மியூச்சுவல் ஃபண்ட், கடன் சந்தை சார்ந்த திட்டங்களில் ஒரு வகை கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட் (Credit Risk Fund) ஆகும். இந்த ஃபண்ட் பிரிவு கடந்த ஓராண்டுக் காலத்தில் சராசரியாக 15% வருமானம் தந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் சில ஃபண்ட் திட்டங்கள் உதாரணமாக, பி.ஓ.ஐ ஆக்ஸா கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட் கடந்த ஓராண்டுக் காலத்தில் 145% வருமானம் தந்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்த நிலையில், இவ்வளவு வருமானம் தரக்கூடிய இந்த ஃபண்டில் நாம் ஏன் முதலீடு செய்யக் கூடாது என்று முதலீட்டாளர்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களின் கேள்விக்கு பதில் தெரிந்துகொள்ளும்முன் இந்த ஃபண்ட் வகை பற்றி நன்கு புரிந்துகொள்வோம்.

அதிக ரிஸ்க் கொண்ட ஃபண்ட்...
செபியின் வரையறைபடி, கிரெடிட் ரிஸ்க் ஃபண்டில் திரட்டப்படும் தொகையில் குறைந்தபட்சம் 65% AAA தரக் குறியீடு பெற்ற கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். அந்த வகையில், இது அதிக ரிஸ்க் கொண்ட ஃபண்ட் ஆகும்.
ஒரு காலத்தில் மிக அதிகமான முதலீட்டாளர்கள் ரிஸ்க் அதிகம் என்றாலும், அதிக வருமானம் கிடைக்கிறது என்பதற் காக இந்த கிரெடிட் ரிஸ்க் ஃபண்டுகளில் முதலீடு செய்து வந்தனர். ஐ.எல் & எஃப்.எஸ், டி.ஹெச்.எஃப்.எல், எஸ்.செல் குரூப் ஆகிய நிறுவனங்கள் வெளியிட்ட கடன் பத்திரங்கள் சிக்கலுக்கு உள்ளாகி, அதனால் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனத்தின் சில கடன் ஃபண்ட் திட்டங்களில் பிரச்னை ஏற்பட்டதால், கடந்த இரு ஆண்டுகளாக அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத கடன் ஃபண்ட் முதலீட்டாளர்கள் கிரெடிட் ரிஸ்க் ஃபண்டுகளிலிருந்து விலகியிருக்கிறார்கள்.
இதர கடன் ஃபண்ட் பிரிவுகள் ஒற்றை இலக்கத்தில் வருமானம் தந்துகொண்டிருக்க, இந்த கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட் மட்டும் எப்படி இரட்டை இலக்கத்தில் வருமானம் தருகிறது?
அதிக வருமானத்துக்கு என்ன காரணம்?
பல்வேறு காரணங்களுக்காக ஓராண்டுக்கு முன் கிரெடிட் ரிஸ்க் ஃபண்டுகளின் நிகர சொத்து மதிப்பு (NAV) மிகவும் இறங்கிக் காணப்பட்து. பல ஃபண்டுகளில் யாரும் முதலீடு செய்ய முடியாதபடியான முடக்கநிலை காணப்பட்டது. இந்த நிலையில், அந்த இறக்கத்திலிருந்துதான் அந்த ஃபண்டு கள் இப்போது ஏற்றத்துக்கு வந்திருக்கின்றன. இந்த ஏற்றத்தால் முதலீட்டாளர்களுக்கு லாபம் எதுவும் இல்லை. காரணம், நாம் அந்த ஃபண்டில் ஓராண்டுக்கு முன் யாரும் முதலீடு செய்திருக்க முடியாது.

கிரெடிட் ரிஸ்க் ஃபண்டுகளில் அதிகம் பாதிக்கப்பட்டது பி.ஓ.ஐ ஆக்ஸா கிரெடிட் ரிஸ்க் ஃபண்டுதான். அதன் என்.ஏ.வி மதிப்பு மிகவும் இறங்கி ஏறி இருப்பதால்தான், இந்த அளவுக்கு அதிக வருமானம் தந்திருப்பதாகக் காட்டுகிறது. ஆனால், அது உண்மையான வருமானம் இல்லை என்பதை முதலீட்டாளர்கள் இப்போது உணர்ந்திருப்பார்கள்.
உள்ளபடி பார்த்தால், இந்த வகை மியூச்சுவல் ஃபண்டுகள் கடந்த ஓராண்டுக் காலத்தில் சுமார் 5% வருமானத்தைதான் தந்திருக்கின்றன.
இப்போது ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வுக்குப் பிறகு, கிரெடிட் ரிஸ்க் ஃபண்டுகளின் வருமானம் சற்றுக் குறைய ஆரம் பித்திருக்கிறது. வட்டி விகித அதிகரிப்பு என்பது கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு பாதகமான அம்சமாகும். வட்டி விகிதம் அதிகரிக்க ஆரம்பிக்கும்போது கடன் ஃபண்டுகளின் வருமானம் குறைய ஆரம்பித்துவிடும்.
கடன் ஃபண்ட் முதலீடு: முக்கிய நோக்கம்
பொதுவாக, கடன் ஃபண்டு களில் முதலீடு செய்வதன் முக்கியமான நோக்கம், மூலதனத் தைப் பாதுகாப்பது மற்றும் மூலதன அதிகரிப்பாகும். சிறு முதலீட்டாளர்கள் பணத்தைக் கடன் சந்தை சார்ந்த ஃபண்டு களில் முதலீடு செய்யும்போது, எஸ்.எல்.ஆர் (SLR) என்கிற விஷயத்தை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். இங்கே எஸ் என்பது பாதுகாப்பையும் (Safety), எல் என்பது எளிதில் பணமாக்கு வதையும் (Liquidity) ஆர் என்பது வருமானத்தையும் (Return) குறிக்கும். அதாவது, முதலில் பாதுகாப்பு, அடுத்து பணமாக்கல் கடைசியாகத்தான் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்.
இதில், பாதுகாப்பு என்பது இந்தத் திட்டத்தில் என்ன மாதிரி யான தரக்குறியீடு கொண்ட கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருக்கிறார்கள் என்பதைக் குறிக்கும். அதை முதலீட்டாளர்கள் நிச்சயம் கவனிக்க வேண்டும். ஏஏஏ (AAA), ஏஏ+ (AA+) போன்ற அதிக தரக்குறியீடு கொண்ட கடன் பத்திரங்களில் அதிகமாக முதலீடு செய்திருக்கும்பட்சத்தில், அந்த ஃபண்ட் பாதுகாப்பான தாகும்.
அடுத்து முதலீட்டாளர்களின் பணத்தை எத்தனை கடன் பத்திரங்களில் பிரித்து முதலீடு செய்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அதிக கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருக் கும்பட்சத்தில், எளிதில் பணமாக்க முடியும். கடைசியாகத் தான் வருமானத்தைப் பார்க்க வேண்டும். அது பணவீக்க விகிதத்தைவிட 2% அதிகம் இருந்தால்கூட போதும்.
கிரெடிட் ரிஸ்க் ஃபண்டுகளில் முதல் இரண்டு அம்சங்கள் சிக்கல் என்பதால், அதைச் சிறு முதலீட்டாளர்கள் தவிர்ப்பது நல்லதாகும். கிரெடிட் ஃபண்டுகளில் இந்த அளவுக்கு அதிக ரிஸ்க் எடுப்பதற்குப் பதில் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்து அதிக ரிஸ்க்கில் அதிக வருமானம் பெறலாம். மேலும், வருமான வரியிலும் கடன் ஃபண்டுகளைவிட ஈக்விட்டி ஃபண்டுகள் லாபகர மாக இருக்கும்.

பொதுவாக, எந்த ஒரு முதலீடாக இருந்தாலும் அண்மைக் காலத்தில் அது தந்த அதீத வருமானத்தின் அடிப்படையில் முதலீட்டு முடிவை எடுக்கக் கூடாது. இந்த ஃபண்ட் கடந்த மூன்று மாதத்தில் 8.24% மற்றும் ஓராண்டுக் காலத்தில் 15.79% வருமானம் தந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், மூன்று ஆண்டு மற்றும் ஐந்து ஆண்டுக் காலத்தில் முறையே 3.62% மற்றும் 4.18% வருமானம்தான் தந்துள்ளன. இந்த வருமானத்தைப் பார்த்த பின், இதில் முதலீடு செய்யத் தேவையில்லை என்பது முதலீட்டாளர்களுக்குப் புரிந்திருக்கும்.
கடந்த வருமானத்துக்கு எதிர்காலத்தில் உத்தரவாதம் இல்லை...
ஒரு மியூச்சுவல் ஃபண்ட் பிரிவு திடீரென அதிக வருமானம் தருகிறது எனில், அதன் பின்னணியை அலசி ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். அதே நேரத்தில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கடந்த காலத்தில் கிடைத்த வருமானம் எதிர்காலத்திலும் கிடைக்கும் என எந்த உத்தரவாதமும் இல்லை என்பதைப் புரிந்து செயல்படுவது மிக முக்கியமாகும்.