Published:Updated:

தங்கம் முதல் ஃபண்ட் வரை... கலக்கும் நட்சத்திரங்கள்!

முதலீட்டில் பிரபலங்கள்...

முதலீடு

தங்கம் முதல் ஃபண்ட் வரை... கலக்கும் நட்சத்திரங்கள்!

முதலீடு

Published:Updated:
முதலீட்டில் பிரபலங்கள்...
தங்கம் முதல் ஃபண்ட் வரை... கலக்கும் நட்சத்திரங்கள்!

ஒருவரின் வருமானத்தில் சேமிப்புக்கான தொகை போக மீதமுள்ள தொகையை முதலீடு செய்ய வேண்டும். சேமிப்பு, முதலீடு என்பவை ஒவ்வொரு நபருக்கும் மாறும். நம்முடைய பிரபலங்கள் எப்படி பணத்தைச் சேமிக்கிறார்கள் அல்லது முதலீடு செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள சின்னத்திரை நட்சத்திரங்கள் சிலரை அணுகினோம். சேமிப்பு / முதலீடு பற்றி அவர்கள் சொன்னதாவது...

ஷில்பா (மெளன ராகம்)

“எனக்கு இப்போ 21 வயசு ஆகுது. சின்ன வயசுல இருந்து உண்டியல், அஞ்சலக சேமிப்புனு, சேமிப்பு மீது எப்போதும் ஆர்வம் உண்டு. படிக்கும்போது என்னுடைய பாக்கெட் மணி தொகையை மிச்சப்படுத்தி எனக்குத் தேவைப்படும் சின்னச் சின்ன பொருள்களை நானே வாங்கிப்பேன்.

என்னுடைய 20-வது வயதில் நான் சீரியலுக்கு என்ட்ரி கொடுத்தேன். சம்பாதிக் கவும் ஆரம்பிச்சேன். என்னோட சம்பளத்தில் குடும்பச் செலவு, என்னுடைய தனிப்பட்ட செலவுகள் போக மீதி தொகையை சேமிப்புக்காக ஒதுக்கிவிடுவேன். இப்போதான் சம்பாதிக்க ஆரம்பிச்சிருக்கேன் என்பதால், ரொம்ப பாதுகாப்பான சேமிப்பான ஃபிக்ஸட் டெபாசிட்தான் என்னுடைய சாய்ஸ். ஒவ்வொரு மாதமும் குறைஞ்சது ரூ.5,000 வரை டெபாசிட் செய்றேன். இனிவரும் ஆண்டுகளில் இந்தத் தொகையை சிறுக சிறுக அதிகரிக்கணும். சேமிப்பாளராக இல்லாமல் முதலீட்டாளராக மாறணும்; வெவ்வெறு திட்டங்களில் முதலீடு செய்யணுங்கிற திட்டங்களும் இருக்கு!”

ஐரா அகர்வால் (மதுரை சிஸ்டர்ஸ்)

“என் முதலீடு எப்போதும் தங்க நாணயங்கள் தான். சீரியல் தவிர்த்து, விளம்பரம், மாடலிங்னு நான் செய்யக்கூடிய வேலைகள் மூலம் கிடைக்கும் தொகைகளில் உடனே தங்க நாணயங்கள் வாங்கி பத்திரப்படுத்திவிடுவேன். மற்றவற்றில் முதலீடு அல்லது சேமிப்பு செய்வதைக் காட்டிலும், தங்கத்தில் முதலீடு செய்வது எளிதாக இருக்கிறது. என்னுடைய அப்பாவுக்கு ஒருமுறை உடம்பு சரியில்லாமல் போனது. அந்த நேரத்தில் நான் சேமித்து வைத்திருந்த தங்க நாணயங்களை நகைக்கடையில் கொடுத்து, அன்றைக்கு தங்கம் என்ன விலைக்கு விற்றதோ, அந்தத் தொகையை மொத்தமாக வாங்கி, அப்பாவின் சிகிச்சைக்கு செலவு செய்தேன். இப்போதும் தங்க நாணயங் களில்தான் என்னுடைய முதலீடு தொடர்கிறது.’’

ஷில்பா, ஐரா அகர்வால், கிருத்திகா அண்ணாமலை, ஹீமா பிந்து,  அனிதா வெங்கட்,  பார்வதி
ஷில்பா, ஐரா அகர்வால், கிருத்திகா அண்ணாமலை, ஹீமா பிந்து, அனிதா வெங்கட், பார்வதி

கிருத்திகா அண்ணாமலை (பாண்டவர் இல்லம்)

“என்னோட சேமிப்புப் பழக்கத்தின் ரோல் மாடல், என்னோட அம்மாதான். வீட்டில் எவ்வளவு பணம் இருந்தாலும் சிறுவாட்டு காசுதான் அவசரத்துக்கு உதவும்னு சொல்லி சேமிப்பை பழக்கப்படுத்துனாங்க. உண்டியல் சேமிப்பில் இருந்த நான், நடிக்க வந்த பிறகு, சேமிக்கும் வழிமுறைகளை மாத்தினேன். சீரியலில் நடிப்பதால், ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் வரும்னு சொல்ல முடியாது. எவ்வளவு தொகை வருமானமாக வந்தாலும், அதில் சரிபாதியை சேமிப்புக்காக ஒதுக்கணும் என்பதில் எப்போதும் உறுதியா இருப்பேன்.

என்னோட சேமிப்பை ஃபிக்ஸட் டெபாசிட், தங்கத்தில் முதலீடு, அஞ்சலக சேமிப்பு, மாதாந்தர சீட்டு என பிரித்திருக் கிறேன். ஒவ்வொரு வருடம் எனக்காக அல்லது என் குடும்பத்துக்காக நகை வாங்கும் பழக்கம் எனக்கு இருக்கிறது. அதனால் நகைக்கடைகளில் மாதாந்தரச் சீட்டு மூலம் நகைகளில் முதலீடு செய்கிறேன். இதனால் செய்கூலி இல்லாமல் நகை வாங்க முடிகிறது.

என்னுடைய மகனின் படிப்புக்கான கட்டணத்தை ஒவ்வோர் ஆண்டும் மொத்தமாகக் கட்ட வேண்டியிருக்கும். மொத்தமாக ஒரு தொகையை ஒதுக்கும்போது அந்த மாதம் பொருளாதார சிக்கல்கள் நிறைய வரும். இதற்காக ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணம் செலுத்துகிறேன். வருட இறுதியில் சுற்றுலா செல்வது அல்லது திடீர் செலவுகளுக்காக அஞ்சலக சேமிப்பில் பணம் செலுத்துறேன்.

பணத்தை சேமிக்கிறதோட, முதலீடும் செய்யணும்னு என்னோட அண்ணன் சொல்லிட்டே இருப்பார். ஆனா, இதுவரை அதற்கான முயற்சிகளை நான் எடுத்தது இல்லை. முதலீடுகள் பற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டபிறகு, என்னுடைய முதல் முதலீட்டைத் தொடங்கணும்.”

ஹீமா பிந்து (இதயத்தைத் திருடாதே)

“நான் இப்போதான் என் கரியரைத் தொடங்கியிருக்கேன். ஆனாலும் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துறேன். சேமிப்பு அவசரகாலத்தில் உதவுங்கிறதைத் தாண்டி, நமக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கும். துணிச்சலான முடிவுகள் எடுக்க உதவும்.

என்னுடைய வருமானத்தில் சேமிப்பு தவிர்த்து மீதமுள்ள தொகையைத்தான் என்னுடைய செலவுகளுக்குப் பயன்படுத்து றேன். மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகள் பத்தி எல்லாம் எனக்கு பெருசா தெரியல. இப்போதைக்கு நான் சேமிக்கும் பணத்தைத் தங்கத்தில் தான் முதலீடு செய்றேன். தங்கத் தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், நான் சேமித்து என்னுடைய பயன்பாட்டுக்கான அணிகலன்களாக வாங்குவதால், பெரிய நஷ்டம் இல்லை!”

அனிதா வெங்கட் (தமிழும் சரஸ்வதியும்)

“என் முதலீட்டை நான் தங்கத்தில்தான் செய்கிறேன்.என்னுடைய மகளின் எதிர்காலத் துக்காக சேமிக்கிறேன் என்பதால், அணிகலன்களாக வாங்க வேண்டும் என்றுதான் முதலில் பிளான் செய்தேன்.

ஒரு நகையை டிரெண்டில் இருக்கிறது என்று வாங்கினால், டிரெண்ட் மாறும்போது அது அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகிவிடு கிறது. சரி, அந்த நகையை தந்து விட்டு புது நகை வாங்கலாம் என்றால், அழுக்கு இருக்கிறது என்று விலையைக் குறைக்கிறார் கள். இதே தங்க நாணயங்களாக வாங்கினால், தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களில் இருந்தாலும், இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து நகை வாங்கும்போது, தங்க நாணயத்தின் விலையும் அதே அளவு உயர்ந்திருக்கும். எனவே, நஷ்டம் இருக்காது.

தங்க நாணயத்தைவிட, தங்கப் பத்திரங்கள் இன்னும் பாதுகாப் பானவை. ஆனால், அது எல்லா நேரங்களிலும் கிடைப்பது இல்லை என்பதால், தங்கத்தை நாணயங்களாகவே வாங்கி வைத்து விடுகிறேன்.

மியூச்சுவல் ஃபண்ட் போன்ற வற்றில் முதலீடு செய்தால் இதைவிட லாபம் அதிகம் கிடைக்கும். ஆனால், அதில் ரிஸ்க்கும் அதிகம். மேலும், எப்போதும் நாம் முதலீடு செய்த ஃபண்டுகளைக் கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். எனவே, பல்வேறு வசதி கருதி நான் தேர்வு செய்வது, தங்க நாணயங்கள்தான்.

பார்வதி (புதுப்புது அர்த்தங்கள்)

“என் கரியரை நான் வி.ஜே-வாகத் தொடங்கினேன். என்னுடைய முதல் சம்பளம் 800 ரூபாய்தான். ஆனால், அந்தத் தொகையிலும் நான் சேமிக்க ஆரம்பித்தேன். எப்போதும் யாரையும் சார்ந்து வாழாமல் சுயமாக வாழணும்னு அப்பா சொல்லிக்கொடுத்து வளர்த்தாங்க. அதற்கு என் சேமிப்புப் பழக்கம் எப்போதும் கைகொடுக்கிறது. ஒவ்வொரு மாத வருமானத்திலும் சேமிப்பு போக மீதியுள்ள தொகையைத்தான் நான் செலவுக்கு எடுத்துக்கொள்வேன்.

எல்லா பெண்களைப் போலவும் என்னுடைய முதலீடும் தங்கத்தில்தான் இருந்தது. அதன்பின், எஃப்.டி-யில் பணம் போட ஆரம்பிச்சேன். அந்த நேரத்தில்தான் லிக்விட் ஃபண்டுகள் பற்றி தெரிய ஆரம்பிச்சது. தேவைக்குப் போக, மீதியிருக்கும் தொகை குறைவாக இருந்தாலும், லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்வேன். இப்படி சிறுக சிறுக சேமிச்சு சென்னையில் சொந்த வீடு வாங்கியிருக்கேன். இப்போதைக்கு என் வீடுதான் என் பெரிய முதலீடு!’’