Published:Updated:

எஃப்.டி.யைவிட அதிக வருமானம்... முதியோர்களுக்கான ஃப்ளோட்டர் ஃபண்டுகள்..!

ஃபிக்ஸட் டெபாசிட் Vs மியூச்சுவல் ஃபண்ட்

பிரீமியம் ஸ்டோரி

அண்மையில் வெளியான எஸ்.பி.ஐ ஆய்வறிக்கையில் (SBI Research report), வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பவர் களுக்குக் கிடைக்கும் வட்டி வருமானம் நெகட்டிவ்வாக இருக்கிறது என்றும், அதற்கு விதிக்கப்படும் வரியை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியைக் கேட்டுக்கொண்டுள்ளது. அனைத்து டெபாசிட்தாரர்களுக்கும் வருமான வரியைக் குறைக்க வாய்ப்பில்லை என்றாலும், மூத்த குடிமக்களுக்காவது வரியை மாற்றி அமைக்க வேண்டும்; அல்லது வரி இல்லா வட்டி வருமானத்தின் உச்ச வரம்பையாவது அதிகரிக்க வேண்டும் எனவும் அந்த ஆய்வறிக் கையில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஹசன் அலி 
ஆலோசகர்,   
Siptiger.com
ஹசன் அலி ஆலோசகர்,   Siptiger.com

ஃபிக்ஸட் டெபாசிட்டில் நெகட்டிவ் வருமானம்...

மூத்த குடிமக்கள் தங்களின் தினசரி தேவைக்கு வட்டி வருமானத்தைத்தான் நம்பி இருக்கிறார்கள். தற்போதைய நிலையில், பெரும்பாலான வங்கிகள், ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு சுமார் 5% - 5.5% வட்டி வழங்கி வருகின்றன. இது பணவீக்க விகித்தை விட குறைவாக இருக்கின்றன என்பதால், உண்மையான வருமானம் (Real rate of return) நெகட்டிவ்வாக இருக்கிறது.

மேலும், ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வருமானத்துக்கு, அவரவரின் அடிப்படை வரம்புக்கேற்ப பழைய வரி முறையில் 5%, 20%, 30% என வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியானது வட்டி வருமானத்தை மிகவும் குறைத்துவிடுகிறது. உதாரணமாக, ஒருவருக்கு ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 5.5% வட்டி கிடைக்கிறது என வைத்துக்கொள்வோம். இவர் 30% வரி வரம்பில் வந்தால், அவருக்கு கையில் கிடைக்கும் வருமானம் 3.85 சதவிகித மாகக் குறைந்துவிடுகிறது. இதில் பணவீக்க விகிதம் 5% கழித்தால், வரிக்குப் பிந்தைய உண்மையான வருமானம் மைனஸ் 1.15 சதவிகிதமாக இருக்கும். அதாவது, ஃபிக்ஸட் டெபாசிட் மீதான வருமானம் விலைவாசி உயர்வைக்கூட ஈடுசெய்யாமல் இருக்கிறது.

ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்பவர் களின் நோக்கம், நிலையான வருமானம் மற்றும் குறைவான ரிஸ்க் என்பதாக உள்ளது. வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு ரூ.5 லட்சம் வரைதான் உத்தரவாதம் இருக்கிறது. ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு இணையாக, வரிக்குப் பிந்தைய நிலையில் அதைவிட அதிக வருமானம் திட்டமாக ஃப்ளோட்டர் ஃபண்ட் (Floater fund) இருக்கிறது என எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது. ரிஸ்க் எடுக்க விரும்பாத கன்சர்வேட்டிவ் முதலீட்டாளர்கள் இந்த ஃப்ளோட்டர் ஃபண்டில் முதலீட்டை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள் எனவும் எஸ்.பி.ஐ குறிப்பிட்டுள்ளது.

எஃப்.டி.யைவிட அதிக வருமானம்... முதியோர்களுக்கான ஃப்ளோட்டர் ஃபண்டுகள்..!

அது என்ன ஃப்ளோட்டர் ஃபண்ட்?

இது மியூச்சுவல் ஃபண்டில் கடன் சந்தை சார்ந்த ஒரு ஃபிக்ஸட் இன்கம் (Fixed Income) திட்டமாகும். செபி அமைப்பின் வரையறையின் படி, முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப் படும் நிதியில் குறைந்தபட்சம் 65%, மாறுபடும் வட்டி விகித ஆவணங்களில் (Floating Rate Instruments) முதலீடு செய்யும் திட்டம் இது. மேலும், இதில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்; எப்போது வேண்டு மானாலும் யூனிட்டுகளை விற்றுப் பணமாக்கும் வசதி கொண்ட ஓப்பன் எண்டட் ஃபண்ட் திட்டமாகும். இது ‘ஃப்ளோட்டிங் ரேட் டெப்ட் ஃபண்ட்’ எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதி மாறுபடும் வட்டி விகிதம் கொண்ட பாண்டு களில் முதலீடு செய்யப்படுகிறது. பொதுவாக, வட்டி விகிதம் அதிகரிக்கும் காலத்தில் பாண்டுகள் கொடுக்கும் வருமானம் குறையும். வட்டி விகிதம் குறையும் காலத்தில் பாண்டுகள் கொடுக்கும் வருமானம் அதிகரிக்கும். தற்போதைய சூழலில், வட்டி விகிதம் குறைவாக இருப்பதால், பாண்டுகள் நல்ல வருமானம் தந்து வருகின்றன. ஃப்ளோட்டர் ஃபண்டில் செய்யப்பட்டிருக்கும் பாண்டுகளின் வட்டி விகிதம் ஃப்ளோட்டிங் விகிதத்தில் இருப்பதால், இந்த ஃபண்ட் வட்டி விகிதம் உயர்ந்தாலும், குறைந்தாலும் எப்போதும் ஓரளவுக்கு நல்ல வருமானத்தைக் கொடுத்து வருவதைப் பார்க்கலாம்.

இந்த ஃபண்டில் மாறுபடும் வட்டி விகிதம் கொண்ட பல்வேறு கடன் ஆவணங்களில் பணம் பிரித்து முதலீடு செய்யப் படுவதால், ரிஸ்க்கும் குறைவாக இருக்கிறது. மேலும், இந்த ஃபண்டுகளில் குறுகிய கால முதிர்வுகொண்ட பாண்டுகளில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் மேலும் குறைகிறது. இந்த ஃபண்டில் முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் அவரின் ஒட்டு மொத்த மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவின் ரிஸ்க்கையும் கணிசமாகக் குறைக்க முடியும்.

கடந்த மூன்று மாத காலத்தில் அனைத்துக் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் இரண்டாவதாக அதிகம் முதலீடு செய்யப்பட்ட திட்டமாக ஃப்ளோட்டர் ஃபண்ட் திட்டம் இருக்கிறது. இந்தியாவில் 172 கோடி வங்கி சேமிப்புக் கணக்கு களில் ரூ.47.9 லட்சம் கோடி பணம் இருக்கிறது. இந்தத் தொகையில் பெரும் பகுதி ஃப்ளோட்டர் ஃபண்டுகளுக்கு மாற வாய்ப்பு இருப்பதாக பகுப்பாய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்த ஃபண்டுகளில் சுமார் 3 ஆண்டு களுக்குமேல் முதலீடு செய்தால், வரிக்குப் பிந்தைய நிலையில், ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட அதிக வருமானம் கிடைக்கும் நிலை உள்ளது.

எஃப்.டி.யைவிட அதிக வருமானம்... முதியோர்களுக்கான ஃப்ளோட்டர் ஃபண்டுகள்..!

என்ன வருமானம் எதிர்பார்க்கலாம்?

கடந்த ஓராண்டுக் காலத்தில் ஃப்ளோட்டர் ஃபண்டுகள் சராசரியாக 5.39% வருமானம் தந்திருக் கின்றன. கடந்த மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகளில் முறையே ஆண்டுக்குத் தலா 7.98% மற்றும் 7.52% வருமானம் தந்திருக்கின்றன.

ஃப்ளோட்டர் ஃபண்ட் போலவே, ஆல் சீஸன்ஸ் ஃபாண்ட் ஃபண்ட் (All seasons bond fund) என்கிற ஃபண்ட் மூலமும் ரிஸ்க் இல்லாமல் ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட அதிக வருமானம் பெற முடியும். இந்த ஃபண்டில் நிதி மேலாளருக்கு (Fund manager) எந்த வகை பாண்டுகளிலும் முதலீடு செய்யும் முழுச் சுதந்திரம் மற்றும் நெகிழ்வுத்தன்மை இருக்கிறது. இதன் மூலம், அவர் இந்த ஃபண்டின் வருமானத்தை அதிகரிக்க செய்கிறார்.

இந்த ஃபண்டில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் புதிதாக ரூ.9,990 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. 2019 ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, இதுதான் மிக அதிக மான முதலீடு ஆகும். இந்த ஃபண்ட் மூலம் மொத்தம் ரூ.94,750 கோடி நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஃப்ளோட்டர் ஃபண்ட் முதலீட்டை மூன்று ஆண்டுகள் கழித்து விற்கும்பட்சத்தில், பணவீக்க விகித சரிகட்டல் (Indexation) அனுமதிக்கப்பட்டு, அதன் பிறகான லாபத்துக்கு 20% வரி கட்டினால் போதும். இந்த ஃபண்டுகளில் கடந்த மூன்று ஆண்டு களில் ஆண்டுக்குச் சராசரியாக 8% வருமானம் கிடைத்திருக்கிறது. அதாவது, மொத்த வருமானம் 24% என வைத்துக்கொள்வோம்.

பணவீக்க விகிதம் ஆண்டுக்குச் சராசரியாக 5% எனில், மூன்று ஆண்டுகளில் 15% எனில், 24% வருமானத்தில் 15% பணவீக்க விகிதம் கழிக்கப்பட்டால், 9% வருமானம் வரும். இதற்கு 20% வரி அதாவது, 7.2% வரி கட்டினால் போதும். இதுவே ஃபிக்ஸட் டெபாசிட் மூலமான வருமானம் மூன்று ஆண்டுகள் கழித்திருந்தால், முதலீட்டாளர் எந்த வருமானப் பிரிவில் வருகிறாரோ, அதற்கேற்ப பணவீக்க விகித சரிகட்டல் இல்லாமல் (அதிக) வரி கட்ட வேண்டும்.

வட்டி விகித ஏற்ற இறக்கத்தைச் சமாளிக்க ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்ட் அல்லது ஆல் சீஸன்ஸ் ஃபாண்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்து, ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட வரிக்குப் பிந்தைய நிலையில் அதிக வருமானம் பெற முடியும் என்பதால், நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே!

ஃப்ளோட்டர் ஃபண்ட் போர்ட்ஃபோலியோ எப்படி?

2021 ஆகஸ்ட் நிலவரப்படி, ஃப்ளோட்டிங் ரேட் டெப்ட் ஃபண்டுகளின் போர்ட்ஃபோலியோவில் டிரிபிள் ஏ (AAA) தரக்குறியீடு பெற்ற கடன் பத்திரங்கள் மற்றும் அரசு உத்தரவாத பத்திரங்களில் 80 - 100 சதவிகிதத் தொகை முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. டபுள் ஏ மற்றும் அதற்கு குறைவான தரக்குறியீடு பெற்ற பாண்டுகளில் 0-5% தொகைதான் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக கிரிசில் நிறுவனத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு