பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஓய்வுக்காலத் திட்டம்... அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்..!

ஓய்வுக்காலம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓய்வுக்காலம்

ஒளிமயமான ஓய்வுக்காலம்! சூப்பர் பிளானிங் 24

‘நீங்கள் ஏழையாகப் பிறந்திருந்தால் அது உங்கள் தவறு அல்ல. நீங்கள் ஏழையாக இறந்தால் அது நிச்சயமாக உங்கள் தவறு’ என்று பில்கேட்ஸ் சொன்னதை அனைவரும் கவனத்தில்கொள்வது கட்டாயம். இளமையில் பணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், வயதானால் அது இல்லாமல் இருக்க முடியாது. எனவே, அனைவரும் ஓய்வுக்காலத்துக்கான தொகுப்பு நிதியைச் சேர்ப்பது மிக அவசியம்.

என்.விஜயகுமார், நிர்வாக இயக்குநர்,
https://www.click4mf.com/
என்.விஜயகுமார், நிர்வாக இயக்குநர், https://www.click4mf.com/

மரம் நடுவதற்கு சிறந்த நேரம் நேற்று; இரண்டாவது சிறந்த நேரம் இன்று என்பதற் கேற்ப ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டை இன்னும் ஆரம்பிக்கவில்லை என்றால் அதை உடனே தொடங்குவது நல்லது.

ஓய்வு என்பது வேலையிலிருந்துதான் வாழ்க்கையிலிருந்து அல்ல. ஓய்வுக்காலம் என்பது ஒவ்வொருவருக்கும் இரண்டாவது வாழ்க்கையாகும். அதே நேரத்தில், பொறுப்பு களிலிருந்தும் ஓய்வு இல்லை. மூத்த குடிமகனாகக் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. குடும்ப உறுப்பினர்களை வழிநடத்திச் செல்லும் அதே நேரத்தில் சமூக வளர்ச்சிக்கு தங்களின் அறிவு, ஆற்றல், பணம் ஆகியவற்றைப் பயன்படுத்தி சேவை செய்ய முடியும்.

ஓய்வுக்காலத்துக்கு கட்டாயம் முதலீடு செய்யுங்கள். முந்தைய தலைமுறைக்கு, இந்தத் தலைமுறை வேறுபட்டது. கூட்டுக் குடும்பமுறை ஒழிந்து ஓய்வுக் காலத்தில் தனிக் குடும்பமாகத்தான் வாழ வேண்டியிருக்கும். பணி ஓய்வுக் காலத்தையொட்டி கட்டாயம் செய்ய வேண்டிய 10 முக்கிய விஷயங்கள் வருமாறு:

1. கடன்களைக் காலி செய்துவிடவும்..!

ஓய்வுக்காலத்துக்குமுன் அனைத்துக் கடன்களையும் அடைத்து விடவும். கடன்தான் ஒரு மனிதனுக்கு ஓய்வுக்காலத்தில் பெரும் சுமையாக இருக்கும். அதுவும் மாறுபடும் வட்டி விகிதத்தில் நீங்கள் கடன் வாங்கியிருக்கும் நிலையில், பணவீக்க விகிதத்தைக் கட்டுக்குள் கொண்டுவர ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ வட்டியை உயர்த்தி வரும்பட்சத்தில் வீட்டுக் கடன், தனிநபர் கடன், கார் கடன் என அனைத்து கடன்களுக்கான வட்டியும் சர்ரென்று ஏறிவிடும்.

உதாரணத்துக்கு, ஆறு மாதத்துக்குமுன் சுமார் 6.5 சதவிகிதத்தில் வீட்டுக் கடன் வாங்கியவர்கள் இப்போது கிட்டத்தட்ட 9% வட்டி கட்டி வருகிறார்கள். இது இன்னும் அதிகரிக்கும் நிலை காணப் படுகிறது எனவே, ஓய்வுக்காலத்துக்குமுன் வீட்டுக் கடன் உள்ளிட்ட அனைத்துக் கடன்களையும் அடைத்துவிடுவது அவசியமாகும்.

2. ஆயுள் காப்பீடு..!

பணி ஓய்வு பெற்றவர் அவரின் பெயரில் ஆண்டுச் செலவைப்போல, கிட்டத்தட்ட 10 - 15 மடங்கு தொகைக்கு இணையான கவரேஜ் கொண்ட ஆயுள் காப்பீடு பாலிசி வைத்திருப்பது நல்லது.

துணைவரை (கணவன்/மனைவி) நாமினி மற்றும் பயனாளியாகக் குறிப்பிட்டு இந்த பாலிசி எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதிக கவரேஜ் தேவை என்பதால், குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் கொடுக்கும் டேர்ம் பிளான் எடுத்திருப்பது நல்லது. இந்த ஆயுள் காப்பீடு பாலிசியை சுமார் 70 - 75 வயது வரை கவரேஜ் வரும் அளவுக்கு எடுப்பது நல்லது. இந்த டேர்ம் பாலிசியை இளம் வயதிலேயே வேலை பார்க்கும்போதே சுமார் 75 வயது வரைக்கும் கவரேஜ் தொடரும் வகையில் எடுப்பது லாபகரமாக இருக்கும். இல்லை எனில், வயதான பிறகு, எடுக்கும்பட்சத்தில் பிரீமியம் மிக அதிகமாக இருக்கும்; சில சமயங் களில் நோய் பாதிப்பு காரணமாக பாலிசி மறுக்கப்படுவதும் உண்டு.

ஓய்வுக்காலத் திட்டம்... அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்..!

3. மருத்துவக் காப்பீடு

உங்களுக்கும் துணைவருக்கும் போதிய தொகைக்கு மருத்துவக் காப்பீடு இருப்பது அவசியம். கவரேஜ் தொகை உங்களால் எவ்வளவு பிரீமியம் கட்ட முடியுமோ, அந்த அளவு ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம், ரூ.20 லட்சம் என அதிகமாக இருப்பது நல்லது.

இப்படி அதிக தொகைக்கு பிரீமியம் கட்ட இயலாதவர்கள். அடிப்படை பாலிசி ரூ.3 லட்சம் அல்லது ரூ.5 லட்சத்துக்கு எடுத்துக்கொண்டு, அதை வைத்து டாப்அப் பாலிசி எடுத்துக்கொள்ளலாம். இப்படி செய்யும்போது பிரீமிய செலவு குறைவாக இருக்கும்.

மருத்துவக் காப்பீடு போக தனியே சில லட்சங்களை அவசர மருத்துவச் செலவுக்கென எப்போதும் வங்கிச் சேமிப்புக் கணக்கில் வைத்திருப்பது அவசியமாகும்.

4. பணத்தை வேறு தேவைக்கு பயன்படுத்துதல்...

ஓய்வுக்கால முதலீட்டுத் தொகையைப் பணி ஓய்வுக் காலம் வரைக்கும் இடையில் எந்தத் தேவைக்கும் எடுத்து பயன்படுத்தாதீர்கள். அப்படி எடுத்தால் கூட்டு வளர்ச்சியின் (Power of Compounding) பலன் கிடைக்காமல்போகும்; குறை வான தொகுப்பு நிதிதான் கிடைக்கும்.

5. முதலீட்டை அதிகரிக்கவும்...

ஓய்வுக்காலத்துக்கென வேலைக்குச் சேர்ந்த உடனே குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய ஆரம்பித்துவிடுங்கள். சம்பளம் அதிகரிக்கும்போது ஓய்வுக்கால முதலீட்டுக்கான தொகையையும் அதிகரித்து வரவும். அப்போதுதான் அதிக தொகுப்பு நிதி சேர்ந்து பணி ஓய்வுக்காலம் ஒளிமயமாக இருக்கும்.

மேலும், அவசர மருத்துவச் செலவு, பிள்ளைகள் உயர்கல்வி, கல்யாணத்துக்கு ஓய்வுக்கால முதலீட்டைப் பயன்படுத்தி இருந்தால், இடையில் ஓய்வுக்கால முதலீட்டுத் தொகையை அதிகரித்து ஈடுகட்டுவது அவசியமாகும்.

மேலும், வீடு வாங்க, பிள்ளைகள் படிப்புக்கு ஓய்வுக்கால முதலீட்டை பயன்படுத்தாதீர்கள். அதற்கு என இருக்கும் குறைவான வட்டியிலான கடன்களைப் பயன்படுத்தவும்

6. ரிஸ்க்கைக் குறைக்க...

முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைக்க மற்றும் வருமானத்தைப் பெருக்க முதலீட்டை ஃபிக்ஸட் டெபாசிட்டு கள், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள், பங்கு சார்ந்த ஃபண்டுகள், தங்கம் எனப் பிரித்து மேற்கொள்ளுங்கள்.

மேலும், அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் டைனமிக் பாண்ட் ஃபண்ட் மற்றும் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகளில் பணத்தைப் போட்டு வைக்கலாம்.

ஓய்வுக்காலத் திட்டம்... அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்..!

7. பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்கள்...

பணி ஓய்வுக்காலத்திலும் வரவு- செலவுத் (Budget) திட்டத்தை பின்பற்றும்பட்சத்தில் தொகுப்பு நிதி நீண்ட காலத்துக்கு வரும்.

நவீன மருத்துவம் மற்றும் வாழ்க்கை முறை இந்தியர்களின் ஆயுளை 80 ஆண்டுகள், 85 ஆண்டு கள் என அதிகரித்திருக்கிறது. பணிபுரியும் ஆண்டுகளைவிட சும்மா இருந்து சாப்பிடும் ஆண்டுகள் அதிகமாக இருப்ப தால், தொகுப்பு நிதியானது குறைந்தது 25, 30 ஆண்டு களுக்காவது வர வேண்டும். எனவே, தொகுப்பு நிதியை சிக்கனமாகச் செலவு செய்வது அவசியமாகும்.

8. அவசரகால நிதி...

நாம் ஏற்கெனவே பலமுறை சொன்னதுபோல, அவசர கால நிதி, பணி ஓய்வுக்காலத்தில் இருப்பது அவசியமாகும். வேலை பார்க்கும் காலத்தில் அவசரகால நிதியாக மாதச் செலவைப்போல் சுமார் 3 - 6 மடங்கு தொகையை வைத்திருக்க வேண்டும். பணி ஓய்வுக் காலத்தில் குறைந்தது 12 மாதச் செலவு தொகையை அவசரகால தொகையாக வைத்திருப்பது கட்டாயமாகும்.

9. செலவுக்குக் கைகொடுக்கும் சொந்த வீடு...

சொந்த வீடு இருக்கிறது. செலவுக்குப் போதிய பணம் இல்லை, பண உதவி செய்ய யாரும் இல்லை எனில், அந்த வீட்டை தலைகீழ் அடமானம் என்கிற ரிவர்ஸ் மார்ட்கேஜ் திட்டத்தின்கீழ் வங்கிகள் மற்றும் வீட்டுவசதி நிறுவனத்தில் அடமானமாக வைத்துப் பணம் பெறலாம்.

மொத்த தொகை அல்லது குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மாதம்தோறும் தொகை பெறலாம். வீட்டின் மதிப்புக்கேற்ப 15, 20 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்று குடும்பச் செலவுகளை சுலபமாக சமாளிக்கலாம். இந்தத் தொகையைத் திரும்பக் கட்ட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இந்தத் தொகைக்கு வருமான வரியும் கிடையாது. இந்தத் திட்டம் பல முன்னணி வங்கிகளில் இருக்கிறது.

பொதுவாக, கணவன்- மனைவி இருவரின் மறைவுக்குப் பிறகு வங்கி அல்லது வீட்டுவசதி நிறுவனம் வீட்டை எடுத்துக் கொள்ளும்; வீட்டை பெற்று வங்கி அதற்குரிய அசல் மற்றும் வட்டித் தொகையை எடுத்துக்கொண்டு மீதியை சட்டப்படியான வாரிசுகளுக்குகொடுக்கும். வாரிசுகள் அசல் மற்றும் வட்டியைக் கட்டிவிட்டால், வங்கி வீட்டை அவர்கள் வசம் ஒப்படைத்துவிடும்.

10. நிதி ஆலோசகரின் உதவி...

பணி ஓய்வுக்காலத்துக்கான தொகுப்பு நிதியைச் சேர்க்க நிதி ஆலோசகரை நாடுவது போல், ஓய்வுக்கால நிதியை நிர்வகிக்கவும் நிதி ஆலோசகரின் உதவியை பெறுவது நல்லது. அப்போதுதான் தொகுப்பு நிதியை மிக நீண்ட காலத்துக்குக் கொண்டு செல்ல முடியும்.

இரண்டாவது வாழ்க்கையை இனிதே ஆரம்பிக்க இனிய வாழ்த்துகள்.

(நிறைவு பெற்றது)