பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பணத் தேவையை பூர்த்திசெய்யும் குறுகிய கால முதலீட்டுத் திட்டங்கள்..!

குறுகிய கால முதலீட்டுத் திட்டங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
குறுகிய கால முதலீட்டுத் திட்டங்கள்

பள்ளிக் கட்டணம் முதல் இன்ஷூரன்ஸ் பிரீமியம் வரை...

குறுகிய கால நிதி இலக்குகள் மற்றும் குறுகிய கால தேவைக்கான தொகையை அதற்கு ஏற்ற முதலீட்டுத் திட்டங்களில் போட்டு வைப்பது அவசியமாகும்.

சிவகாசி மணிகண்டன் 
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன்  நிதி ஆலோசகர், Aismoney.com

குறுகிய கால முதலீடு என்றால் என்ன?

சுமார் மூன்றாண்டுக்கு உட்பட்ட அனைத்து முதலீடுகளும் குறுகிய கால முதலீடுகள் (Short Term Investments) எனப்படும். பணம் இன்னும் ஓராண்டுக்குள் தேவை எனில், அதற்கு செய்யப் படும் முதலீட்டை மிகக் குறுகிய கால முதலீடு என்று சொல்லலாம்.

ஓராண்டு முதல் மூன்றாண்டு வரைக்குமான முதலீட்டை குறுகிய கால முதலீடு என்று சொல்லலாம். பிள்ளைகளின் ஆண்டு கல்விக் கட்டணம், இன்ஷூரன்ஸ் ஆண்டு பிரீமியம் கட்டுவது ஆகியவற்றை மிகக் குறுகிய கால இலக்கு என்று சொல்லலாம். வீட்டுக் கடன் வாங்குவதற்கான முன்பணம் திரட்ட இன்னும் மூன்று ஆண்டுகள் இருந்தால், அதைக் குறுகிய கால இலக்கு என்று குறிப்பிடலாம்.

இந்தக் குறுகிய கால இலக்குகளைப் பெரும் பாலும் தள்ளிப் போட முடியாது. அவசியமான இந்தத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பணம் சேர்த்து வைப்பது அவசியம்.

பலரும் கடன் வாங்கித்தான் இந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ஆனால், கடன் வாங்கி, இந்தத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது புத்திசாலித்தனம் இல்லை. அப்படி கடன் வாங்கினால், வட்டிக் காக மட்டுமே கணிசமான பணத்தை இழக்க வேண்டியிருக்கும்.

இந்த முதலீடுகளில் வருமானம் என்பதை விட மூலதனப் பாதுகாப்பு என்பதுதான் மிக முக்கியம் ஆகும். எனவே, முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்கக் கூடாது என்று நினைப்ப வர்களுக்கு இந்தக் குறுகிய கால திட்டங்கள் மிகப் பொருத்தமானதாக இருக்கும்.

பணத் தேவையை பூர்த்திசெய்யும்
குறுகிய கால முதலீட்டுத் திட்டங்கள்..!

குறுகிய கால முதலீட்டுக்கான திட்டங்கள்...

மிகக் குறுகிய காலத் தேவைகளுக்கு வங்கி சேமிப்புக் கணக்கு, வங்கி ஆர்.டி, லிக்விட் ஃபண்ட் ஆகியவற்றையும் குறுகிய காலத் தேவைகளுக்கு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட், என்.சி.டி, அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்ட், ஷார்ட் டேர்ம் ஃபண்ட், ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட் ஆகியவற்றையும் பயன்படுத்தி முதலீடு செய்யலாம். குறுகிய காலத் தேவைகளை நிறைவேற்ற உதவும் முதலீட்டுத் திட்டங்கள் ஒவ்வொன்றையும் பார்ப்போம்.

வங்கி சேமிப்புக் கணக்கு...

மிகவும் பாதுகாப்பாகவும் தேவைக்கு சுலபமாகவும் எடுத்து பயன்படுத்த குறுகிய காலத் தேவைகளுக்குப் பணத்தை வங்கி சேமிப்புக் கணக்கில் போட்டு வைக்கலாம். இதில் ஆண்டுக்கு சுமார் 2.7% முதல் 3.5% வரைக்கும் வட்டி வருமானம் கிடைக்கும்.

தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் ஆண்டுக்கு 4% வட்டி வருமானம் கிடைக்கிறது. இதுவே, ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் என்கிறபோது 5% முதல் 7% வரைகூட ஆண்டுக்கு வட்டி கிடைக்கும்.

வங்கி தொடர் சேமிப்பு...

வங்கிகளில் ஆறு மாதம் தொடங்கி பல ஆண்டுகள் வரைக்குமான தொடர் டெபாசிட் (Recurring deposit) திட்டம் இருக்கிறது. முதலீட்டில் ரிஸ்க் எதுவும் எடுக்க விரும் பாதவர்கள் மற்றும் நிலையான வருமானம் எதிர்பார்ப்பவர்கள் குறுகிய காலத் தேவைக்கு வங்கி ஆர்.டி-யில் முதலீடு செய்து வரலாம்.

முதலீட்டுக் காலத்தைப் பொறுத்து ஆண்டு 3.75% - 5.5% வட்டி கிடைக்கும். தபால் அலுவலக ஆர்.டி-யின் முதிர்வுக் காலம் ஐந்தாண்டுகள் என்பதால், அது குறுகிய கால முதலீட்டின்கீழ் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்...

வங்கிகள் குறைந்தபட்சம் 7 நாள்கள் தொடங்கி பல ஆண்டு கள் வரைக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை நடத்தி வருகின்றன. முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் இவற்றைக் கவனிக்கலாம். வங்கிகளை விட ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளில் வட்டி விகிதம் சற்று அதிகம் கிடைக்கும்.

வங்கி பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யும்போது, எவ்வளவு நாள் கழித்து பணம் தேவையோ, அந்தக் காலத்துக்கேற்ப முதிர்வுக் காலத்தைத் தேர்வு செய்யவும். ஆண்டுக்கு 5.4% முதல் 7% வரை வங்கியைப் பொறுத்து வட்டி வருமானம் கிடைக்கும்.

வங்கிகளைப் பொறுத்த வரை, அவற்றுக்குக் குறிப்பிட்ட காலத்துக்கு அதிக நிதி தேவைப் படும். அந்தக் குறிப்பிட்ட கால முதலீட்டுக்கு அதிக வட்டி வருமானம் தரும். அது போன்ற சிறப்பு எஃப்.டி-களில் முதலீடு செய்வதன்மூலம் கூடுதல் வட்டி வருமானம் கிடைக்கும்.

வங்கிகளின் சேமிப்புக் கணக்கு, ஆர்.டி, ஃபிக்ஸட் டெபாசிட் ஆகியவற்றில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு, வட்டி எல்லாம் சேர்த்து ஒரு வங்கியில் ஒருவருக்கு ரூ.5 லட்சம் வரைக்கும் டெபாசிட் இன்ஷூரன்ஸ் மூலம் உத்தர வாதம் இருக்கிறது.

தபால் அலுவலக டைம் டெபாசிட்...

தபால் அலுவலக டைம் டெபாசிட் 1, 2 மற்றும் 3 ஆண்டு முதிர்வுக் காலத்துடன் இருக் கின்றன. இந்த டெபாசிட்டுக்கு ஆண்டுக்கு 5.5% வட்டி வழங்கப் படுகிறது. குறுகிய கால முதலீட் டாளர்கள் தங்களுக்கேற்ற முதிர்வுக் காலத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

இது மத்திய அரசின் திட்டம் என்பதால், மூலதனம் மற்றும் வட்டிக்கு 100% உத்தரவாதம் இருக்கிறது.

பணத் தேவையை பூர்த்திசெய்யும்
குறுகிய கால முதலீட்டுத் திட்டங்கள்..!

கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்...

முதலீட்டுக் காலம் சுமார் மூன்று ஆண்டுகள் இருந்தால், இந்த முதிர்வுக் காலம் கொண்ட முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களின் கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்யலாம்.

இவற்றில் நடுத்தர அளவு ரிஸ்க் இருக்கிறது. இதிலும், தரக்குறியீடு மற்றும் நிறுவனத்தின் பாரம்பர்யம் பார்த்து முதலீடு செய்வது முக்கியமாகும்.

தற்போது ஆண்டுக்கு சுமார் 7.5 - 9% வட்டி வருமானம் கிடைக்கிறது.

என்.சி.டி முதலீடு...

பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் (Non Convertible Debentures - NCDs) குறுகிய கால முதலீட்டுக்கு ஏற்றவையாக இருக்கின்றன. இவற்றில் நடுத்தர அளவு ரிஸ்க் இருக்கிறது. அதிக தரக்குறியீடு பெற்ற பாரம்பர்யமான நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது அந்த ரிஸ்க் கணிச மாகக் குறைவதற்கு வாய்ப்புண்டு.

பொதுவாக, இவற்றின் முதலீட்டுக் காலம் 24 மாதங்களில் இருந்து தொடங்குகிறது. உங்களுக்கு எவ்வளவு காலத்துக்குப் பிறகு, பணம் தேவை என்பதைப் பொறுத்து அவ்வளவு முதிர்வுக் காலத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம். பல என்.சி.டி-கள் ஆண்டுக்கு சுமார் 8 - 9% வருமானம் கொடுக் கின்றன.

லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட்...

கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் ரிஸ்க் இல்லாத திட்டம் லிக்விட் ஃபண்ட் ஆகும். இந்த ஃபண்டு களில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம் சுமார் 90 நாள்களில் முதிர்வு அடையும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது.

இந்த ஃபண்டில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்; எப்போது வேண்டுமானாலும் பணத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ளலாம். முதலீடு செய்து ஒரு வாரத்துக்கு மேல் எடுக்கும்பட்சத்தில் வெளியேறும் கட்டணம் கிடையாது.

இந்த முதலீட்டில் பணமாக்குவது எளிது. யூனிட்டுகளை விற்று அதிகபட்சம் 24 மணி நேரத்துக்குள் பணம் உங்கள் வங்கிக் கணக்குக்கு வந்துவிடும். ஆன்லைன் அல்லது ஆப் வழியே யூனிட்டுகளை விற்கும்போது சுமார் 30 நிமிடத் துக்குள் பணம் கிடைத்துவிடும்.

ஒரு நாள் முதல் 90 நாள்கள் வரைக்கும் அதை விட சிறிது காலத்துக்கு இந்த ஃபண்டில் பணத்தை முதலீடு செய்து வைத்து செலவு செய்யலாம்.

தற்போதைய நிலையில், இதில் உள்ள டாப் ஃபண்டுகள் ஆண்டுக்கு 3.80 - 4.22% வருமானம் கொடுத்து வருகிறது.

பணத் தேவையை பூர்த்திசெய்யும்
குறுகிய கால முதலீட்டுத் திட்டங்கள்..!

ஷார்ட் டேர்ம் ஃபண்ட்...

நிதித் தேவை மற்றும் முதலீட்டுக் காலம் மூன்று மாதம் முதல் மூன்றாண்டு வரைக்கும் இருந்தால் கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

முதலீட்டுக் காலம் மூன்று மாதத்துக்கு மேலும் ஆறு மாதத்துக்கு உள்ளும் இருந்தால் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் (Ultra-Short Term Funds) முதலீடு செய்யலாம்.

இந்த ஃபண்ட் மூலம் ஆண்டுக்கு 4 - 5% வருமானம் எதிர்பார்க்கலாம். லிக்விட் ஃபண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஃபண்ட் சற்று ரிஸ்க் ஆனது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதலீட்டுக் காலம் சுமார் மூன்றாண்டு காலம் எனில், மீடியம் டூரேஷன் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்ட் மூலம் ஆண்டுக்கு 7 - 8% வருமானம் எதிர்பார்க்கலாம்.

ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட்...

இந்த ஃபண்டில் திரட்டப் படும் பணம் நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் கலந்து முதலீடு செய்யப்படும் ஹைபிரிட் ஃபண்ட் வகையாகும்.

நேரடி ஈக்விட்டி ஃபண்டை விட இதில் ரிஸ்க் குறைவாகும். இந்த ஃபண்டில் இரு வேறு பங்குச் சந்தைகளில் காணப் படும் பங்குகளின் விலை வித்தி யாசத்தின் அடிப்படையில் ஆர்பிட்ரேஜ் முறையில் லாபம் ஈட்டப்படும்.

டாப் ஃபண்டுகளின் வருமானம் ஓராண்டுக் காலத்தில் 7 - 8 சதவிகிதமாக உள்ளது. இந்த ஃபண்டுக்கான ஆதாயத் துக்கு ஈக்விட்டி ஃபண்டுக்கு உரிய வருமான வரியைக் கட்ட வேண்டும்.

பணத் தேவையை பூர்த்திசெய்யும்
குறுகிய கால முதலீட்டுத் திட்டங்கள்..!

வருமான வரி எப்படி?

வங்கி சேமிப்புக் கணக்கில் நிதி ஆண்டில் வட்டிக்கு ரூ.10,000 வரைக்கும் வரி கிடையாது. அதற்கு மேற்படும் வட்டிக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் (பழைய வரி வரம்பில் 5%, 20% மற்றும் 30%) வருகிறாரோ அதற்கேற்ப வரியைக் கட்ட வேண்டும்.

வங்கி ஆர்.டி மூலமான வட்டிக்கும் வரி உண்டு. ஒருவர் எந்த வரி வரம்பில் வருகி றோரோ, அதற்கேற்ப வரியைக் கட்ட வேண்டும்.

ஃபிக்ஸட் டெபாசிட்டை (வங்கி மற்றும் கார்ப்பரேட், தபால் அலுவலக டெபாசிட்) பொறுத்தவரையில் முதலீட்டுக் காலம் எவ்வளவாக இருந்தாலும் வட்டி வருமானத் துக்கு வரி உண்டு. வரி என்பது ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ அதற்கேற்ப வரியைக் கட்ட வேண்டும்.

சேமிப்பு கணக்கு மற்றும் எஃப்.டி கணக்கில் சேரும் வட்டிக்கு அந்த நிதி ஆண்டே வரியைக் கட்ட வேண்டும். எஃப்.டி வட்டிக்கு மூலத்தில் டி.டி.எஸ் வரி பிடிக்கப்படும்.

லிக்விட் ஃபண்ட், ஷார்ட் டேர்ம் ஃபண்ட் உள்ளிட்ட கடன் ஃபண்டுகளைப் பொறுத்த வரை, மூன்றாண்டுக்கு உட்பட்ட முதலீட்டு லாபத்துக்கு முதலீட்டாளர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வரியைக் கட்ட வேண்டும்.

மூன்றாண்டுக்கு மேற்பட்ட நிலையில், பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு 20% வரி கட்டினால் போதும். ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுடன் ஒப்பிடும்போது கடன் ஃபண்டுகள் மூன்றாண்டுக்கு மேற்பட்ட காலத்தில் வரிக்குப் பிந்தைய நிலையில் அதிக ஆதாயமாக இருக்கும். என்.சி.டி மூலமான வருமானத்துக்கு எஃப்.டி போல் வரி விதிக்கப் படுகிறது.

ஈக்விட்டி சேவிங் ஃபண்டில் ஈக்விட்டி ஃபண்டுக்குரிய வரி விதிக்கப்படும். ஓராண்டுக் குள் முதலீட்டாளர் எந்த வரிப் பிரிவில் வந்தாலும் அவர் ஆதாயத்துக்கு 15% வரியைக் கட்டினால் போதும். ஓராண்டுக்குப் பிறகு எனில், ஈக்விட்டி ஃபண்டைப் போல, நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1 லட்சம் வரைக்கும் வரியில்லை. அதற்கு மேற்படும் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு 10% வரி கட்ட வேண்டும்.

குறுகிய காலத் தேவைகளுக்கான முதலீட்டுத் திட்டங்களை விரிவாகக் கொடுத்திருக்கிறோம். பயன்படுத்தி லாபம் காணுங்கள்!