மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இளைஞர்களை கோடீஸ்வரர் ஆக்கும் முதலீட்டு முறை..!

டார்கெட் குரோர்பதி...
News
டார்கெட் குரோர்பதி...

100 ரூபாய் இருந்தால்கூட மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி முதலீட்டை ஆரம்பித்துவிட முடியும்...

இன்றைக்கு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் முதன்மைச் செயல் அதிகாரி தொடங்கி, அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் கடைநிலை ஊழியர் வரை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (Systematic Investment Plan - SIP) என்கிற முறையில் முதலீடு செய்யும் அளவுக்கு, பெரும்தாக்கம் ஏற்பட்டுள்ளது. ‘சிறு துளி பெருவெள்ளம்’ எனப் பெருகி வருகிறது எஸ்.ஐ.பி முதலீடு.

எம்.சதீஷ் குமார்
நிறுவனர்,
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

எஸ்.ஐ.பி முறையில் முதலீடு...

இந்தியாவில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை மற்றும் முதலீட்டுத் தொகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. (பார்க்க, பெட்டிச் செய்தி) முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான முதலீட்டு முறையாக எஸ்.ஐ.பி இருக்கிறது. அதுவும் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு மிகவும் அதிகம். அண்மைக் காலத்தில் இளைஞர்கள் முன்பைவிட அதிகமாக எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த முதலீட்டு முறை மிகவும் பிரபலமாக இருக்கக் காரணம், அதிலுள்ள பல வசதிகளாகும்.

பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் அதிக தொகை இருந்தால்தான் முதலீடு செய்ய முடியும் என நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் பெரும்பாலானோர் பங்குச் சந்தையிலோ, மியூச்சுவல் ஃபண்டிலோ முதலீடு செய்யாமல் ஒதுங்கியே இருக்கிறார்கள். இது ஒரு தவறான புரிந்துகொள்ளல் ஆகும்.

ரூ.100 இருந்தால்கூட போதும்...

ஒருவரிடம் 100 ரூபாய் இருந்தால்கூட மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி முதலீட்டை ஆரம்பித்துவிட முடியும். நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் குரோத் ஃபண்ட், இண்டெக்ஸ் நிஃப்டி 50 ஃபண்ட், ஸ்மால்கேப் ஃபண்ட் ஆகியவற்றில் ரூ.100 இருந்தால்கூட எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை மேற்கொள்ள முடியும்.

இதேபோல், ஐ.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கோர் ஈக்விட்டி ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மல்ட்டிகேப் ஃபண்ட், புளூசிப் ஃபண்ட், ஈக்விட்டி & டெப்ட் ஃபண்ட், சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மல்ட்டிகேப் ஃபண்ட், அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்ட், எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் புளூசிப் ஃபண்ட், யு.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மாஸ்டர்ஷேர் ஃபண்ட் எனப் பல ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் மாதம் 100 ரூபாய்கூட முதலீடு செய்ய முடியும்.

மேலும், எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வது மிக எளிது. ஒருவரிடம் ஸ்மார்ட்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் என ஏதாவது ஒன்று இருந்தாலே போதும், இணைய வழியில் இந்த முதலீட்டை ஆதார் மற்றும் பான் கார்டு ஆதாரங்களை சமர்ப்பிப்பதன் மூலம் ஆரம்பித்துவிட முடியும்.

இன்றைய காலகட்டத்தில் இளைஞர் ஒருவரால் சுலபமாக மாதம் ரூ.500, ரூ.1,000 என முதலீடு செய்ய முடியும். காரணம், இன்றைக்குப் புதிதாக வேலைக்குச் சேரும் இளைஞர்களின் அடிப்படை சம்பளமே ரூ.15,000, ரூ.20,000, ரூ.25,000, ரூ.30,000 என்பதாக இருக்கிறது. இதில், மாதம் ரூ.1,000 - ரூ.5,000 சேமிப்பது அனைவராலும் முடியக்கூடிய காரியம்தான்.

இளைஞர்களை கோடீஸ்வரர் ஆக்கும் முதலீட்டு முறை..!

இதுவரைக்கும் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீட்டை ஆரம்பிக்காத இளைஞர்கள் இன்றைக்கே ஆரம்பித்துவிடலாம்; அந்த அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்திருப்பதுடன் வசதிகளும் அதிகரித்துள்ளன. மேலும், இதர முதலீட்டு முறைகளுடன் ஒப்பிடும்போது எஸ்.ஐ.பி முறையில் ஏராளமான வசதிகள் மற்றும் நெகிழ்வுகள் இருக்கின்றன.

உதாரணமாக, எண்டோவ்மென்ட், யூலிப் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு பிரீமியம் கட்டி வந்தால், தபால் அலுவலக ஆர்.டி போட்டுவந்தால் மற்றும் பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்டில் முதலீடு செய்துவந்தால் முதலீட்டுக்கான கால அளவு உண்டு. 5 ஆண்டுகள், 15 ஆண்டுகள் எனக் கட்டாயம் முதலீட்டைத் தொடர வேண்டும். இடையில் நிறுத்தினால், கட்டிய பணத்துக்குக் கிடைக்கும் பணப்பலன் மிகக் குறைவாக இருக்கும்; பல நேரங்களில் கட்டிய பணத்தைவிட குறைவாகக்கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

எஸ்.ஐ.பி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வரும்போது, இப்படிக் கட்டாய முதலீட்டுக் காலம் எதுவும் கிடையாது. ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் பத்தாண்டுக் காலத்துக்கு முதலீடு செய்வதாக ஒருவர் முதலீட்டை ஆரம்பித்திருக்கிறார். ஆனால், இரண்டு ஆண்டுகள் கழித்து ஓர் அவசரப் பணப் பிரச்னை காரணமாகத் தொடர்ந்து முதலீடு செய்ய முடியவில்லை எனில், முதலீட்டைத் தாராளமாக நிறுத்திக்கொள்ளலாம்; அதற்கு எந்த அபராதம் எதுவும் கிடையாது. மேலும், எஸ்.ஐ.பி தொகையை எப்போது வேண்டுமானாலும் அதிகரித்துக்கொள்ளலாம், குறைத்துக்கொள்ளலாம்; எஸ்.ஐ.பி முதலீட்டை சிறிது காலத்துக்கு நிறுத்திவிட்டு மீண்டும் தொடரலாம் எனப் பல்வேறு சலுகைகள் இருக்கின்றன. உதார ணமாக, முதலீட்டுத் தொகையை ரூ.15,000-லிருந்து ரூ.20,000-ஆக அதிகரிக்கலாம்; ரூ.15,000-லிருந்து ரூ.10,000-ஆகக் குறைக்க முடியும்.

மேலும், அதுவரைக்கும் சேர்த்த பணத்தை முழுமையாகத் தேவைப் பட்டாலோ, பகுதிப் பணம் தேவைப்பட்டாலோ எடுத்துக் கொள்ளலாம். எஸ்.ஐ.பி முறையில் சேர்ந்திருக்கும் பணம் என்பது கிட்டத்தட்ட ஒருவரின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் போன்றது. அதாவது, எப்போது வேண்டுமானாலும் எடுத்து செலவு செய்யக்கூடியதாக இருக்கும்.

அபரிமிதமான வருமானம்...

இன்றைக்கு எஸ்.ஐ.பி முறையில் நிறைய பேர் அதிகமான தொகைக்கு முதலீடு செய்யக் காரணம், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் செய்யப்படும் எஸ்.ஐ.பி முதலீடு அபரிமிதமான வருமானத்தை நீண்ட காலத்தில் தருவதுதான்.

பங்குச் சந்தை மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளின் நீண்ட கால சராசரி வருமானம் என்பது 12% அளவுக்கு உள்ளது. நன்றாக வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி ஃபண்டுகள் இதைவிட 3% - 5% அதிக வருமானம் தந்து வருகின்றன.

ரூ.1 கோடி இலக்கு...

இன்றைய இளைஞர்கள் ஒரு கோடி ரூபாய் சேர்ப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. வேலைக்குச் சேர்ந்து சுமார் 5 - 7 ஆண்டுகளிலேயே அவர்களின் சம்பளம் அரை லட்சத்தைத் தாண்டிவிடுகிறது. சிலரின் சம்பளம் முக்கால் லட்சம், ஒரு லட்சம் என கூட அதிகரித்துவிடுகிறது. இவர்கள் எஸ்.ஐ.பி முறை முதலீடு மூலம் சுலபமாக ரூ.1 கோடியைச் சேர்த்துவிட முடியும். இந்த விதிமுறையின் பெயர் 15:15:15 ஆகும். அதாவது, மாதம் எஸ்.ஐ.பி முறையில் ரூ.15,000 வீதம் 15 ஆண்டு களுக்குத் தொடர்ந்து டாப் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் மொத்தம் ரூ.27 லட்சம் முதலீடு செய்திருப்பார்கள். அந்த முதலீட் டுக்கு ஆண்டுக்கு சராசரியாக 15% வருமானம் கிடைத்தால் தொகுப்பு நிதி ரூ.1 கோடி சேர்ந் திருக்கும்.

மாதம் ரூ.15,000 என்பது ரூ.1 கோடியாக வளர்ந்திருக்கிறது என்பதை இன்றைய இளைஞர்கள் புரிந்துகொண்டு சிறு வயதிலேயே முதலீடு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திகொள்ள வேண்டும்.

இப்படி மாதம் ரூ.15,000 முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் 10 கோடி ரூபாயை சுலபமாகச் சேர்க்க முடியும். அதாவது, மாதம் ரூ.15,000 வீதம் 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்துவரும்பட்சத்தில் மொத்த முதலீடு ரூ.54 லட்சமாக இருக்கும். இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு சராசரியாக 15% வருமானம் கிடைத்தால் ரூ.10 கோடி கிடைத்துவிடும். இதைத்தான் கூட்டு வளர்ச்சி (Power of Compounding) என்பார்கள்.

சிறந்த முதலீட்டு முறை...

நிதி இலக்குகளை நிறைவேற்றவும், செல்வம் சேர்க்கவும் எஸ்.ஐ.பி-யை விட சிறந்த முதலீட்டு முறை வேறு இருக்க முடியாது. பங்குச் சந்தையின் ரிஸ்க் என்பது நீண்ட காலத்தில் எஸ்.ஐ.பி முறை முதலீட்டின் மூலம் பரவலாக்கப் பட்டுவிடுகிறது. அதாவது, எஸ்.பி.ஐ முறையில் பங்குச் சந்தை மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும்போது சந்தையின் அனைத்து ஏற்ற, இறக்க நிலைகளில் முதலீடு செய்யப்படுவதால், சராசரியாக அதிக யூனிட்டுகள் கிடைத்திருக்கும். சந்தை இறங்கினால் அதிக யூனிட்டுகள் கிடைக்கும். சந்தை ஏறினால் முதலீட்டின் மதிப்பு அதிகரிக்கும். இப்படி மாறிமாறி நடக்கும்போது, நீண்ட காலத்தில் எஸ்.ஐ.பி முதலீட்டு முறை அதிக லாபத்தை ஈட்டித் தருவதாக இருக்கும்.

குடும்ப உறுப்பினர்களுக்கு ஆளுக்கு ஒரு எஸ்.ஐ.பி முதலீடு இருந்தால் எப்போதும் பணப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை.

நீங்களும் விரைவில் கோடீஸ்வரர் ஆக வேண்டும் எனில் இன்றைக்கே எஸ்.ஐ.பி முதலீட்டை ஆரம்பியுங்கள். அதிலும் குறிப்பாக, இளைஞர்கள் உடனே எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடங்குவது நல்லது! அப்போதுதான் கோடீஸ்வரர் கனவை நிஜமாக்க முடியும்!

(குரோர்பதி ஆவோம்)

6 கோடி எஸ்.ஐ.பி முதலீட்டுக் கணக்குகள்..!

இந்தியாவில் தற்போதைய நிலையில், 6 கோடிக்கும் மேற்பட்ட எஸ்.ஐ.பி முதலீட்டுக் கணக்குகள் உள்ளன. 2022 டிசம்பரில் எஸ்.ஐ.பி முறையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை மட்டும் ரூ.13,573 கோடி ஆகும். இது இதுவரைக்கும் இல்லாத அதிக தொகையாகும்.

நடப்பு 2022-23-ம் நிதி ஆண்டில் டிசம்பர் வரைக்கும் ரூ.1,14,154 கோடி எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள எஸ்.ஐ.பி கணக்குகளின் எண்ணிக்கை 1.86 கோடியாக உள்ளது. நிதி ஆண்டு முடிய இன்னும் இரண்டரை மாதம் இருக்கிறது. 2016-17-ம் முழு நிதி ஆண்டில் இந்தத் தொகை ரூ.43,921 கோடியாக இருந்தது. எஸ்.ஐ.பி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் செய்யப்பட்டிருக்கும் முதலீட்டின் மதிப்பு சுமார் ரூ.6,83,855 கோடியாக உள்ளது.