Published:Updated:

வரிச் சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்... யாருக்கு ஏற்றது?

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

முதலீடு

வரிச் சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்... யாருக்கு ஏற்றது?

முதலீடு

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

வருமான வரியை மிச்சப்படுத்த முதலீடு செய்யக்கூடிய திட்டங்களில் ஒன்றாக வங்கிகளின் ஐந்தாண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் இருக்கிறது. இந்தத் திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை கிடைக்கும்.

ஆர்.வெங்கடேஷ் 
நிறுவனர், 
www.gururamfinancialservices.com
ஆர்.வெங்கடேஷ்  நிறுவனர்,  www.gururamfinancialservices.com

இதில் செய்ய வேண்டிய குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை வங்கிக்கு வங்கி மாறுபடு கிறது. பொதுவாக, இந்தத் திட்டத்தில் செய்ய வேண்டிய குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000-ஆக உள்ளது. நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ-யில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000-ஆக இருக்கிறது. ஆனால், நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ-யில் குறைந்தபட்ச முதலீடு ரூ.10,000-ஆக இருக்கிறது.

இந்தத் திட்டத்தில் செய்ய வேண்டிய அதிகபட்ச முதலீட்டுக்கு உச்ச வரம்பு இல்லை. ஆனால், 80சி பிரிவின்கீழ் பி.எஃப் ஆயுள் காப்பீட்டு பிரீமியம், ஐந்தாண்டு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் எல்லாம் சேர்ந்து நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சத்துக்கு மட்டும்தான் வரிச் சலுகை கிடைக்கும்.

யார் முதலீடு செய்யலாம்?

தனிநபர்கள் மற்றும் இந்துக் கூட்டுக் குடும்பத்தினர், வருமான வரியைச் சேமிக்க இந்த வங்கி ஐந்தாண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

இந்த வரிச் சேமிப்பு கணக்கைக் கூட்டாக சேர்ந்து ஆரம்பிக்கலாம். ஆனால், யார் பெயர் முதலில் குறிப்பிடப்படுகிறதோ (First Holder), அவருக்கு மட்டும்தான் வரிச் சலுகை கிடைக்கும்.

இந்தத் திட்டத்தில் மொத்த முதலீடு மட்டுமே அனுமதிக்கப்படும். மாதம்தோறும் முதலீடு செய்ய அனுமதிக்கப் படாது. மொத்தமாக ஒரே நேரத்தில் முதலீடு செய்ய முடியாதவர்கள் அவ்வப்போது பிரித்து முதலீடு செய்து, அதன் மொத்தத் தொகையை வரிச் சலுகைக்காக க்ளெய்ம் செய்து கொள்ளலாம்.

பெரும்பாலான வங்கிகளில் இந்த வரிச் சேமிப்பு எஃப்.டி போடும் வசதி இருக்கிறது. நேரில் சென்று அல்லது ஆன்லைன் மூலம் முதலீடு செய்ய முடியும். ஏற்கெனவே வங்கியில் சேமிப்புக் கணக்கு இருக்கும்பட்சத்தில் வரிச் சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்டை உடனே தொடங்கிவிட முடியும். ஏற்கெனவே வங்கிக் கணக்கு இல்லாதவர்கள், பான் கார்டு, ஆதார் கார்டு இருந்தால் இந்த முதலீட்டை ஆரம்பித்து விடலாம். வங்கியின் ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு இந்த முதலீட்டை மாற்றிக்கொள்ள முடியும்.

வரிச் சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்... யாருக்கு ஏற்றது?

வட்டி வருமானம்...

இந்த டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டியை அவ்வப்போது பெற்றுக்கொள்ளும் (Non-cumulative) வசதியும் ஐந்தாண்டு முடிவில் மொத்தமாகப் பெற்றுக்கொள்ளும் (Cumulative) வசதியும் இருக்கிறது.

குமுலேடிவ் ஆப்ஷனில் வட்டித் தொகை மறுமுதலீடு செய்யப்பட்டு, அதற்கும் வட்டி கணக்கிட்டுத் தரப்படும். நான்-குமுலேடிவ் ஆப்ஷனில் அவ்வப்போது முதலீட்டா ளரின் தேவைக்கேற்ப மாதம், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுக்கு ஒரு முறை வட்டியைப் பெற்றுக்கொள்ள லாம்.

தற்போதைய நிலையில், இந்தத் திட்டத்தில் செய்யப் படும் டெபாசிட் தொகைக்கு ஆண்டுக்கு 6 - 6.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி சிறிது மாறுபடுகிறது. மூத்த குடிமக்களுக்கு 0.25% முதல் 0.5% கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. வங்கி ஊழியர்களுக்கு மற்றவர் களைவிடக் கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் ஆரம்பத் தில் என்ன வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறதோ, அது ஐந்தாண்டுகளுக்கும் வழங்கப் படும். இந்தத் திட்டத்தைப் பத்தாண்டுகளுக்கு வரை நீட்டித்துக்கொள்ள முடியும்.

வருமான வரி...

இந்த ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டிக்கு அந்தந்த ஆண்டே, வரிதாரர் எந்த வருமான வரி வரம்பில் (பழைய வரி முறையில் 5%, 20% மற்றும் 30%) வருகிறாரோ அதற்கேற்ப வரியைக் கட்டி விட வேண்டும். இதன்மூலம் கிடைக்கும் வட்டி வருமானத் துக்கு மூலத்தில் வரி (TDS) பிடிக்கப்படும்.

60 வயதுக்கு உட்டவர்களுக்கு நிதி ஆண்டில் வரிச் சேமிப்பு எஃப்.டி மூலம் ரூ.10,000-க்கு மேல் வட்டி வருமானம் வரும் பட்சத்தில் டி.டி.எஸ் பிடிக்கப் படும். இதுவே மூத்த குடிமக்கள் என்கிறபோது ரூ.50,000-க்கு மேற்படும்போது டி.டி.எஸ் பிடிக்கப்படும்.

இந்த டி.டி.எஸ் பிடித்தத்தைத் தவிர்க்க விரும்பினால், வரி வரம்புக்குள் வராத 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 15ஜி படிவத் தையும், 60 வயதுக்கு மேற் பட்டவர்கள் 15ஹெச் படிவத் தையும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பணத்தை டெபாசிட் போடும்போதே நிரப்பிக் கொடுத்துவிடுவது மிகவும் நல்லது.

அப்படி இல்லை எனில், வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது பிடிக்கப்பட்ட டி.டி.எஸ்ஸை ரீஃபண்டாக க்ளெய்ம் செய்துகொள்ள வேண்டும். தவிர, இந்தத் திட்டத்தில் பான் எண் தந்தால் 10% டி.டி.எஸ் பிடிக்கப்படும். பான் எண் தரவில்லை எனில், 20% டி.டி.எஸ் பிடிக்கப்படும்.

இந்தத் திட்டத்தில் குமுலேட்டிங் ஆப்ஷனைத் தேர்வு செய்யும்பட்சத்தில் ஐந்தாண்டு முதிர்வில் அதிக தொகை கிடைக்கும். பணமும் கூடுதலாக வளரும். எஃப்.டி போட்டிருப்பவர் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும்பட்சத்தில், முதிர்வுக்குப் பிறகு, அந்தத் தொகை அவரது சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும்.

வரிச் சலுகை எஃப்.டி பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்கும் வசதி இல்லை. ஐந்தாண்டுக்கு முன் பகுதி பணத்தை எடுக்க அல்லது முழுப் பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதியும் இல்லை. அதே நேரத்தில், டெபாசிட் காலத்தில் வரிதாரர் இறந்துவிடும்பட்சத்தில் வாரிசுதாரர்களுக்குப் பணம் வழங்கப்படும். டெபாசிட் செய்தவர் நாமினியை நியமித்திருந்தால் அவரிடம் அந்தத் தொகை வழங்கப்படும். இல்லை எனில், வாரிசுதாரர்களுக்கே பணம் வழங்கப்படும்.

வரிச் சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்... யாருக்கு ஏற்றது?

யாருக்கு ஏற்றது?

இந்த ஐந்தாண்டு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் என்பது முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பாத, வருமான வரியை சேமிக்க விரும்புபவர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது.

வங்கிகளின் சேவை மற்றும் முதலீட்டுத் திட்டங்களை ரிசர்வ் வங்கி தீவிரமாகக் கண்காணித்து வருவதால், இந்தத் திட்டம் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கிறது.

பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், வரிச் சேமிப்பை சேமிக்க நினைப்பவர்கள் இந்த ஐந்து வருட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் குறித்து பரிசீலனை செய்யலாம்!

மாற்று முதலீடுகள் ஏதாவது உண்டா?

இதன் முதலீட்டுக் காலம் 15 ஆண்டுகளாக இருந்தால் பொது சேமநல நிதித் (PPF) திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டுக்குத் தற்போது ஆண்டுக்கு 7.10% வட்டி வருமானம் கிடைக்கிறது. இதில் வட்டி வருமானத்துக்கும் வரி இல்லை. தபால் அலுவலக தேசிய சேமிப்பு பத்திர முதலீட்டுக்கும் 80சி பிரிவின்கீழ் வரிச்சலுகை உண்டு. ஐந்தாண்டு லாக் இன் பிரீயட் கொண்ட இந்தத் திட்டத்துக்கு தற்போதைய நிலையில் ஆண்டுக்கு 6.8% வட்டி வழங்கப்படுகிறது. ஆனால், வட்டி வருமானத்துக்கு வரி உண்டு.

முதலீட்டில் ரிஸ்க் எடுக்கக்கூடிய முதலீட்டாளர்கள் வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டமான இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டைத் தேர்வு செய்யலாம். இந்த ஃபண்டில் ‘லாக்இன் பிரீயட்’ மூன்றாண்டுகள் மட்டுமே. இந்த ஃபண்ட் பிரிவு ஜூலை 15, 2022 நிலவரப்படி, மூன்றாண்டுகளில் ஆண்டுக்கு சுமார் 14% வருமானம் தந்திருக்கிறது. ஐந்தாண்டு மற்றும் பத்தாண்டுகளில் இந்த ஃபண்ட் பிரிவின் சராசரி வருமானம் 10% மற்றும் 15 சதவிகிதமாக உள்ளது. இதில் வருமானத்துக்கு நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் வரி இல்லை. அதற்கு மேற்படும் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு 10% வரி கட்டினால் போதும்.