நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பவர்கிரிட் ‘இன்விட்ஸ்’ ஃபண்டில் முதலீடு செய்யப்போறீங்களா..? கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீடு

I N V E S T M E N T

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய மானது உள்கட்டமைப்பு. ஆனால், தற்போது பல உள்கட்டமைப்புத் திட்டங்கள் வருமானம் ஈட்டுபவையாக இல்லாமல், கடனில் மூழ்கிக் கிடக்கின்றன. இது நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என்பதால், அந்தச் சொத்துகளைப் பங்குகளாக மாற்றி அவற்றை விற்பதன் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு கடனை அடைக்கவும், மேலும் அவற்றை முதலீடு செய்து அதில் வரும் லாபத்தைப் பங்கு தாரர்களுக்கு வழங்கவும் ஆரம்பிக்கப் பட்டவைதான் ‘இன்விட்ஸ்’ ஃபண்ட் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இன்வெஸ்ட் மென்ட் ட்ரஸ்ட் ஃபண்டுகள் (Infrastructure Investment Trust (InvITs).

முதலீடு
முதலீடு

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பவர்கிரிட் கார்ப்ப ரேஷன் ஆஃப் இந்தியா, வருகிற 29-ம் தேதி முதல் மே 3-ம் தேதிக்குள் ‘பவர்கிரிட் இன்விட்ஸ்’ ஐ.பி.ஓ-வை வெளியிடுகிறது.

இதில் பங்கு ஒன்றின் விலை ரூ.99 - 100 என நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. ஒருவர் குறைந்தபட்சம் ஒரு லாட் அதாவது 1,100 பங்குகளை வாங்க வேண்டும். இதில் முதலீடு செய்ய குறைந்தபட்சம் 1,10,000 ரூபாய் தேவை. இந்தப் புதிய பங்கு வெளியீடு குறித்து முதலீட்டு மேலாண்மை நிபுணர் வி.மாதவனிடம் பேசினோம். விரிவாக எடுத்துச் சொன்னார் அவர்.

‘‘இன்விட்ஸ்’ மற்றும் ‘ரெய்ட்ஸ்’ (Real Estate Investment Trust - REITS) என்ற இரு முதலீட்டு மாடல்களும் அண்மை யில்தான் இந்தியாவில் அறிமுக மானது. அதனால் இந்த முதலீட்டு மாடல்கள் குறித்து முதலீட்டாளர்கள் இன்னும் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வி.மாதவன்
வி.மாதவன்

பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம், ஒரு பொதுத்துறை நிறுவனம் என்பது மட்டுமல்லாமல், வங்கிகளைவிட சற்று அதிக டிவிடெண்ட் யீல்டு கொடுக்கிற நிறுவனமும் கூட. இந்த நிறுவனம்தான், தற்போது வெளியாகும் ‘பவர்கிரிட் இன்விட்’ ஐ.பி.ஓ-வுக்கு மேலாண்மை டிரஸ்டியாகச் செயல்படப் போகிறது. அதனால், முதலீட்டாளர்கள் இந்த இன்விட் ஐ.பி.ஓ-வை பரிசீலிக்கலாம்.

இந்த இன்விட் ஐ.பி.ஓ-வை மற்ற ஈக்விட்டி ஐ.பி.ஓ-வைப்போல முதலீட்டாளர்கள் நினைக்கக் கூடாது. பங்குச் சந்தையில் ஐ.பி.ஓ வந்த சில பங்குகள் முதல் நாளில் 40 - 50% லாபம் கிடைத்த மாதிரி எல்லாம் இதில் கிடைக்காது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இந்த இன்விட் ஐ.பி.ஓ கடன் சார்ந்த முதலீட்டுத் திட்டங்கள் போலவே செயல்படும். இந்த முதலீட்டின் மூலம் 7-9% வரை டிவிடெண்ட் யீல்டை எதிர்பார்க்கலாம். வங்கி சேமிப்புகள்போல, நிலையான வருமானம் தரக்கூடிய முதலீடாகவும் இது இருக்கும். இந்த முதலீட்டுக்கு அனைத்துத் தரச்சான்றிதழ் நிறுவனங்களும் ‘AAA’ குறியீட்டை வழங்கியிருக்கிறது பங்குச் சந்தை யில் ஏற்கெனவே முதலீடு செய்திருப் பவர்கள், இதில் ஒரு லாட் அல்லது இரண்டு லாட் வரை வாங்கி முதலீடு செய்யலாம்.

கடந்த மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் சொன்னது போல, ரெய்ட்ஸ் மற்றும் இன்விட் முதலீடுகள் மூலம் கிடைக்கும் டிவிடெண்ட்டுகளுக்கு வருமான வரி (TDS) கிடையாது.

இன்றைய நிலையில், நீண்ட காலத்தில் பாதுகாப்பான, அதே சமயம் நிலையான வருமானம் தரக்கூடிய முதலீட்டுத் திட்டங் களைத்தான் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த இன்விட் ஐ.பி.ஓ ஏற்றதாக இருக்கும் என்பதால், இந்த ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்ய பரிசீலிக்கலாம்’’ என்றார்.

பவர்கிரிட் இன்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்ய நினைப்பவர்கள், இந்த விஷயங்களையெல்லாம் கவனத்தில் கொள்வது நல்லது.