Published:Updated:

டீமேட் கணக்கு... டிஜிட்டல் சொத்துகளின் மந்திரச் சாவி!

டீமேட் கணக்கு
பிரீமியம் ஸ்டோரி
டீமேட் கணக்கு

டீமேட் கணக்கு

டீமேட் கணக்கு... டிஜிட்டல் சொத்துகளின் மந்திரச் சாவி!

டீமேட் கணக்கு

Published:Updated:
டீமேட் கணக்கு
பிரீமியம் ஸ்டோரி
டீமேட் கணக்கு

பத்து கோடி டீமேட் கணக்குகள் என்ற மகத்தான மைல்கல்லை எட்டியிருக்கிறது நம் நாடு. ஆனால், 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 10 கோடி டீமேட் கணக்குகள் என்பது குறைவுதான். அதற்குக் காரணம், பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை நம் நாட்டில் இன்னமும் குறைவாகத்தான் இருக்கிறது.

அமெரிக்காவில் 60 சதவிகிதத்துக்கும் மேலானோர் பங்குச் சந்தை முதலீடுகளில் ஈடுபடுகின்றனர். ஆனால், நம் நாட்டில் பங்குச் சந்தை முதலீடுகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை 5 சதவிகிதத்துக்குள்தான் இருக் கிறது. என்றாலும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 10 கோடி டீமேட் கணக்குகள் என்பது மிகப் பெரிய சாதனைதான்.

ஒரு மாதத்தில் 22 டீமேட் கணக்குகள்...

கொரோனா பெருந்தொற்றுக் காலத்துக்கு முன்பு வரை அதாவது மார்ச் 2020 நிலவரப்படி, நம் நாட்டில் 4.09 கோடி டீமேட் கணக்குகள் மட்டுமே இருந்தன. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளில் ஆறு கோடி கணக்குகள் புதிதாகத் தொடங்கப்பட்டன. 2022 ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே 22 லட்சம் டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து டீமேட் கணக்குகள் தொடங்கு வது அதிகரிக்க முக்கியமான காரணம் இந்தியப் பங்குச் சந்தையின் சிறப்பான செயல் பாடுதான். கொரோனா பெருந்தொற்று தொடங்கியபோது சரிவுக்குள்ளான பங்குச் சந்தை அதன் பிறகு, தொடர்ச்சியாக ஏற்றத்தின் போக்கில் பயணித்தது.

டீமேட் கணக்கு... டிஜிட்டல் சொத்துகளின் மந்திரச் சாவி!

என்னதான் காரணம்?

பாரம்பர்யமாக இந்தியர்களின் முதலீடாக இருந்து வந்த பலவும் சமீப காலங்களில் பெரிய லாபத்தைத் தரவில்லை. தவிர, பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. வருமானம் குறைவதும், செலவுகள் அதிகரிப்பது மாக இருக்கும் வாழ்க்கைச் சூழலில் வெறும் மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்பதை அனைவருமே உணரத் தொடங்கினர். ஆனால், பங்குச் சந்தையும் சிறப்பாகச் செயல்பட்டு லாபம் தருவதாக இருக்கவே பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்தது. இதனால் தான் டீமேட் கணக்கின் அவசியம் அனைவருக்கும் புரிய ஆரம்பித்தது.

வங்கியில் பணத்தை பாதுகாப்பாக சேமித்து வைக்க வங்கிக் கணக்குத் தொடங்குகிற மாதிரி, பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளை மேற்கொள்ள டீமேட் கணக்கு அவசியமாக இருக்கிறது.முன்பெல்லாம் ஒரு நிறுவனப் பங்கை வாங்கினால், அதற்கு பங்குச் சான்றிதழ் (Share Certificate) தரப்படும். இது காகித ஆவணமாக இருப்பதால், பல வகைகளிலும் அசெளகர்யத்தை உருவாக்கியது. இந்தச் சான்றிதழைப் பத்திரமாக வைத்திருப்பது முதல், விற்க நினைக்கும்போது சுலபமாக எடுத்து விற்பது வரை பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டி இருந்தன. காலப்போக்கில் டிஜிட்டல் வடிவமாக (Dematerialized) மாற்றப்பட்டது. இந்த டிஜிட்டல் வடிவப் பங்குகளை நிர்வகிக்கும் கணக்குதான் டீமேட் கணக்கு ஆகும்.

டீமேட் கணக்கு என்பது பங்குகளை வாங்க மட்டுமே பயன்படுமா, வேறு எதற் கெல்லாம் பயன்படும், டீமேட் கணக்கு தொடங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து புதுவை நிதி ஆலோசகர் சா.ராஜசேகரனிடம் கேட்டோம். அவர் விரிவான விளக்கம் தந்தார்.

சா.ராஜசேகரன்
சா.ராஜசேகரன்

அனைவரிடமும் ஒரு டீமேட் கணக்கு...

‘‘மின்னணு வடிவிலான சொத்துகளை நிர்வகிக்கும் கணக்குதான் டீமேட் கணக்கு. இது, டிஜிட்டல் லாக்கர் போன்றது. இனிவரும் காலம் டிஜிட்டல் காலம் என்பதால், அனைவரிடமும் ஒரு டீமேட் கணக்கு இருப்பது அவசியம்; அதனால் பல நன்மை கிடைக் கும். டிஜிட்டல் வடிவில் உள்ள எந்த சொத்தையும் வாங்கி, விற்க டீமேட் கணக்கு அவசியம் தேவை.

ஒரு நிறுவனப் பங்கை நீங்கள் வாங்கவோ, விற்கவோ விரும்பி னால் உங்களிடம் டீமேட் கணக்கு இருக்க வேண்டியது கட்டாயம். டீமேட் கணக்கு என்பது பங்குகளை வாங்கவும், விற்கவும் மட்டும்தான் தேவை எனப் பலரும் நினைக்கிறார்கள். இது தவறு. நிறுவனங்களின் கடன் பத்திரங்களை வாங்கவும், அரசு வெளியிடும் தங்கப் பத்திரங்களை வாங்கவும்கூட டீமேட் கணக்கு அவசியம் தேவை. அதேபோல, கோல்டு இ.டி.எஃப் என்ற ஃபண்டுகளை வாங்கவும் டீமேட் கணக்கு அவசியம். ஃப்யூச்சர்ஸ், ஆப்ஷன்ஸ் முதல் கமாடிட்டி டிரேடிங் வரைக்கும் டீமேட் கணக்கு தேவையாக இருக்கிறது.

டீமேட் - டிரேடிங் என்ன வித்தியாசம்?

டீமேட் கணக்குக்கும் டிரேடிங் கணக்குக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியாமல் சிலர் இருக்கிறார் கள். டீமேட் கணக்கு என்பது மின்னணு வடிவமாக்கப்பட்ட பங்குகள் மற்றும் பத்திரங்களை நிர்வகிக்கும் கணக்கு ஆகும். டிரேடிங் கணக்கு என்பது பங்குத் தரகு நிறுவனத்திடம் நீங்கள் வைத்துள்ள கணக்கு. இந்தக் கணக்கைத் தரும் தரகர் Depository Participant என்ற பெயரில் முதலீட் டாளர்களுக்கும் டெபாசிட்டரி லிமிடெட் நிறுவனங்களுக்கும் இடையில் செயல்படுவார். இவர் வழங்கும் டிரேடிங் கணக்கு மூலமாகத்தான் பங்குச் சந்தையில் இருந்து பங்குகளை வாங்கவோ, விற்கவோ முடியும். இப்படி வாங்கிய பங்குகளை உங்களுடைய டீமேட் கணக்கில்தான் வரவு வைக்கப்படும். பங்குகளை விற்கும் போது உங்களுடைய டீமேட் கணக்கிலிருந்து பங்குகள் கழிக்கப் பட்டு, அந்தப் பங்குகளை வாங்கிய வரின் டீமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த டீமேட் கணக்குகளை தேசிய பத்திரங்கள் டெபாசிட்டரி லிமிடெட் (NSDL) மற்றும் சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் லிமிடெட் (CDSL) ஆகிய இரண்டு டெபாசிட்டரி நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன.

வங்கிகள் நம்முடைய வைப்புத் தொகையை நிர்வகிக்கிற மாதிரி, மின்னணு வடிவில் இருக்கும் பங்குகளையும், பத்திரங்களையும் நிர்வகிக்கின்றன. ஒவ்வொரு டீமேட் கணக்குக்கும் ஒரு தனிப்பட்ட அடையாள எண் (UID) ஒதுக்கப்படும். இந்த எண் தான் வர்த்தகப் பயன்பாடு களுக்காகப் பயன்படுத்தப்படும். இந்த எண்ணை வைத்து அடையாளம் கண்டுதான் நம்முடைய டீமேட் கணக்கில் பங்குகள், பத்திரங்கள் வரவு வைக்கப்படும். விற்கப்படும்போது கழிக்கப்படும். இதற்கான விவரங்கள் எஸ்.எம்.எஸ் மற்றும் மெயில் மூலமாக நமக்கு பகிரப்படும்.

டீமேட் கணக்கு... டிஜிட்டல் சொத்துகளின் மந்திரச் சாவி!

டீமேட் கணக்குத் தொடங்குவது எப்படி?

வங்கிகள், தரகு நிறுவனங்கள் ஆகியவற்றில் டீமேட் கணக்கு தொடங்கலாம். இந்திய குடிமக்கள் எவரும் (மைனர்கள் பாதுகாவலர் வழியாக), கம்பெனிகள், பார்ட்னர்ஷிப் நிறுவனங்கள், டிரஸ்ட்டுகள், இந்து கூட்டுக் குடும்பத்தினர் (HUF), இந்திய வம்சாவழியினர், வெளிநாடு வாழ் இந்தியர் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர் கள் என அனைவரும் டீமேட் கணக்கு தொடங்கலாம்.

டீமேட் கணக்குத் தொடங்குவதற்கான விண்ணப்பம் இவைதான்... தேவையான எண்ணிக்கையில் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், பான் கார்டு, ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு, அடையாளச் சான்று, முகவரி சான்று, நாமினி விவரங்கள் ஆகியவை இருந்தால் தொடங்கி விடலாம். இப்போது ஆன்லைனிலேயே டீமேட் கணக்கைத் தொடங்கும் வசதிகள் வந்துவிட்டன. கே.ஒய்.சி விவரங்களை சரியாகத் தந்து டீமேட் கணக்கை எளிதில் தொடங்கலாம்.

டீமேட் கணக்குத் தொடங்கும்போது பங்குகள், பத்திரங்கள் வாங்கும்போது எவ்வளவு பரிவர்த்தனை கட்டணம் பிடிப்பார்கள், விற்கும்போது எவ்வளவு பிடிப்பார்கள், நிர்வகிப்பு கட்டணம் எவ்வளவு, டீமேட் கணக்கு ஆண்டு பராமரிப்புக் கட்டணம் எவ்வளவு என்பது போன்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. வர்த்தகப் பரிவர்த்தனைக் கட்டணம் குறைவாக உள்ள தரகு நிறுவனமாகத் தேர்வுசெய்வது நல்லது. முக்கியமாக, செபியில் பதிவு செய்யப்பட்ட தரகு நிறுவன மாக இருப்பது அவசியம். அதேபோல், தரகு நிறுவனத்தின் கடந்தகால செயல்பாடு குறித்தும் தெரிந்துகொள்வது நல்லது.

டீமேட் கணக்கு வைத்திருப்பதன் மூலம் வேறு நன்மைகளும் உண்டு. ஒரு நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கும் ஈவுத்தொகை, வட்டி போன்றவற்றை பரிவர்த்தனை செய்வது எளிதாக இருக்கும். தவிர, பங்கு பிரிப்பு, உரிமை பங்கு வெளியீடு, போனஸ் பங்கு போன்ற வற்றை வழங்கும்போது டீமேட் கணக்கு உதவியாக இருக்கும்’’ என்றார்.

செல்வத்தைப் பெருக்க விரும்பும் அனைவரிடமும் டீமேட் கணக்கு என்னும் டிஜிட்டல் சொத்துகளின் மந்திரச் சாவி அவசியம் இருக்க வேண்டும். உங்களிடம் டீமேட் கணக்கு இருக்கிறதா?