Published:Updated:

Gold ETF: வெளியேறும் முதலீட்டாளர்கள்; ஒரு வருடத்துக்குப் பின் குறைந்த தங்க ETF முதலீடு; ஏன்?

தங்கம்
தங்கம்

கடந்த ஜூலை மாதத்தில் கோல்டு இ.டி.எஃப் மியூச்சுவல் ஃபண்டுகளிலிருந்து ரூ.61.5 கோடி வெளியேறிய அதே சமயத்தில், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.22,584 கோடியையும், டெப்ட் ஃபண்டுகளில் ரூ.73,694 கோடி ரூபாயையும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள்.

கடந்த 2020-ம் ஆண்டில் எல்லோராலும் பேசும் பொருளாக மாறிய இரண்டு விஷயம், ஒன்று கொரோனா, மற்றொன்று தங்கம் விலை ஏற்றம். ஏனெனில், தங்கம் விலை வரலாற்றிலேயே மிக அதிகமான விலை ஏறியது அந்த ஆண்டில்தான்.

கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் ஆரம்பித்த நாளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஏறிய தங்கம் விலை, 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி உச்சத்தைத் தொட்டது. அன்றைய தினம் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,416-க்கு வர்த்தமானது. 24 காரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.5,687-க்கு வர்த்தகமானது.

கோல்டு ஈ.டி.எஃப்
கோல்டு ஈ.டி.எஃப்
எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்கவே முடியவில்லையா? நீங்கள் தவறு செய்வது இதில்தான்! - 4

அந்த ஆண்டில் தங்கம் தொடர்ந்து விலை ஏற்றத்திலேயே இருந்ததால், பாதுகாப்பான முதலீடாக நினைத்து, முதலீட்டாளர்கள் அதில் அதிக அளவு முதலீடு செய்தனர். தங்கத்தில் நேரடியாக மட்டுமல்லாமல், தங்கம் சார்ந்த கோல்டு ஈ.டி.எஃப் ஃபண்டுகளிலும் அதிக அளவு முதலீடு செய்தனர். அதனால் டிசம்பர் 2020-லிருந்து ஜூன் 2021 வரையிலான காலகட்டங்களில் கோல்டு இ.டி.எஃப் ஃபண்டுகளில் முதலீட்டாளர்கள் ரூ.3,537 கோடியை முதலீடு செய்திருக் கிறார்கள்.

ஆனால், கடந்த ஜூலை மாதத்தில் ரூ.61.5 கோடியை கோல்டு இ.டி.எஃப் ஃபண்ட் முதலீடுகளில் இருந்து வெளியில் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஏனெனில், சில வாரங்களாக தங்கத்தின் விலை பெருமளவு சரிந்து காணப்படுகிறது. அதாவது, ஒரு சவரனின் அதிகபட்ச விலையிலிருந்து சுமார் 8,000 ரூபாய் வரை ஆபரணத் தங்கத்தின் விலைவீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இதற்கு மிக முக்கிய காரணம், பங்குச் சந்தை மற்றும் அது சார்ந்த முதலீடுகள் இறக்கத்திலிருந்து ஏற்றத்தைச் சந்திக்க ஆரம்பித்திருப்பதுதான் என்று கருதப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டில் 25,000 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ் தற்போது 54,000 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

கோல்டு ஈ.டி.எஃப்
கோல்டு ஈ.டி.எஃப்
சாவரின் கோல்டு பாண்ட் வாங்குவதால் என்ன லாபம்..? நிபுணரின் வழிகாட்டல்...

இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கம் சார்ந்த முதலீடுகளான கோல்டு இ.டி.எஃப் ஃபண்டுகளிலிருந்து முதலீடுகளை மாற்ற ஆரம்பித்து, பங்குகள் மற்றும் அதைச் சார்ந்த முதலீடுகளில் அதிகமாக முதலீடு செய்து வருகிறார்கள்.

கடந்த ஜூலை மாதத்தில் கோல்டு இ.டி.எஃப் மியூச்சுவல் ஃபண்டுகளிலிருந்து ரூ.61.5 கோடி வெளியேறிய அதே சமயத்தில், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.22,584 கோடியையும், டெப்ட் ஃபண்டுகளில் ரூ.73,694 கோடி ரூபாயையும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். தங்கத்தின் விலையின் போக்கு சரிவில் இருக்கும் வரை, இந்நிலை தொடரும் என்றே இத்துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு