நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

ஆக்டிவ் வருமானம், பாஸிவ் வருமானம்... என்ன வித்தியாசம்..?

வருமானம்
பிரீமியம் ஸ்டோரி
News
வருமானம்

வருமானம்

ஒருவருக்கு வரும் வருமானத்தை இரு வகைகளாகச் சொல்லலாம். ஒன்று, செயல் சார்ந்த வருமானம் (Active Income). மற்றொன்று, செயல்சாரா வருமானம் (Passive Income).

சிவகாசி மணிகண்டன்  
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன் நிதி ஆலோசகர், Aismoney.com

ஆக்டிவ் இன்கம் என்பது ஒருவர் செயலை செய்வதன்மூலம் கிடைக்கும் வருமானம் ஆகும். அதாவது, ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் மாதச் சம்பளம் செயல் சார்ந்த வருமானம் ஆகும். இந்த வருமானத்தைப் பெற ஒருவர் தொடர்ந்து உழைப்பது மிக அவசியம். ஆனால், நாம் உழைத்தாலும் உழைக்காவிட்டாலும் நம் செயல்சாராமல் நமக்குக் கிடைப்பதுதான் செயல்சாரா வருமானம். ‘‘நீங்கள் தூங்கும் போதும் உங்கள் பணம் உங்களுக்கு சம்பாதித்துத் தர வேண்டும். இல்லை எனில், நீங்கள் சாகும் வரை வேலை செய்வீர்கள்” என வாரன் பஃபெட் சொல்வது இந்த செயல்சாரா வருமானத்தைதான்.

ஆக்டிவ் வருமானம், பாஸிவ் வருமானம்... என்ன வித்தியாசம்..?

தூங்கும்போதும் சம்பாதிக்கும் கருவிகளில் முக்கியமானது பணம் ஆகும். இந்தப் பணத்தை ஒருவர் ஃபிக்ஸட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் (வீட்டு வாடகை வருமானம்) என எதில் முதலீடு செய்திருந்தாலும் அவர் தூங்கிக் கொண்டிருக்கும்போதும் அவை வருமானம் தந்துகொண்டிருக்கும்.

முதலீடுகளின் சிறப்பு என்பது, அவை வருடத்தின் 365 நாள்களும் வளர்ந்துகொண்டு தான் இருக்கின்றன. அவற்றுக்கு சனி, ஞாயிறு, தீபாவளி, பொங்கல் என பண்டிகை விடுமுறை எல்லாம் கிடையாது. உதாரணமாக, ஒருவர் போட்டிருக்கும் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு வங்கி விடுமுறை நாள்களிலும் வட்டி வருமானம் கிடைக்கும்.

இந்த செயல்சாரா வருமானம் என்பதை ஒரு முறை ஏற்படுத்திவிட்டால் போதும், அது ஒருவரின் ஆயுளுக்கும் சம்பாதித்துக் கொடுத்துக்கொண்டிருக்கும். மேலும், இந்த வருமானத்தை மட்டும் பயன்படுத்தி வரும் பட்சத்தில் மூலதனம் என்பது தலைமுறை தலைமுறையாக பலன் தந்து கொண்டிருக்கும். அந்த வகையில்தான், செயல்சார்ந்த வருமானத்தைவிட செயல்சாரா வருமானம் ஒருபடி மேலே இருக்கிறது.

அடிக்கடி கவனிக்கத் தேவை இல்லை...

செயல்சார்ந்த வருமானத்தில் ஒருவரின் ஈடுபாடு (Involvement) மிகவும் அதிகமாக இருக்கும் அல்லது இருக்க வேண்டும். ஒருவர் வேலையில் தொடர்ந்து நீடிக்க, அதிக வருமானம் பெற தொடர்ந்து அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வர வேண்டும். ஈடுபாடு குறையும்போது வேலை இழப்பு ஏற்பட லாம்; சம்பளம் அதிகரிக்காமல் போகலாம். இதில், நம் சார்பாக வேறு யாரையும் ஈடுபடுத்த முடியாது.

அதே நேரத்தில், செயலற்ற வருமானத்தில் ஒரு முறை ஓர் அமைப்பை அல்லது முதலீட்டுக் கலவையை (Portfolio) உருவாக்கிவிட்டால் அது நம் தலையீடு இல்லாமல் தானாகவே இயங்கிக்கொண்டிருக்கும்; அதிக கவனிப்பு என்பது தேவையாக இருக்காது. ஆறு மாதம் அல்லது ஓராண்டுக்கு ஒருமுறை முதலீட்டுக் கலவை யின் செயல்பாட்டைக் கவனித்து தேவைப்பட்டால் சில மாற்றங்களைச் செய்யலாம். ஒரு நல்ல நிதி ஆலோசகரை நியமித்துவிட்டால் அந்த வேலையும் நமக்கு இருக்காது. நமக்காகச் செய்ய வேண்டிய மாற்றங்களை அவரே செய்து தந்துவிடுவார்.

முதலீட்டுக் கலவை என்பது ஃபிக்ஸட் டெபாசிட், கடன் ஃபண்ட், பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட், தங்கம் (கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், கோல்டு இ.டி.எஃப், கோல்டு பாண்ட்), நிறுவனப் பங்குகள் ஆகியவை கலந்ததாகும். முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் திறன், முதலீட்டுக் காலம், வருமான எதிர்பார்ப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப மேற்கண்ட சொத்துப் பிரிவுகளில் பணத்தைப் பிரித்து போட வேண்டும்.

ரிஸ்க் குறைவு...

செயல்சார்ந்த வேலை வருமானத்தில் பொதுவாக, ரிஸ்க் குறைவு என்பதால், வருமானமும் சற்று குறை வாகவே இருக்கும். செயலற்ற வருமானத்தில் முதலீட்டுக் கலவையின் ஒட்டு மொத்த ரிஸ்க்குக்கு ஏற்ப வருமானம் இருக்கும். உதாரண மாக, ஒருவரின் முதலீட்டுக் கலவையில் ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் மற்றும் கடன் ஃபண்டுகள் மட்டுமே இருந்தால், அதன் மூலமாக நமக்கு இருக்கும் ரிஸ்க் குறைவு தான்; அதே சமயம் வருமான மும் குறைவாகத்தான் இருக்கும். சாதாரணமாக ஆண்டுக்கு 7% - 8% வருமானத்தைத் தற்போதைய நிலையில் எதிர்பார்க்கலாம்.

இதுவே, முதலீட்டுக் கலவையில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு கள், நிறுவனப் பங்குகள் ஆகியவை இடம் பெற்றிருக் கும் பட்சத்தில் ரிஸ்க் அதிக மாக இருக்கும்; வருமானமும் அதிகமாகக் கிடைக்க வாய்ப் புள்ளது. 10 ஆண்டுக்கு மேற்பட்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் எதிர்பார்க்கலாம். இதுவே முதலீட்டுக் கலவையில் ஃபிக்ஸட் டெபாசிட்டுகள், கடன் சார்ந்த ஃபண்டுகள், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள், நிறுவனப் பங்குகள், கோல்டு இ.டி.எஃப் யூனிட்டுகள் ஆகியவை இருக்கும் பட்சத்தில் ரிஸ்க் என்பது நடுத்தர அளவில் இருக்கும்; ஆனால், வருமானமும்

மிதமாகவே இருக்கும். மூன்றாண்டுக்கு மேற்பட்ட நிலையில், ஆண்டுக்கு சராசரி யாக 8% - 10% வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

ஆக்டிவ் வருமானம், பாஸிவ் வருமானம்... என்ன வித்தியாசம்..?

முதலீடு எவ்வளவு தேவை..?

செயல்சார்ந்த வருமானம் பெற பெரும்பாலும் முதலீடு தேவைப்படாது. அதாவது, நிறுவனப் பணியின் மூலம் செயல்சார்ந்த வருமானம் பெறும்போது முதலீடு எதுவும் தேவைப்படாது. அதே நேரத்தில், சுயதொழில் செய்து செயல்சார்ந்த வருமானம் பெறும்போது முதலீடு தேவைப்படும்.

ஆனால், செயல்சாரா வருமானம் பெற நிச்சயம் முதலீடு தேவைப்படும். வட்டி வருமானம் பெற ஃபிக்ஸட் டெபாசிட் என்றாலும், வீட்டு வாடகை பெற வீடு என்றாலும், பணம் / முதலீடு இருந்தால்தான் இவற்றில் நாம் ஈடுபட முடியும். இந்த முதலீட்டைப் பெற ஆரம்பத்தில் செயல்சார்ந்த வருமானம் அவசியமாகும். அந்த வகையில், செயல்சார்ந்த வருமானம் மற்றும் செயல்சாரா வருமானம் என்பது ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது ஆகும்.

செயல்சார்ந்த வருமானம் என்பது முதலீட்டுக் கலவையின் வருமானத்தை சார்ந்ததாக இருக்கும். நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல, ரிஸ்க் இல்லா முதலீட்டுக் கலவை எனில், நிலையான வருமானம் கிடைக்கும். ரிஸ்க் உள்ள முதலீட்டுக் கலவை எனில், நீண்ட காலத்தில் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒருவருக்கு செயல்சார்ந்த வருமானம் மற்றும் செயல்சாரா வருமானம் இரண்டும் இருக்கும்பட்சத்தில் தான், அவரின் நிதி இலக்குகள் விரைவாக நிறைவேறுவதுடன் செல்வமும் சீக்கிரமாக சேரும். எனவே, நம் முதலீட்டுக் கலவையில் செயல்சார்ந்த முதலீடுகளும், செயல்சாரா முதலீடுகளும் போதிய அளவுக்கு உள்ளனவா என்பதை ஆராய்ந்து, அதற்கேற்ப சில மாற்றங்கள் செய்வது மிக மிக அவசியம்!

செயல்சார்ந்த வருமானம் குறையாமல் இருக்க என்ன வழி..?

செயல்சார்ந்த வேலை மூலமான வருமானம் என்பது மாதம்தோறும் நிலையானது ஆகும். இந்த வருமானத்தில் பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம். பணியாளர்களுக்கு வார விடுமுறைகள் (சனி, ஞாயிறு), பண்டிகைக் கால விடுமுறைகள், ஈட்டு விடுமுறை (Earn Leave), நோய்வாய்ப்பட்ட விடுப்பு (Sick Leave) ஆகியவை இருக்கும்பட்சத்தில் விடுமுறை எடுத்தால் சம்பள வருமானம் குறையாது.

இந்த விடுமுறைகள் போதிய அளவுக்கு இல்லை அல்லது மிகக் குறைவாக இருக்கிறது அல்லது அறவே இல்லை எனில், மாதம்தோறும் கிடைக்கும் வருமானம் நிலையானதாக இருக்காது. காரணம், இன்றைய காலகட்டத்தில் விடுமுறை எடுக்காமல் வேலை பார்ப்பது மிகவும் கடினமாகும். அந்த வகையில் அதிக விடுமுறை சலுகைகள் இருக்கிற நிறுவனத்தில் வேலையில் சேருவது நல்லதாகும்.