நடப்பு ஆண்டின் ஆரம்பத்தில் வங்கிப் பங்குகளின் போக்கு ஏற்றத்தில் காணப்பட்டது. இதனால் நிஃப்டி பேங்க் இண்டெக்ஸ் ஏற்றத்தில் வர்த்தகமானது. ஆனால், பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்தே, வங்கிப் பங்குகளின் வர்த்தகப் போக்கில் ஒருவிதமான மந்த நிலை காணப்பட்டது. உக்ரைன் - ரஷ்யா போர் பதற்றத்தால் சர்வதேச சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தபோது, இந்திய சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவையும் இறக்கத்தை சந்தித்தன. இதன் காரணமாக மெட்டல் பங்குகள் அதிக அளவில் இறக்கத்தை சந்தித்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதே போல வங்கிப் பங்குகளும் பெரும் சரிவைச் சந்தித்தன. பிப்ரவரி மாதத்தில் தொடக்கத்தில் பி.எஸ்.இ. சென்செக்ஸ் இண்டெக்ஸ் 8% மற்றும் நிஃப்டி 50 இண்டெக்ஸ் 7.3% வரை சரிந்த நிலையில் பேங்க் நிஃப்டி இண்டெக்ஸ் 11.3% வரை சரிவைச் சந்தித்துள்ளது. வங்கிப் பங்குகளான ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், எஸ்.பி.ஐ மற்றும் ஆக்சிஸ் பேங்க் பங்கு விலை 18% வரை சரிந்தன. ஏ.யு.ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், பந்தன் பேங்க், ஆர்.பி.எல் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகிய பங்குகள் பெருமளவு சரிந்திருக்கின்றன.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவங்கிப் பங்குகளின் சரிவுக்கு உக்ரைன் - ரஷ்யா போர் சூழல் மட்டும் காரணமாக இருக்கவில்லை. வரலாறு காணாத கச்சா எண்ணெய் உயர்வு, அமெரிக்க பணவீக்க விகிதம் அதிகரிப்பு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க ஃபெட் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்கிற எதிர்பார்ப்பு, பொருளாதாரத்தில் நிலவும் நிலையற்ற தன்மை இப்படி பல காரணங்களை முன் வைக்கிறார்கள் இத்துறைச் சார்ந்த நிபுணர்கள்.
வங்கிப் பங்குகளின் விலை சரிவுக்கு என்ன காரணம்? இந்த நேரத்தில் வங்கிப் பங்குகளில் முதலீடு செய்யலாமா என்ற கேள்விகளுடன் பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் பேசினோம்.

``உக்ரைன் - ரஷ்யா போர் பதற்றத்தின் காரணமாக, இந்திய சந்தைகளின் போக்கு கணிக்க முடியாததாக இருக்கிறது. ஆனால், இந்தப் போக்கானது நிலையானது கிடையாது என்பதை முதலீட்டாளர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எப்போதுமே சந்தையின் சரிவுக்குப் பிறகு, முதலில் ஏற்றம் பெறும் பங்குகளாக வங்கிப் பங்குகள் இருக்கும். இந்த போர் பதற்ற சூழல் மாறும்போது, மீண்டும் வங்கிப் பங்குகள் உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அப்போது எஸ்.பி.ஐ மற்றும் ஹெச்.டி.எஃப்.சி மாதிரியான முன்னணி வங்கிகளின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லாபத்தைப் பதிவு செய்யும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த போர் பதற்ற சூழலில், வங்கிப் பங்குகள் மட்டும் அல்லாமல், பெரும்பாலான துறை சார்ந்த பங்குகளின் விலையும் சரிந்துதான் காணப்படுகிறது. நல்ல நல்ல பங்குகளின் விலைகள் குறைந்திருக்கின்றன. அதனால் அந்தப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என முடிவெடுக்க வேண்டாம். பங்குச் சந்தையில் சில நேரங்கள் முதலீட்டுக்கானவையாக இருக்கும், சில நேரங்கள் பங்குகளை விற்பனை செய்வதற்கானவையாக இருக்கும். சில நேரங்கள் சந்தையின் போக்கை வெளியில் இருந்து கவனிக்க வேண்டியதாக இருக்கும்.

இந்த போர் பதற்றச் சூழலில் முதலீட்டாளர்கள் சந்தையின் போக்கை வெளியில் இருந்து நன்கு கவனிப்பது நல்லது. அதனால் முதலீடு செய்ய வேண்டாம் என நான் சொல்லவில்லை. நல்ல துறை சார்ந்த பங்குகளில், நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யலாம்" என்றார்.