தொடர்கள்
பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

மாநில அரசின் கடன் பத்திரங்கள்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

கருத்தரங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
கருத்தரங்கம்

கருத்தரங்கம்

பொதுவாக, பங்குச் சந்தை தொடர்பான கருத்தரங்கம் என்றாலே ஹாலிவுட் படம் போல பரபரவென செல்லும். பல்வேறு நிறுவனப் பங்குகளைப் பற்றி ஆளுக்கொரு விஷயத்தைச் சொல்லி மயிர்கூச்செறியச் செய்வார்கள். ஆனால், கடன் சந்தை அப்படிப் பட்டதல்ல. நிலையான வருமானம் தரக் கூடியது என்பதால், பரபரப்பு எதுவும் இருக்காது. ஆனாலும், அந்த வகை முதலீடுகள் தொடர்பான விஷயங்களைக்கூட சுவாரஸ்ய மாக எடுத்துச் சொல்கிற கருத்தரங்கம் ஒன்று சென்னையில் அண்மையில் நடந்தது. கடன் சந்தை, கடன் பத்திரங்கள் தரும் வருமானம், அதில் இருக்கும் ரிஸ்க்குகள் எனப் பல விஷயங்களையும் அதில் அலசி ஆராய்ந்தார்கள் இந்தத் துறை சார்ந்த பல்வேறு நிபுணர்கள்.

மாநில அரசின் கடன் பத்திரங்கள்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

இந்தக் கருத்தரங்கில் பல்வேறு விஷயங்கள் பல அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டு விவாதிக்கப் பட்டன. அதில் சில அமர்வுகள் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை.

மாநிலங்களுக்கான நிதிநிலை எப்படி இருக்கிறது என்பது பற்றி ஓர் அமர்வு இருந்தது. பத்திரிகையாளர் ஆர்த்தி கிருஷ்ணன், இந்த அமர்வை ஒருங்கிணைத்துத் தந்தார்.

இந்தக் கலந்துரையாடலில் முதலில் பேசிய எடெல்வைஸ் ஏ.எம்.சி-யின் கடன் சந்தை பிரிவின் முதன்மை முதலீட்டு அதிகாரி தவால் தலால், ‘‘இந்தியாவில் மாநிலங்களுக்கான நிதிநிலையானது ஆரோக்கியமாகவே இருக்கிறது. நிறைய மாநிலங்கள் இப்போது கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டுகின்றன. நிறைய வரி வருமானம் கொண்ட மாநிலங்கள் கடன் பத்திரங்கள் மூலம் அதிக அளவில் நிதி திரட்டுகின்றன. நாகலாந்து போன்ற மாநிலங் களில் மக்கள் தொகைக் குறைவு; அதனால் வரி வருவாயும் குறைவு. எனவே, கடன் சந்தை மூலம் அதிக நிதி திரட்ட முடிவதில்லை.

மாநில அரசுகள் வெளியிடும் கடன் பத்திரங் களில் முதலீடு செய்யும்போது, அவர்கள் திரட்டும் நிதியை என்ன செய்யப்போகின்றன என்று பார்க்க வேண்டும். தெலங்கானா மாநிலம் மூலதனச் செலவுகளை சமாளிக்க கடன் பத்திரங்கள் மூலம் நிறைய பணத்தைத் திரட்டி இருக்கிறது’’ என்றார்.

மாநில அரசின் கடன் பத்திரங்கள்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

அடுத்து பேசிய முனிஃபை டேட்டாபேஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் சுபலட்சுமி, ‘‘இந்தியாவில் உள்ள பல மாநகராட் சிகள் தற்போது கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டி வருகின்றன. இந்த மாநகராட்சிகள் தங்களுக்கென தனியாக இணையதளங்களை வைத்துள்ளன. இவை வெளியிடும் கடன் பத்திரங்கள் பாதுகாப்பானவை என்பதால், பல்வேறு முதலீட்டு நிறுவனங்கள் இதில் முதலீடு செய்வதற்குத் தயாராக இருக்கின்றன.

உதாரணமாக, குஜராத்தில் உள்ள வதேதரா மாநகராட்சி 7.15% வட்டி தரும் வகையில் கடன் பத்திரங்களை வெளியிட்டது. இதற்குப் பலரும் முண்டியடித்து விண்ணப்பம் செய்தது குறிப்பிடத்தக்கது. சில மாநகராட்சிகள் 8% - 9% வட்டி வருமானம் தருகிற அளவுக்குக் கடன் பத்திரங்களை வெளியிட்டு வருகின்றன. தமிழகத்தில் இருந்தும் சில மாநகராட்சிகள் கடன் பத்திரங்களை வெளியிட்டு நன்கு செயல்பட்டு வருகின்றன.

இது ஓர் ஆரோக்கியமான வளர்ச்சி என்றாலும், மாநகராட்சி நிறுவனங்கள் கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டுவதில் இன்னும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். குறிப்பாக, வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க வேண்டும். கணக்கு வழக்கு தொடர்பான ஆடிட்டிங் விதி முறைகள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்’’ என்றார்.

அடுத்து பேசிய அசிம் பிரேம்ஜி ஃபவுண்டேஷன் நிறுவனத்தின் ஶ்ரீராம் மகா தேவன், ‘‘முதலீட்டாளர்கள் பாண்ட் மார்க்கெட்டைப் பற்றி நன்கு புரிந்துகொண்டு செயல் பட வேண்டும். அப்படி செய்ய முடியவில்லை எனில், மியூச் சுவல் ஃபண்ட் மூலமாக முதலீடு செய்வது சரியாக இருக்கும்’’ என்றார்.

மாநில அரசின் கடன் பத்திரங்கள்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

அடுத்து, மாற்று முதலீடுகள் (Alternative credit) பற்றி விரிவாகப் பேசும் ஓர் அமர்வு நடந்தது. இதில் முதலில் பேசிய அனிகட் கேப்பிடல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஐ.ஏ.எஸ் பாலமுருகன், ‘‘வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் யாருக் கெல்லாம் கடன் தர முடியாத நிலையில் இருக்கிறதோ, அவர் களில் சரியானவர்களைக் கண்டறிந்து நாங்கள் முதலீடு செய்கிறோம். இது கொஞ்சம் கஷ்டமான வேலைதான். ஆனால், அதுதான் எங்களுக்கு இருக்கும் பெரிய வாய்ப்பாக நினைக்கிறோம்.

நம் நாடு கடன் பற்றாக்குறை (credit starve) மிகுந்த நாடாக இருக்கிறது. எனவே, சரியான தொழில்முனைவோர்களுக்குக் கடன் தரவேண்டிய வேலை எங்களுக்கு நிறையவே இருக்கிறது. இப்படிப்பட்டவர் கள் நிறைய பேர் இருப்பதால், இந்தத் துறை எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி காணும்’’ என்றார்.

மாற்று முதலீட்டுக்கான நிறுவனங்களை எப்படிக் கண்டு பிடிப்போம் என்பது குறித்து சொன்னார் விவிரிட்டி அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிதி மேலாளர் முகமத் இர்பான். ‘‘முதலில் மேக்ரோ பொருளாதார நிலை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். அடுத்து, எந்த செக்டார் நன்றாகச் செயல் படுகிறது என்று பார்ப்போம். அடுத்து, ஒரு செக்டாரில் உள்ள ஒரு கம்பெனியைத் தேர்வு செய்வோம். அந்த கம்பெனி பற்றிய அனைத்து விஷயங் களையும் அலசி ஆராய்வோம். அதன் பிறகுதான் முதலீடு செய்வோம். முதலீடு செய்த பிறகு, ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை சந்தித்து, பிசினஸ் எப்படிப்போகிறது என்பது பற்றி முழுமையாக விசாரிப்போம்’’ என்றார்.

‘‘எந்த மாதிரியான நிறுவனங் களுக்குக் கடன் தர வேண்டும் என்பது பற்றி ஒரு பிராசஸ் இருக்கிறது. ரேட்டிங்கை நிச்சயம் பார்ப்போம். புரொ மோட்டர் எப்படிப்பட்டவர், நல்ல நிலையிலும் மோசமான நிலையிலும் அவர் எப்படி செயல்பட்டிருக்கிறார் என்று பார்ப்போம். அவர் நடத்தும் நிறுவனத்தின் கேஷ் ஃப்ளோ எப்படி இருக்கிறது என்றெல்லாம் பார்த்துதான் அவர்களுக்குக் கடன் தருவோம்’’ என்றார் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென் ஷியல் ஏ.எம்.சி பிரைவேட் கேப்பிடல் பிரிவின் தலைவர் சேகர் தகா.

அடுத்த அமர்வில் இந்தியா வின் பாண்ட் மார்க்கெட் பற்றிய தாக இருந்தது. இதில் பேசினார் செபியின் முன்னால் முழு நேர இயக்குநர் மகாலிங்கம் குருமூர்த்தி. அவர் பேசும்போது, ‘‘வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரிக்கவே இப்போது வாய்ப்பிருக்கிறது. இன்னும் 50 - 75% அடிப்படைப் புள்ளிகள் வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்புண்டு என்பது என் கணிப்பு.

இப்போதுள்ள வட்டி விகிதம் இன்னும் ஆறு மாதங்களுக்கு இறக்கம் காண வாய்ப்பில்லை. நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இப்போது 7 சதவிகிதத்துக்குமேல் என்கிற அளவில் இருக்கிறது. அது கொஞ்சம் குறைந்து 6 சதவிகிதமாக இருந்தாலும், அது பிரமாதமான வளர்ச்சியைக் கொடுக்கும்’’ என்றார்.

இந்தக் கருத்தரங்கின் இறுதி அமர்வு உலக அரசியலும் வட்டி விகிதமும் என்கிற தலைப்பில் அமைந்திருந்தது. கிரெடிட் சூஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஜோல்டன் போஸ்சர், இனி உலக அளவில் வட்டி விகிதம் எப்படி அமைய வாய்ப்பிருக்கிறது என்பது பற்றிப் பேசினார்.

சி.எஃப்.ஏ சொசைட்டி (CFA Society of India) என்கிற அமைப்பு இந்தக் கருத்தரங்கை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. இந்த அமைப்பைச் சேர்ந்த பத்திரிகையாளர் மீரா சிவா, யந்த்ரா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் விஜய் ஆனந்த், சமஸ்திதி நிறுவனத்தின் இணை நிறுவனர் ரவி சரயோகி ஆகியோர் இந்தக் கருத்தரங்கை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். கோவிட் காரணமாக இரண்டு ஆண்டுகள் இந்தக் கருத்தரங்கை நடத்த முடியாமல் இருந்ததால், இந்த முறை சி.எஃப்.ஏ உறுப்பினர்கள் உற்சாகமாகத் திரண்டுவந்து இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.