நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

மூத்த குடிமக்களுக்கான முதலீடுகள்... சில சந்தேகங்கள்..!

மூத்த குடிமக்கள்...
பிரீமியம் ஸ்டோரி
News
மூத்த குடிமக்கள்...

முதலீடு

இன்றைக்கு மூத்த குடிமக்களில் பலருக்கும் இருக்கும் கவலை, கையில் இருக்கும் பணத்தைப் பாதுகாப்பாக எந்தத் திட்டத்தில் முதலீடு செய்து, ஓரளவு நல்ல வட்டி வருமானத்தைப் பெறுவது என்பதுதான். இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.

ப.முகைதீன் ஷேக் தாவூது
ப.முகைதீன் ஷேக் தாவூது

வங்கிகளிலும் அஞ்சலகங்களிலும் பல முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன. ஆனால், ஒவ்வொரு திட்டத்திலும் உள்ள சிறப்பம்சங்கள், நிபந்தனைகள் என்ன என்பது பற்றி விசாரித்து அறிய மூத்த குடிமக்கள் பலருக்கும் அச்சம்; அவர்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் சொல்ல அரசு ஊழியர் களில் பலருக்கும் நேரம் இருப்பதில்லை. எனவே, அரைகுறை புரிதலுடன் ஏதோ ஒரு திட்டத்தில் பணத்தைப் போட்டு விடுகிறார்கள் மூத்த குடிமக்கள். எனவே, மூத்த குடிமக்களுக்கு உதவும் பல்வேறு திட்டங்கள் பற்றி பார்ப்போம்.

மூத்த குடிமக்களுக்கான முதலீடுகள்... சில சந்தேகங்கள்..!

டேர்ம் டெபாசிட்....

எஸ்.பி.ஐ உள்ளிட்ட வங்கிகளில் டேர்ம் டெபாசிட் 7 நாள் முதல் 10 ஆண்டு வரை முதிர்வுக்காலம் கொண்டதாக உள்ளது. 13.12.2022 முதல் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம்...

7 முதல் 45 நாள்: 3.5%

46 முதல் 179 நாள்: 5%

180 முதல் 210 நாள்: 5.75%

211 நாள் முதல் ஓராண்டுக்குள்: 6.25%

1 வருடம் முதல் 2 வருடம்: 7.25%. இதுதான் அதிகபட்ச வட்டி விகிதம்.

முன்கூட்டியே பணம் எடுத்தால் (Premature Closure), முதலீடு எத்தனை நாள் (அல்லது வருடம்) டெபாசிட் செய்யப்பட்டதோ அதற்கான வட்டி விகிதத்தில் 0.5% குறையும் அல்லது ரூ.5 லட்சத்துக்கு உட்பட்ட டெபாசிட்டுக்கு ஒப்பந்த வட்டியில் 0.5% குறையும். ரூ.5 லட்சத்துக்கு மேற்பட்ட டெபாசிட்டுக்கு 1% குறையும். இவை இரண்டில் எது குறைவோ, அந்த விகிதத்தில் வட்டி கிடைக்கும். அபராத நிபந்தனைகள் மாறுதலுக்கு உட்பட்டவை. எனவே, டேர்ம் டெபாசிட்டைப் பொறுத்தவரை, குறுகிய காலத்துக்கு முதலீடு செய்வதைவிட, நீண்ட காலத்துக்கு முதலீடு செய்வதே சிறப்பு.

வங்கி டேர்ம் டெபாசிட் ஸ்கீம் 2006...

ஐந்து வருடம் வரை திரும்ப எடுக்க முடியாத (Lock in Period) இந்த வகை டேர்ம் டெபாசிட்டில் முதலீடு செய்த பணத்தை முன்கூட்டியே எடுக்க முடியாது. டெபாசிட் மீது கடன் பெற முடியாது. காப்புறுதி (Security) ஆகவும் பயன்படுத்த முடியாது. குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000, அதிகபட்ச முதலீடு ரூ.15,000. ஆனால், பிரிவு 80c-யின் கீழ் வரிச்சலுகை கிடைக்கும்.

அஞ்சலக 5 ஆண்டு டெபாசிட்...

மூத்த குடியினருக்கு சிறப்புச் சலுகை இல்லாத இந்தத் திட்டத்தில் தற்போதைய 5 ஆண்டு டெபாசிட்டுக்கு 7% வட்டி கிடைக்கும். குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000, அதிகபட்சம் கிடையாது. ஆறு மாதத்துக்குப் பிறகு, முன்கூட்டியே பணம் தேவைப்பட்டால் எடுக்கலாம். ஓராண்டுக்கு முன் பணத்தைத் திரும்ப எடுத்தால் 4% வட்டியும், ஓராண்டுக்குப் பின், முன்கூட்டியே பணத்தை எடுத்தால், 2% வட்டியும் குறையும். இந்த டெபாசிட் திட்டத்துக்கு வரிச் சலுகை கிடைக்கும்.

மாதாந்தர வருவாய் திட்டம்...

அஞ்சலக மாதாந்தர வருவாய் திட்டம் என்பது 5 ஆண்டு களுக்கானது. இதில் அதிகபட்சம் ரூ.4.5 லட்சம் டெபாசிட் செய்யலாம். இணைக் கணக்கில் அதிகபட்சம் ரூ.9 லட்சம் முதலீடு செய்யலாம். இதற்கான வட்டி விகிதம் 7.1%. மாதம்தோறும் வட்டி கிடைக்கும். வட்டியை வாங்காதபட்சத்தில், அந்த வட்டிக்கு வட்டி கிடையாது. இதில் டெபாசிட் செய்த தேதி யிலிருந்து ஓராண்டு முடியும் வரை பணத்தைத் திரும்ப எடுக்க முடியாது. ஓராண்டுக்குப் பிறகு, ஆனால் மூன்று ஆண்டு முடிவதற்குள் பணத்தைத் திரும்ப எடுத்தால், டெபாசிட் தொகையில் 2% கழித்துக்கொண்டு தரப்படும். டெபாசிட் செய்து 3 ஆண்டுக்குப் பிறகு, ஆனால் 5 ஆண்டுக்கு முன், பணத்தைத் திரும்ப எடுத்தால், முதலீட்டுத் தொகையில் 1% கழிக்கப்படும்.

தேசிய சேமிப்புப் பத்திரம் (NSC)...

நேஷனல் சேவிங்க்ஸ் சர்டிஃபிகேட் (Nashanal Savings Certificate - VIII issue) 5 ஆண்டுக் கால முதலீடாக உள்ளது. தற்போதைய வட்டி 7%. ஆண்டுக்கு ஒருமுறை கூட்டு வளர்ச்சி பெறும் திட்டம் இது. 1,000 ரூபாய்க்கு வாங்கப்படும் தேசிய சேமிப்புப் பத்திரம் 5 ஆண்டுக்குப் பின் ரூ.1,403ஆக அதிகரித் திருக்கும். இதில் ரூபாய் 100-ன் மடங்குகளில் எவ்வளவு வேண்டு மானாலும் முதலீடு செய்யலாம். முதலீட்டுக்கு வரம்பு இல்லை. தனியாக மட்டுமன்றி, மூவர் இணைந்து கூட்டாகவும் பத்திரம் வாங்கலாம். ரூ.1.5 லட்சம் வரையான டெபாசிட் தொகைக்கு வரிச் சலுகை உண்டு. இதில் முதலீடு செய்த பணத்தை முன்கூட்டியே திரும்ப எடுக்க முடியாது.

கிஷான் விகாஸ் பத்திரம் (KVP)

10 வருட முதிர்வுக்காலம் கொண்டது இந்த பத்திரம். வரிச் சலுகை இல்லை. குறைந்தபட்ச முதலீடு 1,000 ரூபாய். 100-ன் மடங்குகளில் வரம்பின்றி முதலீடு செய்யலாம். இதில் செய்யப்பட்ட முதலீடு 10 வருடத்தில் இரட்டிப்பாகும். டெபாசிட் செய்யப்பட்ட திலிருந்து 30 மாதம் கழித்து பணத்தைத் திரும்ப எடுக்கலாம். வட்டி விகிதம் 7.2%. பணத்தை முன்கூட்டியே எடுக்கும்பட்சத்தில், வட்டி விகிதம் குறைக்கப்படும்.

மிதவை வட்டி பத்திரங்கள்...

இந்திய அரசின் மிதவை வட்டி பத்திரங்கள் (Floating rate Bonds) கடன் பத்திரங் களாகும். இதற்கான வட்டி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அறிவிக்கப்படும். இந்த வட்டியானது தேசிய சேமிப்பு பத்திரம் தரும் வட்டியைவிட 0.35% அதிகமாக இருக்கும். அந்த வகையில் இதன் தற்போதைய வட்டி விகிதம் 7.35% ஆகும். இதில் குறைந்த பட்ச முதலீடு ரூ.1,000; அதிக பட்ச வரம்பு கிடையாது. ஆறு மாதத்துக்கு ஒரு முறை வட்டி கிடைக்கும். இதில் முதலீடு செய்த பணத்தை முன்கூட்டியே எடுக்கலாம். இதன் முதிர்வுக்காலம் 7 ஆண்டுகள். ஆனாலும் 60 - 70 வயதினர் 6 வருட முடிவிலும், 70 - 80 வயதினர் 5 வருட முடிவிலும் 80 வயது தாண்டி யவர்கள் 4 வருட முடிவிலும் பணத்தை முன்கூட்டியே எடுக்கலாம்.

எஸ்.பி.ஐ, ஐ.டி.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி போன்ற வங்கிகளில் பத்திரம் வாங்கலாம். ரூ.20,000 வரை ரொக்கமாகவும், ரூ.20,000-க்கு மேல் ரொக்கம் அல்லாத முறையிலும் தொகை செலுத்தலாம்.

சாவரின் கோல்டு பாண்ட்...

ரிசர்வ் வங்கி மூலம் இந்திய அரசு வெளியிடும் (Sovereign Gold Bond) தங்கப்பத்திரம் இரண்டு வகைகளில் வரு மானம் தரக்கூடியது. முதலீட் டுக்கு 2.5% வட்டி கிடைப்பது ஒரு வகை வருமானம். தங்கத் தின் விலை உயரும் போது அதற்கேற்ப முதிர்வுத் தொகை கிடைப்பது மற்றொரு வருமானம். இதில் கிடைக்கும் வட்டிக்கு வரி உண்டு. ஆனால், (TDS) வரிப் பிடித்தம் கிடையாது. தங்கம் விலை உயருவதால் கிடைக்கும் லாபத்துக்கு முதலீட்டு லாப வரி (Capital Gain Tax) கிடை யாது. இதில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் கிராம் ஒன்றுக்கு ரூ.50 மிச்சமாகும்.

இது தங்கத்துக்கு இணை யாக காகித வடிவில் உள்ள தங்கம். வங்கிகள், குறிப்பிட்ட அஞ்சலகங்களை அணுகி தங்கப்பத்திரம் வாங்கலாம். முதிர்வுக்காலம் 8 ஆண்டுகள். 1 கிராம் முதல் 4 கிலோ தங்கம் வரையான தொகையை முதலீடு செய்யலாம். 5 ஆண்டுக்குப் பின் பணத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ள லாம். அடுத்த தங்கப்பத்திர வெளியீடு 06.03.2023 முதல் 10.03.2023 வரை இருக்கும்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்...

60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கான திட்டம் இது. ஆனாலும் 55 வயது நிரம்பிய நிலையில் விருப்ப ஓய்வு பெற்றவரும், 50 வய தான ராணுவப் பணியினரும் இத்திட்டத்தில் உறுப்பினர் ஆகலாம். தற்போது திட்டத் தில் சேரக்கூடியவர்களுக்கு 8% வட்டி கிடைக்கும். குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000; அதிகபட்சம் ரூ.15 லட்சம். இந்த முதலீட்டுத் தொகை பிரிவு 80C-யின்கீழ் வரிச் சலுகை பெறும். இதில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டி பெறலாம். அதாவது ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மற்றும் டிசம்பர் மாத முதல் தேதியில் வட்டி கிடைக்கும். முதிர்வுக்காலம் 5 ஆண்டுகள். மேலும், 3 ஆண்டுகள் திட்டத்தில் நீடிக்கலாம். என்றாலும், ஓராண்டுக்குப் பிறகு எப்போது தேவைப்பட்டாலும் முன்கூட்டியே பணத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ளலாம். இரண்டு ஆண்டுக்கு முன்பே பணத்தை எடுத்தால், முதலீட்டுத் தொகையில் 1.5 சதவிகிதமும், 2 ஆண்டுக்குப் பின் முன்கூட்டியே பணத்தை எடுத்தால், 1% முதலீட்டுத் தொகையும் பிடித்தம் செய்து நிகர முதலீடு தரப்படும்.

முதிர்வுக்குப் பிறகே...

எந்த ஒரு முதலீட்டையும் முதிர்வடைந்த பிறகு பெறுவதே லாபகரமானது என்றாலும், நலிவடைந்த உடல்நிலை, அறுவை சிகிச்சை, விதவை/விவாகரத்தான மகளுக்கான தேவை, பேரக் குழந்தைகளுக்கான தேவை போன்ற காரணங்களால் அவசரத் தேவை ஏற்படலாம். தவிர்க்க முடியாத தேவைக்கு மட்டுமே முன்கூட்டியே பணத்தை எடுக்க வேண்டும். மூத்த குடிமக்கள் இந்த விஷயங்களை எல்லாம் அறிந்துகொண்டு முதலீடு செய்வது சிறப்பாக இருக்கும்.

ஸ்பெஷல் டேர்ம் டெபாசிட்!

மூத்த குடியினரின் வருவாயை அதிகரிக்க ஏதுவாக கூடுதலாக வட்டி தரும் திட்டம் இது. ‘எஸ்.பி.ஐ வி கேர் எஃப்.டி ஸ்கீம் (SBI We Care FD Senior Citizens) என்ற பெயரில் எஸ்.பி.ஐ வங்கியிலும், மற்ற வங்கிகளில் வெவ்வேறு பெயரிலும் நடைமுறையில் உள்ளது. 12.5.2020-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 31.03.2023 தேதியுடன் முடிவடைகிறது.

வழக்கமான வட்டியைவிட மூத்த குடிமக்களுக்கு (50+50) 100 புள்ளிகள் அதாவது, 1% கூடுதல் வட்டி வழங்குகிறது. மாதம்தோறுமோ காலாண்டுக்கு ஒரு முறையோ வட்டியைப் பெறலாம். இதன் முதிர்வுக்காலம் 5 ஆண்டுக்குமேல். முன்னதாக டெபாசிட் செய்து முதிர்வடையும் டெபாசிட்டையும் இந்தத் திட்டத்தின்கீழ் கொண்டு வரலாம். முதிர்வுக் காலத்துக்கு முன் பணத்தை எடுத்தால், 50 புள்ளிகள் வட்டி குறையும்.