Published:Updated:

ஏற்றத்தை நோக்கி இன்ஃப்ரா துறை... எந்தெந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்?

இன்ஃப்ரா துறை
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஃப்ரா துறை

கவர் ஸ்டோரி

இன்ஃப்ரா [Infra(structure)] ஃபண்டுகளின் மீது இன்றைக்கு பல ஸ்மார்ட் முதலீட்டாளர்களின் கவனம் திரும்பி இருக்கிறது. இன்ஃப்ரா ஃபண்டுகள் நல்ல லாபம் தருமா என்பதைப் பார்ப்பதற்கு முன், இன்ஃப்ரா என்றால் என்ன என்று பார்த்து விடுவோம்.

சொக்கலிங்கம் பழனியப்பன் டைரக்டர், ப்ரகலா வெல்த் பி. லிட். (www.prakala.com)
சொக்கலிங்கம் பழனியப்பன் டைரக்டர், ப்ரகலா வெல்த் பி. லிட். (www.prakala.com)

இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்றால் தமிழில் உள்கட்டமைப்பு என்று பொருள். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைப் பொறுத்தவரை, இன்ஃப்ராவை ஒரு துறை என்று கூறுவதைவிட ஒரு தீம் என்று கூறலாம். அதாவது, ஒரு நாட்டின் உள்கட்டமைப்புக்குத் தேவையான அனைத்துத் துறைகளும் இன்ஃப்ராவில் அடங்கும்.

கட்டுமான நிறுவனங்கள், சிமென்ட் நிறுவனங்கள், இன்ஜினீயரிங் மற்றும் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மெட்டல், ஆயில் அண்ட் கேஸ், மின் உற்பத்தி, ஆட்டோமொபைல், டெலிகாம், ஹெல்த்கேர் போன்ற நிறுவனங்கள் இன்ஃப்ரா தீமின்கீழ் வரும். ஆனால், பார்மா, எஃப்.எம்.சி.ஜி, ஃபைனான்ஷியல், ஐ.டி, பேப்பர், டெக்ஸ்டைல்ஸ், மீடியா போன்றவை இன்ஃப்ரா தீமின்கீழ் பொதுவாக வராது.

ஒரு நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பில் முதலீடு அதிக அளவில் இருப்பது மிக மிக அவசியம். நுகர்பொருள் துறையானது ஓரளவு அடிப்படை வளர்ச்சியை மட்டுமே ஜி.டி.பி-க்குத் தரும். ஆனால், ஜி.டி.பி-க்கு மிகப்பெரிய வளர்ச்சியை உள்கட்டமைப்பு மூலம்தான் கொண்டு வர முடியும். அதற்கு முதலீடு அவசியம். கடந்த 2004 – 2008 காலகட்டத்தில் ஜி.டி.பி-யில் இன்ஃப்ரா துறையின் முதலீடு ஆண்டு தோறுமான (CAGR) வளர்ச்சி 23.70 சதவிகிதமாக இருந்தது. அதுவே 2009 - 2018 காலகட்டத்தில் 11.90 சதவிகிதமாகக் குறைந்தது.

2019 - 2021 காலகட்டத்தில் அந்த முதலீட்டு வளர்ச்சியானது நெகட்டிவ்வாக அதாவது, 2.70 சதவிகிதமாக ஆகியுள்ளது. இவ்வளவு அடிமட்டத்துக்கு நாம் வந்துவிட்டதால், இங்கிருந்து முதலீடுகள் பெருகத்தான் வாய்ப்புள்ளது. அது மட்டுமல்ல, இன்ஃப்ரா தீம் அதீதமான வளர்ச்சி அடைவதற்கு முக்கியமான பல காரணங்கள் உள்ளன. அந்தக் காரணங்களைப் பார்ப்போம்.

1. வங்கிகளின் பேலன்ஸ்ஷீட்டுகள் நன்றாக சுத்தமாகியுள்ளன. அதாவது, வாராக்கடன்கள் வெகுவாகக் குறைந்துள்ளன (பார்க்க வரைபடம் 1).

2. நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு கிடைக்கும் கடன்களின் வட்டி விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது. இன்னும் சில காலத்துக்கு இது தொடரும் என்றே எதிர் பார்க்கலாம் (பார்க்க வரைபடம் 2),

3. உற்பத்தித் துறையில் புதிதாக இறங்கும் நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் டாக்ஸை இந்திய அரசாங்கம் வெகுவாகக் குறைத்துள்ளது (பார்க்க வரைபடம் 3).

4. கடந்த பல வருடங்களாக மூலதனச் செலவு (Capital expenditure) அதிக அளவில் நடக்கவில்லை. இப்போதுதான் மீண்டும் நன்கு செலவழிக்கப் படும் நிலை உருவாகியுள்ளது. இது இங்கிருந்து அதிவேகமாக வளர்ச்சியடைய நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. (பார்க்க வரைபடம் 4)

சீனாவுடனும் வளர்ந்த நாடுகளுடனும் ஒப்பிடுகையில், இந்தியாவில் ரயில்வே, நெடுஞ்சாலை, நீர்வழிகள், துறைமுகங்கள், விமானத்தளங்கள் போன்ற உள்கட்டமைப் புகள் பலவற்றிலும் வளர்ச்சியானது மிகவும் பின்தங்கியுள்ளது. இவற்றில் மிகப் பெரிய அளவில் முதலீடுகள் இனி செல்லும்.

ஏற்றத்தை நோக்கி இன்ஃப்ரா துறை... எந்தெந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்?

வேகமாக வளரும் ரியல் எஸ்டேட் துறை...

அதேபோல, கடந்த பல ஆண்டுகளாக மந்தமாக உள்ள ரியல் எஸ்டேட் துறையும் தற்போது சரியாகி வேகமாக வளர்வதற்குத் தயாராக உள்ளது. மேலும், உலோக விலைகள் ஏறியிருப்பதால், உலோகத் துறையில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் நல்ல லாபத்தை ஈட்டி வருகின்றன. இந்த லாபங்களில் பெரும்பகுதி முதலீட்டுக்கு வர நிறைய வாய்ப்புண்டு.

சிமென்ட் நிறுவனங்கள் ஏற்கெனவே பல மில்லியன் டன்களுக்கு விஸ்தரிப்பை அறிவித்துள்ளன. இவை தவிர, புதிய பொருளாதாரத் துறை களான எலெக்ட்ரிக் வாகனங்கள், டேட்டா சென்டர்கள், டிஜிட்டல் இன்ஃப்ரா போன்ற பல தொழில்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன.

மேலும், நமது மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தி உள்ள பி.எல்.ஐ (PLI – Production Linked Incentive) திட்டம் நன்கு பிரபலமடைந்து வருகிறது. அதுவும் ஒரு பெரிய உந்து சக்தியாக உள்ளது. இவை அனைத்தும் இந்த தீமிற்கான எதிர்கால வாய்ப்புக்கள்.

ஏற்றத்தை நோக்கி இன்ஃப்ரா துறை... எந்தெந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்?

நல்ல லாபம் தரும்...

2007- 2008-ல் இன்ஃப்ரா துறை உச்சத்தில் இருந்தபோது, நிஃப்டி 50 குறியீட்டில் அதன் வெயிட்டேஜ் அதிகமாக இருந்தது. தற்போது நிஃப்டி 50 குறியீட்டில் இந்தத் தீம் சார்ந்த துறைகளின் (கேப்பிடல் கூட்ஸ், சிமென்ட், மெட்டல்ஸ், யுட்டிலிட்டி, ஆயில் அண்ட் கேஸ், டெலிகாம்) வெயிட்டேஜ் வெகுவாகக் குறைந்துள்ளது. ஆகவே, இன்ஃப்ரா தீம் மேலெழும்போது, இப்போது செய்யும் முதலீடுகள் நல்ல லாபத்தை ஈட்டித் தரும்.

அதிக ரிஸ்க் கொண்டவை...

துறை / தீம் சார்ந்த ஃபண்டுகள், டைவர்சிஃபைடு ஈக்விட்டி ஃபண்டுகளைவிட அதிக ரிஸ்க் உடையவை. மேலும், நல்ல லாபம் கிடைக்கும்போது அந்த முதலீட்டை விட்டு நாம் வெளியேறத் தயங்கக் கூடாது. உங்கள் முதலீட்டில் 10 – 20 சதவிகிதத்தை இதுபோன்ற துறை மற்றும் தீம் சார்ந்த முதலீடுகளுக்காக ஒதுக்கலாம்.

வேறுபடும் முதலீடுகள்...

இன்ஃப்ரா தீமில் செயல்படும் ஃபண்டுகள் ஒவ்வொன்றும் சற்று மாறி செயல்படுகின்றன. சில ஃபண்டுகள் வங்கி சார்ந்த பங்குகளையும் தங்களது போர்ட்ஃபோலியோவில் கொண்டுள்ளன. அந்த வங்கிகள் இன்ஃப்ரா சார்ந்த நிறுவனங்களுக்குக் கடன் கொடுப்பதே இதற்குக் காரணம். ஒரு சில ஃபண்டுகள் கெமிக்கல்ஸ், உரங்கள் போன்ற நிறுவனப் பங்குகளிலும் தங்களது முதலீட்டை வைத்துள்ளன.

பொருளாதார மாற்றத்தால் ஏற்படும் வளர்ச்சியைத் தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ள அந்த ஃபண்டுகள் விரும்புகின்றன. இந்த தீமில் உள்ள பல ஃபண்டுகள் இன்ஃப்ரா தீமில் உள்ள நிறுவனங்களில் மட்டுமே தங்களது கவனத்தைச் செலுத்துகின்றன. ஆகவே, முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீட்டுக்காகத் தேர்வு செய்யும் ஃபண்டுகளைப் பற்றி, நன்கு படித்துத் தெரிந்துகொண்டு முதலீடு செய்ய வேண்டும்.

தற்போதைய நிலையில், இன்ஃப்ரா தீமில் 21 ஃபண்டுகள், ரூ.13,700 கோடிக்கும் மேற்பட்ட தொகையை நிர்வகித்து வருகின்றன. கீழ்க்கண்ட ஃபில்டர்கள் மூலம் ஆராய்ந்து பார்த்ததில், மிஞ்சிய முக்கியமான ஃபண்டுகள் இனி...

1. ஃபண்டின் நிர்வகிக்கும் தொகை ரூ.100 கோடிக்குமேல் இருக்க வேண்டும்.

2. கடந்த மூன்று வருட கால வருமானம், பி.எஸ்.இ 100 (டி.ஆர்.ஐ) குறியீட்டின் வருமானத்தைவிட அதிகமாக இருக்க வேண்டும்.

3. வேல்யூ ரிசர்ச் ஸ்டார் ரேட்டிங் 4 ஸ்டார்களுக்கு அதிகமாக இருக்க வேண்டும்.

இந்த ஃபில்டர்களை அப்ளை செய்ததில், நமக்கு கிடைத்தது ஐந்து ஃபண்டுகள் ஆகும். அந்த ஐந்து ஃபண்டுகள் பற்றிய குறிப்புகளைக் கீழே தந்துள்ளோம்.

ஏற்றத்தை நோக்கி இன்ஃப்ரா துறை... எந்தெந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்?

குவான்ட் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் ஃபண்ட்

இந்த ஃபண்ட் கடந்த காலங் களில் நம்பர் 1 வருமானத்தைக் கொடுத்துள்ளது. இதன் ஃபண்ட் மேனேஜர் அங்கித் ஏ பாண்டே ஆவார்னிந்த ஃபண்டின் டாப் ஹோல்டிங்ஸ் அதானி என்டர்பிரைசஸ், வேதாந்தா, ஐ.டி.சி, அதானி போர்ட்ஸ் மற்றும் எஸ்.பி.ஐ ஆகும். இதன் டாப் துறைகள்... சர்வீசஸ், ஃபைனான்ஸ், கன்ஸ்ட்ரக்‌ஷன் மற்றும் மெட்டல்ஸ் ஆகும். இது ஒரு அக்ரெஸிவ் இன்ஃப்ரா ஃபண்டாகும்.

இன்வெஸ்கோ இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்ட்

ரூ.370 கோடி தொகையை நிர்வகித்து வரும் இந்த ஃபண்டின் மேனேஜர்கள் அமித் நிகம் மற்றும் நீலேஷ் தம்னாஸ்கர் ஆவார்கள்.

இந்த ஃபண்ட் நிதித் துறையில் எவ்விதமான முதலீட்டையும் வைத்துக் கொள்ளவில்லை. இந்த ஃபண்டின் டாப் துறைகள்... கன்ஸ்ட்ரக்‌ஷன் (33%), இன்ஜினீ யரிங் (22%), எனர்ஜி (13%) மற்றும் சர்வீசஸ் (9%).

இதன் போர்ட்ஃபோலியோ வில் இருக்கும் டாப் பங்குகள்... எல் அண்ட் டி (9.15%), ரிலையன்ஸ் இண்டஸ் ட்ரீஸ் (4.43%), டாடா பவர் (4.41%), கே.இ.ஐ இண்டஸ்ட்ரீஸ் (3.59%) மற்றும் ஜி.ஆர் இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ் (3.58%).

எஸ்.பி.ஐ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்ட்

ரூ.700 கோடிக்கும் மேலான சொத்துகளை நிர்வகித்து வரும் இந்த ஃபண்டின் மேனேஜர் நிதி சாவ்லா ஆவார். இந்த ஃபண்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன் (32%), இன்ஜினீயரிங் (14%), எனர்ஜி (13%) போன்ற துறைகளில் அதிகமான வெயிட்டேஜை வைத்துள்ளது.

இந்த ஃபண்ட் வைத்திருக்கும் டாப் பங்குகள் எல் அண்ட் டி (12.27%), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (8.44%), பார்தி ஏர்டெல் (7.16%), அல்ட்ராடெக் சிமென்ட் (5.45%) மற்றும் டிம்கன் இந்தியா (3.28%) ஆகும்.

பிற இன்ஃப்ரா ஃபண்டுகளைப்போல இந்த ஃபண்டின் பீட்டாவும் (0.75) குறைவாகத்தான் உள்ளது.

டி.எஸ்.பி டைகர் ஃபண்ட்

இது ரூ.1,300 கோடிக்கும் மேலான சொத்து களை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் சரண்ஜித் சிங் மற்றும் ரோகித் சிங்கானியா ஆவார்கள்.

இந்த ஃபண்ட் நம் நாட்டின் இன்ஃப்ரா துறை வளர்ச்சியைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்வதுடன், நமது பொருளாதார சீர்திருத் தத்தின் வளர்ச்சியையும் சாதகமாக்கிக் கொள்கிறது. ஆகவே, கெமிக்கல்ஸ், உரங்கள், கன்ஸ்யூமர் கூட்ஸ், ஃபைனான்ஸ் பிளாட் ஃபார்ம்கள் மற்றும் ஆன்லைன் காமர்ஸ் போன்ற ஏரியாக்களிலும் முதலீடு செய்கிறது.

இந்த ஃபண்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன் (26%), இன்ஜினீயரிங் (21%), எனர்ஜி (15%) போன்ற துறைகளில் அதிகமான வெயிட்டேஜை வைத்துள்ளது.

இந்த ஃபண்ட் வைத்திருக்கும் டாப் பங்குகள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (4.89%), எல் அண்ட் டி (4.44%), அல்ட்ராடெக் சிமென்ட் (3.67%) மற்றும் சீமென்ஸ் (2.94%) ஆகும்.

ஃப்ராங்க்ளின் பில்ட் இந்தியா ஃபண்ட்

ரூ.1,100 கோடிக்கும் மேலான சொத்துகளை நிர்வகித்து வரும் இந்த ஃபண்டின் மேனேஜர்கள் அஜய் அர்கள் மற்றும் ஆனந்த் ராதாகிருஷ்ணன் ஆவார்கள்.

இந்த ஃபண்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன் (26%), எனர்ஜி (22%), ஃபைனான்ஸ் (19%) மற்றும் இன்ஜினீயரிங் (10%) போன்ற துறைகளில் அதிகமான வெயிட்டேஜை வைத்துள்ளது.

எல் அண்ட் டி, ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், பார்தி ஏர்டெல், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்.பி.ஐ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன.

இந்த ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீடா னது குறிப்பிட்ட சில பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் அதிகம் கொண்டவை. உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறனை நன்கு ஆராய்ந்து, இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்ய பரிசீலிப்பது முக்கியம்.

குறிப்பு: ரிசர்ச் உதவி - டி.எஸ்.பி மியூச்சுவல் ஃபண்ட்