Published:Updated:

பட்ஜெட் 2022... வருமா தங்கத்துக்கென தனி சேமிப்புக் கணக்கு?

தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்

தங்கம்

பட்ஜெட் 2022... வருமா தங்கத்துக்கென தனி சேமிப்புக் கணக்கு?

தங்கம்

Published:Updated:
தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்

வி.மாதவன்

தங்கத்தை ஆபரணமா வாங்கியிருப்பீர்கள்; காயினாக வாங்கியிருப்பீர்கள்; இ.டி.எஃப்பாக வாங்கியிருப்பீர்கள்; ஏன், கோல்டு பாண்டாகக்கூட வாங்கியிருப்பீர்கள். ஆனால், தங்கத்துக்கென தனியாக சேமிப்புக் கணக்கு வரும்னு நினைச்சுப் பார்த்திருக்கீங்களா, அப்படி சேமிக்கிற பணம், தங்கம் விலையோட ஒத்துப்போகும்னு நினைச்சுப் பார்த்திருக்கீங்களா?

தங்கத்துக்கென தனி வங்கிக் கணக்கு என பட்ஜெட்டில் ஓர் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நமது நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைக்கவும், ஆபரணமாகவும், காயின்களாகவும் நமது வீடுகளில் தங்கம் முடங்கிக் கிடப்பதைத் தவிர்க்கவும், அரசாங்கம் இந்த உத்தியைப் பயன்படுத்தக்கூடும் என்று நம்பப்படுகிறது.

எப்படி செயல்படும்?

இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால், வங்கிகளில் நாம் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கு போல, தங்கத்துக்கென தனிச் சேமிப்பு கணக்கு தொடங்க அனுமதி அளிக்கப்படும். நகைச்சீட்டு கட்டுவதுபோல தொடர்ந்து அந்தக் கணக்கில் குறிப்பிட்ட தொகையைச் சேமிக்கவும் முடியும். நாம் சேமிக்கும் பணம் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துக்கு நிகராகச் செயல்படும்.

அதே நேரத்தில், நாம் சேமிப்பிலிருந்து வெளியேறும்போது அன்றைய தங்கத்துக்கு நிகரான விலையில் நமது தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். தற்போது கோல்டு பாண்டுக்கு வழங்கப்படும் 2.5% வட்டியைப்போல, தங்க சேமிப்புக் கணக்குக்கும் வட்டி வழங்கபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் 2022... வருமா தங்கத்துக்கென தனி சேமிப்புக் கணக்கு?

ஏன் இந்தச் சேமிப்புக் கணக்கு?

உலகில் தங்கம் இறக்குமதி செய்வதில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாகத் திகழ் கிறது. ஆண்டுக்கு 800 - 850 டன் வரையிலான நமது தங்கத்துக்கான தேவையை இந்தியா இறக்குமதி மூலமே பூர்த்தி செய்து வருகிறது. இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் நமது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இரு மடங்காக உயர்ந்துள்ளதில் தங்கம் இறக்குமதி பெரும்பங்கு வகிக்கிறது. தங்கத்தைப் பதுக்கி வைக்கப்படும் சொத்தாக இருப்பதைத் தவிர்க்கவும், அங்கீகரிக் கப்பட்ட முதலீடாக மாற்றவும், நமது கையிருப்பில் உள்ள தங்கத்தை முழுமையாகப் பயன்படுத்தவும் இந்தத் திட்டம் அறிவிக்கப் படலாம் எனத் தெரிகிறது.

பயன் தரும் முதலீடா?

சிறு மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தமது குழந்தைகளின் திருமணம் மற்றும் ஆபரணத் தேவைகளுக்காக நகைச்சீட்டு மூலமே தங்கத்தை சேமித்து வருகின்றனர். இந்தப் பிரிவினருக்கு தங்கத்துக்கென தனி வங்கிக் கணக்கு திட்டம் வரப்பிரசாதமாக அமையும்.

சாவரின் கோல்டு பாண்டு திட்டம் நல்ல திட்டம்தான் என்றாலும், அதன் பயன் இன்னும் முழுமையாக அடித்தட்டு மக்களை சென்று அடையவில்லை. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட திட்டமாக இது வரும்போது மக்கள் மத்தியில் நம்பிக்கையும் வரவேற்பும் கிடைக்கும்.

அதே நேரத்தில், எளிமையாகப் பயன்பெறும் வகையில் அனைத்து வங்கிகளின் மூலமும் இந்தச் சேவையை அறிமுகப்படுத்துவதுடன்,வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், எப்போது வேண்டுமானாலும் வெளியேறக் கூடிய வகையிலும் செயல்படுத்தினால் நிச்சயம் மக்களுக்கு இது பயன்படும் திட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்!

குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையை ஒரு கிராமிலிருந்து தொடங்க அனுமதித்தால், அனைத்துத் தரப்பு மக்களும் இந்தத் திட்டத்தில் பங்குபெற உதவும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட தங்க சேமிப்புத் திட்டத்துக்கு வரவேற்பு கிடைத்தால், அது அரசுக்கும் நன்மையாகவே இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism