நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஃபண்ட் கிளினிக் : குறுகியகால இலக்குகளுக்கு ஏற்ற முதலீடு!

ஃபண்ட் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபண்ட் கிளினிக்

ஃபண்ட் ஆலோசனை

எனக்கு வயது 40. என் மகளுக்கு 11 வயது. மகனுக்கு 8 வயது. `அடுத்த 15 ஆண்டுகளில் ரூ.1.5 கோடி சேர்க்க வேண்டும்’ என்பது என் இலக்கு. நான் சில ஃபண்டுகளில் மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். நான் என் மகளின் மேற்படிப்பு மற்றும் திருமணத்துக்காக முதலீடு செய்துவருகிறேன். என் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் மாற்றம் ஏதும் தேவையா?

என் முதலீடுகள்... ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. புளூசிப் ஃபண்ட் ரூ.2,000, ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் ரூ.2,000, மோதிலால் ஆஸ்வால் மல்டிகேப் 35 ஃபண்ட் ரூ.3,000, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.6,000, கோட்டக் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.2,000, ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட் ரூ.2,000, எஸ்.பி.ஐ ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட் ரூ.3,000, எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.2,000, ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.2,000, யூ.டி.ஐ எம்.என்.சி ஃபண்ட் ரூ.2,000, மோதிலால் ஆஸ்வால் நாஸ்டாக் 1000 ஃபண்ட்ஸ் ஆஃப் ஃபண்ட் ரூ.1,000.

- ஸ்வாமித்ரீ.ஆர், மெயில் மூலமாக

ஃபண்ட் கிளினிக் : குறுகியகால இலக்குகளுக்கு ஏற்ற முதலீடு!

“உங்களிடமிருக்கும் போர்ட்ஃபோலியோவில் மூன்று மல்டிகேப் ஃபண்ட்கள் உள்ளன. அவற்றில் மோதிலால் ஆஸ்வால் மல்டிகேப் ஃபண்டை நிறுத்திவிட்டு, அதில் முதலீடு செய்யும் பணத்தை மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் மற்றும் எஸ்.பி.ஐ ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீட்டை அதிகரிக்கவும். அதேபோல் யூ.டி.ஐ எம்.என்.சி ஃபண்டை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் மற்றும் ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீட்டை ரூ.1,000 உயர்த்தவும். உங்கள் முதலீட்டை 27,000 ரூபாய் என்ற அளவில் வைத்துக்கொண்டு, உங்கள் இலக்கான ரூ.1.5 கோடியை அடைவது கடினம். நீங்கள் மாதம் ரூ.10,000 முதலீட்டை அதிகரிக்கும்பட்சத்தில் அந்த இலக்கை உங்களால் எளிதில் அடைய முடியும். உங்களிடமிருக்கும் ஃபண்டுகளில் நீங்கள் கூடுதலாக முதலீடு செய்யும் 10,000 ரூபாயைப் பிரித்து முதலீடு செய்யவும்.”

முதலீடு
முதலீடு

என் வயது 35. நான் மாதந்தோறும் 18,000 ரூபாயை எஸ்.ஐ.பி முறையில் பின்வரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் கடந்த நான்கு வருடங்களாக முதலீடு செய்துவருகிறேன். முதலீடு செய்யும் ஃபண்டுகள்... மோதிலால் ஆஸ்வால் மல்டிகேப் 35 ஃபண்ட் ரூ.3,000, டாடா ஈக்விட்டி பி.இ ஃபண்ட் ரூ.3,000, மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்ட் ரூ.3,000, டி.எஸ்.பி ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.3,000, ஃப்ராங்க்ளின் ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட் ரூ.3,000, ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.3,000. இதில் ஃப்ராங்க்ளின் மற்றும் ஆக்ஸிஸ் ஃபண்டுகளில் முதலீட்டை நிறுத்திவைத்திருக்கிறேன். இவற்றுக்கு பதிலாக பராக் பரிக் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்டில் ரூ.6,000 முதலீடு செய்யலாம் என்றிருக்கிறேன்.

என்னுடைய இலக்கு இன்னும் 15 வருடங்களில் ரூ.2 கோடி சேர்க்க வேண்டும். இதற்கு இந்த முதலீடைத் தொடரலாமா அல்லது மாற்றம் ஏதும் அவசியமா?

- ராஜவேல் பாஸ்கரன், தஞ்சாவூர்

“உங்கள் இலக்கை இன்னும் 15 ஆண்டுக்காலத்தில் அடைய வேண்டு மென்றால் நீங்கள் இப்போது செய்துவரும் ரூ.18,000 போதாது. மாதந்தோறும் ரூ.34,000 முதலீடு செய்ய வேண்டும். அத்துடன் நீங்கள் செய்யும் முதலீட்டுக்குச் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 11% வருமானம் கிடைக்க வேண்டும். இதற்கிடையே மார்க்கெட் மிகவும் அதிகமாக ஓர் ஏற்றத்தைச் சந்தித்தால், அந்த நேரத்தில் போர்ட்ஃபோலியோவில் 30%-40% பிராஃபிட் புக் செய்து மறு முதலீடு செய்துவந்தால், இந்த இலக்குகளை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அடைய வாய்ப்புள்ளது.

முதலீடு
முதலீடு

இப்போது நீங்கள் செய்துவரும் முதலீட்டில் சில ஃபண்டுகளை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக பராக் பரிக் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்ய முடிவெடுத்திருக்கிறீர்கள். ரூ.3,000 மட்டும் அதில் முதலீடு செய்துவிட்டு, மீதமுள்ள 3,000 ரூபாயை கோட்டக் எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யவும். உங்கள் போர்ட்ஃபோலியோவில் ஒரு மிட்கேப் ஃபண்ட் இருப்பது நல்லது.”

நான் சில ஃபண்டுகளில் குறுகியகால தேவைக்காக முதலீடு செய்துள்ளேன். அவை... ஹெச்.டி.எஃப்.சி லிக்விட் ஃபண்ட் ரூ.8,63,000, ஹெச்.டி.எஃப்.சி ஷார்ட் டேர்ம் டெப்ட் ஃபண்ட் ரூ.50,000, கனரா ராபிகோ புளூசிப் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.30,000, ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் ரூ.5,000. என் முதலீடு சரியா?

- எம்.பாலு, திருப்பூர்

“குறுகியகால முதலீடு என்றால் எவ்வளவு காலம் என்று சரியாக நீங்கள் திட்டமிடவில்லை. இருப்பினும், ஆறு மாதம் முதல் 12 மாதம் வரை என வைத்துக்கொள்வோம். நீங்கள் ஷார்ட் டேர்ம் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும். அந்த ஃபண்டில் ஆவரேஜ் மெச்சூரிட்டி எவ்வளவு இருக்கிறது என்று ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும்.

முதலீடு
முதலீடு

உதாரணமாக, ஹெச்.டி.எஃப்.சி ஷார்ட் டேர்ம் ஃபண்ட் ஆவரேஜ் மெச்சூரிட்டி 6-7 மாதங்கள். இப்போது உங்கள் முதலீட்டு இலக்கு 12 மாதங்களாக இருந்தால் உங்கள் வருமானம் குறைய வாய்ப்புள்ளது. உங்களுடைய இலக்கு 12 மாதங்களாக இருந்தால் ஆவரேஜ் மெச்சூரிட்டி அதேபோல் இருக்க வேண்டும். ஹெச்.டி.எஃப்.சி லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்தால் இன்றைய காலகட்டத்தில் 4%-4.5% வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. இது உங்களுக்குச் சரியென்றால் அதில் முதலீட்டைத் தொடரவும். இல்லையென்றால், ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்கில் முதலீடு செய்யவும்.”

என் வயது 41. என்னுடைய முக்கியமான இலக்குகள் என்றால் என் மகன் மற்றும் மகளின் மேற்படிப்புக்காக முதலீடு செய்வதுதான். மகனுக்கு 10 வயதும், மகளுக்கு 4 வயதும் ஆகிறது. அடுத்த 8 வருடங்களில் ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையும், அடுத்த 14 வருடங்களில் ரூ.20 லட்சம் முதல் ரூ25 லட்சம் வரையும் சேர்க்க வேண்டும். என் முதலீடுகள்... ஹெச்.டி.எஃப்.சி சில்ட்ரன்ஸ் கிப்ஃட் ஃபண்ட் ரூ.2,500, ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட் ரூ.1,000. கூடுதலாக அடுத்த நான்கு மாதங்களில் ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை முதலீடு செய்யவிருக்கிறேன். எனக்குத் தகுந்த ஆலோசனை சொல்லவும்.

- ராம் முரளி கிருஷ்ணன், மெயில் மூலமாக

Mutual fund
Mutual fund

“உங்களுடைய இரண்டு ஃபண்டுகளும் சரியான தேர்வு. உங்கள் இலக்கான ரூ.25 லட்சத்தை எட்டு ஆண்டுகளில் அடைய வேண்டுமென்றால், மாதமொன்றுக்கு ரூ.16,400 முதலீடு செய்ய வேண்டும் அதேபோல் 13 ஆண்டுகளில் ரூ.25 லட்சம் சேர்க்க வேண்டுமென்றால், மாதமொன்றுக்கு ரூ.7,300 முதலீடு செய்ய வேண்டும். இந்த இரண்டு இலக்குகளுக்கும் சராசரியாக 11% வருமானம் ஈட்ட வேண்டும். நீங்கள் எஸ்.ஐ.பி-யில் முதலீடு செய்வது பேங்க்கில் ஆர்.டி-யில் சேமிப்பது போலத்தான். ஆனால், அங்கு ஏற்றம் இறக்கம் இருக்காது. இங்கு அது இருக்கும். இருப்பினும், நீங்கள் நீண்டகால எண்ணத்துடன் முதலீடு செய்துவந்தால், உங்கள் போர்ட்ஃபோலியோவை சராசரியாகப் பராமரித்துவந்தால் உங்களால் மார்க்கெட் ஏற்ற இறக்கத்தை ஓரளவுக்குச் சமாளிக்க இயலும். மார்க்கெட் அதிக வருமானம் ஈட்டித் தந்தால், 20% வருமானம் கிடைக்கும்போது பிராஃபிட் புக் செய்து மறுமுதலீடு செய்வதன் மூலம் பெரிய தடையேதும் இல்லாமல் உங்கள் முதலீட்டை வளர்ப்பதற்கு வாய்ப்புள்ளது.”

தொகுப்பு: கா.முத்துசூரியா

உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா? finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.