6 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நிறுத்தும் பிராங்ளின் டெம்பிள்டன்... முதலீட்டாளர்கள் பணம் என்னாகும்?

ஃபிராங்ளின் மியூச்சுவல் ஃபண்டின் கடன் சார்ந்த ஆறு திட்டங்களிலும் ஏப்ரல் 24-லிருந்து பணத்தை எடுக்கவோ, போடவோ முடியாது என்று அறிவித்தது.
கடந்த 2020-ம் ஆண்டின் ஏப்ரல் 23-ம் தேதி பிராங்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனம் நடத்தி வந்த கடன் சார்ந்த ஆறு திட்டங்களை மூடிவிடுவதற்கு முடிவெடுத்துள்ளதாகத் திடீர் அறிவிப்பு வெளியிட்டது. இது அன்றைய தினத்தில் முதலீட்டாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஃபிராங்ளின் இந்தியா லோ டியூரேஷன் ஃபண்ட் (Franklin India Low Duration Fund), ஃபிராங்ளின் இந்தியா டைனமிக் அக்யூரல் ஃபண்ட் (Franklin India Dynamic Accrual Fund), ஃபிராங்ளின் இந்தியா கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட் (Franklin India Credit Risk Fund), ஃபிராங்ளின் இந்தியா ஷார்ட் டேர்ம் இன்கம் பிளான் (Franklin India Short Term Income Plan), ஃபிராங்ளின் இந்தியா அல்ட்ரா ஷார்ட் பாண்டு ஃபண்ட் (Franklin India Ultra Short Bond Fund) மற்றும் ஃபிராங்ளின் இந்தியா இன்கம் ஆப்பர்ச்சுனிட்டீஸ் ஃபண்ட் (Franklin India Income Opportunities Fund) என்கிற இந்த 6 திட்டங்களும் அன்றைய தினத்தில் ரூ.25,000 கோடிக்கும் மேலான சொத்தை நிர்வகித்து வந்தன.

பாரம்பர்யமிக்க ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனத்துக்கு முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டிய நிதியைக் கொண்டு, ஃபிராங்ளின் டெம்பிள்டன் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுக்கு கடன் கொடுத்து வந்தது. இதில் பல நிறுவனங்கள் கிரெடிட் ரேட்டிங் குறைவாக உள்ள நிறுவனங்களாக இருந்திருக்கின்றன. கொரோனா காலத்தில் கிரெடிட் ரேட்டிங் குறைவாக உள்ள நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும் கடன் திரும்ப வருமா, வராதா என்கிற அச்சத்தில் முதலீட்டாளர்கள் இந்த ஆறு ஃபண்டுகளிடமிருந்து கணிசமான பணத்தை வெளியில் எடுக்க ஆரம்பித்தனர்.
சட்டென சுதாரித்துக்கொண்ட இந்த நிறுவனம், அந்த ஆறு திட்டங்களிலும் ஏப்ரல் 24-லிருந்து பணத்தை எடுக்கவோ, போடவோ முடியாது என்று அறிவித்தது. ஆனால், முதலீடு எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது அல்லது முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது பற்றித் தெளிவான அறிவிப்புகள் அன்றைய தேதியில் வெளியிடப்படவில்லை. ஆனால், தாங்கள் கொடுத்த கடன் திரும்ப வர, அனைத்து முதலீட்டாளர்களுக்கும் படிப்படியாகப் பணத்தைக் கொடுத்து விடுவதாகவும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் பணம் திரும்ப வந்துவிடும். ஆனால், சற்று காலம் பிடிக்கும் என்பதால், பொறுமையுடன் இருக்கும்படியும் ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஆனால், தற்போது இந்த ஆறு திட்டங்களில் இருந்தும் முழுமையாகப் பணத்தை வெளியில் எடுப்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் முதலீட்டாளர்கள் முறையிட்டிருந்தனர். இதற்கான தீர்ப்பு வருகிற ஜனவரி 25-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை இனி என்ன செய்யலாம் என்பது குறித்து எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில், 90% பேர் பணத்தை வெளியில் எடுப்பதற்கு வாக்களித்திருக்கிறார்கள். இதனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 24, 2020-ம் தேதி முதல் ஜனவரி 15, 2021-ம் தேதி வரை இந்த ஆறு கடன் திட்டங்கள் மூலம் மொத்தம் ரூ.13,789 கோடி பெறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.