி முறையிலான முதலீட்டைத் தேர்வுசெய்கிறார்கள்.

பிள்ளைகளின் பள்ளிக்கட்டணம், இன்ஷூரன்ஸ் பிரீமியம் போன்ற குறுகியகாலத் தேவைகள், கார் வாங்கவோ வீடு வாங்கவோ முன்பணம் போன்ற நடுத்தரகாலத் தேவைகள், பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் திருமணம், வெளிநாட்டுச் சுற்றுலா, சொந்த வீடு, ஓய்வுக்கால முதலீடு போன்ற நீண்டகாலத் தேவைகள் என அனைத்துக்கும் ஏற்றதாக இந்த முறை இருக்கிறது. பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம், பங்குச் சந்தையின் இறக்கத்திலிருந்து பாதுகாப்பு, நீண்டகாலத்தில் நிதி இலக்குகள் நிறைவேற்றம் போன்ற முக்கியத் தீர்வுகளை எஸ்.ஐ.பி முதலீடு அளிக்கிறது.

எஸ்.ஐ.பி
எஸ்.ஐ.பி

பொதுவாக, மியூச்சுவல் ஃபண்டில் மாதம் ஒரு முறை குறிப்பிட்ட தேதியில் முதலீடு செய்வதைப் பெரும்பாலானோர் பின்பற்றிவருகிறார்கள். எந்தத் தேதியில் எஸ்.ஐ.பி முதலீட்டுக்கு வங்கியிலிருந்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்பதை முதலீட்டாளர்கள்தான் சொல்ல வேண்டும். மாதத்தின் எந்தத் தேதியிலும் எஸ்.ஐ.பி முதலீட்டை ஆரம்பிக்கும் வசதி இருக்கிறது. பொதுவாக, 1, 10, 15, 21, 28 ஆகிய தேதிகளில் எஸ்.ஐ.பி முதலீட்டை மேற்கொள்ளலாம். விண்ணப்படிவத்தில் எந்தத் தேதி என்பதை 'டிக்' செய்ய வேண்டும்.

எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை ஆரம்பிக்க நேரம், காலம் பார்க்கத் தேவையில்லை. முதலீடு செய்யும் காலத்தில் ஃபண்டின் யூனிட் என்.ஏ.வி (நிகர சொத்து மதிப்பு) குறைவாக இருந்தால், கூடுதல் லாபம். அந்த வகையில், பங்குச் சந்தைச் சரிவால் என்.ஏ.வி மதிப்பு குறைந்துபோனால் கவலைகொள்ளத் தேவையில்லை. என்.ஏ.வி குறைவாக இருந்தால், அதிக யூனிட்டுகள் ஒதுக்கப்படும். நீண்டகால அடிப்படையில் என்.ஏ.வி மதிப்பு அதிகரிக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்பதால் என்.ஏ.வி குறைந்தால் கவலைப்படத் தேவையில்லை. சந்தையின் ஏற்ற இறக்கத்தில் சராசரியாக அதிக யூனிட்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதை `ருப்பி காஸ்ட் ஆவரேஜ்' (Rupee Cost Averaging) என்பார்கள்.

பலரும் எஸ்.ஐ.பி முதலீட்டைப் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில்தான் மேற்கொள்ள முடியும் எனத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். கடன் சார்ந்த ஃபண்டுகள், பேலன்ஸ்டு ஃபண்டுகள், ஈக்விட்டி ஃபண்டுகள் என அனைத்து வகையான ஃபண்டுகளிலும் எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

எஸ்.ஐ.பி
எஸ்.ஐ.பி

முதலீட்டுக்குத் தேவையான ஆவணங்கள்: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய பான் கார்டு, ஆதார் கார்டு, மார்பளவு புகைப்படம், குறுக்குக் கோடிட்ட வங்கிக் காசோலை ஆகியவை தேவை. முதலில் 'உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்துகொள்ளுங்கள்' என்ற கே.ஒய்.சி (Know Your Customer) படிவத்தில் புகைப்படத்தை ஒட்ட வேண்டும். அந்தப் படிவத்தைப் பூர்த்திசெய்து மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட், நிதி ஆலோசனை நிறுவனம், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கிளை, மியூச்சுவல் ஃபண்ட் சேவை மையங்கள் ஆகிய ஏதாவது ஒன்றில் கொடுக்க வேண்டும். ஆன்லைன் மூலமும் இந்த கே.ஒய்.சி-யைச் செய்யலாம். பிறகு மியூச்சுவல் ஃபண்ட் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திசெய்து தர வேண்டும்.

- எஸ்.ஐ.பி கூடுதல் முதலீடு, எஸ்.ஐ.பி வகைகள் உள்ளிட்ட வழிகாட்டுதலுடன் கூடிய நிதி ஆலோசகர் சா.ராஜசேகரன் வழங்கும் முழுமையான கைடன்ஸ் கட்டுரையை நாணயம் விகடன் இதழில் வாசிக்க > எல்லோருக்கும் ஏற்ற எஸ்.ஐ.பி முதலீடு... https://www.vikatan.com/news/investment/here-are-some-easy-tips-for-sip-investment

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |