Published:Updated:

ஏற்ற இறக்கத்தில் தங்கம்… இன்னும் குறையுமா... இப்போதே வாங்கலாமா?

தங்கம் விலை...
பிரீமியம் ஸ்டோரி
தங்கம் விலை...

கவர் ஸ்டோரி

ஏற்ற இறக்கத்தில் தங்கம்… இன்னும் குறையுமா... இப்போதே வாங்கலாமா?

கவர் ஸ்டோரி

Published:Updated:
தங்கம் விலை...
பிரீமியம் ஸ்டோரி
தங்கம் விலை...

தங்கத்தில் முதலீடு செய்வது நம் மக்களைபொறுத்தவரை, தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அதே நேரத்தில் அதில் எப்போது முதலீடு செய்ய வேண்டும், உச்சத்தில் இருந்து தங்கம் விலை நன்கு இறங்கியுள்ள நிலையில் இப்போது தங்கம் வாங்குவது சரியான முடிவாக இருக்குமா, தங்கம் விலை இன்னும் இறங்குமா என்கிற கேள்விகள் முக்கியமானவை. இந்தக் கேள்விகளுக்கான பதிலைக் காண முயற்சி செய்வோம்.

ஷியாம் சுந்தர் 
கமாடிட்டி நிபுணர்
ஷியாம் சுந்தர் கமாடிட்டி நிபுணர்

விலை எவ்வளவு இறங்கியது?

இந்த ஆண்டில் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இரண்டு முறை 1 டிராய் அவுன்ஸ் (31.10 கிராம் தங்கம்) 1,700 டாலருக்குக் கீழேயும், கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ஒருமுறை 1,900 டாலருக்கு மேலேயும் சென்று வர்த்தகமானது. ஆக, சர்வதேச சந்தையில் தங்கம் விலை மிக அதிகமாக இறங்கவும் இல்லை; மிக அதிகமாக ஏறவும் இல்லை. சுமாராக, 200 டாலருக்குள்ளாக, பக்க வாட்டிலேயே வர்த்தகம் நடக்கிறது.

2020-ம் ஆண்டில் தங்க விலையேற்றத்துக்கு முக்கிய காரணமாக கோவிட் 19 அமைந்தது. அதாவது, உலகப் பொருளாதாரத்தையே ஸ்தம்பிக்கச் செய்துவிட்டதால், தங்கம் விலை கணிசமாக உயர்ந்தது. 2021-ல் அதிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வர பல்வேறு நாடுகளும் பொருளாதாரம் சார்ந்த ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தபோதிலும், கோவிட்-19 தொற்று நோய்க்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, சாதாரண சூழ்நிலையைத் தோற்றுவிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், உலக அளவில் அதனால் ஏற்படும் பாதிப்பு ஓரளவுக்கு மட்டுமே குறைந்துள்ளன.

கோவிட் 19 பாதிப்புகளால் பொருள் விநியோக சங்கிலி (Supply disruption) என்று சொல்லக்கூடிய, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு ஏற்றுமதியாகக்கூடிய கமாடிட்டி பொருள்களை எடுத்துச் செல்வதில் மிகுந்த சிக்கல்கள் எழுந்தன. கப்பல் போக்குவரத்தில் மிகப் பெரிய காலதாமதம் ஏற்பட்டதுடன், கன்டெய்னர்களின் வாடகைக் கட்டணம் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இது தவிர, மெக்சிகோ பிராந்தியத்தில் ஏற்பட்ட கடும் புயல் காரணமாக, தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக மேலும் இது போன்ற சில புயல் தாக்குதல்கள் ஏற்படலாம் என்ற கணிப்புகளும் வெளியாகி யுள்ளன. இதனால் பொருள்களின் விலை உயர்ந்து, பணவீக்கம் அதிகரித்து வருகிறது. பொருளாதார பாதிப்புகள் ஒருபக்கமும், பொருளாதாரம் குறித்த நிச்சயமற்றதன்மை மறுபக்கமுமாகச் சேர்ந்து தங்கத்தை ஒரு மாற்று முதலீடாக முதலீட்டாளர்களால் பார்க்கப்பட்டது.

தங்கம் விலை குறைய என்ன காரணம்?

1. சென்ற வாரத்தில் வெளியிடப்பட்ட அமெரிக்காவின் சில்லறை விற்பனை குறியீடு, சந்தை எதிர்பார்த்ததைவிட அதிகரித்து காணப்பட்டது. ஆகஸ்ட் மாத விற்பனைக் குறியீடு –3 சதவிகிதத்திலிருந்து 1 சதவிகிதத்துக்கு உள்ளாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், சற்று பாசிட்டிவ்வாக 0.7% அதிகரித்து காணப்பட்டது, தங்கத்திலிருந்து பங்குச் சந்தையை நோக்கி வரக் காரணமாக இருந்தது.

2. அமெரிக்க டாலர் இண்டெக்ஸின் மதிப்பு 93 ஆக உயர்ந்து காணப்பட்டது.

3. கோவிட் காரணமாக ஏற்பட்ட பொருளாதாரச் சுணக்கம் ஓரளவுக்குக் குறைந்து, சகஜநிலைக்குத் திரும்பியதால், உலக அளவில் பணவீக்கம் 2020-ம் ஆண்டைக் காட்டிலும் 2021-ல் அதிகரித்து காணப்படுகிறது. சர்வதேச நிதி ஆணையத்தின் (IMF) அறிக்கையின்படி, உலக அளவில் பணவீக்கமானது 2020-ம் ஆண்டில் 3.2 சதவிகிதமாக இருந்தது, 2021-ம் ஆண்டில் 3.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் பணவீக்கம் 5 சதவிகிதமாக அதிகரித்தும், வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தும் காணப்படுவதால், அமெரிக்க ஃபெடரல் வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர் பார்ப்பு தற்போது சந்தையில் நிலவுகிறது.

ஏற்ற இறக்கத்தில் தங்கம்… இன்னும் குறையுமா... இப்போதே வாங்கலாமா?

கோல்டு இ.டி.எஃப்பில் அதிகரித்த முதலீடு...

2021–ன் முதல் ஆறு மாதங் களில் கோல்டு இ.டி.எஃப்பில் முதலீடுகள் அதிகரித்தது; இதற்குக் காரணம், கோவிட் நோய்த்தொற்றுப் பரவல் முழுவதும் முடிவுக்கு வராத நிலையில், பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை என உலக அளவிலான முதலீட்டாளர் கள் நினைத்ததுதான். ஆசிய நாடுகளில் குறிப்பாக, சீனா, இந்தியா மற்றும் ஹாங்காங் நாடுகளில் முதலீட்டாளர்கள் கோல்டு இ.டி.எஃப் திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்துள்ளனர். 2021 முதல் ஆறு மாதங்களில், சீனாவில் வர்த்தக மாகக்கூடிய கோல்டு இ.டி.எஃப் பண்டுகளில் சுமார் 651 மில்லியன் டாலர்களாக செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் வர்த்தகமாகி வருகிற 11 கோல்டு இ.டி.எஃப்-களில் 371 மில்லியன் டாலர்கள் என்ற அளவுக்கும், ஹாங்காங்கின் 4 கோல்டு இ.டி.எஃப்–களில் சுமார் 270 மில்லியன் டாலர்கள் என்ற அளவுக்கும் முதலீடுகள் நடை பெற்றுள்ளன.

சென்ற ஆண்டில் (2020) கோல்டு இ.டி.எஃப் முதலீட்டில் இந்தியா முதலிடத்தில் இருந்தது. அதாவது, 898 மில்லியன் டாலர்களாகவும், சீனா 860 மில்லியன் டாலர்களாகவும், ஜப்பான் 434 மில்லியன் டாலர்களாகவும் கோல்டு இ.டி.எஃப் முதலீடுகள் செய்யப்பட்டன. அதே நேரத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இ.டி.எஃப் முதலீடுகளிலிருந்து முறையே 8.5 மில்லியன் டாலர், 3.6 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு வெளியேறியிருக்கிறது.

தங்கம் விலை ஏற்றமும் அமெரிக்கப் பொருளாதாரமும், வட்டி விகிதங்களுக்குமான தொடர்பும்...

அமெரிக்காவில் ஆண்டுதோறும் ‘ஜாக்சன் ஹோல்’ என்னும் இடத்தில் நடைபெறக்கூடிய கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளின் பிரதிநிதிகள், நிதித்துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்துகொண்டு சர்வதேச பொருளாதார நிலை குறித்து விவாதிப்பது வழக்கம். இந்தக் கூட்டம் சென்ற மாத இறுதியில் நடைபெற்றது. இதில் கோவிட் 19 காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கல்கள், மத்திய வங்கிகள் வரும்காலத்தில் எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகள்... குறிப்பாக, பொருளாதாரத்தை ஊக்குவிக்க சந்தையில் புதிதாக நுழைக்கப்பட்ட பணப்புழக்கத்தை மீண்டும் எப்போது திரும்பப் பெறுவது, அதிகரிக்கும் பணவீக்கம், வட்டி விகிதங்களில் மாற்றம் எனப் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தின் முடிவில், வேலைவாய்ப்பின்மை புள்ளிவிவரம் மிகவும் குறைந்து காணப்படுவது மற்றும் பணவீக்கம் 5 சதவிகிதமாக இருப்பது ஆகிய இரண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமான செய்தியாகப் பார்க்கப்பட்டாலும், 2021-ஆண்டு இறுதிக்குள்ளாக அவசரப்பட்டு வட்டி விகிதங்களை உயர்த்தும் எண்ணம் இல்லை. இப்போதைய பணவீக்க அதிகரிப்பானது தற்காலிக மானது எனவும், மீண்டும் 2% என்ற நிலைக்கே திரும்பக்கூடும் எனவும் அமெரிக்க ஃபெடரல் சொன்னது. கோவிட் நோய்த்தொற்று இன்னும் முழுவதும் விலகாத நிலையில், வட்டி விகிதம் சார்ந்த முடிவுகளை எடுப்பதில் அமெரிக்க ஃபெடரல் ஒரு விதமான நிச்சயமற்றதன்மையிலேயே இருப்பதையும் இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

இதனால் அமெரிக்க ஃபெடரலின் ஒவ்வொரு கூட்டத்தின் முடிவில் (FOMC) வெளியிடப்படும் அறிக்கைகளும் தங்கத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. அமெரிக்க வட்டி விகிதங்களுக் கும், தங்கத்துக்கும் நேரடியான தொடர்பு இருப்பதால், முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை அவ்வப்போது மாற்றி அமைப்பதன் காரணமாக சர்வதேச விலையில் தொடர் ஏற்றத்தைக் காண முடிய வில்லை. தங்கம் விலை பக்கவாட்டு நகர்வில் அதாவது, 50 முதல் 100 டாலர் களுக்குள்ளாக குறுகிய காலத்தில் அதிகரித்தும், இறக்கமடைந்தும் வர்த்தகமாகி வருகிறது.

இந்தியாவின் தங்க இறக்குமதி...

நடப்பாண்டில், ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, ஜூலை மாதத்தில் இந்தியாவின் தங்க இறக்குமதி அதிகரித்துள்ளது. கோவிட் 19 காரணமாக மந்தநிலையில் இருந்த பொருளாதாரம், தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் காரணமாக மீண்டும் சகஜநிலைக்கு வரும் என்கிற எதிர்பார்ப்பிலும் நோய்த் தொற்று குறைந்து வருவதாலும், தங்கம் இறக்குமதி அதிகரித் துள்ளது. (பார்க்க, தங்கம் விலை சார்ட்)

2020 மற்றும் 2021–ம் ஆண்டுகளில் இந்தியாவின் தங்க இறக்குமதி! (மெட்ரிக் டன்களில்)
2020 மற்றும் 2021–ம் ஆண்டுகளில் இந்தியாவின் தங்க இறக்குமதி! (மெட்ரிக் டன்களில்)

அடுத்த ஒரு வருடத்தில் விலைப் போக்கு எவ்வாறு இருக்கும்?

வங்கிகளில், டெபாசிட்டு களின் மீதான வட்டி குறைந்து வருவதை அடுத்து, ஒரு சாரார் தங்கள் முதலீட்டைப் பங்குச் சந்தைகளில் மாற்றி முதலீடு செய்து வருகின்றனர். இதனால், பங்குச் சந்தைகளின் குறியீடுகள் உயர்ந்துகொண்டே வருகின்றன. இந்திய பங்குச் சந்தைகள் மட்டு மன்றி, உலகப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து உச்சத்தில் வர்த்தக மாகி வருகின்றன. உலகப் பொருளாதார வளர்ச்சி மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது. ஆனால், இந்த வளர்ச்சிக்கு அடிப்படையான காரணம், உலக அளவில் மத்திய வங்கிகள் பணப் புழக்கத்தை அதிகரிக்கச் செய்திருப்பதுதான். இவற்றை வளர்ச்சி அடைந்த நாடுகளின் மத்திய வங்கிகள் திரும்பப் பெற முயற்சி செய்யும்போது, பொருளாதார வளர்ச்சியில் நிலைத் தன்மை இருக்குமா என்கிற சந்தேகம் எப்போதும் இருந்து வருகிறது. ஆகையால், தங்கத்தின் சர்வதேச விலை அவ்வப்போது அமெரிக்கப் பொருளாதாரத்தின் புள்ளி விவரங்களால் இறக்கமடைய வாய்ப்புண்டு.

எனினும், கோவிட் 19–ன் தாக்கம் முழுவதும் முடிவுக்கு வராத நிலையில், தங்கத்தின் விலை ஏற்றத்தில் போக்கில் இருக்கவும் நிறைய சாத்தியங்கள் உள்ளன. ஒருவேளை, பங்குச் சந்தைகள் உச்சத்தில் இருக்கும் நிலையில், லாபத்தைத் திரும்ப எடுக்க நினைத்து, முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங்கி, சந்தை சரியும்பட்சத்தில், தங்கத்தின் மீதான முதலீடுகளாக மாற வாய்ப்புண்டு.

தங்க நகைப் பிரியர்கள் தங்களின் ஆபரணத் தேவைகளுக்கு மட்டும் தங்கத்தில் கவனம் செலுத்தலாம். முதலீட்டு நோக்கில் உள்ளவர்கள், கோல்டு இ.டி.எஃப் அல்லது அரசாங்கம் வெளியிடுகிற தங்கப் பத்திரங்கள் (SGB) வாயிலாக முதலீடுகளைத் தொடரலாம்.

படம்: மதன்சுந்தர்

‘‘தங்கத்தை பேப்பர் கோல்டாக வாங்குங்கள்..!’’

லலிதா ஜெயபாலன், மணிவேதம்.காம்

“தங்கத்தை நேரடியாக வாங்குவதில் இருக்கும் பல்வேறு இழப்புகளை ஈடுகட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதுதான் இந்த ‘பேப்பர் கோல்டு’ சேமிப்புத் திட்டங்கள். ‘எலெக்ட்ரானிக் கோல்டு’ என்றும் இதை அழைப்பதுண்டு. ‘பேப்பர் கோல்டு’ என்பது தங்கத்தின் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் முதலீடு செய்யப்பட்டு, அந்த முதலீட்டின் பயனை முதலீட்டாளர்களுக்கு அளிப்பது. இந்த முதலீட்டின் வருவாய் தங்கத்தின் விலைப்போக்கையொட்டியே இருக்கும். தவிர, செய்கூலி, சேதாரம் கிடையாது. தரம் குறித்துக் கவலைகொள்ளத் தேவையில்லை. பாதுகாக்க லாக்கரும் வேண்டிய தில்லை. என்றாலும், தங்கத்தில் கிடைக்கும் வருவாய்க்கு நிகரான பலன்கள் இதில் கிடைக்கும்.

இப்போது தங்கம் தேவையில்லை. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, என் மகளின் திருமணத்துக்குத் தேவை; அதற்கான பணத்தை இப்போதே முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பவர்கள், ஆர்.பி.ஐ வெளியிடும் ‘சாவரின் கோல்டு பாண்ட் (Sovereign Gold Bond)’ திட்டத்தைத் தேர்வு செய்யலாம். ஆர்.பி.ஐ ஒவ்வோர் ஆண்டும், பல கோல்டு பாண்ட் சீரிஸ்களை வெளியிட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் மொத்த ஆறு சீரிஸ் விற்பனையை ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது. ஆறாவது சீரிஸ் விற்பனைகூட கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 3-ம் தேதி முடிவடைந்தது. அடுத்த சீரிஸ் எப்போது வெளியிடப்படும் என ஆர்.பி.ஐ இனி அறிவிக்கும்.

இந்தத் திட்டத்தில் தங்கத்தின் விலை ஏற்றத்துடன், ஆண்டுக்கு கூடுதலாக 2.5% வட்டி வருமானம் கிடைக்கும். இந்தப் பத்திரத்தின் முதிர்வுக் காலம் எட்டு ஆண்டுக் காலம் ஆகும். அதன் பிறகு, பணத்தை எடுத்தால் நீண்டகால மூலதன ஆதாயத்துக்கு வரி எதுவும் கிடையாது. தனிநபர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சமாக ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக நான்கு கிலோ வரை முதலீடு செய்யலாம். எட்டு ஆண்டுகள் வரை காத்திருக்க முடியாதவர்கள், சில நிபந்தனைகளுடன் ஐந்து வருடங்கள் முடிவடைந்த பிறகு வெளியேறலாம். கணவன் மனைவி இணைந்தும், மைனர் பேரிலும் முதலீடுகளைச் செய்யலாம். குறிப்பிட்ட தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளின் மூலம் முதலீடு செய்யலாம். இந்த தங்க பத்திரத்தில் உள்ள ஓர் அசெளகர்யம், நினைத்த நேரத்தில் இதை வாங்கவோ, விற்கவோ முடியாது. ஆர்.பி.ஐ வெளியிடும் நேரத்தில்தான் வாங்க முடியும்.

எதிர்காலச் சேமிப்புக்காக இப்போதிலிருந்தே ஆபரணத் தங்கம், நாணயங்கள் மற்றும் பார் கட்டிகளாக வாங்கி வைக்காமல், கோல்டு இ.டி.எஃப் திட்டத்தில் முதலீடு செய்யலாம். தங்கத்தின் மீது நேரடியாக மேற்கொள்ளப்படும் இந்த வகை முதலீடு, பங்குச் சந்தையில் வர்த்தகமாவதால், டீமேட் கணக்கு வைத்திருக்க வேண்டியது அவசியம். இந்தத் திட்டத்தில் நாம் மேற்கொள்ளும் முதலீட்டுக்கேற்ப, நமக்கு தங்கம் யூனிட்டுகளாகப் பிரித்தளிக்கப்படும்.

இந்த இரண்டு முறைகளிலும் முதிர்வின்போது தங்கமாகத் தர மாட்டார்கள். கிடைக்கும் பணத்தைக் கொண்டு நாம் தங்கமாக வாங்கிக்கொள்ளலாம். உதாரணமாக, கோல்டு பாண்டு திட்டத்தில் முதலீடு செய்யும்போது ஒரு கிராம் கோல்டை ரூ.5,000 கொடுத்து நீங்கள் வாங்கியிருந்தால், எட்டு ஆண்டுகள் கழித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7,000-ஆக அதிகரித்திருக்கும்பட்சத்தில், தங்கத்தின் ஏற்ற விலை ரூ.2,000 + 2.5% வட்டியுடன் சேர்த்து வழங்கப்படும். அதைக் கொண்டு, அன்றைய டிசைனில் உங்களுக்குப் பிடித்தமான நகைகளை வாங்கிக்கொள்ளலாம்.‘‘

ஜெயந்திலால் ஜலானி
ஜெயந்திலால் ஜலானி

அடுத்த ஜூனில் தங்கம் விலை உச்சத்தைத் தொடும்..!’’

ஜெயந்திலால் ஜலானி, தலைவர், சென்னை தங்க நகை வியாபாரிகள் சங்கம்.

“தொழில் துறைகள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்கு உள்ளானதால், இந்தியப் பங்குச் சந்தைகள் பெரும் இறக்கத்தைச் சந்தித்தன. அந்தச் சமயத்தில், பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் மீது மக்கள் அதிக அளவில் முதலீடு செய்தனர். இதன் காரணமாகத் தங்கம் வரலாறு காணாத உச்சத்தை, கடந்த 2020-ல் அடைந்தது. அதன் பிறகு வீழ்ச்சியைச் சந்தித்தாலும், ஏறிய அளவுக்கான வீழ்ச்சியாக அது இல்லை.

கொரோனா காலகட்டத்தில் 30-35% வரையில் தங்கத்தின் விலை அதிகரித்திருக்கிறது. அதே அளவு வீழ்சிச்யை இனி எப்போதும் எதிர்பார்க்க முடியாது என்பதுதான் உண்மை. ஏனெனில், இனிவரும் நாள்களில் தங்கத்தின் விலை ஏற்றத்தில்தான் இருக்கும். குறிப்பாக, 2022-ம் ஆண்டின் ஜூன் மாதத்துக்குப் பிறகு, தங்கத்தின் விலை மீண்டும் ஒரு புதிய உச்சத்தைத் தொடும். தற்போதைய நிலையில், உலக நாடுகளின் அமைதியின்மை, போர் சூழல், அரசியல் பதற்றம், இயற்கை சீற்றங்களால் பேரழிவு போன்ற பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையில் நிச்சயம் பிரதிபலிக்கும். இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலைகளில் தங்கம் விலை அதிகரிக்கத்தான் வாய்ப்புள்ளதே தவிர, இறங்காது. இன்னும் சொல்லப்போனால், கொரோனா, மக்களுக்கு தங்கம் மற்றும் தங்கம் சார்ந்த முதலீடுகளின் மீது நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. இதனால் தங்கம் விலை இறக்கம் நிச்சயமாகத் தக்கவைக்கப்படும். உலகத்தின் உண்மையான கரன்சி என்றால், அது தங்கம்தான். ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தி தங்கத்துக்கு இருப்பதால், என்றைக்குமே தங்கத்துக்கு மவுசு அதிகம்தான்” என்றார்.