பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை..! - முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கம்

தடுப்பூசி போன்ற சுகாதாரத் தீர்வு எட்டப்படும் வரை தங்கம் விலை புதிய உச்சங்களைத் தொடவே செய்யும்!

ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

ந்தியாவில், தங்கத்தின் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் புதிய உச்சத்தில் வர்த்தகமாகி நடைபெற்று வருகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூபாய் 4,815-ஆக அதிகரித்துள்ளது.

இந்த விலையேற்றம் என்பது நிச்சயமாகத் தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி கலந்த செய்திதான். ஏனென்றால், மார்ச் மாத இறுதியிலிருந்து, ஜூன் வரையிலான காலத்தில் நகைக்கடைகள் திறக்கப்படாமல் இருந்த நிலையிலேயே விலை ஏறியிருக்கிறது. `கோடை விடுமுறையில் வாங்கலாம்’ என்று திட்டமிட்டிருந்தவர்களுக்கும் இது பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.

தங்கத்தின் விலையில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்றம் காணப்படுவதற்கு என்ன காரணம் என்பதை விரிவாக அலசலாம்.

2011-ம் ஆண்டுக்குப் பிறகு தங்கத்தின் சர்வதேச விலை, தற்போது ஒரு ட்ராய் அவுன்ஸ் 1,887 அமெரிக்க டாலராக அதிகரித்துக் காணப்படுகிறது. எப்போதெல்லாம் பொருளாதார வளர்ச்சிக்குத் தடைகள் ஏற்படுகின்றனவோ, அப்போதெல்லாம் பாதுகாப்பான முதலீடாகப் பார்க்கப்படும் தங்கத்தின்மீது முதலீடுகள் அதிகரிக்கின்றன.

உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை..! - முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய அமெரிக்க-சீன வர்த்தகப் போர், இந்த விலை ஏற்றத்துக்கு அச்சாரமாக அமைந்தது. உலகின் இரண்டு பெரிய வர்த்தக நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தில் முரண்பாடு ஏற்படும்போது ஒட்டுமொத்த உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒருவிதமான நிச்சயமற்ற தன்மை ஏற்படுகிறது. இது நிறுவனங்களுக்கும் சரி, முதலீட்டாளர்களுக்கும் சரி... தீர்க்கமான முடிவை எடுக்க முடியாமல் தொழில் முதலீடுகள் தள்ளிவைக்கப்படுகின்றன அல்லது முழுவதுமாகக் கைவிடப்படுகின்றன. இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட வர்த்தகம் சார்ந்த மோதல்களால் முதலீடுகள் தங்கத்தின் பக்கம் திரும்பியது. இதனால், படிப்படியாகத் தங்கத்தின் விலை அதிகரிக்க ஆரம்பித்தது. இதன் தாக்கம் இந்திய விலைகளிலும் எதிரொலித்துக்கொண்டே வந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகராக சரிந்து காணப்படுவதும், இந்த விலையேற்றத்துக்கு ஆதரவு அளித்து வருகிறது. இந்தியாவின் தங்க இறக்குமதி மற்றும் நகை விற்பனை மிகவும் குறைந்து காணப்பட்டாலும், சர்வதேச விலை இந்திய விலையில் நேரடியாகப் பிரதிபலிக்கிறது. முக்கியமாக, நடப்பு 2020-ம் ஆண்டில் மட்டும் சர்வதேச விலை 22% என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.

உலகப் பொருளாதார வளர்ச்சியில் தேக்கம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலக அளவில் வேலைவாய்ப்பின்மை மிகப் பெரிய அளவில் பேசப்படும் செய்தியாக இருக்கிறது. வேலை இழப்பு என்று சொல்லும் போதே, வளர்ச்சி என்பது குறைகிறது. அமெரிக்காவில் இரண்டாம் கட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. இதனால் பல்வேறு மாகாணங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தங்கம்
தங்கம்

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் நுகர்வோரின் செலவினங்கள் என்பது முக்கியத்துவம் பெறுகின்றன. `ஊரடங்கிலிருந்து மீண்டுவரும் நிலையில் மீண்டும் வணிக வளாகங்கள், உணவகங்களை மூடிவைத்தல் என்பது பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்’ என்ற கருத்து முதலீட்டாளர்கள் இடையே வலுத்துவருகிறது.

அமெரிக்கப் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குத் திருப்புவதற்காக அமெரிக்க ஃபெடரல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வட்டி விகிதங்களை மிகவும் குறைவாக வைத்திருக்கிறது. பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும்விதமாக பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கு உலக அளவில் கொரோனா பாதிப்பின் காரணமாக, பல்வேறு நாடுகளின் நிதித் தளர்வின் அளவு 15 ட்ரில்லியன் டாலராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பொருளாதார வளர்ச்சி குறித்த அச்சம், அமெரிக்காவை மட்டுமல்லாமல் ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும் காணப்படுகிறது. இதனால் கடந்த 21-ம் தேதி அன்று, ஐரோப்பிய யூனியன், பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல நிதிக் கொள்கைகளில் தளர்வை அறிவித்தன. `இதைப் பயன்படுத்தி பணப்புழக்கத்தை அதிகரிக்கலாம்’ என்பது மத்திய வங்கிகளின் எண்ணம். ஆனால், நடைமுறையில் இத்தகைய முயற்சிகள் வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்தில் பெரிய அளவுக்கான மாற்றங்களைக் கொண்டு வருமா என்று சந்தேகப்படுகிறார்கள் முதலீட்டாளர்கள். இத்தகைய நடவடிக்கைகள் தங்கத்தின்மீதான முதலீடுகள் அதிகரிக்க வலுவான காரணங்களாக அமைகின்றன.

இ.டி.எஃப் முதலீடுகள் அதிகரிப்பு!

உலக அளவில் தங்கம் சார்ந்த இ.டி.எஃப் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. உலகத் தங்க குழுமத்தின் (World Gold Council) அறிக்கையின்படி, கடந்த ஜூன் மாதம் வரையில் கோல்டு இ.டி.எஃப் மீதான முதலீடுகள் 3,621 டன்களாக உயர்ந்துள்ளன. சர்வதேச அளவில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 734 டன்களாக முதலீடுகள் நடைபெற்றுள்ளன.

2009-ம் ஆண்டின் ஒட்டுமொத்த கோல்டு இ.டி.எஃப் முதலீடு
2020-ம் ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் செய்யப்பட்ட கோல்டு இ.டி.எஃப் முதலீடு
2009-ம் ஆண்டின் ஒட்டுமொத்த கோல்டு இ.டி.எஃப் முதலீடு 2020-ம் ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் செய்யப்பட்ட கோல்டு இ.டி.எஃப் முதலீடு

2009-ம் ஆண்டின் முழுமைக்கும் கோல்டு இ.டி.எஃப் முதலீடுகள் 646 டன்களாகக் காணப்பட்ட நிலையில், நடப்பு 2020-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே இந்த அளவுக்கு முதலீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க செய்தி. (பார்க்க வரைபடம்).

தங்கத்தில் முதலீடு..!

இந்தியாவைப் பொறுத்தவரை, 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் தொடங்கி, 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலத்தில் சுமார் 3,700 கோடி வரை கோல்டு இ.டி.எஃப் மீது இந்திய நுகர்வோர்களால் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய முதலீடுகளின் ஆதாயப்பலன் ஒரு வருட காலத்தில் 41%, மூன்று வருட காலத்தில் 19.41%, ஐந்து வருட காலத்தில் 11.90% என்ற அளவில் உள்ளது.  

ஏற்றம் தொடருமா?

சர்வதேச நிகழ்வுகளின் அடிப்படையில், மிகக் குறுகியகாலத்தில், தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. `நுகர்வு’ என்று சொல்லக்கூடிய தேவையின் அடிப்படையில் இல்லாமல், உலக அளவிலான பொருளாதாரம் சார்ந்த அச்சங்கள் காரணமாகவும், நோய்த் தொற்று மேலும் எவ்வளவு காலத்துக்கு நீடித்திருக்கும் என்பதில் காணப்படும் நிச்சயமற்ற தன்மை காரணமாகவும் இந்த விலையேற்றம் சர்வதேசச் சந்தையில் நிகழ்ந்துவருகிறது. இந்த நோய்த் தொற்றுக்கு தடுப்பூசி போன்ற சுகாதாரத் தீர்வு எட்டப்படும் வரை தங்கம் விலை புதிய உச்சங்களைத் தொடவே செய்யும்!

ரூ.60,000-த்தைத் தாண்டிய வெள்ளி விலை...

ர்வதேசச் சந்தையில்,2013-ம் ஆண்டுக்குப் பிறகு வெள்ளியின் விலை கடந்த புதன்கிழமை அன்று ஒரே தினத்தில் 8 சதவிகிதமாக அதிகரித்தது. ஒரு ட்ராய் அவுன்ஸ் 22.93 அமெரிக்க டாலராக வர்த்தகம் நடைபெற்றுள்ளது. 

உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை..! - முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

`ஏழைகளின் தங்கம்’ என்று சொல்லப்படும் வெள்ளியும், தங்கத்தைப் பின்தொடர்ந்து விலை அதிகரித்துவருகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.62,000-ஐ கடந்து வர்த்தகமாகிவருகிறது.