Published:Updated:

ஏற்றத்தில் தங்கம் விலை; முதலீடு செய்ய தகுந்த நேரமா இது?

தங்கம்
தங்கம்

தற்போதைய இக்கட்டான சூழலில் அனைத்து முதலீடுகளும் சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், தங்கம் மட்டும் அதற்கு மாறாக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

கொரோனா காரணமாக உலகப் பொருளாதாரம் மிகவும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனாவால் கடுமையான பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) 2020 முடிவில், உலக பொருளாதாரம் 4.9 சதவிகிதம் சரிந்து விடும் என்று கணித்துள்ளது.

கொரோனா பாதிப்பினால் சந்தித்திருக்கும் பொருளாதார இழப்புகளை ஈடு செய்ய, ஏற்கெனவே பெரும்பாலான மேலை நாடுகள் பணத்தை அதிக அளவில் அச்சடித்து வழங்கத் தொடங்கிவிட்டன. கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி, 3 ட்ரில்லியன் டாலர் பணத்தை அச்சடித்து புழக்கத்துக்கு விட்டுள்ளது. இந்தப் பணம் அனைத்தும் பிப்ரவரி 26 முதல் ஜூன் 24 வரை மட்டும் அச்சடிக்கப்பட்டதாகும். இதனால் ஃபெடரல் வங்கியின் இருப்பு நிலையானது 7.08 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

தங்கம்
தங்கம்
83 டன் போலித்தங்கம்; 2.8 பில்லியன் டாலர் கடன்பெற்ற நிறுவனம்... சீனாவை உலுக்கிய தங்க ஊழல்!

இங்கிலாந்து வங்கியும் நிதி நிலையைச் சமாளிக்க, பணத்தை அதிக அளவில் அச்சடிக்கத் தொடங்கிவிட்டது. ஜப்பான் வங்கியும் தொடர்ந்து பணத்தை அதிக அளவில் அச்சடித்து வருவதால் அதன் இருப்பு நிலையும் தற்போது 638.6 ட்ரில்லியனாக உள்ளது. இவ்வாறு உலகப் பொருளாதாரமே தடுமாற்றத்தில் உள்ளதால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.

ஏற்றத்தில் தங்கம்..!

முதலீட்டாளர்களின் ஆர்வத்துக்குத் தீனி போடுவது போல, தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. இத்தகைய சூழலில் தங்கத்தை ஃபோர்ட்ஃபோலியோவில் வைத்திருப்பது நிச்சயம் லாபம் தரக் கூடிய விஷயம்தான் என இத்துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அதேநேரம், முழுமையாகத் தங்கத்தில் முதலீடு செய்வதும் ஆபத்தானது என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

Gold
Gold

தற்போதைய இக்கட்டான சூழலில், அனைத்து முதலீடுகளும் சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், தங்கம் மட்டும் அதற்கு மாறாக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. 2020-ம் ஆண்டின் கடந்த ஆறு மாதத்தில் மட்டும், 17% ஏற்றத்தைத் தங்கம் சந்தித்திருக்கிறது. கடந்த 18 மாதங்களில் 53 சதவிகித வருமானத்தைத் தங்கம் பெற்றுத் தந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் எதிர்காலத்திலும் தங்கம் நிச்சயம் லாபம் தரக்கூடிய முதலீடாகவே இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.

கடந்த காலத்தில் தங்க வருமானம்!

கடந்த பல வருடங்களாகத் தங்கம் தொடர்ந்து மிதமான வருமானத்தைப் பெற்றுத் தந்துள்ளது. இதில் 2001-ம் ஆண்டு தங்கமானது 13 சதவிகித வருமானத்தைப் பெற்றுத் தந்தது. இதுதான் அப்போது உலகளாவிய நாணயங்களின் மதிப்பில் சிறந்த வருமானமாகக் கருதப்பட்டது. இதேபோல் கடைசி 15 வருடங்களை எடுத்துக்கொண்டாலும் தங்கம் வருடத்துக்கு 14.7 சதவிகித வருவாயை முதலீட்டாளர்களுக்குப் பெற்றுத் தந்துள்ளது. இவ்வளவு ஏன்... கடைசி 10 வருடங்களில், ஒவ்வொரு வருடமும் முறையே 10.1 சதவிகித வருமானத்தைத் தங்கம் ஈட்டி தந்துள்ளது.

தங்கம் விலை... ஏற்றம் எதுவரை..? - தொடர்ந்து முதலீடு செய்யலாமா?

அதேபோல் கடந்த ஐந்து வருடங்களிலும், இதன் வருமானமானது ஒவ்வொரு வருடமும் 12.8 சதவிகிதமாக இருந்துள்ளது. இவையெல்லாம் கடந்த காலங்களில் திடீரென ஏற்படும் பொருளாதார மாற்றங்களால்தான் நிகழ்ந்துள்ளன. கடந்த கால வரலாற்றை வைத்துப் பார்க்கும்போது, தங்கத்தில் முதலீடு செய்வது பொருளாதார மந்த நிலையிலும் லாபத்தையே பெற்றுத் தரும் என்பது தெளிவாகிறது.

ஏற்றத்துக்குக் காரணம்!

தங்கம் விலை தொடர்ந்து ஏறுவதற்குக் காரணம், தங்கத்தை நாம் அமெரிக்க டாலர்களில் வாங்குகிறோம். இந்தியா உற்பத்தியை விட, அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடு. கடந்த 2018-2019-ம் ஆண்டில் 1,664 கிலோ தங்கத்தை மட்டுமே நாம் உற்பத்தி செய்தோம். மேலும் இதே காலகட்டத்தில் அதிகப்படியான தங்கத்தை இறக்குமதி செய்துள்ளோம். இவ்வாறு இறக்குமதி செய்யும்போது இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர்களின் மதிப்பிலேயே தங்கத்தை வாங்குகிறோம்.

ஆனால், இந்திய ரூபாயின் மதிப்பானது அமெரிக்க டாலர்களின் மதிப்பில் தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது. கொரோனா காலத்துக்குப் பிறகு இந்தியாவின் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்திக்க உள்ளது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பும் அமெரிக்க டாலர்களின் மதிப்பில் சரிவையே சந்திக்கும். எப்போதெல்லாம் இந்திய ரூபாய், அமெரிக்க டாலர்களின் மதிப்பில் சரிவைச் சந்திக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கம் மூலம் அதிகமான வருமானம் நிச்சயம் கிடைக்கும். அதன்படி பார்க்கும்போது, இனி வரும் நாள்களிலும் தங்கம் விலை கணிசமாக உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம்
தங்கம்

மேலே குறிப்பிட்டது போல, உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கப் பணத்தை அதிக அளவில் அச்சடிக்கத் தொடங்கிவிட்டதால், இது வரை நுகர்வோர் பொருள்களின் விலை அதிக அளவில் உயரவில்லை. தேவைக்கும், விநியோகத்துக்கும் இடையில் சிக்கல் உருவாகியிருக்கிறது. இது நிச்சயமாகப் பணவீக்க விகிதத்தை அதிகப்படுத்தும். ஒருவேளை அப்படிப் பண வீக்கம் ஏற்பட்டால் தங்கமானது நல்ல வருவாயைப் பெற்றுத் தரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பிற முதலீட்டுத் திட்டங்கள்!

இந்த இக்கட்டான நேரத்தில் பிற முதலீட்டுத் திட்டங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். வங்கிகளின் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் 6 - 7 சதவிகிதம் என்ற நிலையிலேயே இருக்கிறது. மேலும் இனிவரும் காலங்களில் வங்கி சேமிப்புக்கான வட்டி விகிதம் நிலையானதாக இருக்குமே தவிர அதிகரிக்கும் வாய்ப்பு குறைவுதான். இந்திய பங்கு சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவற்றின் போக்கு தற்போது ஏற்றத்தில் காணப்பட்டாலும், முன்பு இருந்ததைவிட சுமார் 20-35 சதவிகிதம் வரை சரிந்தே வர்த்தகமாகி வருகின்றன. மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளின் வருமானம் ஓரளவுக்குப் பரவாயில்லை. கொரோனாவுக்கு முன்பும் சரி, இனிவரும் காலங்களிலும் சரி... ரியல் எஸ்டேட் துறை பெரிய அளவில் வருமானத்தை ஈட்டித் தருவதாகத் தெரியவில்லை. சில வருடங்களாக ரியல் எஸ்டேட்டிலிருந்து கிடைக்கக்கூடிய வருமானம் எதிர்மறையாகவே இருந்துள்ளது.

தொடர்ந்து ஏற்றத்தில் தங்கம்! - இன்னும் விலை உயருமா?

ஆக, எப்போது பிற முதலீடுகள் நல்ல வருமானத்தைப் பெற தவறுகிறதோ, அப்போதெல்லாம் தங்கமே அதிக வருமானத்தை முதலீட்டாளர்களுக்குத் தந்துள்ளது. அதனால், இனி வரும் நாள்களில் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் தங்கத்துக்கும் கணிசமான இடத்தை ஒதுக்குவது நல்லது.

இன்றைய தங்க விலை நிலவரத்தை இங்கே அறிந்துகொள்ளவும்.

இன்றைய வெள்ளி விலை நிலவரத்தை இங்கே அறிந்துகொள்ளவும்.

அடுத்த கட்டுரைக்கு