பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

சரியான மியூச்சுவல் ஃபண்ட் தேர்வு... கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்..!

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

ராமகிருஷ்ணன் வி நாயக், நிதி ஆலோசகர், https://www.dakshincapital.com/

ஒருவரின் அனைத்து நிதி இலக்குகளையும் நிறைவேற்றத் தேவையான திட்டங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இருக்கின்றன. சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான 10 அம்சங்கள் பற்றிப் பார்ப்போம்.

ராமகிருஷ்ணன் வி நாயக் 
நிதி ஆலோசகர், 
https://www.dakshincapital.com/
ராமகிருஷ்ணன் வி நாயக் நிதி ஆலோசகர், https://www.dakshincapital.com/

1. செலவு விகிதம்...

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நிர்வகிக்க முதலீட்டாளர்களிடமிருந்து, மியூச் சுவல் ஃபண்ட் நிறுவனம் வசூலிக்கப்படும் தொகை செலவு விகிதம் (Expense Ratio) எனப் படும். இதில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் செயல்பாட்டு செலவுகளாக விளம்பரச் செலவுகள், நிர்வாகச் செலவுகள், பரிமாற்றக் கட்டணங்கள், முதலீட்டு மேலாண்மைக் கட்டணங்கள் (பணியாளர் மற்றும் ஃபண்ட் மேனேஜர் சம்பளம்), பதிவாளர் மற்றும் கஸ்டோடியன் செலவுகள், தணிக்கைச் செலவுகள் எல்லாம் அடங்கும். இது அந்தக் குறிப்பிட்ட திட்டத்தில் நிர்வகிக்கப்படும் தொகையின் அளவுக்கேற்ப இருக்கும். பங்குச் சந்தை ஃபண்டுகளில் இது அதிகபட்சம் 2.5 சதவிகிதமாக இருக்கலாம் என்பது செபியின் விதிமுறையாகும். அதாவது, ஒரு ஈக்விட்டி ஃபண்ட் ஓராண்டில் 14.5% வருமானம் தந்தால், அதில் 2.5% செலவு விகிதம் போக, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளருக்கு 12% வருமானம் கிடைக்கும். போட்டி காரணமாக இந்தச் செலவு விகிதம் ஈக்விட்டி ஃபண்டுகளில் 1%, 1.5%, 2% என்பதுபோல்கூட குறைவாக இருக்கும்.

மேலும், ஒரு திட்டத்தின்கீழ் நிர்வகிக்கப்படும் தொகை அதிகமாக இருந்தால், இந்தச் செலவு விகிதம் குறைவாக இருக்க வேண்டும் என்பது செபியின் விதிமுறையாகும். ஃபண்ட் தரும் வருமானம் அதிகமாக இருந்து, செலவு விகிதமும் அதிகமாக இருந்தால், அந்த ஃபண்ட் நல்ல ஃபண்ட் ஆகும். செலவு விகிதம் அதிகமாக இருந்து ஃபண்ட் வருமானம் மிகவும் குறைவாக இருந்தால், அந்த ஃபண்டை தவிர்க்க வேண்டும்.

2. ரிஸ்க் Vs ரிட்டர்ன்...

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் பொறுத்தவரை, ஃபண்டில் ரிஸ்க் எந்தளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அந்தளவுக்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. லிக்விட் ஃபண்டில் ரிஸ்க் குறைவாக இருக்கிறது. அதனால், வங்கிச் சேமிப்புக் கணக்கைவிட ஓரிரு சதவிகிதம் கூடுதலாக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.கடன் ஃபண்டுகளில் சற்று ரிஸ்க் உண்டு என்பதால், அவற்றின் மூலம் ஆண்டுக்கு சுமார் 6 - 8% வருமானம் கிடைக்கக்கூடும். இதைவிட சற்றுக் கூடுதல் ரிஸ்க் கொண்ட கலப்பின ஃபண்டு களில் ஆண்டுக்கு 8 - 10% அளவுக்கும் அதிக ரிஸ்க் கொண்ட ஈக்விட்டி ஃபண்டுகளில் சுமார் 12% அளவுக்கும் வருமானம் எதிர்பார்க்கலாம். மேலே குறிப்பிட்ட வருமான அளவைவிடக் குறைவான வருமானம் தரும் ஃபண்டுகளை முதலீட்டுக்குத் தவிர்க்க வேண்டும். காரணம், எடுக்கும் ரிஸ்க்குக்கேற்ப அதிக வருமானம் கிடைப்பது மிக மிக அவசியம். இல்லாவிட்டால், முதலீட்டாளர்கள் மூன்றாண்டுக்குள் தேவைப்படும் பணத்தை ஈக்விட்டி ஃபண்டில் போடக்கூடாது.

சரியான மியூச்சுவல் ஃபண்ட் தேர்வு... கவனிக்க வேண்டிய 
10 அம்சங்கள்..!

3. பெஞ்ச்மார்க், ஃபண்ட் பிரிவு வருமான ஒப்பீடு...

ஒரு ஃபண்ட் தரும் வருமானம் அதன் பெஞ்ச்மார்க் மற்றும் ஃபண்ட் பிரிவின் சராசரி வருமானத்தைவிட எப்போதும் அதிகமாக இருந்தால், அந்த ஃபண்டை முதலீட்டுக்குத் தேர்வு செய்யலாம். இங்கே பெஞ்ச்மார்க் வருமானம் என்பது ஒரு ஃபண்ட் கொடுக்கும் வருமானத்தை ஒப்பிடுவதற்காக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் அளவீடாகும். உதாரணமாக, லார்ஜ்கேப் மியூச்சுவல் ஃபண்டின் பெஞ்ச்மார்க் என்பது நிஃப்டி 50 குறியீடாக இருந்தால், இந்த ஃபண்டின் வருமானம், நிஃப்டி 50 குறியீடு குறிப்பிட்ட காலத்தில் தந்திருக்கும் வருமானத்தை, ஃபண்ட் கொடுத்த வருமானத்துடன் ஒப்பிடப்படும். ஃபண்ட் சராசரி வருமானம் என்பது அந்தக் குறிப்பிட்ட ஃபண்ட் பிரிவில் உள்ள அனைத்து ஃபண்டுகளும் குறிப்பிட்ட காலத்தில் கொடுத்த வருமானத்தின் சராசரியாகும். மேலும், அந்தக் குறிப்பிட்ட ஃபண்ட் கடந்த 3, 5, 10 ஆண்டுகள் மற்றும் ஆரம்பம் முதல் தொடர்ந்து நல்ல வருமானத்தைத் தந்துவரும்பட்சத்தில் மட்டுமே அந்த ஃபண்டைத் தேர்வு செய்ய வேண்டும்.

4. தொடர்ச்சியான சிறப்பான வருமான செயல்பாடு...

ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்ட் என்பது தொடர்ந்து சிறப்பான வருமானத்தைக் கொடுப்பதாக இருக்க வேண்டும். அதாவது, ஈக்விட்டி ஃபண்ட் என்கிறபோது மூன்றாண்டு, ஐந்தாண்டு, பத்தாண்டு மற்றும் ஆரம்பம் முதல் பணவீக்க விகிதத்தைவிட அதிகமாகவும் ஆண்டுக்கு சராசரியாக 12 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கொடுப்பதாக இருக்க வேண்டும். இது ஹைபிரிட் ஃபண்டுகளுக்கும் பொருந்தும்.

கடன் ஃபண்டுகளைப் (கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட் தவிர்த்து) பொறுத்தவரை, ஓராண்டு, இரண்டாண்டு, மூன்றாண்டு, ஐந்தாண்டு, ஆரம்பம் முதல் என அனைத்து காலகட்டங் களிலும் அதன் பெஞ்ச்மார்க், ஃபண்ட் பிரிவு சராசரியைவிட அதிக வருமானம் தந்துவருவதாக இருக்க வேண்டும்.

5. நிதி மேலாளர் யார்?

குறிப்பிட்ட ஃபண்டை நிர்வகிக்கும் நிதி மேலாளர் (Fund Manager) யார், அவர் நிர்வகிக்கும் இதர திட்டங்கள் எவ்வளவு வருமானம் கொடுத்து வருகின்றன, முதலீடு செய்யப் போகிற ஃபண்ட எவ்வளவு வருமானம் தந்திருக்கிறது என்பதை அலசி ஆராய வேண்டும். கூடவே, ஃபண்ட் மேனேஜரின் அனுபவம் மற்றும் திறமையையும் கவனிக்க வேண்டும். ஒரு ஃபண்டில் அடிக்கடி ஃபண்ட் மேனேஜர் மாறியிருந்தால், அந்த ஃபண்டை முத லீட்டுக்குத் தவிர்ப்பது நல்லது.

6.மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாகம்...

திட்டத்தை நிர்வகிக்கும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத் தின் செயல்பாடு எப்படி இருக்கிறது, அதன் மீது ஏதாவது மோசடி புகார் இருக்கிறதா, அதன் பாரம் பர்யம் எப்படி என்பது போன்ற விஷயங்களையும் ஒரு ஃபண்டை முதலீட்டுக்குத் தேர்வு செய்யும்முன் கவனிப்பது நல்லது.

7. திட்டத்தின் மூலம் நிர்வகிக்கும் தொகை...

முதலீட்டுக்குத் தேர்வு செய்யப்போகும் ஃபண்டின் மூலம் நிர்வகிக்கும் தொகை (Assets Under Management AUM) அதிகமாக இருப்பது நல்லது.ஈக்விட்டி ஃபண்ட் என்கிற போது சுமார் ரூ,8,000, ரூ.10,000 கோடிக்கு மேல் இருக்க வேண்டும். ஹைபிரிட் ஃபண்ட் எனில், ரூ.5,000 கோடிக்கு மேலும், கடன் ஃபண்ட் என்கிறபோது சுமார் ரூ.2,000 கோடிக்கு மேலும் இருப்பது அவசியம். அப்போதுதான் ஃபண்டில் இருந்து குறிப்பிட்ட அளவு பணம் ஒரே நேரத்தில் வெளி யேறினாலும் இதர முதலீட் டாளர்களுக்கு அதிக பாதிப்பு இருக்காது. அதாவது, ஃபண்டின் என்.ஏ.வி மதிப்பு அதிகமாகக் குறையாது.

8. முதலீட்டுக் காலத்துக்கு ஏற்ற ஃபண்டுகள்...

அடுத்து ஒருவர் அவரின் முதலீட்டுக் காலத்துக்கேற்ற வாறு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்வு செய்வது மிக முக்கியமாகும்.

மிகக் குறுகிய காலத்தில் அதிகபட்சம் மூன்று மாதங் களுக்குள் தேவைப்படும் பணத்தை லிக்விட் ஃபண்டு களிலும், 3 முதல் 12 மாதங் களுக்குள் தேவைப்படும் பணத்தை அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளிலும் முதலீடு செய்ய வேண்டும். அடுத்து ஓராண்டுக்கு மேல், மூன்றாண்டுக்கு உட்பட்டு தேவைப்படும் பணத்தை ஷார்ட் டூரேஷன் மற்றும் மீடியம் டூரேஷன் ஃபண்டு களில் முதலீடு செய்து வரலாம். மூன்றாண்டுக்கு மேற்பட்டு ஐந்து ஆண்டு களுக்குள் தேவைப்படும் பணத்தை ஹைபிரிட் ஃபண்டு களில் முதலீடு செய்வது சரியாக இருக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்டு பத்தாண்டுகளுக்கு உட்பட்ட நிதியை லார்ஜ்கேப் ஃபண்ட், ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட், மல்ட்டிகேப் ஃபண்டுகளிலும் அதற்கு மேற்பட்ட காலத்தில் தேவைப்படும் பணத்தை மிட் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகளிலும் முதலீடு செய்வது சரியாக இருக்கும்.

சரியான மியூச்சுவல் ஃபண்ட் தேர்வு... கவனிக்க வேண்டிய 
10 அம்சங்கள்..!

9. நிதி இலக்குகளுக்கு ஏற்ற ஃபண்டுகள்...

இதே போல், ஒருவர் அவரின் நிதி இலக்குகளுக்கு ஏற்றவாறு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்வு செய்வது மிக முக்கியமாகும். ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளுக்கு கட்டும் ஆண்டு பிரீமியத்தைச் சேர்க்க அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சரியாக இருக்கும்.கார் வாங்க, வீடு வாங்க முன் பணம் ஆகியவற்றுக்கு ஹைபிரிட் ஃபண்ட், பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாண செலவுகள், ஓய்வுக்காலம் மற்றும் செல்வம் சேர்க்க பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.

10. போர்ட்ஃபோலியோ டேர்ன்ஓவர் விகிதம்...

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் போர்ட் ஃபோலியோ டேர்ன்ஓவர் விகிதம் (Portfolio Turnover Ratio) என்பது ஒரு ஃபண்டுக்காக முதலீடு செய்யப் பட்டுள்ள நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள் போன்ற சொத்துகள் ஃபண்ட் மேனேஜரால் வாங்கப் பட்டு விற்கப்படும் விகிதமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஓராண்டு காலத்தில் ஃபண்டில் உள்ள சொத்துகளின் சதவிகித மாற்றத்தைக் குறிக்கிறது. உதாரணமாக, ஒரு ஃபண்டில் இந்த விகிதம் 5% என இருந்தால், ஓராண்டில் அந்த ஃபண்டின் முதலீட்டுக் கலவையில் இடம் பெற்றுள்ள பங்குகள், கடன் பத்திரங்கள் 5% மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறது என அர்த்தம்.

இந்த விகிதம் குறை வாக இருப்பது நல்லது. அதிகமாக இருந்தால், பங்குகள் அல்லது கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கே அந்த ஃபண்டில் அதிகமாக செலவு செய்யப்பட் டிருக்கிறது என்று அர்த்தம். மேலே கூறப் பட்ட 10 அம்சங்களை அலசி ஆராய்ந்து தேர்வு செய்யப்படும் ஃபண்ட் நல்ல வருமானத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.