பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

ஓய்வுக்கால நிதித் திட்டம்... அவசியம் அறிய வேண்டிய அம்சங்கள்..!

 ஓய்வுக்காலம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓய்வுக்காலம்

ஒளிமயமான ஓய்வுக்காலம்! சூப்பர் பிளானிங் - 23

நிம்மதியான ஓய்வுக் காலம் வேண்டும் என்பவர்கள் அவசியம் சில விஷயங்களை செய்வது நல்லதாகும்.

பொதுவாக, மாதச் சம்பளக்காரர்கள் மட்டுமே ஓய்வுக் காலத்துக்கு என பணம் சேர்க்க வேண்டும் என பலரும் நினைக்கிறார்கள். இது தவறான எண்ணம். சம்பளக்காரர்கள், சுயதொழில் செய்பவர்கள், வணிகம் செய்ப வர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஓய்வுக்காலத்துக்கென தனியே முதலீடு செய்து வருவது அவசியமாகும்.

என்.விஜயகுமார், நிர்வாக இயக்குநர்,
https://www.click4mf.com/
என்.விஜயகுமார், நிர்வாக இயக்குநர், https://www.click4mf.com/

சுயதொழில் செய்யும் ஒருவர் வயதான காலத்திலும் இளமைக் காலம் போல் ஓடியாடி தொழில் செய்ய முடியாது. எனவே, அவர் வயதான காலத்துக்கென ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேர்த்து வைத்திருந்தால் மட்டுமே நிம்மதியான ஓய்வுக்காலத்தை அனுபவிக்க முடியும். இல்லையெனில், செலவுக்கான பணத்துக்கு இன்னொருவரை நம்பி இருக்க வேண்டியிருக்கும்.

சுயதொழில் செய்பவர்களுக்குத் தொழில்நுட்ப மாற்ற ரிஸ்க் அதிகமாக இருக்கிறது. மேலும், அவர்களுக்கு பிராவிடன்ட் ஃபண்ட் சேமிப்பு என எதுவும் இருக்காது. அவர்களின் தொழில் எப்போது வேண்டுமானாலும் நஷ்டமடைய அல்லது காணாமல் போக வாய்ப்பிருக்கிறது. கோவிட் 19 பாதிப்பின்போது பல தொழில்கள் குறிப்பாக, மருத்துவம், பள்ளிக்கூடம் போன்றவற்றுக்கான தேவை குறைந்துபோயின. எனவே, சுயதொழில் செய்பவர்கள் தங்கள் ஓய்வுக்காலத்துக்கென முதலீடு செய்வது அவசியமாகும்.

நிதிச் சுதந்திரத் திட்டம்...

பலரும் ஓய்வுக்காலத் தேவைக்கான பணத்தை ஏனோதானோ எனச் சேர்க்கிறார்கள். ஆனால், அதன் மூலம் கிடைக்கும் தொகை, விலைவாசி உயர்வுக்கேற்ப ஓய்வுக்காலத்தில் தாராளமாகச் செலவு செய்யப் போதுமானதாக இருப்பதில்லை. எனவே, பணவீக்க விகிதத்தையும் கணக்கில் எடுத்துகொண்டு அதிக தொகுப்பு நிதியைச் சேர்க்க வேண்டும். மேலும், பணி ஓய்வுக்காலத்தில் செலவுக்குத் தேவையான தொகைக்கு யாரையும் சார்ந்திருக்காமல் நிதிச் சுதந்திரத்துடன் இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம். முக்கியமாக, கடன் எதுவும் இருக்கக் கூடாது.

ஓய்வுக்கால நிதித் திட்டம்... அவசியம் அறிய வேண்டிய அம்சங்கள்..!

நீண்ட கால ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி

இந்தியர்களின் சராசரி ஆயுள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நீரிழிவு, இருதயம் தொடர்புடைய நோய்களின் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. எனவே, நீண்ட கால ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தால் மட்டுமே வயதான காலத்தில் அதிக பிரீமியம் கட்டுவதைத் தவிர்க்க முடியும்.

பணிபுரியும் காலத்தில் பெரிய நிறுவனங்கள் என்கிறபோது குழு காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுத்துக் கொடுத்திருப்பார்கள். இந்த பாலிசியை பணி ஓய்வையொட்டி ஒருவர் தனிப்பட்ட பாலிசியாக மாற்றிக்கொள்ள முடியும். குழு பாலிசியில் யாருக்கு எல்லாம் கவரேஜ் இருந்ததோ, அந்த கவரேஜ் உடன் தனிப்பட்ட பாலிசியாக மாற்றிக் கொள்ள முடியும். இப்படிச் செய்யும்போது காத்திருப்புக் காலம் உள்ளிட்ட சலுகைகள் அப்படியே தொடரும்.

மேலும், மருத்துவச் செலவுக்கென தற்போது இருக்கும் நோய்ப் பாதிப்பு களுக்கேற்ப ஒரு தொகையை சேர்த்து வைத்திருப்பது நல்லது. பல நேரங்களில் பல மருத்துவச் செலவுகளுக்கு காப்பீட்டுத் திட்டம் மூலம் இழப்பீடு கிடைக்காது. மேலும், சிறிய மருத்துவச் செலவுகளுக்கு எல்லாம் மருத்துவக் காப்பீட்டு பாலிசியைப் பயன்படுத்துவது லாபகரமாக இருக்காது. மேலும், பெண்கள் குறிப்பாக, தாய் மற்றும் மனைவி இருக்கும்போது அவர்களுக்கு தீவிர நோய் பாதிப்புகளுக்கு கவரேஜ் அளிக்கும் (குறிப்பாக, இருதய நோய் மற்றும் புற்றுநோய்) பாதிப்புக்கு கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசி எடுத்துக்கொள் வது நல்லது. இல்லை எனில், ஏதாவது பாதிப்பு வந்தால், ஓய்வுக்கால சேமிப்பு நிதியில் பெரும்பகுதி கரைந்துவிடும் அபாயம் இருக்கிறது.

ஆயுள் காப்பீடு எப்போது அவசியம்?

சிலருக்குப் பணி ஓய்வு பெற்ற பிறகும் குடும்பக் கடமைகள் சில இருக்கும். உதாரணமாக, பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணம் ஆகியவற்றுக்கான நிதித் தேவைகளை நிறைவேற்றி வேண்டிவரும். அந்த வகையில், பணி ஓய்வுக்கென சேர்த்து வைத்திருக்கும் தொகை மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றைக் குடும்ப நிதித் தேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டியிருக்கும். இது போன்றவர்களுக்கு பணி ஓய்வுக்காலத்திலும் ஆயுள் காப்பீடு அவசியமாகிறது.

பெரிய குடும்பம், குறைவான சம்பளம் / சம்பாத்தியம் உள்ள வர்கள் பணி ஓய்வுக்குப் பிறகும் ஆயுள் காப்பீடு கவரேஜ் வருவது போல் பாலிசி எடுப்பது கட்டாயம் ஆகும். குறிப்பாக, 30, 35 வயது வாக்கில் அல்லது இதைவிட அதிக வயதில் திருமணம் செய்துகொள்பவர்கள் பணி ஓய்வுக்குப் பிறகும் 65, 70 வயது வரைக்கும் கவரேஜ் இருப்பது போல் ஆயுள் காப்பீடு பாலிசியை எடுத்துக்கொள்வது நல்லது. முழுக்க முழுக்க ஆயுள் காப்பீடு மட்டுமே அளிக்கும் டேர்ம் பிளான் எடுத்துக்கொண்டால் பிரீமியம் மிகக் குறைவாக இருக்கும். அது பெரும் நிதி சுமையாகத் தெரியாது. அதிக பிரீமியம் கட்டும் எண்டோவ் மென்ட் பாலிசிகள் இருந்தால், டேர்ம் பிளான் எடுத்துவிட்டு, அந்த எண்டோவ்மென்ட் பாலிசி களை சரண்டர் செய்வது நல்லது.அதே நேரத்தில், ஓய்வுக் காலத்தில் ஒருவரை சார்ந்து யாரும் இல்லை. மேலும், போதிய அளவுக்குத் தொகுப்பு நிதி மற்றும் செல்வம் இருக்கிறது எனில், ஆயுள் காப்பீடு அவசியமில்லை.

பணிக் காலத்திலேயே சொந்த வீடு...

வேலை பார்க்கும்போதே சொந்தமாக ஒரு வீடு வாங்கிவிடுவது நல்லது. இப்படிச் செய்வதன் மூலம் பல பலன்களை அனுபவிக்க முடியும். வாடகை பிரச்னை இருக்காது. அதனால் அடிக்கடி வீடு மாறத் தேவை இருக்காது.

அடுத்த மிக முக்கியமான பலன், சொந்த வீட்டைத் தலைகீழ் அடமானம் (Reverse martgage) திட்டத்தின்கீழ் வங்கிகள் மற்றும் வீட்டுவசதி நிறுவனத்தில் அடமான மாக வைத்து வீட்டின் மதிப்பில் மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஆயுளுக்கும் பெற்று குடும்பச் செலவுகளைச் சுலபமாக சமாளிக்கலாம். இந்தத் தொகைக்கு வருமான வரி கிடையாது. இந்தத் திட்டம் பல முன்னணி வங்கிகளில் இருக்கிறது.

வேலை பார்க்கும் காலத்தில் சொந்த வீடு வாங்க வாய்ப்பு இல்லாதவர்கள் மற்றும் அடிக்கடி வேலை செய்யும் ஊர் மாறும் அரசு ஊழியர்கள் கடைசிக் காலத்தில் எந்த ஊரில் செட்டிலாகப் போகிறார்கள் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு, அந்த ஊரில் மனை வாங்கிப் போடலாம். பணி ஓய்வுக் காலத்துக்கு சில ஆண்டுகளுக்குத் தேவைக்கேற்ப அந்த இடத்தில் வீடு கட்டிக்கொள்ளலாம்.

ஓய்வுக்கால நிதித் திட்டம்... அவசியம் அறிய வேண்டிய அம்சங்கள்..!

ஓய்வுக்கால முதலீடுகள்...

ஓய்வுக்காலத்துக்கு பணம் சேர்க்க பணியாளர் சேமநல நிதி (EPF), பொது சேமநல நிதி (PPF), பங்குச் சந்தை, பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட் (வீடு, மனை) என முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. இவற்றில் நீண்ட காலம் முதலீடு செய்து வர வேண்டும்; லாக்இன் காலம் நீண்டதாக இருக்கும். ஆனால், பணி ஓய்வுக்காலத்துக்கு அதிக ஆண்டுகள் இருக்கும்பட்சத்தில், அது பற்றி கவலைப்படத் தேவையில்லை. மேலும், இதில் பல முதலீடுகள் வருமான வரியைச் சேமிக்க உதவுவதுடன், செல்வம் சேர்க்கவும் பயன்படுவதாக இருக்கும்.

ஆனால், பணி ஓய்வுக்குப் பிறகு, செய்யப்படும் முதலீடுகள்மூலம் உடனடியாகவும் தொடர்ந்தும் வருமானம் வர வேண்டும். முதலீட்டில் ரிஸ்க்கும் அதிகமாக இருக்கக் கூடாது; நினைத்த நேரத்தில் முதலீட்டை எளிதில் பணமாக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்வது நல்லது. வயதானபின் மற்றும் பணி ஓய்வுக்காலத் தொகுப்பு நிதி தொடர்பான முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்கக் கூடாது. தொகுப்பு நிதியில் சுமார் 30% தொகையை அதிக ரிஸ்க் இல்லாத கன்சர்வேடிவ் ஹைபிரிட் ஃபண்ட் மற்றும் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்து வருவது மூலம் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியும்.

முதலீட்டுக் கலவை பகுப்பாய்வு...

ஓய்வுக்கால தொகுப்பு நிதியைச் சேர்ப்பதற்காக முதலீடு செய்துவந்த காலத்தில் முதலீட்டுக் கலவையை (Portfolio) எப்படிப் பகுப்பாய்வு செய்தீர்களோ, அதேபோல் ஓய்வுக்காலத் தொகுப்புக்கான நிதி முதலீட்டுக் கலவை யையும் ஆண்டுக்கு ஒரு முறையாவது பகுப்பாய்வு செய்து, தேவைப்பட்டால் முதலீட்டுத் திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். உதாரணமாக, ஒருவர் மூன்றாண்டு எஃப்.டியில் ஆண்டுக்கு 5% வட்டியில் பணத்தை முதலீடு செய்திருக்கிறார். இப்போது வட்டி 6.5 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது எனில், அந்த ஃபிக்ஸட் டெபாசிட் முதிர்வடைந்திருக்கும்பட்சத்தில், புதிய டெபாசிட்டைத் தொடங்கலாம். பழைய டெபாசிட்டை இடையில் எடுக்க அபராதம் எதுவும் இல்லை எனில், அதை நிறைவு செய்து, அதிக வட்டி கிடைக்கும் டெபாசிட்டுக்கு மாற்றுவது லாபகரமாக இருக்கும்.

(திட்டமிடல் தொடரும்)