உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நீங்கள் எதிர்பார்த்த நல்ல லாபம் இல்லாமல் இருக்கக்கூடும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் லாபம் குறைய அதாவது, ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் சரியாக செயல்படாமல் போக முக்கியமாக எட்டு காரணங்களைக் குறிப்பிடலாம். அவை என்னென்ன என்று பார்ப்போம்.

1. கடந்த கால செயல்திறன் அடிப்படையில் முதலீட்டைத் தேர்வு செய்திருப்பது..!
கடந்த கால வருமான செயல்பாட்டின் அடிப்படையில் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை முதலீட்டுக்குத் தேர்வு செய்வது என்பது மியூச்சுவல் ஃபண்ட் தேர்வு அடிப்படை முறைகளில் ஒன்றாக இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை அவற்றின் கடந்த கால வருமான செயல்திறன் அடிப்படையில் மதிப்பிடுவதில் தவறில்லை. இருந்தாலும், மதிப்பீடு செய்யப்பட்ட கடந்த காலம் எவ்வளவு காலமாக இருக்கிறது என்பதுதான் முக்கியமான கேள்வியாகும்.
ஆனால், ஒரு ஃபண்டை முதலீட்டுக்குத் தேர்வு செய்யும்போது கடந்த 6 மாதம், ஓராண்டு செயல்திறனை மட்டும் பார்க்காமல், அந்த ஃபண்டின் 3 ஆண்டு, 5 ஆண்டு, 8 ஆண்டு, 10 ஆண்டு வருமானச் செயல்பாடுகளையும் கவனிக்க வேண்டும்.
இந்தப் பல்வேறு கால கட்டங்களில் ஒரு ஃபண்ட் சிறப்பாகச் செயல்பட்டிருக் கிறது எனில், அது பல்வேறு பங்குச் சந்தை சுழற்சிகள் (ஈக்விட்டி ஃபண்டுகள்) மற்றும் வட்டி விகித ஏற்ற இறக்கங்களைச் (கடன் ஃபண்டுகள்) சமாளித்துச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது என்று அர்த்தம். சந்தை இறக்கங்களின்போது அதிக இறக்கத்தைச் சந்திக்காமலும், சந்தை ஏற்றத்தின்போது அதைவிட அதிக வருமானத்தையும் கொடுத்திருப்பது சிறந்த மற்றும் டாப் ஃபண்டுகளின் சிறப்பு இயல்புகளாகும்.
2. செலவு விகிதங்கள்
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செலவு விகிதம் (Expense Ratio ) என்று ஒன்று இருக்கும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் நிர்வாகக் கட்டணம், ஏஜென்ட் கமிஷன், அலுவலக செலவுகள், ஃபண்ட் மேனேஜர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் சம்பளம் மற்றும் விளம்பரச் செலவுகள் எல்லாம் சேர்த்து இந்தச் செலவு விகிதத்தில்தான் ஈடுகட்டப்படுகிறது. இந்த விகிதம் பொதுவாக 0.5% முதல் 2.5% வரை இருக்கும். கடன் ஃபண்டுகளுக்குக் குறை வாகவும் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளுக்கு அதிகமாகவும் இருக்கும்.
குறிப்பிட்ட ஃபண்ட் அதிக வருமானம் கொடுத்துவரும் நிலையில் இந்தச் செலவு விகிதம் பெரிய விஷயமல்ல. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட ஈக்விட்டி ஃபண்ட் ஆண்டுக்குச் சராசரியாக 20 சதவிகிதத்துக்குமேல் வருமானம் கொடுத்துவருகிறது. அதன் செலவு விகிதம் 2% என்கிறபோது முதலீட்டாளருக்கு ஆண்டுக்கு 18% வருமானம் கிடைப்பது நல்ல வருமானமே. இதுபோன்ற நிலையில் செலவு விகிதம் பற்றிப் பெரிதாகக் கவலைகொள்ளத் தேவையில்லை.
ஒரு ஈக்விட்டி ஃபண்ட் ஆண்டுக்கு 7% முதல் 8% வருமானம் கொடுக்கிறது. அதன் செலவு விகிதம் 2% எனில், முதலீட்டாளர் கவலைகொள்வது அவசியம். காரணம், செலவு விகிதம் 2% போக நிகர வருமானம் 5% முதல் 6 சதவிகிதமாகக் குறைந்துவிடும். வருமானம் குறைவு, செலவு விகிதம் அதிகம் என்கிறபட்சத்தில் அந்த ஃபண்டிலிருந்து வெளியேறி அதிக வருமானம் மற்றும் குறைவான செலவு விகிதம் / அதிக செலவு விகிதம் உள்ள ஃபண்டுகளில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.

3. சந்தையின் நிலையற்றத் தன்மை
ஒரு ஃபண்டின் கடந்த கால வருமானச் செயல்பாடுகளை அலசி ஆராய்ந்து நல்ல ஃபண்டைத் தேர்வு செய்திருந்தாலும், ஈக்விட்டி ஃபண்டாக இருக்கும்பட்சத்தில் பங்குச் சந்தையின் சரிவு, கடன் ஃபண்டாக இருக்கும்போது வட்டி விகித மாற்றம் ஃபண்டுகளின் வருமானத்தைப் பாதிக்கும்.
உதாரணமாக, நிதி நெருக்கடி காரணமாகப் பங்குச் சந்தை வீழ்ச்சியைச் சந்தித்ததால், ஈக்விட்டி ஃபண்டுகளின் என்.ஏ.வி மதிப்பு குறையும்; வட்டி விகித உயர்வால் கடன் ஃபண்டுகளின் என்.ஏ.வி குறையும். அது போன்ற நேரங் களில் சிறந்த ஃபண்டுகளின் வருமானமும் குறையும். எனவே, என்.ஏ.வி மதிப்பு குறைந்திருக்கும் காலங்களில் எஸ்.ஐ.பி முத லீட்டை நிறுத்தாமல் தொடர்ந்து மேற்கொண்டு வருவது மற்றும் கூடுதல் முதலீட்டை மேற்கொள் வது மூலம் வருமானத்தை நீண்ட காலத்தில் அதிகரிக்க முடியும்.
4. ஃபண்ட் மேனேஜர்களின் செயல்பாடு
ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் வருமானம் என்பது அந்த ஃபண்டை நிர்வகிக்கும் ஃபண்ட் மேனேஜரைத்தான் முழுக்க முழுக்க சார்ந்திருக் கிறது. ஒரு ஃபண்டின் வெற்றி, தோல்விக்கு அவரே முழுக் காரணமாவார். பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப செயல்படுதல், பங்குகள் தேர்வு, வட்டி விகிதம் மாற்றக் கணிப்பு ஆகியவற்றை அவர் மேற்கொண்டு வருகிறார்.
தொடர்ந்து ஒரு ஃபண்ட் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது எனில், அந்த ஃபண்டின் மேனேஜர் சிறப்பானவர் மற்றும் திறமையானவர் ஆவார்.
ஒரு ஃபண்டில் ஃபண்ட் மேனேஜர்கள் அடிக்கடி மாறிக்கொண்டிருந்தால் நல்லதல்ல; அது ஆபத்தான அறிகுறியாகும். அடிக்கடி ஃபண்ட் மேனேஜர் மாறும்பட்சத்தில் அந்த ஃபண்ட் சிறப்பான வருமானத்தைக் கொடுக்காமல் போவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே, ஃபண்ட் மேனேஜர் மாறியதால், ஒரு ஃபண்டின் வருமானச் செயல்பாடு மாறினால் அந்த ஃபண்டிலிருந்து வெளியேறிவிடுவது புத்திசாலித்தனமாகும்.

5. மியூச்சுவல் ஃபண்ட் வகை
இலக்கு எதுவும் இல்லாமல் யாரோ சொன்னார்கள் என்பதற்காக ஏதோ ஒரு ஃபண்டில் முதலீடு செய்வதை சிலர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தேவை குறுகிய காலமாக இருந்தால் கடன் ஃபண்டுகள், நடுத்தரக் கால தேவை என்றால் ஹைபிரிட் ஃபண்டுகள், நீண்ட கால தேவை எனில், ஈக்விட்டி ஃபண்டுகள் முதலீடு என்கிறபோது முதலீட்டில் இழப்புக்கு அதிக வாய்ப்பில்லை.
அதே போல், குறியீடுகளைப் பின்பற்றி முதலீடு செய்யும் இண்டெக்ஸ் ஃபண்டுகள், இ.டி.எஃப்கள் போன்ற பாசிவ் முதலீடு மற்றும் ஃபண்ட் மேனேஜர்கள் தீவிரமாகக் கவனித்துச் செயல்படும் ஆக்டிவ் முதலீடு இவை இரண்டுக்குமான லாபம் வேறுபடும். இந்தியாவைப் பொறுத்தவரையில் தற்போதைய நிலையில் பாசிவ் ஃபண்டுகளைவிட ஆக்டிவ் ஃபண்டுகள்தான் அதிக லாபம் ஈட்டி வருகின்றன.
6. ஃபண்ட் நிர்வகிக்கும் தொகை
ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் நிர்வகிக்கப் பட்டு வரும் முதலீட்டுத் தொகையை (Fund Size - AUM) சார்ந்தும் அதன் வருமானம் இருக்கிறது. செபியின் விதிமுறைப்படி, ஒரு திட்டத்தில் நிர்வகிக்கப்படும் தொகை அதிகரிக்க அதிகரிக்க அதன் செலவு விகிதம் குறைவாக இருக்க வேண்டும். அந்த வகையில் நிர்வகிக்கப்படும் தொகை குறைவாக இருக்கும் ஃபண்டில் செலவு விகிதம் அதிகமாக இருக்கும். அந்த நிலையில் அந்த ஃபண்ட் நல்ல வருமானம் கொடுக்காத நிலையில் செலவு விகிதம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் முதலீட்டாளரின் வருமானம் குறைந்துவிடும். இந்த விஷயத்தையும் முதலீட்டாளர் கவனிக்க வேண்டும்.
7. வருமானத்தைக் குறைக்கும் டிவிடெண்ட் வரி
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் வழங்கப்படும் டிவிடெண்ட்டுக்கு இப்போது முதலீட்டாளர்கள் வரி கட்ட வேண்டும். இந்த வரியானது ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப இருக்கும். எனவே, மியூச் சுவல் ஃபண்ட் முதலீட்டில் டிவி டெண்ட் ஆப்ஷனுக்கு பதிலாக குரோத் ஆப்ஷனைத் தேர்வு செய்வது மூலம் டிவிடெண்ட் வரியைத் தவிர்க்க முடியும். பணம் தேவைப்பட்டால் ஈக்விட்டி ஃபண்டுகள் எனில், ஓராண் டுக்கு பிறகும் கடன் ஃபண்டுகள் என்றால் மூன்றாண்டுகளுக்குப் பிறகும் யூனிட்டுகளை விற்றால், கிடைக்கும் நீண்ட கால ஆதாயத்துக்கு குறைவான வரி அல்லது வரி கட்ட வேண்டியிருக் காது. அதனால், குரோத் ஆப்ஷனைத் தேர்வு செய்வது குறைவான வரி மற்றும் கூட்டு வளர்ச்சி (Power of Compounding) ஆகியவற்றால் லாப கரமாக இருக்கும்.
இனி இந்த 7 விஷயங்களையும் மனதில்கொண்டு முதலீடு செய்யுங்கள்!