Published:Updated:

தங்கத்தில் லாபகரமாக முதலீடு செய்வது எப்படி?

தங்கத்தில் முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
தங்கத்தில் முதலீடு

சேமிப்பும் முதலீடும் - 11

தங்கத்தில் லாபகரமாக முதலீடு செய்வது எப்படி?

சேமிப்பும் முதலீடும் - 11

Published:Updated:
தங்கத்தில் முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
தங்கத்தில் முதலீடு

இந்தியப் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எப்போதும் தங்க நகை மீது ஆசைதான். முதலீட்டு நோக்கில் தங்க நகையாக வாங்குவது லாபகரமாக இருக்காது. காரணம், நகைக்கான செய்கூலி, சேதாரம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) ஆகியவை தங்கத்தின் விலையை ஏற்றிவிடும். விற்று பணமாக்கும்போது இந்த வகையில் சுமார் 15% முதல் 20% வரை இழப்பு ஏற்படும். அடுத்து பழைய நகை என்கிற கணக்கில் மதிப்பு குறைக்கப்படும். மிக முக்கியமாகத் தங்கத்தின் தரம். பாரம்பர்யமான நகைக் கடைகள் தவிர, மற்ற கடைகளில் தங்கத்தின் தரம் என்பது உறுதிபட்டதாக இருக்காது.

அணிந்து அழகு பார்க்க எனில், தங்க நகையாக வாங்குவதில் தவறில்லை. ஆனால், முதலீட்டு நோக்கம் எனில், வேறு வழிகளையே நாட வேண்டும்.

சிவகாசி மணிகண்டன் 
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன் நிதி ஆலோசகர், Aismoney.com

தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகள்...

பிசிக்கல் ஆக முதலீட்டு நோக்கில் தங்கம் வாங்குவது எனில், தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகளாக வாங்கலாம். ஆனால், இதைப் பாதுகாப்பாக வைப்பது சிரமம். அல்லது வங்கி லாக்கரில் வைத்து பாதுகாக்க வேண்டும். அதற்கு செலவு இருக்கிறது. மேலும், தங்க நாணயங்கள், தங்கக் கட்டி வாங்கும்போது நகைகளுக்கு உள்ளது போலவே 3% ஜி.எஸ்.டி வரி இருக்கிறது. சில கடைகளில் இவற்றுக்கு ஓரிரு சதவிகிதம் சேதாரம் போடுவதும் இருக்கிறது. இதனால், விலை சுமார் 5% அதிகரித்துவிடும். விற்கும்போது இவை திரும்பக் கிடைக்காது என்பதால், இழப்பாக அமையும். மேலும், விற்கும்போது சேதாரமாக 1 - 2% கழிக்கப்படுவதும் உண்டு. இவற்றைப் பணமாக்குவதில் சிக்கல் இருக்கிறது. வாங்கிய கடைகளில் விற்றாலும் முழுத் தொகையையும் ரொக்கமாகத் தர மாட்டார்கள். சுமார் 15 - 20%தான் ரொக்கமாகக் கிடைக்கும். மீதிக்கு நகைகளாக அல்லது மீண்டும் நாணயமாகத் தான் வாங்கிக்கொள்ள வேண்டும். அந்த வகையில் முதலீட்டு நோக்கில் தங்க நாணயம் மற்றும் தங்கக் கட்டி லாபமாக இருக்காது.

காகித தங்க முதலீடு...

தங்கத்தில் முதலீடு செய்ய காகிதத் தங்கம் (Paper Cold) ஏற்றதாக இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கோல்டு இ.டி.எஃப்-கள் மற்றும் கோல்டு ஃபண்டுகள் (Gold ETFs and Gold funds), மத்திய அரசின் தங்கப் பத்திரங்கள் (Sovereign gold bonds) ஆகியவை முக்கியமான காகித தங்க முதலீடாகும்.

கோல்டு இ.டி.எஃப்-கள்

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், இந்த கோல்டு எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகளை வெளியிடுகின்றன. இவை சுருக்கமாக, கோல்டு இ.டி.எஃப்-கள் எனப்படுகின்றன.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள். இந்த ஃபண்ட் மூலம் திரட்டும் தொகைக்கு இணையாகத் தங்கம் வாங்கி வைக்க வேண்டும் என்பது செபி அமைப்பின் விதிமுறையாகும். இதில், ஒரு கிராம் என்பதை ஒரு யூனிட்டாகக் கணக்கிடப்பட்டது. தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வரவே, ஒரு யூனிட்டை வாங்க சுமார் 4,500 - 4,800 ரூபாய் தேவைப்படுவதால், பலரால் முதலீடு செய்ய முடியவில்லை. இதனால், பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஒரு கிராம் என்பதை 100-ஆகப் பிரித்து ஒரு பகுதியின் மதிப்பு சுமார் ரூ.45 - 48 என்கிற கணக்கில் ஒரு யூனிட்டை வைத்திருக்கின்றன, இதனால் முன்பைவிட அதிகம் பேர் கோல்டு இ.டி.எஃப்-களில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் எஸ்.ஐ.பி வசதி இல்லை என்பது பெரிய குறைபாடாக இருக்கிறது. முதலீட்டாளர்தான் தேவைக்கேற்ப பங்குச் சந்தையில் கோல்டு இ.டி.எஃப் யூனிட்டுகளை வாங்கிக்கொள்ள வேண்டும். தங்கத்தின் விலை மாற்றத்துக்கேற்ப கோல்டு இ.டி.எஃப் யூனிட் மதிப்பு மாறும்.

முதலீடு செய்ய டீமேட் கணக்கு அவசியம். நிறுவனப் பங்கு முதலீட்டுக்கான டீமேட் கணக்கு இருந்தால், புதிதாக டீமேட் கணக்கு ஆரம்பிக்கத் தேவையில்லை. பணத் தேவை ஏற்படும்போது யூனிட்டுகளை விற்றால், ஓரிரு நாள்களில் வங்கிக் கணக்குக்குப் பணம் வந்துசேரும். அதைக் கொண்டு முதலீட்டாளர்தான் தேவையான நகையை வாங்கிக்கொள்ள வேண்டும்.

டீமேட் வடிவில் இருப்பதால், பங்குச் சந்தையில் கோல்டு இ.டி.எஃப்-களின் யூனிட்டுகள் வர்த்தகமாகி வருகின்றன. எனவே, தேவைக்கேற்ப பங்குச் சந்தை வர்த்தக நேரத்தில் வாங்கவும் யூனிட்டுகளை விற்று பணமாக்கவும் முடியும்.

தங்கத்தில் லாபகரமாக முதலீடு செய்வது எப்படி?

கோல்டு சேவிங்ஸ் ஃபண்டுகள்...

பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், கோல்டு இ.டி.எஃப் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் விதமாகப் கோல்டு சேவிங்ஸ் ஃபண்டைக் கொண்டி ருக்கின்றன. அதாவது, இந்தத் திட்டத்தின் மூலம் திரட்டப்படும் தொகை, அந்த நிறுவனத்தின் கோல்டு இ.டி.எஃப் திட்டத்தில் முதலீடு செய்யப்படுகிறது.

கோல்டு இ.டி.எஃப் திட்டத் தில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு தேவை. இது பலருக்கும் சிக்கலாக இருந்ததால், டீமேட் கணக்கு இல்லாமல் முதலீடு செய்யும் நோக்கத்தோடுதான் கோல்டு சேவிங்க்ஸ் ஃபண்ட் கொண்டுவரப்பட்டது. அந்த வகையில் டீமேட் கணக்குக்கான ஆண்டுப் பராமரிப்புக் கட்டணம் சுமார் 300 - 500 ரூபாய் மிச்சமாகும் என்பதால், சிறு முதலீட்டாளர் களுக்கு இது ஏற்றது. அதே நேரத்தில் பங்கு முதலீட்டுக்காக டீமேட் கணக்கு வைத்திருப்ப வர்கள், இந்த ஃபண்டையும் டீமேட் மூலமாக வாங்குவது வசதியாக ஃபண்டைப் பராமரிப்பது எளிதாக இருக்கும்.

இந்த கோல்டு சேவிங்ஸ் ஃபண்டில் முதலீடு செய்ய வழக்கமான மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குத் தேவையான பான் மற்றும் ஆதார் இருந்தால் போதும். மேலும், மாதம் ரூ.100 / ரூ.500 முதலீடு செய்யலாம். இந்தக் குறைந்தபட்சத் தொகை நிறுவனங் களைப் பொறுத்து மாறும். எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வசதி இருக்கிறது.

இந்த கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், நிதியை வேறு ஒரு கோல்டு இ.டி.எஃப் திட்டத்தில் முதலீடு செய்யும், ‘ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்’ வகையைச் சேர்ந்தது. இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதியின் பெரும்பகுதி, கோல்டு இ.டி.எஃப் ஃபண்டில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால், கோல்டு இ.டி.எஃப் முதலீட்டை, கோல்டு சேவிங்ஸ் ஃபண்டில் 0.5 - 1% குறைவாக வருமானம் கிடைக்கும். காரணம், கோல்டு இ.டி.எஃப் ஃபண்டில் முதலீடு செய்வதற்கான நிர்வாகச் செலவு மற்றும் கட்டணமாகும். பொதுவாக, கோல்டு சேவிங்ஸ் ஃபண்டின் யூனிட்டை ஓராண்டுக்குமுன் விற்றால் வெளியேறும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இதிலும் நம் தேவைக்கு யூனிட்டுகளை விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக்கொண்டு நகையாக வாங்கிக் கொள்ள வேண்டும். யூனிட்டுகளை விற்றால், சில தினங்களில் வங்கிக் கணக்குக்குப் பணம் வந்துவிடும்.

தங்கத்தில் லாபகரமாக முதலீடு செய்வது எப்படி?

தங்கத்தில் முதலீடு... எப்போது லாபகரமாக இருக்கும்?

பொதுவாக, உலக அளவில் கெட்டது நடக்கும்போது தங்கத்தின் விலை அதிகரிக்கும். உதாரணமாக, பங்குச் சந்தை வீழ்ச்சி அடையும்போது, பொருளாதார வளர்ச்சி (ஜி.டி.பி) வளர்ச்சி மந்தம், நிலையற்றதன்மை நிலவும் காலம், நாடுகளுக்கு இடையே போர் வரும் சூழல் மற்றும் போர் நடக்கும் காலம், பெரிய நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் (சீனா - அமெரிக்கா), வட்டி விகிதம் குறைவாக இருக்கும் காலத்தில் பணப்புழக்கம் / லிக்விட்டி அதிகரிக்கும் போது, கச்சா எண்ணெய் விலை உயர்வு, மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றத்தால் அதிக பாதிப்பு, கொரோனா 19 போன்ற பெரும் தொற்று பரவல் காலம் ஆகிய சூழ்நிலைகளில் தங்கத்தின் விலை ஏற்றம் காணும். தேவை அதிகரிப்பு காரணமாகவும் விலை ஏற்றம் காணும்.

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையும்போது உலக அளவில் தங்க விலை குறைந்தாலும் இந்தியாவில் தங்கத்தின் விலை குறையாமல் இருக்கக்கூடும் அல்லது உயரக்கூடும்.

தற்போது புதிய வைரஸ் பரவல் காரணமாக தங்கத்தின் விலை ஏற்றத்தில் இருக்கிறது. இதனால், கோல்டு இ.டி.எஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருப்பவர்கள் மொத்தத் தொகையையும் ஒரே நேரத்தில் முதலீடு செய்திட வேண்டாம்; அதை 4, 5 பகுதியாகப் பிரித்து முதலீடு செய்துவரலாம். தங்கத்தின் விலை இப்படித் தொடர்ந்து ஏற்றத்தில் இருக்க வாய்ப்பு இல்லை. வைரஸ் பரவல் மற்றும் பாதிப்பு குறையும்போது விலை கண்டிப்பாக இறங்கும். அந்த வகையில் காத்திருந்து இறக்கத்தில் வாங்கலாம். அல்லது மாதந்தோறும் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட தொகை அல்லது குறிப்பிட்ட யூனிட்டுகளை வாங்குவது லாபகரமாக இருக்கும்.

(முதலீடு செய்வோம்)

தங்கத்தின் லாபத்துக்கு எப்படி வரி விதிக்கப்படுகிறது?

தங்க நகை, நாணயம், கட்டி, கோல்டு இ.டி.எஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் எதுவாக இருந்தாலும் லாபத்துக்கு பாரபட்சம் எதுவும் இல்லாமல் ஒரேபோல்தான் இந்தியாவில் வருமான வரி விதிக்கப்படுகிறது. மேலே கண்ட எந்த முறையில் தங்கத்தை வாங்கி மூன்றாண்டுகளுக்குள் (36 மாதங்கள்) விற்றால் கிடைக்கும் லாபம், குறுகிய கால மூலதன ஆதாயம் ஆகும். இந்த ஆதாயத்துக்கு ஒருவர் எந்த வருமான வரம்பில் (பழைய வரி முறையில் 5%, 20% மற்றும் 30%, புதிய முறையில் 5%, 10%, 15%, 20%, 25% மற்றும் 30%) வருகிறாரோ, அதற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும். அதாவது, தங்க முதலீட்டின் மூலமான குறுகிய கால மூலதன ஆதாயம் ஒருவரின் மொத்த வருமானத்துடன் சேர்க்கப்பட்டு வரி விதிக்கப்படும். தங்க முதலீடுகளை மூன்று ஆண்டுகள் கழித்து விற்றுக் கிடைக்கும் லாபம் நீண்ட கால மூலதன ஆதாயம் எனப்படும். இந்த ஆதாயத்துக்கு பணவீக்க சரிக்கட்டலுக்கு 20% வரிக் கட்ட வேண்டும். விற்கும் இந்த மூலதன ஆதாயத்தையும் கணக்கில் கொண்டால் லாபத்தை அதிகரிக்க முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism