Published:Updated:

பொருளாதார நெருக்கடி... சம்பளதாரர்கள், தொழில் முனைவோருக்கான 5 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

செ.கார்த்திகேயன்

பொருளாதார மந்தநிலையின் போது சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் கீழே சரிவதும், மீள்வதும் சகஜம்தான். ஆனால், இந்தக் காலகட்டத்திலும் கூட, செய்திருக்கும் முதலீடுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, பின்னர் வருத்தப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது?.

இன்றைய நிலையில் `டாக் ஆஃப் தி இந்தியா' என்றால், அது நாட்டின் பொருளாதார மந்தநிலைதான். டீக்கடையில் இரண்டு நண்பர்கள் சந்தித்துக் கொண்டாலும், பங்குச்சந்தையின் போக்கு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி, ஆட்டோமொபைல், ஐடி துறை சார்ந்த பிரச்னைகள் என இந்தியாவின் பொருளாதார மந்தநிலை குறித்துத்தான் பேசிக்கொள்கிறார்கள். தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த மந்தநிலையானது சாமானிய சம்பளதாரர்கள் முதல் கோடி கோடியாகச் சம்பாதிக்கும் தொழிலதிபர்கள் வரை பயத்தையும், நாட்டின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்கிற சந்தேகத்தையும் ஆழமாக விதைத்திருக்கிறது.

பொருளாதார நெருக்கடி: பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் என்ன செய்யவேண்டும்?

பொருளாதார மந்தநிலை என்பது, சில நேரங்களில் அவநம்பிக்கை மற்றும் பணம் சார்ந்த உணர்ச்சிகளால் அசாத்தியமான விஷயமாக உருவெடுக்கும். அந்த நிலையானது வலுவடையும்போது, தனிமனித பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகும். பொருளாதார மந்தநிலை காரணமாக கடன்களைத் தவிர்த்து, செலவினங்களை குறைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தயாரிப்பு விகிதம் குறையும். படிப்படியாக பணியாளர்களின் வேலை நேரம் குறைக்கப்படும். பணியாளர்கள் வேலையிழப்பு அதிகரிக்கும்.

இந்த நிலை இந்தியாவுக்கு வந்துவிடக் கூடாது என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், இப்போது நாட்டின் நிலைமை தலைகீழாக இருக்கிறது. இந்தச் சூழலில் சம்பளதாரர்கள், சிறு மற்றும் குறு தொழில் செய்பவர்கள் நிதி சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது ரொம்பவே முக்கியம்.

இன்றைய சூழலில் சம்பளதாரர்களும், சிறு, குறு தொழில் முனைவோர்களும் அவசியம் மேற்கொள்ள வேண்டிய 5 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இங்கே...

1
Emergency Fund

அவசியம் தேவை அவசரக்கால நிதி!

சமீபத்தில், பார்லேஜி பிஸ்கட் நிறுவனம், பொருளாதார மந்தநிலையைக் காரணம் காட்டி, 10,000 ஊழியர்களை வெளியேற்றத் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.  பார்லேஜி போல, பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் செலவுகளைக் குறைப்பதற்காக, ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஒரு நிறுவனத்தின் ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் மாட்டிக்கொண்டு தங்களின் வேலையை இழப்பவர்கள் பதறும் ஒரே விஷயம், அடுத்த மாதச் செலவுகளுக்கு என்ன செய்யப்போகிறோம் என்பதுதான். அவசரக்கால நிதிச் சேமிப்பைச் சம்பாதிக்கும் போதே செய்திருந்தால், இந்த நிலைமையை எளிதாக எல்லோராலும் சமாளிக்க முடியும். நிதி திட்டமிடலுக்காக நிதி ஆலோசகர்களை அணுகும் போது, முதலில் அவர்கள் அவசரக்கால நிதி சேமிப்பிற்காகத்தான் திட்டமிடுவார்கள். அதன் பிறகே இன்ஷூரன்ஸ் மற்றும் இதர தேவைகளுக்காக சேமிக்கும் வழிமுறைகளை எடுத்துச் சொல்வார்கள். 

நிறுவனத்தில் வேலை செய்து சம்பளம் வாங்குபவராக இருந்தாலும், சுயதொழில் செய்பவராக இருந்தாலும், குறைந்தபட்சம் 3 மாதம் முதல் அதிகபட்சம் 12 மாதங்கள் வரையிலான மாதாந்தர சேமிப்புத் தொகையைத் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது நிதி ஆலோசகர்களின் அறிவுரை. இந்தப் பணத்தை வங்கி எஃப்.டி அல்லது லிக்விட் மியூச்சுவல் ஃபண்டுகளில் போட்டு வைப்பதால், திடீர் வேலையிழப்பு போன்ற காரணங்களால் வரும் பொருளாதாரச் சிக்கல்களை எளிதாகச் சமாளிக்க முடியும்.

2
Budgeting

பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்கள்!

நாட்டின் பொருளாதார நன்மைக்காக, அதன் நிறை குறைகளை அலசி ஆராய்வதற்காக இந்தியாவுக்கும் சரி, தமிழ்நாட்டுக்கும் சரி ஆண்டுக்கு ஒரு முறைதான் பட்ஜெட் போடுவார்கள். ஆனால் நம் ஒவ்வொருவரும் நம் குடும்பத்தின் பொருளாதாரம் வலுப்பெற மாதம்தோறும் பட்ஜெட் போட்டு செலவு செய்வது ரொம்பவே முக்கியம். ஆனால் நம்மில் எத்தனைப் பேர் அப்படிச் செய்கிறோம்? யோசிக்க வேண்டிய விஷயம்தானே?!. நாட்டிற்குப் பொருளாதார மந்தநிலை ஏற்படும் போது மட்டுமே, குடும்பத்தின் பொருளாதார நிலை பற்றி கவலை கொள்ளாமல், ஒவ்வொரு மாதமும் வரவு செலவு விவரங்களைக் கணக்கிடுவது முதன்மையான விஷயம். குறிப்பாக, செலவு செய்வதைக் கண்காணிப்பது அவசியம். உதாரணமாக, திரையரங்குகளுக்கு அடிக்கடி சென்று திரைப்படம் பார்ப்பவராக இருந்தாலும், உணவகங்களுக்குக் குடும்பத்துடன் அடிக்கடி சென்று சாப்பிடுபவராக இருந்தாலும் அதைக் குறைத்துக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாட்டின் பொருளாதாரம் சீராகும் வரை வெளியுலகச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

அதே போல, ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. இது அநாவசியச் செலவுகளிலிருந்தும் கடன் சிக்கல்களிலிருந்தும் நம்மைக் காப்பாற்றும். செலவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கையில் பணத்தை இருப்பு வைத்துக் கொள்வது, குடும்பத்தில் மன அமைதிக்கும், நிறுவனத்தில் வேலையை சிறப்பாகச் செய்வதற்கும் உதவியாக இருக்கும். இதனால், ஆள்குறைப்பு பட்டியலில் நமது பெயர் சேராமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.

3
Debt

அதிக கவனம் கடன்களின் மீது இருக்கட்டும்!

நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கும்போது, முதலீட்டிலிருந்து அதிக வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. அதனால் கடன்கள் இருக்கும்பட்சத்தில் அதைக் குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். உதாரணத்துக்கு, வருமானத்தைவிட அதிகமாக வட்டி கட்டுவதாக வைத்துக்கொள்வோம். வட்டியைக் குறைப்பதற்காகக் கையில் இருக்கும் சேமிப்புப் பணத்தை வைத்தோ அல்லது வேறு வழிகளிலோ கடன்களை கொஞ்சம் கொஞ்சமாக அடைப்பது புத்திசாலித்தனம்.

மேலும், ஏற்கெனவே வைத்திருக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை விட, புதிதாக வாங்கும் கடனுக்கான வட்டியின் அளவு ஒரு சதவிகிதமாவது குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்குக் கடன் கணக்கை மாற்றுகிறீர்கள் எனில், அந்த வங்கியின் சேவைக் கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்களையும் கவனிப்பது அவசியம்.

சிறு, குறு தொழில்முனைவோர்கள் பொருளாதார மந்தநிலையின் போது பல இடையூறுகளைச் சந்திக்க நேரிடும். அதில் மிக முக்கியமானது கடன். வியாபாரம் சிறப்பாக நடந்துகொண்டிருக்கும் போது, அதிக வட்டியில் கடன் வாங்கி வியாபாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டிருப்பீர்கள். தற்போதைய பொருளாதார மந்தநிலையில் வியாபாரம் சுமாராக இருக்கலாம்; வருமானம் குறைந்திருக்கலாம். அந்தச் சமயத்தில் வாங்கி, கடனை மதிப்பீடு செய்து முறைப்படுத்துவது அவசியம். தேவையில்லாத, அதிக வட்டி கொண்டு கடன்களை அடைப்பதே நல்லது.

4
Investment

முதலீடுகளைக் கண்காணியுங்கள்!

`தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பார்கள். அப்படித்தான் முதலீடுகளிலிருந்து வருகிற வருமானத்திற்கும், ஏற்படுகிற நஷ்டத்திற்கும் அவரவர்களே காரணம். பொருளாதார மந்தநிலையின் போது சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் கீழே சரிவதும், மீள்வதும் சகஜம்தான். ஆனால், இந்தக் காலகட்டத்திலும்கூட, செய்திருக்கும் முதலீடுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, பின்னர் வருத்தப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

ஒருவர் முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டால், அன்றிலிருந்து முதலீட்டு லாப நஷ்டங்களை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது வருடத்துக்கு ஒருமுறை அலசி ஆராய்வது, அதன் படி முதலீடுகளை மாற்றி அமைப்பது முக்கியம் என்பது ஒவ்வொரு நிதி ஆலோசகர்களும் அறிவுறுத்தும் விஷயம். தற்போதைய பொருளாதார மந்தநிலையில், ஒவ்வொரு முதலீட்டாளர்களும், நல்ல நிதி ஆலோசகர்களை அணுகி, தங்களின் முதலீட்டு போர்ட்ஃபோலியோவை ரிவ்யூ செய்துகொள்வது நல்லது.

அப்போதுதான்  நீண்ட நாள்களாக வருமானம் தராத பங்குகளை அல்லது ஃபண்டுகளை கண்டறியவும், அவற்றை மாற்றி புதிய பங்கு/ஃபண்டுகளில் முதலீடு செய்யவும் முடியும். அதே போல, வங்கி டெபாசிட்கள் நீங்கள் நினைத்த வருமானத்தைக் கொடுக்காமல் இருந்தால், அதை மறுபரிசீலனை செய்து வருமானம் தரக்கூடிய முதலீடுகளுக்கு மாற்றுவதும் நல்லது.

5
Offer

கையிருப்பு வேண்டாம், ஆஃபர்கள் வழங்குவதைத் தவிருங்கள்!

தொழில்முனைவோர்களுக்கு மின் கட்டணம், தண்ணீர் செலவு என அலுவலகப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாக இருக்கும். இதைக் குறைப்பதற்காக வேலை குறைவாக இருக்கும் நாள்களில் சம்பளம் இல்லாத விடுமுறை விட்டுவிடுவது நல்லது. இதனால் பெருவாரியான தொகை மிச்சமாகும். அதே போல, வியாபாரத்தில் என்றைக்குமே உற்பத்திப் பொருள்களைக் கையிருப்பு வைத்திருக்கக் கூடாது என்பார்கள். ஏனெனில் அது லாபமின்மைக்கு வழிவகுக்கும்.

பொருளாதார நெருக்கடிகளில், உற்பத்திப் பொருள்கள் ஏதாவது தேங்கியிருந்தால், அதை ஆஃபர் விலைக்கு விற்று விடலாம் என்றுதான் பெரும்பாலான தொழில்முனைவோர்கள் யோசிப்பார்கள். ஆனால், இந்தச் சூழலில் ஆஃபர்களை அள்ளி வழங்குவது ஏற்புடையதாக இருக்காது. மாறாக, தொழில் வீழ்ச்சிக்கே அது வழிவகுக்கும். பொருளாதாரம் சீராகும் வரையில் பொருட்களை தேக்க நிலையில் வைத்திருக்காமல் இருக்க, நம்பகத் தன்மையுள்ள வாடிக்கையாளர்களுக்குக் கடனுக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம்.