பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

முதலீட்டைத் தவிர்க்க நீங்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானதா?

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீடு

முதலீடு

பலருக்கு முதலீடு செய்ய வேண்டும் என்கிற ஆசை, எண்ணம் எல்லாம் இருக்கும். ஆனால், பல்வேறு காரணங்களை தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொண்டு முதலீட்டை ஆரம்பிக்காமல் நிறைய செலவு செய்துகொண்டிருப்பார்கள்.

சிவகாசி மணிகண்டன் 
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன் நிதி ஆலோசகர், Aismoney.com

இந்தியக் குடும்பங்களின் சேமிப்பு விகிதம் 2011-12 நிதி ஆண்டில் 23.6 சதவிகிதமாக இருந்து, 2016-17-ல் 16.3 சதவிகிதமாகக் குறைந்து, 2022 ஜூனில் 13.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இந்த நிலையில், திடீர் நிதிச் சிக்கல் வரும்போது, பணத்தைச் சேமித்து வைத்திருந்தால், முதலீடு செய்திருந்தால், கடன் வாங்காமல் முதலீட்டில் இருக்கும் பணத்தை எடுத்து செலவு செய்யலாம்.

நம்மில் பலர், முதலீடு செய்வதைத் தவிர்க்க சொல்லும் பல காரணங்களையும் அவை உண்மையிலேயே சரியான காரணங்கள்தானா என்றும் பார்ப்போம்.

இவ்வளவு சீக்கிரம் முதலீட்டை ஆரம்பிக்கத் தேவையில்லை..!

சிலர் 35, 40 வயதான பிறகுதான் பணத்தைச் சேமிக்கவும், முதலீடு செய்யவும் ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இன்றைய கார்ப்பரேட் வேலை உலகில் ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் வேலை பறிபோக வாய்ப்பிருக்கிறது. நிறுவனத்தின் நிர்வாகம் மாறினாலோ, வேறு காரணங்களாலோ வேலை இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்கு சமீபத்திய உதாரணம், ட்விட்டர்.

எனவே, வேலைக்குச் சேர்ந்தவுடன் 22, 25 வயதிலேயே எதிர்கால மற்றும் அவசரத் தேவைக்காக சேமிக்கத் தொடங்குவது அவசியம் ஆகும். பலரும் கல்யாணமாகி, பிள்ளைகள் பிறந்து, செலவு அதிகமான பிறகு, செலவுகளைச் சமாளிக்க கஷ்டப்படும்போது தான் சேமிப்பு மற்றும் முதலீட்டின் முக்கியத்துவத்தை உணர்கிறார் கள். முதல் சம்பளத்திலிருந்தே குறைந்தது 10% முதல் 30% சேமிக்கத் தொடங்கியிருந்தால், இந்தச் சிக்கல் இல்லை.

முதலீட்டை எந்தளவுக்கு தாமதமாக ஆரம்பிக்கிறார்களோ, அந்த அளவுக்கு அதிக தொகையை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். பொதுவாக, பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணத்துக்கான முதலீட்டை ஐந்தாண்டுகள் தள்ளி ஆரம்பித்தால் முதலீட்டுத் தொகை இரு மடங்குக்கு மேல் அதிகரிக்கும் என்பதே உண்மை.

முதலீட்டைத் தவிர்க்க நீங்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானதா?

முதலீடு செய்ய இப்போது என்னிடம் போதிய பணம் இல்லை..!

முதலீட்டைத் தவிர்க்க பெரும்பாலானோர் சொல்லும் முக்கியமான காரணம் இதுவாகும். முதலீட்டை ஆரம்பிக்க பெரிய தொகை எல்லாம் தேவையில்லை. தபால் அலுவலகம், வங்கித் தொடர் சேமிப்புத் திட்டத்தில் (RD) முதலீடு செய்யவும், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யவும் மாதம் ரூ.100 இருந்தாலே போதும். இந்தத் தொகை என்பது வேலை பார்க்கும் நபர் ஒருவரின் ஒரு நாள் இதர செலவைவிட குறைவாகும். ஒருவர் சிறிதாக சேமிப்பை, முதலீட்டைத் தொடங்கவில்லை எனில், அவர் ஒருபோதும் தொடங்க மாட்டார். மேலும், முதலீட்டை சிறிதாக ஆரம்பிக்கும் அதே நேரத்தில் ஆண்டு தோறும் முதலீட்டுத் தொகையையும் அதிகரித்துவருவது அவசியமாகும். அப்போதுதான் நிதி இலக்குகள் இலகுவாக நிறைவேறும்.

என் திட்டங்கள் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும்..!

அனைவரின் வாழ்க்கை, வேலை, தொழில் திட்டங்கள் மாறும் தன்மை கொண்டவைதான். அதற்காக முதலீட்டைத் தள்ளிப்போடுவதிலோ, முதலீட்டை ஆரம்பிக்காமல் இருப்பதிலோ அர்த்தம் இல்லை. நவீன முதலீடுகளில் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்; எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளலாம்; எப்போது வேண்டு மானாலும் பணத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. உதாரணமாக, பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், கோல்டு இ.டி.எஃப் போன்ற முதலீடுகளைக் குறிப்பிடலாம்.

எனக்கு ஏகப்பட்ட பொறுப்புகளும் செலவுகளும் இருக்கின்றன..!

யாருக்குதான் பொறுப்புகளும் செலவுகளும் இல்லை? பள்ளிக்கூடம் செல்லும் குழந்தை தொடங்கி வேலைக்குச் செல்பவர் வரை அனைவருக்கும் பொறுப்புகள் இருக்கின்றன. ஒருவருக்கும் இருக்கும் நிதிப் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்ற சேமிப்பதும் முதலீடு செய்வதும் அவசியம் என்பதை அனைவரும் அறிய வேண்டும்.

வீட்டுக் கடன், கார் கடன், தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் என பல கடன்கள் பலருக்கும் இருக்கக்கூடும். அவர்கள் கடன்களை அடைக்கும் வரைக்கும் முதலீடு செய்யாமல் இருப்பார்கள். அதிக வட்டியிலான கிரெடிட் கார்டு, தனிநபர் கடன்களை விரைந்து அடைப்பது நல்ல விஷயம்தான். அதே நேரத்தில், குறைவான வட்டி மற்றும் வரிச் சலுகைகள் அளிக்கும் வீட்டுக் கடனை விரைந்து அடைக்க அவசியமில்லை. நம்மிடம் இருக்கும் உபரித் தொகையானது எப்போது தேவை என்பதைப் பொறுத்து முதலீடு செய்துவரலாம். மூன்றாண்டுக்குள் பணம் தேவை எனில், ஃபிக்ஸட் டெபாசிட், கடன் மியூச்சுவல் ஃபண்டுகளிலும் மூன்றாண்டுக்குமேல் பணம் தேவை எனில், நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துவரலாம்.

பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் அதிக ரிஸ்க்கானது...

பங்குச் சந்தை மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறுகிய காலத்தில் அதிக ரிஸ்க்கானதுதான். ஆனால், அவற்றில் செய்யப் படும் முதலீடு மீதான ரிஸ்க் நீண்ட காலத்தில் பரவலாக் கப்படுவதுடன், பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானமும் தருகின்றன.

முதலீட்டுக் காலத்தைப் பொறுத்து சரியான திட்டங் களைத் தேர்வு செய்வதன் மூலம் ரிஸ்க்கை வெகுவாகக் குறைக்க முடியும். குறுகிய காலத்தில் பணம் தேவைப் படும் என்கிறபட்சத்தில் நாம் ஏற்கெனவே சொன்னது போல, ஃபிக்ஸட் டெபாசிட், கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் ரிஸ்க் இருக்காது.

எனக்கு முதலீடு பற்றி எதுவும் தெரியாது..!

இப்படிச் சொல்லி முதலீடு செய்வதிலிருந்து தப்பிப் பவர்கள் மிக அதிகம். இங்கு யாரும் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு வந்து செய்ய வில்லை. உடல்நலப் பாதிப்பை சரிசெய்ய மருத்து வர்கள் இருப்பதுபோல, முதலீட்டுக்கான வழிகளைக் காட்ட நிதி ஆலோசகர்கள் இருக்கிறார்கள். அவர்களை அணுகினால் அவர்கள் சரியான முதலீட்டுப் பாதை யைக் காட்டிவிடுவார்கள். முதலீடு பற்றி ஏதாவது சந்தேகமிருந்தால், அது பற்றி அவர்களிடம் கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொள் ளலாம்.

மேலும், நேரம் இருக்கும் பட்சத்தில் முதலீடு பற்றிய அடிப்படை விஷயங்களை புத்தகங்கள், இணையதளம், யூடியூப் மூலம் எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.

முதலீட்டைத் தவிர்க்க நீங்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானதா?

முதலீடு செய்ய இது சரியான நேரம் இல்லை..!

நம்மவர்களை எடுத்துக் கொண்டால், பங்குச் சந்தை ஏற்றத்தில் இருந்தால், சந்தை உச்சத்தில் இருக்கிறது; சந்தை இறங்கும்போது முதலீடு செய்யலாம் என முதலீடு செய்வதைத் தவிர்க்கிறார்கள். அதே போல், பங்குச் சந்தை இறங்கியிருந்தால், சந்தை இன்னும் இறங்கும் என முதலீடு செய்வதைத் தவிர்க் கிறார்கள். பங்குச் சந்தை ஏற்றத்தில் இருந்தாலும் இறக்கத்தில் இருந்தாலும் தொடர்ந்து முதலீடு செய்து வரும்பட்சத்தில் நீண்ட காலத்தில் நல்ல வருமானம் பெற முடியும்.

சேமிப்பும் முதலீடும் பணக்காரர்களுக்குதான்..!

உண்மையில் கட்டாயம் சேமிக்கவும் முதலீடு செய்ய வும் வேண்டியவர்கள் சாதா ரணமானவர்கள். காரணம், பணக்காரர்கள் ஏதாவது பணச் சிக்கல் வந்தால் சுலபமாகச் சமாளித்து விடுவார்கள். மற்றவர்களால் அது முடியாது. எனவே, ஏழை மற்றும் நடுத்தர வருமானப் பிரிவினர் கட்டாயம் முதலீடு செய்ய வேண்டும். அதற்கு பெரிய தொகை தேவை இல்லை. ரூ.500, ரூ.1,000கூட முதலீடு செய்யத் தொடங்கலாம்.

முதலீடு செய்ய நேரம் இல்லை..!

முதலீடு செய்ய அதிக நேரம் எல்லாம் தேவைப் படாது. தபால் அலுவலகம் மற்றும் வங்கி ஆர்.டி ஆகட்டும், பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் ஆகட்டும், மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீட்டு முறை யாகட்டும், ஒருமுறை ஆரம்பித்துவிட்டால் போதும், மாதம்தோறும் பணம் வங்கிக் கணக்கிலிருந்துதானே பணம் எடுக்கப்பட்டு முதலீடு செய்யப்பட்டுவிடும். அதாவது, இப்போது முதலீடு ‘ஆட்டோமேட்’ செய்யப்பட்டுவிட்டது. எனவே, நேரம் இல்லை என்கிற பிரச்னையே இனி இல்லை.

சம்பளம் அதிகரித்ததும் முதலீட்டை ஆரம்பிக்கிறேன்..!

பலரும் இப்படிச் சொல்லியே காலத்தைக் கடத்தி வருகிறார்கள். மாதம் ரூ.25,000 சம்பளத்தில் இருக்கும் போது, சம்பளம் அதிகரிக்கட்டும் என்று சொல்லி முதலீட்டை ஆரம்பிக்க மறுக்கிறார்கள். மாதம் ரூ.60,000 சம்பளம் வாங்கும்போதும் அதே காரணத்தை தான் சொல்கிறார்கள்.

இப்படி நீண்ட காலத்தைக் கடத்திவிட்டு, பிற்பாடு பிள்ளைகளின் மேற்படிப்புக்கு முதலீடு செய்ய வேண்டும் என்று நிதி ஆலோசகரைத் தேடிப் போய் கேட்கிறார்கள். அப்போது அதிக பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்று நிதி ஆலோசகர் சொல் வதைக் கேட்டு அரண்டு போகிறார்கள். ‘‘நான் உங்ககிட்ட முதல்ல வந்தப்ப இவ்வளவு பணத்தை முதலீடு பண்ணணும்னு நீங்க சொல்லலையே’’ என்று கேட்கிறார்கள். நிறைய காலம் கடந்தபின் முதலீடு செய்யத் தொடங்கியிருப்பதால் தான், நிறைய பணத்தை முதலீடு செய்ய வேண்டி இருக்கிறது என்பது பலருக்கும் புரிவதில்லை. இளமைப் பருவத்தில் முதலீடு செய்வதன் மூலமே சிறிதளவு முதலீடு செய்து பெரு மளவு செல்வத்தை சேர்க்க முடியும் என்பதை இனியாவது உணருங்கள்!