பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

சிறப்பாகச் செயல்படும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக் கலவையை உருவாக்க உதவும் 5 தங்க விதிமுறைகள்..!

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

கடந்த மூன்று மாதக் காலத்தில் நூற்றுக் கணக்கான மியூச்சுவல் ஃபண்ட் முதலீட் டாளர்களின் முதலீட்டுக் கலவைகளை (Portfolio) அலசி ஆராய்ந்ததில், அவற்றில் பலவற்றின் நிகர வருமானம் நெகட்டிவ்வாக இருக்கின்றன. இதிலிருந்து எனக்குத் தெரிய வந்தது, பலரும் மிக அதிக ரிஸ்க் உள்ள ஃபண்டுகளில் முதலீடு செய்திருக்கிறார்கள். பலர் 20, 25 ஃபண்டுகளில்கூட முதலீடு செய்திருக்கிறார்கள். ஒரே ஃபண்ட் பிரிவில் 4, 5 ஃபண்டுகளில்கூட முதலீடு செய்திருக்கிறார் கள். இப்படி இலக்கு, நோக்கம் எதுவும் இல்லாமல் அவர்கள் கண்டபடி முதலீடு செய்திருப்பது அவர்களின் ஒட்டுமொத்த மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவின் வருமானத்தை நெகட்டிவ்க்கு கொண்டு வந்திருக்கிறது.

எம்.சதீஷ் குமார் 
நிறுவனர், 
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

சரியான மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக் கலவையை உருவாக்குவது எப்படி, குறிப்பாக, சிறப்பாகச் செயல்படும் ஃபண்டுகளை எப்படித் தேர்ந்தெடுத்து முதலீட்டுக் கலவையில் சேர்ப்பது எனப் பார்ப்போம். அதற்கு முதலீட்டாளர்கள் ஐந்து தங்க விதிமுறைகளை (Golden Rules) பின்பற்றுவது அவசியம். அவை பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. எதிர்கால வருமானத்தையும் கவனிக்க வேண்டும்...

நம்மில் பலர் பெரும்பாலும் அண்மைக் காலத்தில் அல்லது கடந்த ஓராண்டில் அதிக வருமானம் கொடுத்திருக்கும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்துவிடுகிறோம். இந்தத் திட்டங்களின் வருமான செயல்பாடுகளை அவர்களின் நண்பர்கள், உறவினர்கள் சொல்லிக் கேட்டிருப்பார்கள் அல்லது முன்னணி முதலீட்டு இணைய தளங்கள், பத்திரிகைகளில் பார்த்திருப்பார்கள். இந்த ஃபண்டுகள் கடந்த காலத்தில் தந்த அதிக வருமானம் அதாவது, 40%, 100% வருமானம் எதிர்காலத்திலும் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, இந்த ஃபண்டுகள் வரும் காலத்திலும் இது போன்ற வருமானத்தைத் தருமா என்பதை அலசி ஆராய்ந்து முதலீடு செய்வது அவசியம்.

இந்தியப் பங்குச் சந்தையின் நீண்ட கால சராசரி வருமானம் ஆண்டுக்கு சுமார் 12 சதவிகிதமாக இருக்கிறது. சென்செக்ஸ் குறியீடு 1979-ம் ஆண்டு 100 என்பதில் ஆரம்பிக்கப்பட்டது. இன்றைக்கு அது 58000 புள்ளிகளாக அதிகரித்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் எந்தவொரு ஐந்தாண்டுக் காலத்தை எடுத்துக்கொண்டாலும், சராசரியாக 12% வருமானம் தந்திருப்பதைப் பார்க்க முடியும். சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகள் இந்த அளவுக்கு வருமானம் தந்திருக்கும் நிலையில், இதைவிட அதிக ரிஸ்க்கான மிட்கேப் பங்குகள் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் முறையே 15% மற்றும் 20% வருமானம்கூட தந்திருக்கின்றன; கொடுக்க வாய்ப்பிருக்கிறது. இந்தப் பங்குகள் கடந்த ஆண்டுகளில் 40%, 50% வருமானம் தந்திருந்தால் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் அந்த அளவுக்கு அதிக வருமானம் தர வாய்ப்பு இருக்காது. இது பங்குச் சந்தையிலும் மியூச்சுவல் ஃபண்டிலும் நடக்க வாய்ப்பு இல்லை. சராசரியாக சுமார் 20% வருமானம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது.

2020, 2021 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகள் அபரிமிதமான வருமானத்தைக் கொடுத்தன. கிட்டத் தட்ட 80%, 90% வருமானம் கொடுத்தன. இதேபோல், ஸ்மால்கேப் பங்குகள் 100% வருமானம் தந்தன. இதனால், அடுத்துவரும் ஆண்டுகளில் பெரும்பாலும் பல மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோவில் ஐ.டி ஃபண்டு கள், ஸ்மால்கேப் ஃபண்டுகள் இடம் பெற்றன. இந்த அணுகுமுறை சரியா எனில், இல்லை என்றே சொல்ல வேண்டும். வருமானம் என்பது முதலீட் டாளருக்கு எதிர்காலத்தில்தான் வரப்போகிறது. எனவே, வரும் காலத்தில் அந்த ஃபண்ட் என்ன வருமானம் தரும் என்பதைக் கவனிப்பது முக்கியமாகும்.

கடந்த கால வருமானம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அந்த ஃபண்ட் தரப் போகிற எதிர்கால வருமானமும். எதிர்காலத்தில் என்ன வருமானம் கிடைக்கும் என்பதற்கு நிறைய இண்டிகேட்டர்கள் இருக்கின்றன. மைக்ரோ, மேக்ரோ இண்டிகேட்டர்கள் உள்ளன. குறிப்பிட்ட துறையின் செயல்பாடு எப்படி இருக்கும், அந்தத் துறையில் அந்தக் குறிப்பிட்ட நிறுவனப் பங்கின் செயல்பாடு எப்படி இருக்கும் என்கிற விஷயங்களை எல்லாம் கவனித்துதான் குறிப்பிட்ட ஃபண்ட் பிரிவில் முதலீடு செய்ய வேண்டும். ஃபண்ட் நிறுவனத்தின் செயல்பாடு, ஃபண்ட் மேனேஜரின் திறமை ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும்.

கடந்த ஓராண்டில் அதிக வருமானம் தந்திருக்கும் ஃபண்ட் கடந்த 3, 5, 10 ஆண்டுகளிலும் இதேபோல் சிறப்பாக செயல் பட்டிருந்தால் அதை முதலீட்டுக்குக் கவனிக்கலாம். கூடவே, அந்த ஃபண்ட் இப்போது எந்தெந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது; அந்தப் பங்குகள் எதிர் காலத்தில் நல்ல வருமானம் தருமா என்பதைக் கவனித்துதான் முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான் ஒரு ஃபண்ட் நல்ல வருமானத்தைத் தரும்.

சிறப்பாகச் செயல்படும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக் கலவையை உருவாக்க உதவும் 5 தங்க விதிமுறைகள்..!

2. அதிக திட்டங்கள் வேண்டாம்...

நான் ஆரம்பத்தில் சொன்னதுபோல், பலர் 20, 30 ஃபண்டுகளில்கூட முதலீடு செய்திருக்கிறார்கள். ஒருவர் தனது போர்ட்ஃபோலியோ வில் அதிகபட்சம் எட்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களை வைத்திருந்தால் போதும். இந்த எண்ணிக்கை கூட கொஞ்சம் அதிகம்தான். முதலீட்டுத் தொகை ரூ.2 கோடி, ரூ.1.5 கோடி, ரூ.1 கோடி என்கிற மாதிரி இருந் தால்தான் சுமார் எட்டு ஃபண்டுகளில் பணத்தைப் பிரித்து முதலீடு செய்யலாம்.

சிலர் ரூ.5 லட்சம், ரூ.8 லட்சம், ரூ.10 லட்சம் முதலீட் டுக்குக்கூட 20 ஃபண்டுகளில் முதலீடு செய்திருக்கிறார்கள். இது நிச்சயம் லாபகரமான விஷயமில்லை. இவர்கள் முதலீடு செய்திருக்கும் ஃபண்டுகளின் மீது முழு நம்பிக்கை இல்லாமல் இப்படி அதிக எண்ணிக்கையிலான ஃபண்டுகளில் முதலீடு செய்திருக்கிறார்கள். ஒரு ஸ்மால்கேப் ஃபண்ட் நன்றாக செயல்பட்டுக்கொண்டிருக் கிறது என்பதை ஒரு முதலீட் டாளர் கவனித்து வருகிறார் எனில், அந்த ஃபண்டில்தான் அவர் முதலீடு செய்ய வேண்டும். இதற்குப் பதில் நாலைந்து மிட் கேப் ஃபண்டு களில் பணத்தைப் பிரித்துப் போட்டால் லாபம் என்பது சராசரியாகி குறைந்து விடும். ஒரு ஃபண்ட் பிரிவு எனில், அதிகபட்சம் அதில் இரண்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அதற்கு மேல் முதலீடு செய்தால் லாபம் குறைந்துவிடும்.

3. வருமான எதிர்பார்ப்பு...

பலர் ஒரு ஃபண்டின் பீட்டா, ஆல்பா, ஷார்ப் ரேஷியோ என பல டெக்னிக் கலான விஷயங்களைப் பார்ப்பார்கள். ஆனால், தங்களின் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக் கலவை மூலம் எவ்வளவு வருமானம் எதிர்பார்க்கிறார்கள் என்பதை நிர்ணயம் செய்யத் தவறிவிடுகிறார்கள்.

வருமான எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஃபண்டுகளைத் தேர்வு செய்ய வேண்டும். முதலீட் டாளர் ஒருவர் ஒரு ஃபண்டின் மூலம் ஆண்டுக்கு சுமார் 10% வருமானம் எதிர்பார்க்கிறார் எனில், அவர் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் பிரிவைத் தேர்வு செய்யலாம்.

4. ரிஸ்க் எடுக்கும் திறன்...

சிலர் ஃபண்டின் மதிப்பு 10% இறங்கினாலேயே தவறான ஃபண்டைத் தேர்வு செய்துவிட்டோமோ என்று கவலைபடத் தொடங்கிவிடு கிறார்கள். இது போன்ற வர்கள் நடுத்தர ரிஸ்க் உள்ள ஹைபிரீட் ஃபண்டுகளில் முதலீடு செய்வதுதான் சரியாக இருக்கும். இவர்கள் அதிக ஏற்ற இறக்கமுள்ள அக்ரசிவ் கேட்டரி ஃபண்டில் முதலீடு செய்வது கூடவே கூடாது. அப்படி அதிக ரிஸ்க் உள்ள ஃபண்டைத் தேர்வு செய்யும்போது, பங்குச் சந்தை வீழ்ச்சியின்போது பயத்தில் விற்றுவிட்டு அதிக இழப்புடன் வெளியேறு வது நடக்கும். இதைத் தவிர்க்க ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் ரிஸ்க் தாங்கும் திறனுக்கேற்ப மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்வு செய்வது அவசியம்.

சிறப்பாகச் செயல்படும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக் கலவையை உருவாக்க உதவும் 5 தங்க விதிமுறைகள்..!

5. முதலீட்டுக் காலம் மிக முக்கியம்...

எந்த ஒரு முதலீடாக இருந்தாலும் முதலீட்டுக் காலம் மிக முக்கியம். அது தெளிவாகத் தெரிந்தால் மட்டுமே சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்வு செய்ய முடியும். உதாரணமாக, முதலீட்டுக் காலம் குறுகியதாக இருந்தால், கடன் ஃபண்டுகளிலும் நடுத்தர காலமாக இருந்தால், ஹைபிரிட் ஃபண்டு களிலும் நீண்ட காலமாக இருந்தால் ஈக்விட்டி ஃபண்டுகளிலும் முதலீடு செய்வது சரியாக இருக்கும்.

மேலும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கான நோக்கம் என்ன என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஃபண்டின் வருமானப் பெருக்கத்தை சரியாகப் பயன்படுத்தி இலக்குகளை நிறைவேற்றிக் கொள்வதுடன், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக்கொள்ள முடியும்.

உங்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலி யோவை உருவாக்குவதில் ஏதாவது சந்தேகம் இருந்தால், நிதி ஆலோசகரைக் கலந்து ஆலோசிக்க தயங்காதீர்கள். காரணம், நோய் வந்தால் நாமே மருத்துவம் பார்ப்பது எந்த அளவு சிக்கலை ஏற்படுத்துமோ, அந்த அளவுக்கு முதலீடு குறித்த விவரங்கள் சரியாகத் தெரியாமல் சுயமாக முதலீடு செய்யும்போது நமக்கு ஏற்படும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக் கலவையை உருவாக்கும்போது மேற்சொன்ன விஷயங்களை மறக்காதீர்கள்!