Published:Updated:

கிசான் விகாஸ் பத்திரம்... உங்கள் முதலீடு இரு மடங்கு ஆக வேண்டுமா?

சேமிப்பும் முதலீடும்
பிரீமியம் ஸ்டோரி
சேமிப்பும் முதலீடும்

சேமிப்பும் முதலீடும் - 10

கிசான் விகாஸ் பத்திரம்... உங்கள் முதலீடு இரு மடங்கு ஆக வேண்டுமா?

சேமிப்பும் முதலீடும் - 10

Published:Updated:
சேமிப்பும் முதலீடும்
பிரீமியம் ஸ்டோரி
சேமிப்பும் முதலீடும்

முதலீட்டாளர்களுக்கு அவர் களின் முதலீட்டுத் தொகை இரு மடங்காக உயர்ந்தால், எப்போதும் மகிழ்ச்சிதான். அது போன்ற ஒரு திட்டம்தான் கிசான் விகாஸ் பத்திர (Kisan Vikas Patra -KVP) முதலீடு ஆகும்.

சிவகாசி மணிகண்டன் 
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன் நிதி ஆலோசகர், Aismoney.com

இது நம்மவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான முதலீட்டுத் திட்டமாகும். தற்போதைய நிலையில், இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீடானது 124 மாதங்களில் அதாவது, 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் இரு மடங்காக அதிகரிக்கும்.

இந்தத் திட்டத்தை மத்திய அரசு இடையில் நிறுத்தி வைத்திருந்தது. அதன்பிறகு, 2014 நவம்பர் மாதத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் திரட்டப்படும் தொகை விவசாயிகளின் நலத் திட்டங் களுக்குப் பயன்படுத்தப்படும் என்பது இதன் சிறப்பாகும்.

மூலதனத்துக்கு முழு பாதுகாப்பு...

கே.வி.பி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்தத் திட்டத்தில் மூலதனம் மற்றும் வட்டிக்கு முழுப் பாதுகாப்பு இருக்கிறது. காரணம், இது மத்திய அரசின் திட்டமாகும்.

மேலும், இந்தத் திட்டத்தில் இப்போது ஆண்டுக்கு 6.9% வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி ஆண்டுக்கு ஒரு முறை முதலீட்டுடன் சேர்க்கப்படும்.

தற்போதைய வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி சுமார் 5-5.5 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது இது நல்ல வட்டி வருமானம் என்றுதான் சொல்ல வேண்டும். நம் நாட்டில் சராசரி பணவீக்க விகிதம் 5-5.5 சதவிகிதமாக இருக்கும் நிலையில், இந்த 6.9% வட்டி வருமானம் என்பது ஓரளவுக்கு நல்ல வருமானம் என்று சொல்லலாம்.

கிசான் விகாஸ் பத்திரம்... உங்கள் முதலீடு இரு மடங்கு ஆக வேண்டுமா?

முதலீட்டின் முக்கிய நோக்கம்...

ஏற்கெனவே சொன்னதுபோல, இந்த கிசான் விகாஸ் பத்திர முதலீட்டின் முக்கிய நோக்கம், பணத்தை இரு மடங்காக அதிகரிப்பதாகும். அதாவது, இத்தனை ஆண்டுகளில் முதலீடு இரு மடங்காக அதிகரிக்கும் என உத்தரவாதம் இருப்பது இந்த முதலீட்டுத் திட்டத்தின் முக்கிய கவர்ச்சிகரமான அம்சமாக இருக்கிறது.

மேலும், அசல் மற்றும் வட்டிக்கு மத்திய அரசின் மூலம் கிடைக்கும் முழுப் பாதுகாப்பும் பலரை இதில் முதலீடு செய்ய வைத்திருக்கிறது. வங்கியில் செய்யப்படும் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு அசல் மற்றும் வட்டிக்கு ரூ.5 லட்சம் வரைக்கும்தான் உத்தரவாதம் இருக்கிறது. ஆனால், இந்தத் திட்டத்தில் ஒருவர் எவ்வளவு தொகை முதலீடு செய்தாலும், அதற்கு மத்திய அரசின் முழுப் பாதுகாப்பு உள்ளது.

யாருக்கு ஏற்ற முதலீடு?

முதலீடு மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பாத குறைந்த மற்றும் நடுத்தர வருமானப் பிரிவினருக்கு ஏற்றத் திட்டமாக இது இருக்கிறது. மேலும், மொத்த முதலீடு (Lump-sum) செய்பவர்களுக்கு ஏற்றத் திட்டமாக இது உள்ளது. இந்தத் திட்டத்தில் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். வயது வரம்பு எதுவும் கிடையாது.

தனிநபர்கள், இந்துக் கூட்டுக் குடும்பத்தினர் முதலீடு செய்ய முடியும். மைனர்கள் தங்கள் பெற்றோர் அல்லது காப்பாளர் மூலம் முதலீடு செய்ய முடியும்.

நாமினி நியமன வசதி...

இதில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 ஆகும். அதன் ரூ.100-ன் மடங்குகளில் முதலீட்டை அதிகரித்துக் கொள்ளலாம். உச்ச வரம்பு என்று எதுவும் இல்லை.

இந்தியாவிலுள்ள அனைத்துத் தபால் அலுவலகங்களிலும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதற்கென இருக்கும் பிரத்யேகப் படிவத்தை நிரப்பி கொடுக்க வேண்டும். ஆதார் மற்றும் பான் எண்கள் மற்றும் அவற்றின் ஆவணங்களின் நகல்கள் தேவைப்படும். முதலீடு செய்யச் செல்லும் போது, இந்த ஆவணங்களின் ஒஜிரினலை எடுத்துச் செல்வது அவசியமாகும்.

இந்தத் திட்டம் பெரும்பாலானோருக்குச் சென்று சேர வேண்டும் என்பதற்காகப் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் குறிப்பாக, எஸ்.பி.ஐ, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, கனரா பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், ஹெச்.டி.எஃப்.சி பேங்க் போன்ற வங்கிகளில் இந்தத் திட்டம் உள்ளது. வங்கிகளின் மூலம் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டாலும் முதலீடு மற்றும் வட்டி வருமானத்துக்கு முழுமையாக மத்திய அரசு உத்தரவாதம் அளிக்கிறது.

கிசான் விகாஸ் பத்திரத்தில் ஜாயின்ட்டாகவும் முதலீடு செய்ய முடியும். அதிகபட்சம் மூன்று பேர் சேர்ந்து முதலீடு செய்யலாம். ஒருவரே எத்தனை கணக்குகளை வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தின் கீழ் தொடங்கிக்கொள்ளலாம்.

மாற்று முதலீடுகள்...

முதலீடு மற்றும் வருமானத்தில் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கு, பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் எதிர்பார்ப்பவர்களுக்கு கிசான் விகாஸ் பத்திர முதலீடு ஏற்றதில்லை.

நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள், ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். இவற்றின் மூலம் நீண்ட காலத்தில் நல்ல வருமானம் பெற முடியும். மேலும், வரிக்கு பிந்தைய நிலையில் வருமானமும் அதிகமாக இருக்கும்.

மேலும், ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள் கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்யலாம்.

மாதம்தோறும் குறிப்பிட்டத் தொகையை முதலீடு செய்ய விருப்பும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு கிசான் விகாஸ் பத்திர முதலீடு ஏற்றதல்ல. அது போன்றவர்கள் கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் முதலீடு செய்து வரலாம். ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள் ஹைபிரிட் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வரலாம்.

வருமான வரி

இந்த முதலீட்டுக்கு வரிச் சலுகை எதுவும் கிடையாது. வட்டி வருமானத்துக்கு வரி உண்டு. ஒருவரின் இதர வருமானமாக இந்த வட்டி வருமானம் சேர்க்கப்பட்டு, அவரவர் அடிப்படை வரி வரம்புக்கு ஏற்ப (பழைய வரி முறையில் 5%, 20% மற்றும் 30% புதிய வரி முறையில் 5%, 10%, 15%, 20%, 25% மற்றும் 30%) வரிக் கட்ட வேண்டும். மூலத்தில் வரிப் பிடித்தம் (TDS) செய்ய மாட்டார்கள்.

முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பாத, ஆனால், பத்து ஆண்டுக் காலத்தில் முதலீட்டை இரு மடங்காக அதிகரித்து பெற வேண்டும் என்கிறவர்களுக்கு ஏற்ற கவர்ச்சிகரமான திட்டமாக கிசான் விகாஸ் பத்திரம் இருக்கிறது. இந்தத் திட்டத்தில் நீங்களும் சேர்ந்து பயன் பெற நினைத்தால், தாராளமாக இணைந்துகொள்ளலாம்.

கிசான் விகாஸ்... கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!

* கிசான் விகாஸ் முதலீட்டுக்கான வட்டி விகிதம், காலாண்டுக்குக்கு ஒரு முறை மாற்றத்துக்கு உள்ளாகக்கூடும். 2020 ஜனவரி – மார்ச் காலாண்டில் வட்டி விகிதம் 7.6 சதவிகிதமாக இருந்தது. அது அடுத்த காலாண்டில் 6.9 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. இப்போது வரைக்கும் அதே வட்டி விகிதம் தொடர்கிறது. அடுத்த வட்டி விகித மாற்றம் 2022 ஏப்ரல் மாதத்தில் நடக்கலாம்.

* முதலீட்டை ஆரம்பிக்கும்போது என்ன வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டதோ, அந்த வட்டி முதிர்வு வரைக்கும் வழங்கப்படுவது இதன் சிறப்பு அம்சமாகும்.

* நிபந்தனைக்கு உட்பட்டு இந்த முதலீட்டிலுருந்து கடன் வாங்கிக் கொள்ளலாம். மேலும், இடையில் முன்கூட்டியே பணத்தை எடுக்க முடியும். இந்த முதலீட்டின் காலம் 124 மாதங்கள் என்றாலும், குறைந்தபட்ச லாக்இன் பீரியட் 30 மாதங்களாகும். அதன் பிறகு அபராதத்துடன் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.

* ஒருவர் பெயரிலிருந்து இன்னொருவர் பெயருக்கு நிபந்தனைக்கு உட்பட்டு, எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியும்.

* பாஸ் புக் தொலைந்துவிட்டது எனில், புது பாஸ் புத்தகம் பெற ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும், நாமினியை ரத்து செய்ய அல்லது மாற்ற ரூ.50 கட்டணம் இருக்கிறது.

* இந்தியாவிலுள்ள தபால் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் இந்த முதலீட்டு ஆவணத்தைச் சமர்ப்பித்து பணமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism