
முதலீடு
அரசு ஊழியர் சம்பள வரலாற்றில் இதுவரை கிடைத்திராத பெரும் தொகை யாக 14% அகவிலைப்படி உயர்வைத் தந்துள்ளன மத்திய, மாநில அரசுகள். ரயில்வே, அஞ்சல்துறை போன்ற அரசு ஊழியருக்கு இணையாக ஊதியம் பெரும் அமைப்பு சார்ந்த ஊழியர்களும் இந்த அகவிலைப்படி உயர்வுக் குத் தகுதியானவர்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி.

கடந்த இரண்டு ஆண்டு காலமாக எதிர்பார்த்த இந்த அகவிலைப்படி கையில் கிடைத்தவுடன் தாம்தூம் என்று செலவழித்து விடுவது சரியாக இருக்காது. எதிர்பாராத நிலையில், கூடுதலாகக் கிடைக்கும் இந்தப் பணத்தைத் திட்டமிட்டு முதலீடு செய்து, பெரும் பணம் சேர்க்க முடியும். எப்படி இது சாத்தியம் என்று தெரிந்துகொள்ளும் முன், ஒரு சின்ன பணக் கணக்கைப் பார்ப்போம்.
இதுதான் பணக்கணக்கு...
சமீபத்தில் பணிக்கு வந்த முதல் நிலை ஊழியர்கள், பத்து ஆண்டுகள் பணி நிறைவு செய்த இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை ஊழியர்கள் சுமார் 60,000 ரூபாயை அடிப்படை சம்பளமாகப் பெறக்கூடும். இவர்களுக்கு 14% அகவிலைப்படி உயர்வு மூலம் மட்டும் கிடைக்கும் கூடுதல் ஊதியம் ரூ.8,400. ஓர் அரசு ஊழியரின் தற்போதைய வயது 35 எனில், அவர் இன்னும் 25 ஆண்டுகள் பணியில் தொடரக்கூடும். தற்போது உபரியாகக் கிடைத்துள்ள ரூ.8,400 அகவிலைப்படியில் 4,200 ரூபாயை 25 ஆண்டுகள் என்.பி.எஸ்ஸில் முதலீடு செய்துவந்தால், முதிர்வுத் தொகையாக ரூ.56,19,139 கிடைக்கும். இதில் 60% தொகையான 33,71,483 ரூபாயை பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்யலாம். மீதமுள்ள 22,47,656 ரூபாயை ரொக்கமாகப் பெற்றுக் கொள்ளலாம். இப்படிச் செய்வதன் மூலம் 60 வயதுக்குப் பின் மாதம்தோறும் ரூ.22,477 பென்ஷனாகக் கிடைக்கும். (8% வருமானம் என்ற கணக்கில்).

14% அக விலைப்படி முதலீடு…
இதற்கு முன்பு 17 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி, இப்போது 14% கூடுதலாகத் தரப்பட்டிருப்பதன்மூலம் 31 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இனியும் ஆறு மாதத்துக்கு ஒருமுறை அகவிலைப்படி கிடைக்கத்தான் போகிறது. வருடம்தோறும் ஊதிய உயர்வும் தரத்தான் போகிறார்கள். எனவே, ஓய்வுக் காலத்துக்கு ஓர் உபரி நிதியம் (Additional corpus) ஏற்படுத்த நினைப்பவர்கள், இனி கிடைக்க விருக்கும் 14% அகவிலைப்படி தொகையான 8,400 ரூபாயையும் என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால், 60-வது வயதில் கிடைக்கப்போகும் பணப்பலன் ஆச்சர்யப்பட வைப்பதாக இருக்கும்.
அதாவது, உங்களது 35 வயது முதல் 60 வயது வரையிலான 25 ஆண்டுக் காலத்தில் என்.பிஎஸ்-ல் முதலீடு செய்த தொகை மூலம் கிடைக்கும் மொத்த முதிர்வுத் தொகை ரூ.1,12,38,279. (10% வளர்ச்சி என்ற கணக்கீட்டில்). இதில் ரொக்கமாகப் பெற்றுக்கொள்ளத்தக்க தொகை ரூ.44,95,312. அதாவது, முதிர்வுத் தொகையில் 40%. மீதமுள்ள 60 சதவிகிதமான 67,42,967 ரூபாயை ஓய்வுக்கால பென்ஷன் பெற முதலீடு செய்வதன்மூலம் மாதம்தோறும் 44,953 ரூபாயை 60 வயதில் பென்ஷனாகப் பெறலாம்.
அபூர்வமான வாய்ப்பு...
ஒரே தவணையில் இப்படி 14 சதவிகிதமாக அகவிலைப்படி பெறக்கூடிய சந்தர்ப்பம் இனிவரும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த அபூர்வ வாய்ப்பின்மூலம் கிடைக்கும் தொகையை சரியாக முதலீடு செய்ய பயன் படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர, மனம் போல செலவு செய்து தீர்த்துவிடக் கூடாது.
சி.பி.எஸ் சந்தாதாரர்கள்...
சி.பி.எஸ் சந்தாதாரர்களும் அகவிலைப் படிமூலம் கிடைக்கும் பணத்தை முதலீடு செய்ய அவசியம் பரிசீலிக்கலாம். பழைய பென்ஷன்தாரர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு லாபம் பார்க்கலாம். அலுவலகம் சார்ந்த என்.பி.எஸ் சந்தாதாரர்கள் மற்றொரு என்.பி.எஸ் கணக்குத் தொடங்க முடியாது என்பதால், பி.பி.எஃப்பில் அகவிலைப்படியை முதலீடு செய்யலாம்.