Published:Updated:

100% வருமானம் தந்த மிட் & ஸ்மால்கேப் ஃபண்டுகள்..! இனியும் லாபம் தருமா?

C O V E R S T O R Y

பிரீமியம் ஸ்டோரி

கடந்த ஒரு வருடத்தில் (மே 21, 2021 நிலவரப்படி), ஒரு வருடத்துக்குமேல் நடப்பில் இருந்த ஸ்மால்கேப் ஃபண்டு களின் எண்ணிக்கை 24. அவற்றில் 22 ஃபண்டுகள் 100 சதவிகிதத்துக்குமேல் வருமானத்தைக் கொடுத்துள்ளன. அவற்றுள் ஒரு ஃபண்ட் (குவான்ட் ஸ்மால்கேப்) 200 சதவிகிதத்துக்கு அதிகமான வருமானத்தைக் கொடுத் துள்ளது என்ற செய்தி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் கவனத்தைச் சுண்டியிழுத்திருக்கிறது.

சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், 
ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.
prakala.com)
சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www. prakala.com)

பொதுவாக, ஸ்மால் அண்ட் மிட்கேப் ஃபண்டுகள் அதிக வருமானத்தைத் தரவல்லவை. அதே சமயத்தில், அதிக ரிஸ்க்கையும் கொண்டவை. இது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் தெரியும்.

மிட்கேப் ஃபண்டுகள், ஸ்மால்கேப் ஃபண்டுகளைவிட சற்று ரிஸ்க் குறைவானவை. ஆனால், லார்ஜ்கேப் ஃபண்டுகளைவிட ரிஸ்க் அதிகம் உடையவை. அந்த கேட்டகிரியில் ஒரு வருடத்துக்குமேல் நடப்பில் இருந்துள்ள ஃபண்டுகள் 30. அவற்றில் 28 ஃபண்டுகள் 70 சதவிகிதத்துக்கும் அதிகமான வருமானத்தைக் கொடுத்துள்ளன. மூன்று ஃபண்டுகள் 100 சதவிகிதத்துக்கும் அதிகமான வருமானத்தைத் தந்துள்ளன.

100% வருமானம் தந்த மிட் & ஸ்மால்கேப் ஃபண்டுகள்..! இனியும் லாபம் தருமா?

அபார லாபத்துக்கு என்ன காரணம்?

இந்த அபாரமான வருமானத்துக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான காரணங்கள்:

 கடந்த வருடம் இந்த நேரத்தில் நமது சந்தைகள் கொரோனாவின் முதல் அலைத் தாக்கத்தால் நன்றாகச் சரிந்திருந்தது. ஆகவே, வீழ்ச்சியில் இருந்து எழுந்து வரும்போது வருமானம் அதிகமாகவே இருக்கும்.

 ஸ்மால் அண்ட் மிட்கேப் கேட்டகிரியானது 2018 முதல் சரிவைக் கண்டுவந்தது. ஆகவே, கிட்டத்தட்ட மூன்று வருடங் களுக்குப் பிறகு, வருமானம் உயர ஆரம்பித்துள்ளது.

 கொரோனா தாக்கத்துக்குப் பிறகு, பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை யாலும் ஸ்மால் அண்ட் மிட்கேப் ஃபண்டுகளின் வருமானம் அதிகரித்துள்ளன.

கடந்த ஒரு வருடத்தில் இந்த வகை ஃபண்டுகள் 100% வருமானம் தந்ததைப் பார்த்த பிறகுதான், பல முதலீட்டாளர்கள் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்ய முன்வருகிறார்கள். இது தவறான அணுகுமுறை. அடுத்த சில மாதங்களிலோ, அடுத்த ஒரு வருடத்திலோ ஸ்மால் அண்ட் மிட்கேப் வகை ஃபண்டுகள் மேலும் ஏறாது என்று நான் சொல்லவில்லை. ஆனால், இதுபோல் மதிப்பு நன்கு உயர்ந்த பின், அதில் மொத்தமாக முதலீடு செய்து, சில வருடங்கள் கழித்துப் பார்க்கும்போது, நீங்கள் எதிர் பார்த்த வருமானத்தைவிட குறைவாகவே இருக்கும். (பார்க்க, பி.எஸ்.இ 250 ஸ்மால்கேப் குறியீட்டின் வரைபடம்)

2018-ல் ஏற்படுத்திய உச்சத்தைத் தாண்டி இப்போதுதான் நகர ஆரம்பித்துள்ளது. 2018 உச்சத் துக்குப் பிறகு, ஸ்மால்கேப் ஃபண்டுகளை வாங்கிய அனைவரும் இப்போது லாபத்தில் இருப்பார்கள். ஸ்மால்கேப் குறியீடு தற்போதைய நிலையை யும் தாண்டி மேலே செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால், சிறு முதலீட்டாளர்கள் ஆழம் பார்த்துதான் காலை விட வேண்டும்.

அதேபோல், மிட்கேப் குறியீடும் 2018-க்குப் பிறகு, நல்ல ஏற்றத்தைக் கண்டுள்ளது. ஸ்மால்கேப் ஃபண்டுகளைப் போலவே, மிட்கேப் ஃபண்டு களிலும் 2018-க்குப் பிறகு, முதலீடு செய்தவர்கள் நல்ல லாபத்தைக் கண்டிருப்பார்கள். (பார்க்க, பி.எஸ்.இ 150 மிட்கேப் குறியீட்டின் வரைபடம்). ஆனால், இப்போது முதலீடு செய்பவர்கள் தங்களது காத்திருப்புக் காலத்தை அதிகமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

வரைபடம் 1: பி.எஸ்.இ 250 ஸ்மால்கேப் குறியீடு
வரைபடம் 1: பி.எஸ்.இ 250 ஸ்மால்கேப் குறியீடு
வரைபடம் 2: பி.எஸ்.இ 150 மிட்கேப் குறியீடு
வரைபடம் 2: பி.எஸ்.இ 150 மிட்கேப் குறியீடு

கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

ஸ்மால் அண்ட் மிட்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பொழுது கவனிக்க வேண்டிய விஷயங்கள் இனி...

1. ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது, உங்களது முதலீட்டுக் காலத்தை ஏழு ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள்.

2. சில சமயங்களில் இந்த வகை ஃபண்டுகள் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குக்கூட நெகட்டிவ் வருமானத்தை இந்த ஃபண்டுகள் தரும் என்பதை மறக்காதீர்கள்.

3. உங்களது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில், உங்களது வயது மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப, குறிப்பிட்ட அளவு பணத்தைத் தொடர்ந்து ஸ்மால் அண்ட் மிட்கேப் பண்டுகளில் நீண்டகால நோக்குடன் முதலீடு செய்வது அவசியம்.

4. இந்த வகை ஃபண்டுகளின் மதிப்பு உயர்ந்து காணப்படும்போது, மொத்தமாக முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம்.

5. அதே போல், சந்தை பெரிய அளவில் வீழ்ச்சி அடையும்போது, ஏழு ஆண்டு களுக்குமேல் தேவையில்லாத பணத்தை மொத்த முதலீடாகச் செய்யலாம்.

6. ஸ்மால் அண்ட் மிட்கேப் ஃபண்டு களை உங்களது வெல்த் கிரியேஷன் நோக்கத்துக்காக ஒதுக்கீடு செய்யுங்கள்.

7. இந்த வகை ஃபண்டுகளில் இருந்து வெளியேற வேண்டுமெனில், தேவைக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடுவது நல்லது.

8. சிறு முதலீட்டாளர்கள் இந்த வகை ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வது நன்மை பயக்கும்.

100% வருமானம் தந்த மிட் & ஸ்மால்கேப் ஃபண்டுகள்..! இனியும் லாபம் தருமா?

இந்த விஷயங்களைக் கவனித்து ஸ்மால் அண்ட் மிட்கேப் ஃபண்டுகளில் முதலீட்டை மேற்கொள்ளலாம். தற்போது சந்தையில் நன்றாகச் செயல்பட்டு வரும் திட்டங்களை வடிகட்டித் தந்துள்ளோம். இந்தத் திட்டங்களை வடிகட்ட நாம் பயன்படுத்திய ஃபில்டர்கள்...

1. ஃபண்டின் குறைந்தபட்ச நிர்வகிக்கும் தொகை ரூ.100 கோடியாக இருக்க வேண்டும்.

2. குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாவது ஃபண்ட் திட்டம் நடப்பில் இருந்திருக்க வேண்டும்.

3. கடந்த மூன்று வருடத்தில் ஆண்டுக்கு 15% அல்லது அதற்கும் மேலாக வருமானத்தைக் கொடுத் திருக்க வேண்டும்

4. மேலே உள்ள மூன்று ஃபில்டர் களைப் பயன்படுத்திக் கிடைத்த ஃபண்டுகளில் சிறப்பாகச் செயல்படும் நான்கு ஃபண்டுகளை (ஒவ்வொரு கேட்டகிரிக்கும்) இங்கு தந்துள்ளோம். உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறன், காத்திருப்புக் காலம், இழப்பு ஏற்பட்டால் அதைத் தற்காலிகமாகத் தாங்கக்கூடிய சக்தி, உங்களின் மனநிலை போன்றவற்றை அடிப்படை யாகக் கொண்டு ஸ்மால் அண்ட் மிட்கேப் ஃபண்டுகளில் முதலீட்டை மேற்கொள்ளுங்கள்.

100% வருமானம் தந்த மிட் & ஸ்மால்கேப் ஃபண்டுகள்..! இனியும் லாபம் தருமா?

நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட்: முன்பு ரிலையன்ஸ் ஸ்மால்கேப் ஃபண்ட் என அழைக்கப் பட்டது. இந்த ஃபண்ட் இன்ஜினீயரிங், கெமிக்கல்ஸ் மற்றும் எஃப்.எம்.சி.ஜி துறைகளில் அதிகமான முதலீட்டை வைத்துள்ளது. இதன் ஃபண்ட் மேனேஜர் சமீர் ரச் ஆவார். செப்டம்பர் 2010-ல் ஆரம்பிக்கப் பட்ட இந்த ஃபண்ட், ஆரம்பித்த போது முதலீடு செய்தவர்களுக்கு, இதுவரை ஆண்டுக்கு 19 சதவிகிதத் துக்கும் அதிகமான வருவாயைத் தந்துள்ளது. நீண்ட காலத்தில் தொடர்ந்து குறியீட்டைவிட அதிக வருவாயைக் கொடுத்துள்ளது.

ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்ட்: இதன் ஃபண்ட் மேனேஜர் அனுபம் திவாரி ஆவார். பொதுவாக, இந்த ஃபண்ட் காளைச் சந்தையைவிட கரடிச் சந்தையில் நன்றாகச் செயல்படும். காரணம், இந்த ஃபண்ட் கடன் அதிகம் இல்லாத நிறுவனங் களிலேயே முதலீடு செய்கிறது. கன்ஸ்ட்ரக்‌ஷன், டெக்னாலஜி, கெமிக்கல்ஸ், ஃபைனான்ஸ் மற்றும் எஃப்.எம்.சி.ஜி துறைகளில் அதிகமான முதலீட்டை வைத்துள்ளது. நவம்பர் 2013-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபண்ட், ஆரம்பித்தபோது முதலீடு செய்தவர்களுக்கு, இதுவரை ஆண்டுக்கு 25 சதவிகிதத்துக்கும் அதிகமான வருவாயைத் தந்துள்ளது.

கோட்டக் ஸ்மால்கேப் ஃபண்ட்: இதன் ஃபண்ட் மேனேஜர் பங்கஜ் டிப்ரிவால் ஆவார். கெமிக்கல்ஸ் மற்றும் இன்ஜினீயரிங் துறைகளில் அதிக முதலீட்டை வைத்துள்ளது. செஞ்சுரி பிளைபோர்ட், கார்போ ரண்டம் யுனிவர்ஸல், ஷீலா ஃபோம், சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கேலக்ஸி சர்ஃபக்டன்ட்ஸ் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன.

குவாண்ட் ஸ்மால்கேப் ஃபண்ட்: கடந்த ஒரு வருடத்தில் அபாரமான வருமானத்தைத் தந்்துள்ளது. அத்துடன் 2, 3 மற்றும் 5 வருட காலங் களிலும் நல்ல வருமானத்தைத் தந்துள்ளது. கெமிக்கல்ஸ், ஹெல்த்கேர் மற்றும் மெட்டல் துறைகளில் அதிக ஒதுக்கீட்டைக் கொண்டுள்ளது. ஹிந்துஸ்தான் காப்பர், ஃபோர்ட்டீஸ் ஹெல்த்கேர், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன.

100% வருமானம் தந்த மிட் & ஸ்மால்கேப் ஃபண்டுகள்..! இனியும் லாபம் தருமா?

பி.ஜி.ஐ.எம் இந்தியா மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்: இதன் ஃபண்ட் மேனேஜர் அனிருத்தா நாகா ஆவார். இவர் இதற்கு முன்பு ஐ.டி.எஃப்.சி மியூச்சுவல் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இந்த ஃபண்ட் ஃபைனான்ஸ், இன்ஜினீயரிங் மற்றும் கெமிக்கல்ஸ் துறைகளில் அதிக ஒதுக்கீட்டைக் கொண்டுள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ், மைண்ட்ட்ரீ, ஃபெடரல் பேங்க் மற்றும் வோல்டாஸ் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. டிசம்பர் 2013-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபண்ட், ஆரம்பித்த போது முதலீடு செய்தவர்களுக்கு, இதுவரை ஆண்டுக்கு 17 சதவிகிதத்துக்கும் அதிகமான வருவாயைத் தந்துள்ளது.

ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட்: இதன் ஃபண்ட் மேனேஜர் ஷ்ரேயாஷ் திவால்கர் ஆவார். இவர் இதற்கு முன்பு பி.என்.பி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் இவர் பணிபுரிந்தார். ஃபைனான்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் துறைகளில் அதிகமான முதலீட்டை வைத்துள்ளது. சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட்ஸ், வோல்டாஸ், பி.ஐ இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற பங்குகளை டாப் ஹோல்டிங்ஸாக வைத்துள்ளது. பிப்ரவரி 2011-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபண்ட், ஆரம்பித்தபோது முதலீடு செய்தவர்களுக்கு இதுவரை ஆண்டுக்கு 18 சதவிகிதத் துக்கும் அதிகமான வருவாயைத் தந்துள்ளது.

கோட்டக் எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட்: இதன் ஃபண்ட் மேனேஜர் பங்கஜ் டிப்ரிவால் ஆவார். கெமிக்கல்ஸ், இன்ஜினீயரிங், ஃபைனான்ஸ் மற்றும் கன்ஸ்ட்ரக்‌ஷன் துறைகளில் அதிகமான முதலீட்டை வைத்துள்ளது. சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ், ராம்கோ சிமென்ட், கொரமண்டல் இன்டர்நேஷனல், தெர்மேக்ஸ் போன்ற நிறுவனப் பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. கடந்த 10 வருடங்களில் தொடர்ச்சி யாக குறியீட்டைவிட அதிக வருமானத்தைத் தந்துள்ளது.

இன்வெஸ்கோ இந்தியா மிட்கேப் ஃபண்ட்: இதன் ஃபண்ட் மேனேஜர் கள் நீலேஷ் தம்னாஸ்கர் மற்றும் பிரனவ் கோகலே ஆவார்கள். இன்ஜினீயரிங், ஆட்டோமொபைல், ஃபைனான்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் இதன் டாப் துறைசார்ந்த முதலீடு களாக உள்ளது. வினதி ஆர்கானிக்ஸ், கிளாண்ட் ஃபார்மா, எம்பஸிஸ், வோல்டாஸ் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாகும்.

அதிக ரிஸ்க் எடுத்து, அதிக லாபம் பெற நினைப்பவர்கள் மிட் அண்ட் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு