நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பிட்காயினில் பணம் போடும் முன் இவற்றைக் கவனியுங்கள்! கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்!

பிட்காயின்
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின்

B I T C O I N

கடந்த சில நாள்களாக தாறுமாறாக விலை உயர்ந்து பிட்காயின் மதிப்பு 50,000 டாலரைத் தொட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. அடுத்த சில நாள்களிலேயே 58,000 என்ற புதிய உச்சத்தைத் தொட்ட பிட்காயின், கடந்த 23-ம் தேதி அன்று 13,000 டாலர் அளவுக்கு ஒரே நாளில் சரிந்து, பலரது வயிற்றில் புளியைக் கரைத்தது.

பிட்காயினின் சந்தை மதிப்பு அடுத்த சில ஆண்டுகளில் ஆறு ட்ரில்லியன் டாலரை எட்டும் என்ற கணிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், பலரும் இதில் பணத்தைப் போட்டு குறுகிய காலத்தில் நல்ல லாபம் சம்பாதிக்க நினைக்கிறார்கள். பிட்காயினில் முதலீடு செய்யும் முன் முக்கியமான சில விஷயங்களைச் சொன்னார் தொழில்நுட்ப வல்லுநரான பிரபு கிருஷ்ணா.

பிரபு கிருஷ்ணா
பிரபு கிருஷ்ணா

1. புரியாத புதிர் இந்த பிட்காயின்

இந்த பிட்காயின், யார் என்றே தெரியாத நபர் மூலம் கம்ப்யூட்டரில் உருவாக்கும் கரன்சியாகும். தங்கம், வெள்ளி போல சுரங்கத்திலிருந்து உருவானதல்ல. இதற்கு எந்த வடிவமும் இல்லை. இதன் மதிப்பும் நிரந்தரம் இல்லை. தங்கம், வெள்ளி போன்றவற்றுக்கு அவற்றுக்கென ஒரு மதிப்பு இருக்கிறது. ஆனால், பிட்காயின் அப்படியல்ல, அதன் மதிப்பு எப்போது வேண்டுமானாலும் கடுமையாக உயர்ந்து, இறங்கவும் செய்யலாம். இதை உருவாக்குபவர் களின் இருப்பிடம் யாருக்கும் தெரியாது. இதன் மீது உலகின் எந்த அரசாங்கத்துக்கும் கட்டுப்பாடு இல்லை. உலகின் எந்த நாடும் எந்த நேரத்திலும் இதற்குத் தடை விதிக்க வாய்ப்புண்டு. அப்படித் தடை விதித்தால், இதில் போடும் பணத்தை இழப்பதைத் தவிர வேறு வழியில்லை.

2. இது ஒரு முதலீடு கிடையாது

பிட்காயின் என்பது உலக அளவில் பணப் பரிமாற்றத்தைச் செய்யத்தான் உருவாக்கப்பட்டது. தற்போது நடைமுறையில் இருக்கும் பணத்துக்கு மாற்றாகவே இது பார்க்கப்படுகிறது. ஒரு நாட்டின் அரசால் வழங்கப்படும் டாலர், ரூபாய், யென் போன்ற கரன்சிகளுக்கு மாற்றாகவே இந்த கிரிப்டோகரன்சிகள் கொண்டு வரப்பட்டன. ஆனால், குறுகிய காலத்தில் இதன் விலை உயர்ந்ததால், மக்கள் இதில் பணத்தைப் போட்டு லாபம் சம்பாதித்தனர். இதனால் இதை ஒரு முதலீடாக மக்கள் பார்க்கத் தொடங்கினர். ஆனால், இது ஒரு முதலீடு அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பிட்காயின்
பிட்காயின்

3. லாபத்துக்கு இணையான நஷ்டம்!

பிட்காயின் விலையானது டிசம்பர் 2017-ல் 18,000 டாலராக இருந்தது. இது 2018 டிசம்பரில் வெறும் 3,200 டாலராகச் சரிந்தது. மீண்டும் ஜூலை 2019-ல் 10,000 டாலர் மதிப்பைத் தொட்டது. அடுத்து 2020 மார்ச்சில் மீண்டும் 4,800 டாலராகச் சரிந்தது. இப்போது 58,000 டாலர் மதிப்பைக் கடந்து, மீண்டும் 45,000 டாலராகக் குறைந்து, தற்போது 50,000 டாலருக்கு வர்த்தகமாகிறது. இப்படி அதீதமான ஏற்ற இறக்கம் கொண்ட ஒன்றை வாங்க வேண்டுமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

4. கட்டுப்படுத்தும் அமைப்பு இல்லை

பங்குச் சந்தை முதலீட்டைக் கட்டுப்படுத்த செபி போன்ற கட்டுப்பாட்டு அமைப்பு இருக்கிறது. ஆனால், பிட்காயின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்புகள் இதுவரை உலகளவில் நிறுவப்பட வில்லை. அதனால், இந்த முதலீட்டில் மோசடி நடந்தாலோ, ஏமாற்றப் பட்டாலோ எந்தவொரு கட்டுப் பாட்டு அமைப்பிடமும் முறையிட்டு நிவாரணம் பெற முடியாது.

5. சந்தேகத்தைத் தீர்க்க ஆளில்லை

பிட்காயினில் பணத்தைப் போட்டபின் திடீரென விலை இறங்கினால் ஏன் விலை இறங்கியது, விலை இன்னும் இறங்குமா அல்லது ஏறுமா என்ற கேள்விகளுக்கு யாரிடமும் பதில் கேட்டுப் பெற முடியாது. அடிப்படை எதுவும் இல்லாமல், வெறும் டிமாண்ட் - சப்ளை என்பதன் அடிப்படை யிலேயே இயங்கும் பிட்காயின் பணம் போட்டபின் இரும்பு இதயம் இருந்தால்தான், ஏற்ற இறக்கத்தைத் தாங்கிக்கொள்ள முடியும்.

6. தொடரும் ஹேக்கர்கள் தொல்லை

பிட்காயின் என்பது பலம் வாய்ந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப் பட்டிருந்தாலும், இதை வைத்திருக்கும் கணக்கை சில ஹேக்கர்கள் கண்டறிந்து, அவற்றைப் பூட்டி வைத்துவிடுகின்றனர். சில மாதங்களுக்கு முன் இணைய உலகை ‘ரான்சம்வேர் வைரஸ்’ உலுக்கியது போல, எங்கோ இருக்கும் ஹேக்கர்கள் பயனாளிகளின் கம்ப்யூட்டருக்கு டிஜிட்டல் பூட்டு போட்டு அதை விடுவிக்க பணம் கேட்டு மிரட்டுகின்றனர். அது மட்டுமல்ல, இந்த ஹேக்கர்கள் தாங்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதற்காக பிணைத் தொகையை டாலரில் கேட்காமல் பிட்காயினாகத்தான் கேட்கிறார்கள். பிட்காயினில் மிகப் பெரிய தொகையைப் போட்டு வைக்க நினைப்பவர்களுக்கு இப்படிப்பட்ட அபாயங்களும் நேர்வதற்கு வாய்ப்புண்டு என்பதை மறக்கக் கூடாது.

7. எப்போது வேண்டுமானாலும் தடை வரலாம்

2018-ல் ரிசர்வ் வங்கியின் உத்தரவின்பேரில் பிட் காயின் பரிமாற்றக் கணக்கு களை முடக்கியது இந்திய வங்கிகள். பிட்காயின் பரிவர்த்தனைகளை அப்போது தடை செய்திருந் தது மத்திய ரிசர்வ் வங்கி. உச்ச நீதிமன்றம் இந்தத் தடையை நீக்குமாறு மார்ச் 2020-ல் உத்தரவிட்டது. அதன்பிறகே கொரோனா காலத்தில் பிட்காயினில் பணத்தைப் போடுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது புதிதாக ஒரு பேச்சு கிளம்பியிருக்கிறது. இந்திய நிறுவனங்களோ, தனிப்பட்ட நபர்களோ எந்த வகையான பிட்காயின்களையும் வைத்திருக்கக் கூடாது என்றும் அதில் வர்த்தகம் செய்து லாபம் சம்பாதிப் பவர்களுக்கு வரி விதிக்கவும் மத்திய அரசு சட்ட மசோதா ஒன்றைக் கொண்டு வர யோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

பிட்காயின் என்பது அதிக ரிஸ்க் உள்ளது என்பதால், அதன் ஏற்ற இறக்கம், ஒரு நிறுவனத்தின் சொத்துகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக, அந்த நிறுவனம் கையிருப்பில் இருக்கும் பிட் காயின்களை ஐ.பி.ஓ வெளியிடும் முன் கண்டிப்பாக விற்பனை செய்தாக வேண்டும் என செபி தெரிவித்துள்ளது. நிறுவனங் களுக்கே இப்படிப்பட்ட விதிமுறைகள் விதிக்கப்படுகிறது என்றால், தனிமனிதர்களுக்கு இன்னும் அதிகமான விதிமுறைகள் விதிக்கப்படும் என்றே எதிர்பார்க்கலாம்’’ என்றார் பிரபு கிருஷ்ணா.

உள்ளூரில் நடக்கும் ஏமாற்றுகள்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பகுதியில் `கிரிப்டோகரன்சியில் (பிட்காயின்) பணத்தைப் போட்டு லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி பலரிடம் பல லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி செய்தது அம்பலமானது. அதே கும்பல், திருச்சியிலும் பிட் காயின் மோசடியில் ஈடுபட்டதை போலீஸ் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது. அதேபோல, அண்மையில் சென்னை திருவான்மியூரில் பிட்காயின் மோசடி சம்பவம் ஒன்று அரங்கேறியிருக்கிறது. போலியான இளையதளம் தொடங்கி, அதில் பிட்காயின்களில் முதலீடு செய்தால் கோடியில் பணம் கிடைக்கும் என நம்ப வைத்து, பணம் பறிக்கும் நைஜீரியா கும்பலைப் பிடித்தது அடையாறு சைபர் கிரைம் போலீஸ்.

எனவே, பிட்காயினில் பணத்தைப் போடுகிறவர்கள் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்!

பிட்ஸ்

ம் நாட்டில் உள்ள ஐந்து ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் கடந்த நிதி ஆண்டில் (2020-2021) 1.96 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசுக்குக் கலால் வரியாக தந்திருக்கிறது. கடந்த காலத்தில் ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் இந்தளவுக்கு கலால் வரி வசூலித்துத் தந்ததே இல்லை!