
முதலீடு
உலக அளவிலான பொருளாதார மந்த நிலை, அதிக பணவீக்க விகிதம், கடனுக்கான அதிக வட்டி, இன்னும் முடிவுக்கு வராத ரஷ்யா - உக்ரைன் போர் போன்றவற்றால் பங்குச் சந்தை முதலீடுகள் அதிக லாபகரமாக இருக்காது எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலீட் டாளர்கள் அவர்களின் பணத்தைப் பல்வேறு சொத்து (Multi - Asset) பிரிவுகளில் பிரித்து முதலீடு செய்தால்தான் லாபம் ஈட்ட முடியும்.

முதலீட்டுக் கலவை...
முக்கியமான சொத்துப் பிரிவுகளாக பங்குச் சந்தை, கடன் சந்தை, தங்கம் ஆகியவை உள்ளன. இங்கே பங்குச் சந்தை முதலீடுகள் என்பது நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளை யும் கடன் சந்தை முதலீடுகள் என்பது ஃபிக்ஸட் டெபாசிட், கடன் மியூச்சுவல் ஃபண்டு களையும் குறிக்கும்.
தங்கத்தில் முதலீடு செய்யும்போது ஆபரண நகைகள் மற்றும் தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகளை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. காரணம், அவற்றுக்கு செய்கூலி, சேதாரம் (8 - 20% மற்றும் ஜி.எஸ்.டி (3%) வரும். தங்கத்தை விற்று பணமாக்கும்போது இவை இழப்பாக இருக்கும். அந்த வகையில் டிஜிட்டல் தங்க முதலீடுகளான கோல்டு இ.டி.எஃப் மற்றும் கோல்டு சேவிங்ஸ் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.

தற்போதைய நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு உட்பட்ட குறுகிய காலத் தேவைக்கு ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் கடன் ஃபண்டுகளில் பாதுகாப்பாக முதலீடு செய்ய அறிவுறுத்தப் படுகிறார்கள். காரணம், ஃபிக்ஸட் டெபாசிட்களுக் கான வட்டி மற்றும் கடன் பத்திரங்களுக்கான வட்டி உயர்வு அண்மைக் காலத்தில் மிகவும் அதிகரித்திருப்ப தாகும்.
மூன்றாண்டு, ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட காலப் பணத் தேவைக்கு, முதலீட்டுத் தொகையைப் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் 50%, கடன் சந்தை சார்ந்த திட்டங் களில் 30%, தங்கத்தில் 20% எனப் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். இந்த அளவு 5% முன்பின் இருக்கலாம், தவறில்லை.
பொதுவாக, ஒரு முதலீட்டுக் கலவையில் ஒன்றுக்கு ஒன்று தொடர் பில்லாத முதலீட்டுத் திட்டங்கள் இடம் பெற்றிருக்கும்போது, ரிஸ்க் குறைவாக இருப்பதுடன் ஏற்ற இறக்கமும் குறைவாக இருக்கும்.
பொதுவாக, பங்குச் சந்தையின் செயல்பாட்டுக்கும் தங்கத்தின் விலை ஏற்றத்துக்கும் நேருக்கு மாறாக இருக்கும். அதாவது, பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கும்போது தங்கத்தின் விலை இறங்கும். உலக அளவில் பொருளாதார வளர்ச்சி குறைவு ஏற்படும்போது பங்குச் சந்தைகள் வீழ்ச்சியைச் சந்திக்கும். அந்தக் காலகட்டத்தில் தங்கத்தின் விலை வேகமாக ஏற்றம் காணும்.
அந்த வகையில், ஒரு முதலீட்டுக் கலவையில் இவை இரண்டும் கலந்திருக்கும்போது ஒன்று அதிக வருமானம் கொடுக்கவில்லை என்றாலும் மற்றொன்று, அதிக வருமானம் கொடுக்கும். உதாரணமாக, கடந்த 2022-ம் ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான நிஃப்டி 5.62% மட்டுமே அதிகரித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகள் 13.30% வருமானம் கொடுத் திருக்கின்றன.
மேலும், வரும் ஆண்டுகளில் எந்த முதலீட்டுப் பிரிவு அதிக வருமானம் தரும் என்பதை யாராலும் 100% சரியாகக் கணிக்க முடியாது. எனவே, முக்கியமான சொத்துப் பிரிவுகளில் பணத்தைப் பிரித்துப் போடுவது மூலம் நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைவிட சில சதவிகிதம் கூடுதலாக, அதாவது, ஆண்டுக்கு சராசரியாக சுமார் 12% வருமானத்தைப் பெற முடியும்.
மல்ட்டி அஸெட் ஃபண்டுகள்...
இப்படி ஒருவரால் சுயமாக சரியாகப் பணத்தைப் பிரித்து முதலீடு செய்ய இயலவில்லை எனில், அவர் நல்ல நிதி ஆலோசகரின் உதவியை நாடலாம். அல்லது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் இருக்கும் மல்ட்டி அஸெட் ஃபண்டுகளில் (Multi Asset Funds) முதலீடு செய்துவரலாம்.
மல்ட்டி அஸெட் ஃபண்டுகள் வழக்கமான பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டைவிடக் குறைவான் ரிஸ்க் மற்றும் குறைவான ஏற்ற இறக்கத்தைக் கொண்டதாகும்.
மல்ட்டி அஸெட் ஃபண்டுகளில் முதலீட்டாளர் களிடமிருந்து திரட்டப்படும் பணம், பங்குச் சந்தை, கடன் சந்தை, தங்கம் ஆகியவற்றில் குறைந்தபட்சம் 10% முதலீடு செய்யப்படும். சில சமயங்களில் தங்கத்துக்குப் பதிலாக வெள்ளியிலும் முதலீடு செய்யப்படும் அல்லது தங்கம், வெள்ளி என இரண்டிலும் கலந்துகூட முதலீடு செய்யப்படும்.
வருமானம் எப்படி?
மல்ட்டி அஸெட் ஃபண்டுகளில் டாப் ஃபண்டுகளின் வருமானம், 2023 ஜனவரி 12-ம் தேதி நிலவரப்படி கடந்த பத்து ஆண்டுகளில் 10% முதல் 15 சதவிகிதமாக உள்ளது. இதுவே கடந்த ஐந்து ஆண்டுகளில் 9% - 13%, மூன்றாண்டுகளில் 12 - 20 சதவிகிதமாக உள்ளது.
ஐ.சி.சி.ஐ.சி புரூ. மல்ட்டி அஸெட் ஃபண்ட், கோட்டக் மல்ட்டி அஸெட் ஃபண்ட், குவான்ட் மல்ட்டி அஸெட் ஃபண்ட், ஏ.பி.எஸ்.எல் ஃபின் பிளானிங் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. அஸெட் அலொகேட்டர் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி மல்ட்டி அஸெட் ஃபண்ட் ஆகியவை டாப் ஃபண்டுகளாக உள்ளன.

வருமான வரி எப்படி..?
பொதுவாக, மல்ட்டி அஸெட் ஃபண்டுகளின் வருமானத் துக்குப் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள்போல வருமான வரி விதிக்கப்படும். இந்திய நிறுவனப் பங்குகளில் 65 சதவிகிதத்துக்கு மேல் முதலீடு செய்யப்பட்டிருக்கும் மல்ட்டி அஸெட் ஃபண்டுகள் ஈக்விட்டி ஃபண்டுகளாகக் கருதப்படும்.
இந்த ஃபண்டுகளின் யூனிட்டுகளை ஓராண்டுக்கு மேற்பட்ட நிலையில் விற்று லாபம் பார்க்கும்பட்சத்தில், நீண்ட கால ஆதாயத்துக்கு நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் வருமான வரி கிடையாது. அதற்கு மேற்படும் ஆதாயத்துக்கு 10% வரி கட்ட வேண்டும். இதுவே யூனிட்டுகளை ஓராண்டுக்குள் விற்று லாபம் பார்க்கும்பட்சத்தில், குறுகிய கால மூலதன ஆதாய வரியாக 15% கட்ட வேண்டும்.
யாருக்கு ஏற்றது?
மல்ட்டி அஸெட் ஃபண்டுகள் பெரும்பாலும், லாபத்துக்குக் குறைவான வருமான வரி கட்டும் விதமாக ஈக்விட்டி ஃபண்டுகளாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
அந்த வகையில், அவை சற்று ரிஸ்க் கொண்டவை ஆகும். எனவே, முதலீட்டில் ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்டவர்கள் மற்றும் முதலீட்டுக் காலம் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இருப் பவர்கள் மட்டுமே இந்த வகை ஃபண்டுகளில் பணத்தை போட வேண்டும்.
பிரித்து முதலீடு செய்வது...
பொதுவாக, பல சொத்து களில் பிரித்து முதலீடு செய்வதன் மூலம் நம் முதலீட்டை இழக்கும் அபாயத்தைக் குறைக்க முடியும். இப்படிப் பிரித்து செய்வது எப்படி என்று தெரியாதவர்கள், மல்ட்டி அஸெட் ஃபண்டுகளில் முதலீடு செய்து நீண்ட காலத்தில் நல்ல லாபம் பார்க்கலாம்!