தொடர்ந்து சரியும் தங்கம் விலை... பவுனுக்கு ₹7,072 வீழ்ச்சி... வாங்க சரியான தருணமா இது?

ராக்கெட் வேகத்தில் ஏற்றத்தைக் கண்ட தங்கம் விலை, மளமளவென சரிவதற்குக் காரணம் என்ன தெரியுமா?
தொழில் துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் போன்ற முதலீடுகளில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்தனர்.
இதனால் ஊரடங்கு காலத்திலும் தங்கம் ஏற்றம் கண்டு, முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்தது. அதே சமயம், தேவைக்காக வாங்கும் சாமான்யர்களுக்குத் தங்கத்தின் மீதான விலை ஏற்றம் சோகத்தை வழங்கியது.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5,416 ரூபாய் வரை சென்றது. இதுவே தங்கத்தின் உச்சபட்ச விலையாகும். அன்றைய நிலையில், ஒரு பவுன் 43,328 ரூபாய்க்கு விற்பனையாகி வரலாற்றுச் சாதனை படைத்த தங்கம், இன்று (டிசம்பர் 1, 2020) காலை 36,256 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த மூன்று மாதத்தில் மட்டும் ஒரு பவுனுக்கு 7,072 ரூபாய் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.
ராக்கெட் வேகத்தில் ஏற்றத்தைக் கண்ட தங்கத்தின் விலை, மளமளவென சரிவதற்கு என்ன காரணம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன, இப்போது தங்கத்தை வாங்கலாமா என்கிற கேள்விகளுடன் முதலீட்டு ஆலோசகர் ஷியாம் சேகரிடம் பேசினோம்.
இதுவே சரியான தருணம்!
``கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக உலக அளவில் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் மாதிரியான முதலீடுகளின் மீது முதலீட்டாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. அதனால் பாதுகாப்பான முதலீடு எனக் கருதும் தங்கத்தின்மீது அவர்கள் அதிக அளவில் முதலீட்டை செய்ய ஆரம்பித்தார்கள். இதனால் தங்கத்தின் விலை மிக வேகமாக அதிகரித்தது.

ஆனால், தற்போது கொரோனா தடுப்பூசியின் மீதான நம்பிக்கை, தொழில் துறைகளின் தேக்கநிலை மாற்றம், பொருளாதார வீழ்ச்சி தடுக்கப்படும் என்கிற நம்பிக்கை, இதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கு மற்ற முதலீட்டின் மீதான கவன அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.
தங்கத்தின் விலை இன்னும் இறக்கம் காணுமா அல்லது ஏற்றம் பெறுமா என்கிற அனுமானத்துக்கு நம் யாராலும் போக முடியாது. தங்கத்தின் தற்போதைய விலை முதலீடு செய்வதற்கு ஏற்புடையதாக இருக்கும். அதனால் இன்னும் விலை இறங்கும் என்று காத்திருக்காமல், இப்போது முதலீடு செய்வது புத்திசாலித்தனம். தேவைக்காக தங்கம் வாங்கும் மக்களுக்கும் இந்த விலை வரப்பிரசாதம்" என்றார்.

எம்.சி.எக்ஸ் தங்கம்!
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்தியச் சந்தையிலும் தங்கம் விலை, கடந்த வாரத்தில் பலத்த வீழ்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த வார திங்கள் கிழமை அன்று (23.11.2020) தங்கம் விலை தொடக்கத்தில் 10 கிராமுக்கு 50,234 ரூபாயாக தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக 50,350 ரூபாய் வரை அதிகரித்தது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று (27.11.2020) குறைந்தபட்சமாக 47,800 ரூபாய் வரை சென்ற நிலையில், முடிவில் 48,125 ரூபாயாக முடிவுற்றது.
கடந்த ஒரு வாரத்தில் 10 கிராம் தங்கத்தின் விலையானது 2,550 ரூபாய் குறைந்துள்ளது. இதுவே கடந்த ஆகஸ்ட் மாத உச்சமான 56,200 ரூபாயில் இருந்து பார்க்கும்போது, 8,400 ரூபாய் சரிந்துள்ளது.
Gold Rate: Click Here to check today price