Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட்... அனைவருக்கும் ஏற்ற முதலீடு..!

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்

சேமிப்பும் முதலீடும் - 14

மியூச்சுவல் ஃபண்ட்... அனைவருக்கும் ஏற்ற முதலீடு..!

சேமிப்பும் முதலீடும் - 14

Published:Updated:
மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்

அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற முதலீட்டுப் பிரிவு என்று மியூச்சுவல் ஃபண்டைக் குறிப்பிடலாம். முதலீட்டு உலகின் சூப்பர் மார்க்கெட் என்றுகூட இதை அழைக்கலாம். காரணம், ஒருவரின் அனைத்து முதலீட்டுத் தேவைகளுக்கும் ஏற்ற திட்டங்கள் மியூச்சுவல் ஃபண்டில் உள்ளன. இதில் ஒரு நாள் தொடங்கி மிக நீண்ட காலமான 30 ஆண்டுகள் வரைக்கும் முதலீடு செய்யும் திட்டங்கள் இருக்கின்றன. ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் தொடங்கி, மிக அதிக ரிஸ்க் எடுப்பவர்கள் வரைக்குமான ஏராளமான திட்டங்கள் உள்ளன.

சிவகாசி மணிகண்டன் 
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன் நிதி ஆலோசகர், Aismoney.com

அதாவது, மியூச்சுவல் ஃபண்டில் பல்வேறு வகையான முதலீட்டுத் திட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வகை ஃபண்டும் வெவ்வேறு ரிஸ்க் மற்றும் வருமான அளவு கொண்டவை. வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் வருமானத்துக்கு உத்தரவாதம் அளிப்பவை. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் வருமானத்துக்கு எந்த கேரன்டியும் கிடையாது.

மியூச்சுவல் ஃபண்ட் என்றால்..?

ஐ.பி.எல் போட்டிகளில் தொடங்கி அனைத்து நிகழ்ச்சிகளிலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விளம்பரங்கள் வருகின்றன. ஆனால், இப்போதுகூட மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன, அதில் எப்படி முதலீடு செய்வது என்கிற கேள்வியைக் கேட்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

ஒரே முதலீட்டு நோக்கம் கொண்ட பல்வேறு நபர்களிடமிருந்து பணத்தைத் திரட்டி, அதை முதலீடு செய்யும் ஒரு நிறுவனம்தான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம். இந்த நிறுவனம், முதலீடு செய்த பணத்திலிருந்து கிடைக்கும் லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை சேவைக் கட்டணமாக எடுத்துக்கொண்டு, மீதியை முதலீட்டாளர்களின் முதலீட்டுத் தொகைக்கு ஏற்ப பிரித்து வழங்குவதுதான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் அடிப்படை ஆகும்.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மற்றும் முதலீட்டாளர்கள் அனைவரும் லாபம் அடைவதால்தான் மியூச்சுவல் ஃபண்ட் என்ற பெயர். தமிழில் இதை பரஸ்பர நிதி என்கிறார்கள். பரஸ்பரம் எல்லோரும் பயன் அடைவதால், இப்படி அழைக்கிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலமான லாபம் மற்றும் இழப்பு முதலீட்டாளரை சேர்ந்தது. மூலதனத்தில் இழப்பு அல்லது ஒரு திட்டத்தில் லாபம் வரவில்லை எனில், அதற்கு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் பொறுப்பு ஏற்காது. ஆனால், கூடிய வரையில் முதலீட்டில் இழப்பு ஏற்படாமலும் லாபத்தை அதிகரிக்கும் வேலையை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் எப்போதும் எடுத்துவரும். எனவே, நீண்ட காலத்தில் இழப்புக்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகத்தான் இருக்கும்.

யூனிட்டுகள் - நிகர சொத்து மதிப்பு...

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கேற்ப முதலீட்டாளர்களுக்கு யூனிட்டுகள் (Units) ஒதுக்கித் தரப்படும். புதிதாக ஃபண்ட் வெளியிடுவதை நியூ ஃபண்ட் ஆஃபர் (NFO - New Fund Offer) என்பார்கள். அப்போது ரூ.10 முகமதிப்பு (Face Value) கொண்ட யூனிட்டுகளாகப் பிரித்துக் கொடுப்பார்கள்.

யூனிட்டின் மதிப்பை நிகர சொத்து மதிப்பு (Net Asset Value - NAV) என்பார்கள். இந்த என்.ஏ.வி மதிப்பு குறிப்பிட்ட காலத்தில் அதிகரித்து வந்தால், அந்தத் திட்டம் லாபத்தில் இருக்கிறது என்று அர்த்தம். மதிப்பு குறைந்தால் அந்த ஃபண்ட் சரியாகச் செயல்படவில்லை, இழப்பில் இருக்கிறது என்று அர்த்தம்.

மியூச்சுவல் ஃபண்ட்... அனைவருக்கும் ஏற்ற முதலீடு..!

யார் முதலீடு செய்யலாம்?

18 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமக்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்யலாம். மைனர்கள் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் மூலம் முதலீடு செய்யலாம். இது தவிர, நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடியும்.

தேவையான ஆவணங்கள் என்னென்ன?

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது மிக எளிது. முதலீடு செய்வது நீங்கள்தான் என்பதற்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் முகவரிக்கான ஆதாரம் கொண்ட ஓர் ஆவணம் தேவைப்படும். முக்கியமாக, பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இருந்தால், மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டை ஆரம்பித்துவிடலாம். மார்பளவு வண்ணப் புகைப்படம் இரண்டு தேவைப்படும்.

முகவரிக்கான ஆதாரமாக ரேஷன் கார்டு, பான் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் ஆவணம், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றைத் தரலாம். இந்த ஆவணங்களின் பிரதியில் முதலீட்டாளர் கையொப்பம் போட்டிருக்க வேண்டும்.

முதலீட்டை எப்படி ஆரம்பிப்பது?

மியூச்சுவல் ஃபண்டில் முதல் தடவை முதலீடு செய்யும் போது, கே.ஒய்.சி (Know Your Customer) என்கிற படிவத்தை நிரப்பித் தர வேண்டும். இதில், பான் எண், ஆதார் எண், வீட்டு முகவரி, ஆண்டு வருமானம், வெளிநாட்டில் சொத்து உள்ளதா என்பது போன்ற விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். மேலும், முதலீட்டாளரின் மார்பளவு கலர் போட்டோ ஒட்டிக் கொடுக்க வேண்டும்.

இந்த கே.ஒய்.சி படிவத்தை மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்டுகள் அல்லது ஏதாவது ஒரு மியூச்சுவல் நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கிளை அலுவலகங்கள், ஏஜென்டுகள் போன்றவர்களிடம் கொடுக்கலாம். கே.ஒய்.சி படிவத்தை ஒருமுறை நிரப்பிக் கொடுத்தால், அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கும் அது பயன்படுத்திக் கொள்ளப்படும். அதாவது, ஒருமுறை கே.ஒய்.சி செய்துவிட்டால், இந்தியாவில் உள்ள 44 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களிலும் முதலீடு செய்ய முடியும்.

இந்த கே.ஒய்.சி மிக முக்கிய மானது. இதிலுள்ள விவரங்கள் தான் உங்களின் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு ஆவணத்திலும் இடம்பெறும் என்பதால், படிவத்தைக் கூடியவரையில் நீங்களே நிரப்பிக் கொடுப்பது நல்லது; சரியான விவரங்களைக் கொடுப்பது மிக முக்கியம்.

கே.ஒய்.சி முடிந்ததும் மியூச்சுவல் ஃபண்ட் கிளை அலுவலகங்கள், இதற்கென இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் (Mutual Fund Distributors), ஆன்லைன் ஆகிய வழிகளில் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து முதலீட்டைத் தொடங்கலாம்.

விண்ணப்பப் படிவத்தில் முதலீடு செய்பவரின் பெயர், வயது, வீட்டு முகவரி, தொலை பேசி எண், இ-மெயில் முகவரி, பணம் செலுத்துவதற்கான காசோலை எண், வங்கி பெயர்/ கணக்கு எண் போன்ற தகவல் களை நிரப்பிக் கொடுக்க வேண் டும். டிவிடெண்ட் முதலீட்டா ளரின் வங்கிக் கணக்கில் நேரடி யாக வரவு வைக்கப்படும். இதே போல், யூனிட்டுகளை விற்கும் போது அந்தப் பணம் வங்கிக் கணக்கில்தான் செலுத்தப் படும்.

ஆதார் மற்றும் பான் எண் அடிப்படையில் இருந்த இடத்தில் இருந்தபடியே இ-கே.ஒய்.சி செய்யலாம். இதன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இணையதளம் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் சேவை / விநியோகஸ்தர் களின் இணையதளம் மூலம் முதலீடு செய்யலாம்.

காசோலை அல்லது கேட்புக் காசோலை அல்லது ஆன்லைன் மூலமாகத்தான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடியும். ரொக்க பணமாகக் கட்ட முடியாது. பணத்தைத் திரும்ப எடுக்கும் போதும் ரொக்கமாகத் தர மாட்டார்கள். வங்கிக் கணக்கில்தான் வரவு வைப்பார்கள்.

குறைந்தபட்ச முதலீடு...

மியூச்சுவல் ஃபண்டில் பணக் காரர்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும் எனப் பலர் நினைக்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்ட்டில் மாதம் ரூ.100, ரூ.500 கூட முதலீடு செய்ய முடியும்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) என்கிற எஸ்.ஐ.பி முறையில் அல்லது மொத்தத் தொகையை முதலீடு செய்து வரலாம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை.

முதலீட்டுக்கான ஆதாரம்...

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ததற்கான ஆதாரமாக அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் இருக்கிறது. இதை இ-மெயிலில் அனுப்புவார்கள். முதலீடு குறித்த அனைத்து விவரங்களையும் முதலீட்டாளரின் பதிவு செய்யப் பட்ட செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் ஆக அனுப்புவார்கள். இந்த அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் வந்தவுடன் அதில் உள்ள உங்களைப் பற்றிய விவரங்கள் எல்லாம் சரியானதா என்பதை சரிபார்ப்பது அவசியம்.

மியூச்சுவல் ஃபண்ட் துறையின் முன்னேற்றத்துக்கு இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப் பான ஆஃம்பி பாடுபட்டு வருகிறது. இந்தத் துறையை செபி அமைப்பு கண்காணித்து வருகிறது.

லாபம் எப்படி கிடைக்கும்..?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் லாபத்தை இரு வழி களில் முதலீட்டாளர்களுக்கு வழங்குகின்றன. ஒன்று, டிவிடெண்ட் (Dividened). மற்றொன்று, வளர்ச்சி (Growth). டிவிடெண்ட் ஆப்ஷனில் லாபம் இடையிடையே டிவிடெண்ட் என்கிற பெயரில் வழங்கப்படும். குரோத் ஆப்ஷனில் லாபத்தை முதலீட்டாளர் தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ளலாம். மியூச்சுவல் ஃபண்ட் விண்ணப்பப் படிவத்தில் முதலீட்டாளர் டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்யவில்லை எனில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமே குரோத் ஆப்ஷனைத் தேர்வு செய்துவிடும்.

வருமானவரிச் சலுகை...

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு மற்ற முதலீட்டுத் திட்டங்களைவிட குறைவான வரி கட்டினால் போதும். அந்த வகையில் வரி அணுகூலம் கொண்டவையாகும்.

மியூச்சுவல் ஃபண்டின் முக்கிய பிரிவான, இ.எல்.எஸ்.எஸ்-ல் செய்யப்படும் முதலீட்டுக்கு நிபந்தனைக்கு உட்பட்டு நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை கிடைக்கும். இதில் குறைந்தபட்ச முதலீடு ரூ.500 என்பதால், அனைவரும் சுலபமாக முதலீடு செய்து வரிச் சலுகை பெற முடியும்.

(முதலீடு செய்வோம்)

கோல்டு இ.டி.எஃப் ஃபண்ட்... டீமேட் அவசியம்!

டீமேட் கணக்கின் வழியாகவும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். ஆனால், டீமேட் அவசியம் இல்லை. ஏற்கெனவே உங்களுக்கு டீமேட் கணக்கு இருந்தால் அதன் மூலம் முதலீடு செய்யலாம். கோல்டு இ.டி.எஃப் ஃபண்டில் முதலீடு செய்வது என்றால் அவசியம் டீமேட் கணக்கு தேவைப்படும்.