Published:Updated:

முதலீட்டுக் கலவையில் தங்கம்... மூன்று முக்கியமான பலன்கள்!

தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கம்

தங்கம்

சிந்தன் ஹரியா, தலைவர் (திட்ட மேம்பாடு & உத்தி), ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஏ.எம்.சி.

மஞ்சள் உலோகமான தங்கத்தின் ஜொலிப்பு தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்க்க ஒருபோதும் தவறுவதில்லை. இனம் புரியாத கவர்ச்சியையும் ஈர்ப்பையும் தங்கம் எப்போதும் தனக்குள் கொண்டுள்ளது. இது நீண்ட காலமாக நல்ல லாபத்தை வழங்கியுள்ளது மற்றும் ஒரு முதலீட்டுக் கலவையின் (Portfolio) ரிஸ்க் சரிகட்டப்பட்ட வருமான செயல்திறனை மேம்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

சிந்தன் ஹரியா
தலைவர் (திட்ட மேம்பாடு & உத்தி)
ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஏ.எம்.சி.
சிந்தன் ஹரியா தலைவர் (திட்ட மேம்பாடு & உத்தி) ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஏ.எம்.சி.

மேலும், இது பணவீக்கம், நிதிச் சந்தை சார்ந்த ரிஸ்க், பங்குச் சந்தை ரிஸ்க் மற்றும் ரூபாய் மதிப்பு இறக்கம் போன்றவற்றுக்கு எதிராக நல்ல ஹெட்ஜ் ஆகக் கருதப்படுகிறது. ஒரு முதலீட்டுக் கலவையின் கண்ணோட்டத்தில், தங்கம் மூன்று முக்கிய வழிகளில் மதிப்பைச் சேர்க்கிறது.

1. நீண்ட காலத்தில் முதலீட்டுக் கலவையின் வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது

தங்கம் எப்போதுமே முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக உள்ளது. ஏனெனில், இது பொருளாதார நெருக்கடி, நிதி நிர்வாகம் சிக்கல், அரசியல் நெருக்கடி போன்றவற்றின் காரணமாக ஏற்படும் நிச்சயமற்ற நிலைமையின்போது ஒருவரின் முதலீட்டுக் கலவைக்கு உறுதியான பிடிப்பை வழங்குவதாக இருக்கிறது. அதாவது, ஒட்டுமொத்த முதலீட்டுக் கலவை மிகவும் இறக்கம் காணாமல் தடுக்கிறது.

பொதுவாக, தங்கத்தின் விலை உலக அளவில் கெட்ட விஷயங்கள் நடக்கும்போது வேகமாக ஏறும். இதற்கு உதாரணமாக, சீனா- அமெரிக்க வர்த்தகப் போர், கொரோனா 19 பரவல் மற்றும் தற்போதைய ஒமிக்காரன் பரவல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

தங்கமானது, வரலாற்றில் நீண்ட காலமாக ஒருவரின் முதலீட்டுக் கலவைக்கு ஸ்திரத் தன்மையை வழங்குவது மட்டுமல்லாமல், நீண்ட காலத்தில் பாசிட்டிவ் வருமானத்தையும் கொடுத்துவந்துள்ளது. இது கெட்ட காலங்களில் முதலீட்டாளருக்கு நல்ல கூட்டாளியாக இருந்துவருகிறது.

தங்கம் ஒரு நெகிழ்ச்சியான சொத்தாக மாறக் காரணம், அது பல்வேறு தேவைக்கான ஆதாரமாக இருப்பதாகும். தங்கம் முதலீடாகவும், அரசுகள் மற்றும் வங்கிகளின் கையிருப்புச் சொத்தாகவும், அலங்கார பொருளாகவும், தொழில்நுட்பக் கூறுகளாகவும் (செல்போன் தயாரிக்க) பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் காரணமாக, தங்கத்தின் தேவை பல ஆண்டுகளாக ஓரளவு சீராக உள்ளது.

மேலும், தங்கத்தை, தங்க நகையை வேகமாகப் பணமாக்க முடியும். பிசிக்கல் மற்றும் டிஜிட்டல் தங்க முதலீட்டில் கிரெடிட் ரிஸ்க் (credit risk) இல்லை. தங்கத்தின் நீண்ட கால வருமானம் என்பது பல முதலீடுகள் மற்றும் பல சொத்துப் பிரிவுகளுக்கு இணையாக அல்லது அதைவிட சிறப்பாக உள்ளது.

முதலீட்டுக் கலவையில் தங்கம்...
மூன்று முக்கியமான பலன்கள்!

2. முதலீட்டுக் கலவையைப் பரவாலாக்கி ரிஸ்க்கைக் குறைக்கிறது

பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளான நிறுவனப் பங்குகள், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் என்பவை செல்வத்தை (Wealth) உருவாக்குவதற்கான நீண்ட கால முதலீட்டுத் திட்டங்கள் ஆகும். இது ஒரு தனிப்பட்ட முதலீட்டாளரின் முதலீட்டுக் கலவையில் அவசியம் இடம்பெற வேண்டிய முதலீடுகளாகும். பல்வேறு சொத்துப் பிரிவுகளைக் கொண்ட பன்முகப்படுத்தப்பட்ட முதலீட்டுக் கலவையே செல்வத்தை உருவாக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

கடன் பத்திரங்கள் முதலீட்டுக் கலவைக்கு ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை வழங்குகின்றன. அதே சமயம், பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள், முதலீட்டுக் கலவைக்கு நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தைச் சேர்க்கின்றன. உலக பொருளாதாரம் நெருக்கடியில் இருக்கும்போது, கிட்டத்தட்ட அனைத்து சொத்துப் பிரிவுகளும் நெகட்டிவ் வருமானம் கொடுக்கும் நிலையில், ஒரே ஒரு சொத்துப் பிரிவு மட்டும் பாசிட்டிவ் வருமானம் கொடுக்கும். அந்தச் சொத்துப் பிரிவு தங்கம் ஆகும்.

2008-ம் ஆண்டில் சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, பங்குச் சந்தைகள், பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்டுகள், ரியல் எஸ்டேட், ஹெட்ச் ஃபண்டுகள், பெரும்பாலாலான பொருள்கள் மற்றும் கமாடிட்டிகள் விலைவீழ்ச்சியைச் சந்தித்தன. ஆனால், தங்கத்தின் விலை மட்டும் அந்த நேரத்தில் நிலையாக ஏற்றம் கண்டது.

2007 டிசம்பர் முதல் 2009 பிப்ரவரி வரை தங்கம் நல்ல வருமானத்தைக் கொடுத்தது. அதாவது, தங்கத்தின் மதிப்பு, முதலீட்டுக் கலவையின் வருமானத்தை மிகவும் கீழே இறங்கவிடாமல் தடுத்து நிறுத்தியது.

3. பாதுகாப்பான முதலீடு

ஒரு பாதுகாப்பான முதலீடு என்பது பொருளாதாரம் மிகவும் கொந்தளிப்பான காலங்களில் கூட மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றலைக் கொண்ட சொத்துப் பிரிவாகும். தங்கம் என்பது ஒரு முதலீட்டுக் கலவையில் ஒரு நல்ல ஹெட்ஜ்- ஆக செயல்படுகிறது. பணவீக்கம் மற்றும் உலக பொருளாதார நிதி நெருக்கடி, இயற்கைச் சீற்றங்கள் (புயல், வெள்ளம்), போர் அபாயங்கள், கோவிட்-19 மற்றும் ஒமிக்ரான் பரவல் போன்ற வற்றுக்கு எதிராக முதலீட்டுக் கலவையைப் பாதுகாக்க உதவுகிறது.

தங்கம் மற்றும் பிற சொத்துப் பிரிவுகளுக்கு இடையே குறைவான ஒற்றுமை இருக்கிறது. பொதுவாக, பொருளாதார வீழ்ச்சி மற்றும் நெருக்கடியான காலங்களில் தங்கம் விலை அதிகரிக்க ஆரம்பிக்கும்; அந்தக் காலகட்டத்தில் இதர சொத்துகளின் மதிப்பு வீழ்ச்சிக் காண ஆரம்பிக்கும்.

பொதுவாக, பங்குச் சந்தை ஏற்றத்தில் இருந்தால் தங்கம் விலை குறையும்; மாறாக, பங்குச் சந்தை இறக்கத்தில் இருந்தால், தங்கம் விலை ஏற்றம் காண ஆரம்பிக்கும்.

கடந்த இருபது ஆண்டுகளாக, 2008-ல் தொடங்கிய உலகளாவிய நிதி நெருக்கடியின்போதும், மிக சமீபத்தில் கோவிட் -19 தொற்று நோய் தொடங்கிய காலத்திலும் தங்கத்தின் விலை ஏற்றத்தில் இருந்ததை நாம் காணலாம். ஒரு சொத்துப் பிரிவாக, தங்கமும் அதன் ஒருங்கிணைப்பு (விலை ஏற்றம் மற்றும் இறக்கம் இல்லாத நிலை) மற்றும் வளர்ச்சியின் கட்டங்களுடன் செயல்பட்டு வருகிறது.

தங்கத்தில் சரியாக முதலீடு செய்வது எப்படி?

நம்மில் பெரும்பாலோர் தங்கத்தை ஆபரண வடிவில்தான் வாங்கி வருகிறோம். அணிந்து அழகு பார்க்க எனில், ஆபரணத் தங்கமாக வாங்குவதில் எந்தத் தவறும் இல்லை. அதே நேரத்தில், இதை முதலீட்டு நோக்கில் வாங்கும்போது, ஆபரண நகைக்கு போடப்படும் செய்கூலி மற்றும் சேதாரம் இழப்பாக இருக்கும்.

மேலும், நீண்ட காலம் கழித்து பயன்படுத்தும் போது பழைய மாடல் என்கிற காரணத்துக்காக அதன் விலை குறைக்கப்படும். புதிதாக வாங்கும் நகைக்கு மீண்டும் ஒரு முறை செய்கூலி, சேதாரம் கொடுக்க வேண்டிவரும்.

இந்திய முதலீட்டாளராக, பல வகையான தங்க முதலீட்டுத் திட்டங்கள் மூலம் நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம். அனைத்து முதலீட்டு வாய்ப்பு களிலும் விரைவாகவும் அதிக இழப்பு இல்லாமலும் பணமாக்கக்கூடிய தேர்வாக கோல்டு இ.டி.எஃப் (Gold ETF) இருக்கிறது. இதை ஒருவர் யூனிட்டுகளாக வாங்கிக்கொள்ளலாம். ஒரு யூனிட்டின் மதிப்பு என்பது ஒரு கிராம் (24 காரட்) தங்கத்தின் விலையை யொட்டி இருக்கும். தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத் துக்கு ஏற்ப யூனிட்டின் மதிப்பு மாறும்.

கோல்டு இ.டி.எஃப் என்பதை சுருக்கமாகக் காகிதத் தங்கம் என்று சொல்லலாம். இதில் முதலீடு செய்ய டீமேட் அவசியம். இதை என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ பங்குச் சந்தைகளில் வர்த்தக நேரத்தில் வாங்கிக் கொள்ளலாம். இதைப் பங்குகளை விற்பது போல் பங்குச் சந்தையில் விற்றுக்கொள்ளலாம்.

ஆபரண நகையுடன் ஒப்பிடும்போது கோல்டு இ.டி.எஃப் வாங்குவதற்கான செலவு மற்றும் விற்பதற்கான செலவு மிகக் குறைவாகும். மேலும், ஆபரண தங்கத்தைப்போல் அதன் தரம் மற்றும் அதைப் பாதுகாக்கும் பிரச்னை காகித வடிவில் இருக்கும் இந்தத் தங்க முதலீட்டில் இல்லை.

மேலும், கோல்டு இ.டி.எஃப்பை ஒரு கிராம், அரை கிராம் அல்லது அதைவிட சிறிய அளவுக்குக்கூட வாங்க முடியும். இப்போதெல்லாம் பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கோல்டு இ.டி.எஃப்பில் ஒரு கிராம் என்பதை 100 ஆக பிரித்து சிறிய அளவில்கூட விற்பனை செய்கின்றன. உதாரணமாக, ஒரு கிராம் ரூ.5,000 என்றால், ஒருவர் ரூ.50 இருந்தால்கூட கோல்டு இ.டி.எஃப்பில் முதலீடு செய்ய முடியும்.

அடிக்கடி தங்கம் வாங்கி, செய்கூலி, சேதாரம் மூலம் பெரும் பணத்தை இழக்காமல் இருக்க வேண்டுமெனில், இந்த கோல்டு இ.டி.எஃப் மிகச் சரியான முதலீடாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை!