Published:Updated:

`ஆன்லைன் பிசினஸ்தான் எதிர்காலம்!’- வெற்றி ரகசியம் சொல்லும் `BigBasket’ ஹரிமேனன்

மளிகைப் பட்டியல்
மளிகைப் பட்டியல்

BigBasket: கோவிட்-19 சிக்கல் தொடங்கியபோது ஆர்டர்களின் எண்ணிக்கை சரிந்தது. பிறகு, படிப்படியாக உயர்ந்து தினமும் 3.5 லட்சம் அளவுக்கு ஆர்டர்கள் குவிந்தன.

- வா.கார்த்திகேயன்

நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சிக்குத் தேவையான நிதியைச் திரட்டுவது அவ்வப்போது நடந்துவருவதுதான். அந்த வகையில் தனது நிறுவனத்துக்குத் தேவையான நிதியைத் திரட்ட முடிவெடுத்திருந்தது பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிக்பாஸ்கெட் நிறுவனம். ஆனால், கோவிட்-19 நோய்த் தொற்று வந்தபிறகு, நிதி திரட்டும் முடிவைக் கைவிட்டு நிறுவனத்தில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டே நடத்த முடிவெடுத்திருக்கிறது பிக்பாஸ்கெட் நிறுவனம்.

Hari Menon
Hari Menon

கோவிட்-19 தொற்றால் எல்லா நிறுவனங்களும் கடுமையாகப் பாதிப்படைந்திருக்க, இந்த நிறுவனம் மட்டும் எப்படி நன்றாகச் செயல்பட்டு, அதிக லாபம் சம்பாதிக்கிறது என்கிற கேள்வி எழுவது இயற்கைதானே! நமக்கும் அந்தக் கேள்வி வரவே, பிக்பாஸ்கெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹரி மேனனை தொடர்புகொண்டோம். நம்முடைய கேள்விகளை, இ-மெயில் மூலம் அவருக்கு அனுப்பி வைக்க, அதற்குப் பதில் அளித்தார் அவர்.

’’தொடக்கத்தில் நிதி திரட்ட முடிவெடுத்தீர்கள். இப்போது அந்தத் திட்டத்தைக் கைவிட்டது ஏன்?’’

’’கோவிட் -19 சிக்கல் தொடங்கியபோது ஆர்டர்களின் எண்ணிக்கை சரிந்தது. பிறகு, படிப்படியாக உயர்ந்து தினமும் 3.5 லட்சம் அளவுக்கு ஆர்டர்கள் குவிந்தன. இதனால் மே மாத வருமானம் ரூ.650 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்தத் தொகையினை ஓர் ஆண்டுக்கு கணக்கிட்டால், பில்லியன் டாலர் அளவுக்கு வருமானம் ஈட்டும் நிறுவனமாக எங்கள் நிறுவனம் உயரும்.

வருமானம் உயர்ந்திருப்பதால் செயல்பாட்டு அளவில் லாப பாதைக்கு நிறுவனம் திரும்பி இருக்கிறது. பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுப்பது, மார்கெட்டிங், நிரந்திரச் செலவுகள் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளுக்குப் பிறகும் லாபம் இருக்கிறது. இதனால் ஜூலையில் நிதி திரட்ட ஏற்கெனவே நிறுவனம் திட்டமிட்டிருந்தது. தற்போது செயல்பாட்டு அளவில் லாபம் இருப்பதால், புதிதாக நிதி திரட்டும் முடிவு குறித்து மறுபரிசீலனை செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் தினமும் 3.5 லட்சம் ஆர்டர்கள் குவிகின்றன.’’

’’கோவிட்-19-க்குப் பிறகும் இதே அளவுக்கு ஆர்டர்கள் இருக்குமா? அல்லது வைரஸ் தாக்கம் குறைந்த பிறகு ஆர்டர்களின் எண்ணிக்கை குறையுமா?’’

‘‘தற்போது பொருள்களை வாங்கும் முறையில் பெரிய அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது. பலர் ஆன்லைன் மூலம் வாங்குவதை விரும்புகிறார்கள். வரும் காலத்திலும் இதே டிரெண்ட் நீடிக்கத்தான் செய்யும். கடந்த பிப்ரவரி மாதத்தின் வருமானத்தைவிட தற்போது 50% அளவுக்கு நிறுவனத்தின் வருமானம் உயர்ந்திருக்கிறது. இதே அளவுக்கான வளர்ச்சி வரும் மாதங்களில் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், ஆன்லைன் மூலம் பொருள்களை வாங்குவது சீராக உயரவே செய்யும்.’’

̀`மொத்த முதலீடும் முடங்கியது!' கலங்கும் சிறு குறு வியாபாரிகள்... மீள்வது எப்படி?

’’தற்போதைய வைரஸ் தாக்குதலால் டிஜிட்டல் சேவையை நோக்கி பலர் வருகின்றனர். இந்த மாற்றம் பிக்பாஸ்கட்டுக்கு சாதகமாக இருக்கிறதா, ஆன்லைன் மளிகை விற்பனையில் உங்களின் சந்தை பங்களிப்பு எவ்வளவு?’’

Online shopping
Online shopping

‘‘அத்தியாவசிய மளிகைத் தேவை என்பது மிகப்பெரிய சந்தை. இதில் ஆன்லைன் நிறுவனங்களின் பங்கு என்பது 1% என்னும் அளவில்தான் உள்ளது. சந்தை பெரியதாக இருப்பதால், பல நிறுவனங்களுக்கும் இங்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும், பல நிறுவனங்கள் வரும்பட்சத்தில்தான் ஆன்லைன் மளிகை நிறுவனங்களின் சேவைகளை வாடிக்கையாளர்கள் புரிந்துகொள்வார்கள்.’’

’’லாக்டௌன் காலத்தை எப்படி சமாளித்தீர்கள். மனிதவளம், சப்ளைசெயின், டெலிவரி என ஒவ்வொரு இடத்திலும் சவால்கள் இருந்திருக்குமே?’’

லாக்டௌன் இந்தியா
லாக்டௌன் இந்தியா

‘‘லாக்டௌன் அறிவிக்கப்பட்ட சமயத்தில் எங்களுடைய பணியாளர்களில் 60 - 70% பேர் வரை தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டார்கள். மாறாக எங்களது ஆர்ட்கள் சுமார் ஆறு மடங்கு அளவுக்கு உயர்ந்தது. சூழ்நிலையை மேம்படுத்த பல விஷயங்களை நாங்கள் செய்தோம். வாடகை டாக்ஸிகள், சிறிய கடைகள் என பல தரப்பினரையும் எங்கள் பார்ட்னர்களாக இணைத்தோம். இதன்மூலம் மனிதவளப் பிரச்னையைச் சரிசெய்தோம். தவிர, அரசாங்கங்களுடன் இணைந்து பணிபுரிந்தோம். பணியாளர்கள் எங்களுடைய கிடங்குக்கு வருவது மற்றும் பொருள்களை டெலிவரி செய்வதற்குத் தேவையான அனுமதியைப் பெற்றோம். இதன்மூலம் எங்களது செயல்பாடுகளை எளிமையாக்கினோம். இருப்பதை வைத்துக்கொண்டு அதிக வேலைகளை செய்யத் திட்டமிட்டோம். டெலிவரிகளை அதிகமாக செய்ய வேண்டும் என்பதை மட்டுமே முக்கிய இலக்காக கொண்டு நாங்கள் செயல்பட்டோம்.’’

’’மளிகை என்பது அத்தியாவசிய பொருள்கள் என்பதால் விற்பனையில் பெரிய சரிவு இருக்காது. ஆனால், இறைச்சி, முந்திரி, கிரீம் பிஸ்கட் போன்ற பிற பொருள்களின் விற்பனை சரிந்ததா?’’

Food and Grocery Delivery
Food and Grocery Delivery

‘‘காய்கறி, பழம் மற்றும் இறைச்சியை ஆன்லைனில் வாங்கும்போக்கு அதிகரித்திருக்கிறது. உதாரணத்துக்கு, கோவிட் -19 சிக்கலுக்குமுன்பு எங்களது மொத்த வருமானத்தில் காய்கறி மற்றும் பழங்களின் பங்கு 16%-18% வரை மட்டுமே இருந்தது. அது தற்போது 20 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. இறைச்சி பிரிவிலும் ஆர்டர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதனால் இந்தப் பிரிவை நாங்கள் விரிவுபடுத்தி வருகிறோம். தவிர, உயர்தர உணவகங்களில் கிடைக்க உணவுகளை வீட்டியே செய்வதற்கு (Gourmet cooking) தேவையான மூலப்பொருள்கள் வாங்குவது அதிகரித்திருக்கிறது. Ready to Cook மற்றும் உடனடியாக உண்ணகூடிய பொருள்கள் விற்பனையில் ஏற்றம் இருக்கிறது. எதிர்ப்பு சக்தியை உயர்த்தகூடிய எழுமிச்சை, இஞ்சி உள்ளிட்டவற்றில் அதிக விற்பனை இருக்கிறது. மாஸ்க், கிருமிநாசினி, உள்ளிட்ட சுத்தம் சார்ந்த பொருள்களின் விற்பனையிலும் ஏற்றம் இருக்கிறது.’’

Vikatan

கோவிட் சிக்கலால் மக்களின் வாங்கும் திறன் குறைந்திருக்கிறதா?''

‘‘குறையவில்லை. பிக்பாஸ்கெட் வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை மளிகை பொருள்களுக்கு செய்யும் செலவு உயர்ந்திருப்பதாகவே நினைக்கிறேன்.’’

- வா.கார்த்திகேயன்

அடுத்த கட்டுரைக்கு