Published:Updated:

பங்குச்சந்தையில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள்; கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பங்குச் சந்தை முதலீடு
பங்குச் சந்தை முதலீடு ( படம்: வி.சதீஷ்குமார் )

இன்றைய நிலையில், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மிக முக்கியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள் என சில இருக்கின்றன. அவை என்ன என்பது குறித்து விளக்குகிறார்கள் நிபுணர்கள்.

மத்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, செபி, பி.எஸ்.இ மற்றும் சி.டி.எஸ்.எல் அமைப்பும் இணைந்து நடத்திய `75 அசாதி கா அம்ரித் மஹோத்ஸவ்' (75 azadi ka amrit mahotsav) நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் சனிக்கிழமை அன்று நடந்தது. இந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடப்பது இதுவே முதல்முறையாகும்.

இந்த நிகழ்ச்சியில் செபியின் முழுநேர உறுப்பினர் (Whole Time Member) ஜி.மகாலிங்கம் மற்றும் செபி அமைப்பின் முதன்மை பொது மேலாளர் என்.ஹரிஹரன், செபி அமைப்பின் தென் இந்தியப் பிரிவின் தலைவர் ராஜேந்திரன், பி.எஸ்.இ - ஐ.பி.எஃப் தலைவர் குஷ்ரோ புல்ஷாரா மற்றும் சி.டி.எஸ்.எல் அமைப்பின் தலைமைத் துணைத் தலைவர் யோகேஷ் குந்த்னானி அகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்கள்.

இடமிருந்து வலம் ... ராஜேந்திரன், ஹரிஹரன், மகாலிங்கம், குஷ்ரோ புல்ஷாரா, யோகேஷ் குந்த்னானி
இடமிருந்து வலம் ... ராஜேந்திரன், ஹரிஹரன், மகாலிங்கம், குஷ்ரோ புல்ஷாரா, யோகேஷ் குந்த்னானி
படம்: வி.சதீஷ்குமார்

முதலில் பேசிய குஷ்ரோ புல்ஷாரா, ``கொரோனாவுக்குப் பிறகு, இந்திய பங்குச் சந்தைகளின் போக்கு சிறப்பாக இருக்கிறது. சில்லறை முதலீட்டாளர்களின் வருகை அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக, இளைய தலைமுறையினர் இந்திய பங்குச் சந்தைகளில் ஆர்வத்துடன் முதலீடு செய்து வருகிறார்கள். இது வரவேற்கத்தக்க விஷயம். அதே சமயம், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்குமுன்னர், பங்குச் சந்தை குறித்த புரிந்துகொள்ளலும், அதைப் பற்றி தெளிவும் அவர்களுக்கு இருப்பது அவசியமாகும்.

ஏனெனில், பங்குச் சந்தை முதலீட்டை பற்றி முழுமையாக தெரிந்துகொண்டால்தான், அதில் ஒரு முதலீட்டாளராக அதிக லாபம் பார்க்க முடியும். அதுமட்டுமில்லாமல், பங்குச் சந்தை முதலீடு பற்றி விழிப்புணர்வோடு இருக்கும் முதலீட்டாளர்கள்தான் பாதுகாப்பான முதலீட்டாளர்கள் என்பதை அனைத்து முதலீட்டாளர்களும் கவனத்தில்கொள்வது அவசியம்" என்றார் தெளிவாக.

இவரைத் தொடர்ந்து பேசிய செபி அமைப்பின் முதன்மை பொது மேலாளர் என்.ஹரிஹரன், ``இன்றைய நிலையில், முதலீட்டாளர்கள் மிக முக்கியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள் என சில இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது, முதலீட்டாளர்களின் உரிமைகள். அடுத்தது, அவர்களின் பொறுப்புகளும், கடமைகளும். முதலீடு சார்ந்த விஷயங்களில் ஏதாவது சிக்கல் என்றால், அதை நிவர்த்தி செய்துகொள்ள யாரை அணுகுவது, எங்கு புகார் செய்வது என்பதையும் அனைத்து முதலீட்டாளர்களும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

என்.ஹரிஹரன்,  முதன்மை பொது மேலாளர், செபி.
என்.ஹரிஹரன், முதன்மை பொது மேலாளர், செபி.
படம்: வி.சதீஷ்குமார்
அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு இந்தப் பங்குகளில் முதலீடு செய்யப்போகிறீர்களா? கவனம்! - 30

இன்றைய நிலையில், தமிழ்நாட்டில் மொத்தம் 75 லட்சம் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் (பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ இரண்டையும் சேர்த்து) இருக்கிறார்கள். ஆகஸ்ட் 21, 2021-ம் தேதி நிலவரப்படி, 40 லட்சத்திற்குமேல் டீ-மேட் கணக்குகள் இருக்கின்றன. இது இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். ஏனெனில், அண்மைக் காலங்களில் புதிய முதலீட்டாளர்களின் வருகை அபரிமிதமாக இருக்கிறது.

ஒரு ஸ்மார்ட்போனை வாங்குகிறோம் எனில், அதன் விலையில் ஆரம்பித்து, அதிலுள்ள தொழில்நுட்ப வசதிகள் என அனைத்தையும் ஆராய்ந்து, திருப்தி என்றால் மட்டும்தானே வாங்குவோம். அதே போலத்தான், ஒரு நிறுவனத்தின் பங்கைத் தேர்வு செய்வதும். தேர்வு செய்யும் நிறுவனத்தின் பின்புலன், வரவு செலவு விவரங்கள், நிகழ்கால செயல்பாடுகள் போன்ற விஷயங்களை அலசி ஆராய்ந்து, அந்தப் பங்கில் முதலீடு செய்ய வேண்டும். நண்பர்கள் சொல்கிறார்கள், உறவினர்கள் சொல்கிறார்கள் என்பதற்காகவெல்லாம் பங்குகளைத் தேர்வு செய்யக் கூடாது. பங்குச் சந்தை பற்றிய முழுமையான புரிந்துகொள்ளல் எப்போது ஏற்படுகிறதோ அப்போது முதலீடு செய்யுங்கள். அதே சமயம், அந்த முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருமானத்தின் மீது நியாயமான எதிர்பார்ப்புகளை வையுங்கள். பேராசை பட வேண்டாம்" என்றார் அவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செபி அமைப்பின் உறுப்பினர்களுள் ஒருவரான, ஜி.மகாலிங்கம், ``கொரோனாவில் `வொர்க் ஃப்ரம் ஹோம்' கலாச்சாரம் அதிகரித்திருக்கிறது. வீட்டில் இருந்து வேலை செய்யும்போது, இடையிடையே கிடைக்கும் ஃப்ரீ டைமில், பங்குச் சந்தையின் போக்கைக் கவனித்து, அது சார்ந்த விவரங்களை ஆராய்ச்சி செய்து முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக, 30 - 35 வயதுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது; தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது.

ஜி.மகாலிங்கம், உறுப்பினர், செபி.
ஜி.மகாலிங்கம், உறுப்பினர், செபி.
படம்: வி.சதீஷ்குமார்
இன்ஷூரன்ஸ் முதல் SIP வரை; முதலீட்டில் இந்த 5 தவறுகளை நீங்களும் செய்கிறீர்களா?

கடந்த ஒரு ஆண்டு காலமாக ஐ.பி.ஓ சந்தை வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டிருக்கிறது. குறிப்பாக, நடப்பு ஆண்டில் மிக முக்கியமான நிறுவனங்கள் சந்தையில் ஐ.பி.ஓ மூலம் பங்குகளை வெளியிட்டிருக்கின்றன. அவற்றில் பல நிறுவனங்கள் மிகவும் பரிட்சயமானவை என்றாலும்கூட, அந்த நிறுவனத்தின் டி.ஆர்.ஹெச்.பி (Draft red herring prospectus (DRHP)) ஆவணங்களை முதலீட்டாளர்கள் படித்துப் பார்ப்பது அவசியம்.

சுமார் 300 - 400 பக்கங்கள் கொன்ட அந்த ஆவணங்களை முதலீட்டாளர்களால் முழுமையாக படிக்க முடியவில்லை என்றாலும் கூட, ஆறு முதல் ஏழு பக்கங்கள் கொண்ட ரிஸ்க் ஃபேக்டர் விஷயங்களைப் படிக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் ஐ.பி.ஓ வெளியிடும் நிறுவனத்தில் முதலீடு செய்யலாமா அல்லது வேண்டாமா என்பதை முதலீட்டாளர்களால் முடிவு செய்ய முடியும்.

பங்குச் சந்தையின் போக்கு ஏற்றத்தில் இருக்கும் இந்த காலக்கட்டத்தில், அது சார்ந்த முதலீட்டு ஆலோசனைகள் பலரிடம் இருந்துவரலாம். தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் என அனைத்திலிருந்தும் டிப்ஸ்கள் வழங்கப்படலாம். ஆனால், அந்த ஆலோசனைகளை உள்வாங்கிக் கொண்டு, அதற்காக சில மணி நேரங்களை ஒதுக்கி ஆராய்ந்து முடிவெடுப்பது உங்களின் கடமையாகும்.

முதலீட்டாளர்களில் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு, ஆலோசனைகளின் பேரில் அப்படியே முதலீடு செய்வது. முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்குமுன், குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஒதுக்கி, அது பற்றி சிந்தியுங்கள். முதலீட்டாளர்களில் பலர், தங்களின் குடும்ப உறுப்பினர்களிடம்கூட முதலீடு சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதில்லை. இது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும். பங்குச் சந்தை முதலீடு சார்ந்த நடவடிக்கைகளை மனைவியிடம் கலந்தாலோசியுங்கள்.

முதலீட்டாளர்கள்
முதலீட்டாளர்கள்
படம்: வி.சதீஷ்குமார்
பங்குச்சந்தை முதலீடு உங்களுக்கு சரிப்பட்டு வருமா? இதைப் படிச்சிட்டு முடிவெடுங்க! - 20

அவர்கள் சொல்லும் ஆலோசனைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை, மனைவியேகூட, உங்களுடைய முதலீட்டு ஆலோசகராக மாறலாம். ஏனெனில், ஆண்களைவிட பெண்களுக்கு சிறந்த முதலீட்டு அறிவு இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதே போல, நாமினி நியமிக்கும் விஷயத்திலும் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார் தெளிவாக.

இனி பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் என்னவெல்லாம் அவசியம் செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்த இந்த முதலீட்டாளர் விழிப்புணர்வுக் கூட்டத்தில் விளக்கமாக எடுத்துச் சொல்லப்பட்டது. இது மாதிரியான விழிப்புணர்வுக் கூட்டம் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்பதே முதலீட்டாளர்களின் கோரிக்கை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு