சிந்தன் ஹரியா, தலைவர் - திட்ட மேம்பாடு & உத்தி, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஏஎம்சி
கோவிட்-19 தொற்றுநோய்ப் பரவலைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பத்துக்காகச் செலவு செய்யும் தொகை கணிசமாக அதிகரித்தது. இதனால், ஐ.டி நிறுவனங்களின் லாபம் கணிசமாக அதிகரித்து, அந்தத் துறை சார்ந்த நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்து, முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் தந்தன.
ஆனால், 2022–ம் ஆண்டின் தொடக்கத் திலிருந்து உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (Global Tech Companies) கஷ்டமான காலகட்டத்தைக் கடந்து வருகின்றன.

ஐ.டி நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி...
பொதுவாக, உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் விலை இறக்கம் காணும்போது, உள்நாட்டில் பட்டியலிடப் பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளிலும் அதன் பாதிப்பு இருக்கவே செய்யும். எனவே, நடப்பு ஆண்டின் தொடக்கத்திலிருந்து நிஃப்டி ஐ.டி குறியீடு (Nifty IT Index) 23% சரிந்ததில் (ஜூன் 2, 2022 நிலவரம்) ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
ஐ.டி நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய சரியான நேரம்...
தொழில்நுட்ப நிறுவனப் பங்குகள் தொடர்பான முதலீடுகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய முயலும் முதலீட்டாளர் விரிவான பகுப்பாய்வு செய்தால், தற்போதைய இறக்க நிலை நியாயமான ஆரம்பமாக இருக்கும் என்கிற முடிவுக்கு வருவார்கள். அதாவது, ஐ.டி நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரமாக இருக்கும். குறுகிய காலத்தில் ஐ.டி நிறுவனப் பங்குகள்மூலம் லாபம் ஈட்டுவது சாத்தியம் இல்லை என்றாலும், நீண்ட காலத்தில் இந்தத் துறை தொடர்பான கண்ணோட்டம் மிக பாசிட்டிவ்வாகவே உள்ளது.
இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாடு குறுகிய காலத்தில் சவால்கள் நிறைந்ததாகக் காணப்படும். காரணம், பல பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு சர்வதேச அளவிலும் உள் நாட்டிலும் பணவீக்க விகிதம் மிகவும் அதிகரித்துள்ளது. இதனால், உலகப் பொருளாதாரம் மற்றும் உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி சிக்கலுக்குள்ளாகி இருக்கிறது. இதனால், நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பத்துக்காகச் செலவழிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும். இதன் விளைவாக, ஐ.டி பொருள்கள் மற்றும் சேவைக்கான தேவை உடனடியாகக் குறையும்.

நீண்ட கால வளர்ச்சியில் பிரகாசம்...
ஆனால், நடுத்தர மற்றும் நீண்டகால கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, உலகளாவிய மற்றும் உள்நாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், டிஜிட்டல் மாற்றத்துக்கான கட்டமைப்புத் தேவையால் பாதிக்கப்படாமல் இருக்கும். இதற்கான ஆரம்ப அறிகுறிகள், குறிப்பாக, கிளவுட் (cloud) தொழில்நுட்பம் தொடர்பாக ஒப்பந்த காலம் அதிகரித்து வருவதைச் சொல்லலாம்.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் லாபம்...
இந்திய ஐ.டி நிறுவனங்கள் தங்களின் வருவாயில் 50% தொகையை அமெரிக்க சந்தையிலிருந்து பெற்று வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என்பது பாசிட்டிவ்வான விஷயமாக இந்திய ஐ.டி நிறுவனங்களுக்கு இருக்கிறது. ரூபாய் மதிப்புக் குறைவதால், பங்கின் இ.பி.எஸ் (EPS - Earnings Per Share) மற்றும் பங்கு விலை மேம்படும். ரூபாயின் ஒவ்வொரு 1% வீழ்ச்சியும் இ.பி.எஸ்ஸின் மதிப்பை 1.5 - 2.5% வரை அதிகரிக்க உதவும்.

ஐ.டி இ.டி.எஃப்
ஐ.டி துறை சார்ந்த ஒரு சில நிறுவனப் பங்குகளில் நேரடி யாக முதலீடு செய்வதைவிட ஐ.டி நிறுவனப் பங்குகளின் தொகுப்பில் முதலீடு செய்வது ரிஸ்க்கைக் குறைப்பதுடன் லாபகரமாகவும் இருக்கும். உதாரணமாக, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஐ.டி இ.டி.எஃப் திட்டமானது, நிஃப்டி ஐ.டி இண்டெக்ஸைப் பின்பற்றி என்.எஸ்.இ-யில் பட்டியலிடப் பட்டுள்ள 10 இந்திய ஐ.டி நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்கிறது.
பன்முக முதலீட்டுக் கலவை
இந்த நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நெட் வொர்க்கிங் உள்கட்டமைப்பு, மென்பொருள் மேம்பாடு, வன் பொருள், தகவல் தொழில்நுட்ப பணிகளுக்கான உதவி வேலை கள் மற்றும் பராமரிப்பு, மென் பொருள் பயிற்சி போன்ற பல்வேறு வணிகங்களில் ஈடு பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் ஐ.டி இ.டி.எஃப்பில் இடம்பெறு வதால், அது பன்முக முதலீட்டுக் கலவையை நமக்கு அளிக்கின்றன.எனவே, நீங்கள் தகவல் தொழில் நுட்ப நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்பவராக இருந்தால், ஐ.டி இ.டி.எஃப் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். அதே நேரத்தில், ஓர் எச்சரிக்கை. உங்களின் முதலீட்டுக் காலம் குறைந்தது மூன்று ஆண்டுகள், அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் மட்டுமே ஐ.டி இ.டி.எஃப்-களில் முதலீடு செய்ய வேண்டும்.
இது ஒரு துறை சார்ந்த இ.டி.எஃப் என்பதால், குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கம் இருக்கலாம் என்பதையும் மறக்கக் கூடாது!