
ஹலோ வாசகர்களே..!
நம் நாட்டில் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் செய்யப்படும் முதலீடுகள் பற்றிய புள்ளிவிவரங்கள் நாம் மகிழ்ச்சி அடையும்படி இல்லை. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைப் பொறுத்தவரை, நம் நாட்டில் உள்ள மொத்த நகரங்களும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஒன்று, டாப் 30 (T-30) நகரங்கள். சென்னை, கோவை போன்ற நகரங்கள் இந்தப் பட்டியலில் அடங்கும். இரண்டாவது, பியாண்ட் 30 (B-30) என்று சொல்லப்படும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள். டாப் 30 நகரங்கள் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் இதுவரை முதலீடாகி இருக்கும் தொகை ரூ.26.07 லட்சம் கோடியாக இருக்கிறது. ஆனால், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் இதுவரை முதலீடாகி இருக்கும் தொகை வெறும் ரூ.5.36 லட்சம் கோடி மட்டுமே.
குறைவான எண்ணிக்கையில் முதலீடு செய்கிறார்கள் என்பது ஒருபக்கமிருக்க, அவர்கள் முதலீடு செய்யும் தொகையும் குறைவாகவே இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்டில் அவர்கள் செய்திருக்கும் முதலீடு 1,04,000 என்கிற அளவில் மட்டுமே இருக்க, டாப்-30 நகரங்களில் வசிக்கும் மக்கள் சராசரியாக 2,30,000 ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருக்கிறார்கள்.
இப்படி இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் வசிக்கும் எண்ணிக்கையிலும், மதிப்பிலும் குறைவான அளவில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யக் காரணங்கள் பல. முதலில், இந்த முதலீடு பற்றி விழிப்புணர்வு அவர்களிடம் இல்லை. இரண்டாவது, இந்த முதலீடு பற்றி அவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துச் சொல்லப்படாமல் இருப்பதால், இதன் மீது நம்பிக்கை இல்லாமலே இருக்கின்றனர் மக்கள். மூன்றாவது, இந்த முதலீட்டைத் தொடங்க நினைப்பவர்களுக்கு சிறுநகரங்களில் போதுமான வசதிகள் இல்லை.
இந்தத் தடைகளை எல்லாம் உடைத்தெறிவதற்கான அனைத்து வேலைகளையும் மத்திய, மாநில அரசுகளும், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் செய்தாக வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விழிப்புணர்வை நாணயம் விகடன் தொடர்ந்து செய்துவருகிறது. அமெரிக்காவில் சுமார் 60% மக்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து தங்கள் செல்வத்தைப் பெருக்கி வருகின்றனர். நம் மக்களுக்கும் அவர்களின் தேவைகளுக்கேற்ற ஃபண்ட் முதலீட்டைத் தேர்வு செய்யக் கற்றுத் தர வேண்டும். இதன்மூலம் லாபம் மட்டுமே கிடைக்கும் என்று தவறாகக் கற்றுத் தராமல், குறுகியகாலத்திலும், நீண்ட காலத்திலும் இதிலுள்ள ரிஸ்க்குகளையும் கற்றுத் தருவதன்மூலமே இந்த முதலீட்டின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். இதன்மூலமே சிறுநகரங்களைச் சேர்ந்த பெருவாரியான மக்களை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வைக்க முடியும்!
- ஆசிரியர்