Published:Updated:

தங்கம் முதல் மியூச்சுவல் ஃபண்ட் வரை... உங்களுக்கான சரியான முதலீடு எது? - ஒரு வழிகாட்டி

Representational Image
Representational Image

பி.பி.எஃப் தொடங்கி மியூச்சுவல் ஃபண்ட் வரை ஏகப்பட்ட முதலீட்டு திட்டங்கள் உள்ளன. இவற்றுள் உங்களுக்கு ஏற்றதைக் கண்டறிவது எப்படி? சரியாக முதலீடு செய்ய விரிவான வழிகாட்டி.

ருவர் செய்திருக்கும் முதலீடுகளை அலசி ஆராய்ந்தால், அவற்றில் பல அவருக்குத் தேவையில்லாததாக இருக்கும். காரணம், அந்த முதலீடுகள் பற்றி அவர் சரியாகத் தெரிந்து கொள்ளாமல், யாரோ சொன்னார் என்பதற்காகச் செய்யப்பட்டவையாக இருக்கும். இந்த ஆபத்தினைத் தவிர்க்க, உங்கள் தேவைக்கு எந்த முதலீடு சரியாக இருக்கும் என்பதை நீங்களே தேர்வு செய்வதே சரியான முடிவாக இருக்கும். இந்த முடிவினை எடுப்பதற்கு சில முதலீட்டு வழிகளும், டிப்ஸ்களும் உள்ளன. அவற்றைப் பார்ப்போம். 

money
money

பொதுவாக, முதலீடுகளைப் பொறுத்தவரை சந்தை சார்ந்த திட்டங்கள், கடன் சார்ந்த திட்டங்கள், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் எனப் பல வகையான சொத்துகளாகப்  பிரிக்கப்பட்டுள்ளன. 

பங்கு சார்ந்த திட்டங்கள் என்பது நிறுவனப் பங்குகள், பங்கு சார்ந்த ஃபண்டுகள் போன்றவற்றைக் குறிப்பிடுவதாகும். அதேபோல, கடன் சார்ந்த திட்டங்கள் என்பது ஃபிக்ஸட் டெபாசிட், கடன் சார்ந்த ஃபண்ட் போன்ற குறிப்பிட்ட முதிர்வுக் காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட வருவாயுடன் தொடர்புடைய முதலீடுகளாகும். 

இனி, பிரதான முதலீட்டுத் திட்டங்களின் சாதக பாதகங்களைப் பார்ப்போம். 

பி.பி.எஃப் (Public Provident Fund)

பி.பி.எஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதிக்கு ஒவ்வோர் ஆண்டும், கடன் பத்திரங்களுக்கான அரசாங்கத்தின் நடப்பு வட்டி விகிதம் எவ்வளவோ, அதற்கு ஈடான வட்டி விகிதம் வழங்கப்படும்.  ஓர் ஆண்டுக்கு ரூ.1,50,000 என்ற அதிகபட்ச வரம்புடன், சிறு சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இந்தத் திட்டம் உள்ளது. இதில் செய்யப்படும் முதலீடு, 15 ஆண்டுகள் லாக்இன் பீரியட் கொண்டதாகவும், 80-சி பிரிவின்கீழ் வரி விலக்கு பெறும் தகுதிகொண்டதாகவும் இருக்கும்.

பி.பி.எஃப்-க்கான தற்போதைய வட்டி விகிதம், ஆண்டுக்கு 7.1 சதவிகிதமாக உள்ளது. இ.பி.எஃப் (Employee Provident Fund) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியும் பி.பி.எஃப் போன்றதே.

சாதகங்கள்: நீண்ட கால லாக்இன் பீரியட் உடன், உங்கள் பணம் ஒரு பக்கத்தில் நீண்ட காலத்துக்குப் பத்திரமாக இருப்பதை பி.பி.எஃப் உறுதி செய்கிறது. முதலீட்டுக்கு வரிச் சலுகை இருப்பதுடன், இதன்மூலமான வட்டிக்கும் வரி விலக்கு உள்ளது.
 
பாதகங்கள்:
  இது ஒரு கடன் பத்திர முதலீட்டு வகையைச் சேர்ந்ததாக இருப்பதால், அதன் வருவாய் குறிப்பிட்ட அளவுக்குள்தான் இருக்கும். மேலும், ஒவ்வோர் ஆண்டும் அதில் செய்யப்படும் அதிகபட்ச முதலீடுகூட, உங்களது ஓய்வுக்கால நிதிக்கு (கார்பஸ்) போதுமானதாக இருக்காது.

Money
Money

ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit)

வங்கிகள் வழங்கும் நிரந்தர ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் (எஃப்.டி-க்கள்) பொதுவானவையாகத்தான் உள்ளன. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் நன்றாகவும், கூடுதல் வட்டி விகிதத்துடனும் இருக்கின்றன. பொதுவாக, எஃப்.டி-க்கள், குறைந்தபட்சம் 7 தினங்கள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரைகூட பலவிதமான நிர்ணயிக்கப்பட்ட முதிர்வுக் காலம் கொண்டவையாக உள்ளன.

ஒரு சில வங்கி எஃப்டி-க்கள், முதிர்வுக் காலத்துக்கு முன்னரே வெளியேற அனுமதிக்கக் கூடியவையாக உள்ளன. ஆனால், பெரும்பாலானவை முதிர்வுக் காலம் வரை லாக்இன் கொண்டவையாகத்தான் உள்ளன. 

சாதகங்கள்:  எஃப்.டி-க்கள் பொதுவாக, ரிஸ்க் குறைவானவை என்பதுடன், உத்தரவாதமான வருவாயைத் தரக்கூடியவை. ரெக்கரிங் டெபாசிட்டுகளை (RD) ஆரம்பித்து, வங்கிகள் வழங்கும் டெபாசிட்டாக தானே மாறிக் கொள்ளும் வசதிகளை முற்றிலும் பயன்படுத்துவதுதான், முதலீடுகளை உருவாக்குவதற்கான சிறந்த வழிமுறையாகும்.

எஃப்டி-க்கள், உங்கள் பணம் சேமிப்புக் கணக்கில் சும்மா கிடக்காமல், குறைந்தபட்ச வட்டியையாவது சம்பாதித்துக் கொடுப்பதை உறுதிசெய்யும்.

பாதகங்கள்: நீண்ட கால முதலீட்டுக்கு எஃப்.டி-க்கள் சிறந்த தேர்வல்ல. முதலீட்டு வரலாற்றில், பணவீக்கத்தைத் தாண்டிய வருவாயை அவை கொடுத்ததில்லை. இதன் மூலம் கிடைக்கும் வட்டி வருவாய்க்கும் வரி கட்ட வேண்டி வரும். உங்களுடைய அனைத்துத் தேவைகளுக்கும் எஃப்.டி-க்களை மட்டும் நம்பியிருந்தால், நீங்கள் மிகப் பெரிய தொகையைச் சேமிக்க வேண்டிய அவசியம் ஏற்படும் அல்லது உங்கள் இலக்கை நீங்கள் தவறவிட நேரிடும்.

அஷ்வினி அருள்ராஜன்
அஷ்வினி அருள்ராஜன்

தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்.பி.எஸ்)

என்.பி.எஸ் என்பது நிறுவனப் பங்குகள், கார்ப்பரேட் கடன் பத்திரங்கள் மற்றும் அரசு கடன் பத்திரங்கள் போன்றவற்றில் செய்யப்படும் கலவையான முதலீடுகளைக் கொண்ட ஓய்வூதியத் திட்டமாகும். 

இதில், ஒவ்வொன்றுக்குமான முதலீட்டு ஒதுக்கீடு எவ்வளவு என்பதை நீங்களே முடிவு செய்யலாம் அல்லது உங்களுக்கான முதலீட்டு ஒதுக்கீட்டைத் தேர்வு செய்யவும் அனுமதிக்கலாம்.

நீங்கள் 60 வயதை அடையும்போதோ அல்லது கணக்குத் தொடங்கியதிலிருந்து 10 ஆண்டுகள் ஆகும்போதோ, எது முன்கூட்டி வருகிறதோ அப்போது உங்கள் ஓய்வூதியத் திட்டம் முதிர்வடையும். அந்தச் சமயத்தில், நீங்கள்  செலுத்திய மொத்தத் தொகையிலிருந்து 60% வரை திரும்ப எடுத்துக்கொள்ளலாம். மீதமுள்ள  தொகை கட்டாய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும். முதிர்வுக் காலத்துக்கு முன்னரே குறிப்பிட்ட ஒரு தொகையை எடுப்பது சாத்தியம்தான் என்றாலும், அதற்கு ஏராளமான விதிமுறைகள் உள்ளன.

சாதகங்கள்: என்.பி.எஸ் முதலீட்டுக்கு 80 சிசிடி பிரிவின்கீழ் ரூ.50,000 கூடுதலான வரிக்கழிவு உண்டு. பி.பி.எஃப்-ஐ போன்றே, நீண்ட கால லாக்இன் பீரியடைக் கொண்டிருப்பதால், ஓய்வூதிய நிதி ஓரிடத்தில் இருக்கும்.

பங்குகளுக்கான முதலீட்டு ஒதுக்கீட்டைக் கூடுதலாக்கினால்,  பி.பி.எஃப் அல்லது இ.பி.எஃப் உடன் ஒப்பிடுகையில், உங்கள் வருவாயை அதிகப்படுத்த அது உதவும்.

பாதகங்கள்: முதலீட்டு ஒழுக்கம் கொண்ட முதலீட்டாளர்களுக்கு, இதுபோன்ற கட்டுப்பாடுகள் தேவையில்லை என்பதால்,  என்.பி.எஸ் திட்டம்கூட சற்று கடினமானதுதான்.

இந்தத் திட்டத்தில் சேர்த்த பணமானது முதிர்வுக் காலத்தில் கட்டாயமாக ஓய்வூதியத்துக்கு மாற்றப்படும். முதலீட்டின் 40% தொகைக்கு வரிச் சலுகையோ அல்லது கவர்ச்சிகரமான வருவாயோ கிடையாது.

தங்கம்

தங்கம், சேமிப்புக்கான சிறந்த வழிமுறைகளில் ஒன்றாகக் காலங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பிசிக்கலாக தங்கம் வாங்குவது என்பது ஒரு முதலீடே அல்ல. ஏனெனில், அதன் தரம், பாதுகாப்பாக வைப்பதற்கான செலவுகள், சேதாரம் மற்றும் பணமாக்குதல் போன்ற பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியதுள்ளன. எனவே, தங்கப் பத்திரத் திட்டம் மிகவும் நல்லது. விலை ஏறும்போது அதைப் பணமாக்க விரும்பினால், எளிதில் பணமாக்கிக்கொள்ள முடியும். தங்கத்தைப் பொருளாக வைத்திருக்கும் போது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் தங்கப் பத்திரத் திட்டத்தில் இருக்காது.

கோல்டு இ.டி.எஃப் மற்றும் கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளும் இதில் அடங்கும். அரசாங்கம் வெளியிடும் தங்கக் கடன் பத்திரம்கூட (சாவரின் கோல்டு பாண்டு), தங்கத்தில் முதலீடு செய்வதற்கான இன்னொரு வழியாகும். கூடவே அதில் ஒரு சிறிய வட்டியும் (ஆண்டுக்கு 2.5%), நீண்ட காலத்தில் வரிச் சலுகை பயன்களும் கிடைக்கும். 

gold
gold

சாதகங்கள்: நிறுவனப் பங்குகள் விலைகளுடன் மிகக் குறைந்த அளவிலான தொடர்பே உள்ளது. அத்துடன் பணவீக்கத்துக்கு எதிரான அதன் செயல்பாடு, சந்தை அபாயத்துக்கு எதிரான ஒரு நல்ல பாதுகாப்பைக் கொண்டுள்ளது.

பாதகங்கள்: ஒரு முதலீடாக, உங்களுடைய ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோவில் தங்கம் சிறிய அளவிலேயே வருவாயைக் கொடுக்கும். அதன் விலையானது சர்வதேச பங்குச்சந்தை சென்டிமென்ட்கள் மற்றும் சந்தை நிலவரத்தின் அடிப்படையில் மட்டுமே நகரும். தங்கத்தின் விலையானது நீண்ட காலத்துக்கு அப்படியே தேக்க நிலையில்கூட இருக்கக்கூடும்.

நிறுவனப் பங்குகள்

ஒரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வதன்மூலம், நீங்கள் அந்த நிறுவனத்தின் பங்குதாரராகி விடுகிறீர்கள். அந்த நிறுவனத்தின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் அதன் பங்கு விலையின் உயர்வுக்கேற்ப, உங்கள் வருவாய் அதிகரிக்கும். இந்த வருவாய்க்கு உச்சவரம்பு எதுவும் இருக்காது என்பதுடன், பங்கு விலைகளும் பல மடங்கு அதிகரிக்கலாம். எனவே, ஒரு சிறிய தொகை, மிகப் பெரிய தொகையாக வளரும். இந்தப் பங்கு  முதலீட்டில் ஈடுபட டீமேட் கணக்கு இருப்பது அவசியம்.
 
சாதகங்கள்: இந்திய மற்றும் உலக முதலீட்டு வரலாற்றில், பங்குகள்தான் மிக அதிக வருவாயைக் கொடுத்த சொத்து வகையாக உள்ளது. அதிக வருவாய் என்பதன் அர்த்தம், நீங்கள் குறைந்த அளவிலான தொகையை முதலீடு செய்தாலும், உங்கள் சேமிப்புத் திறன் குறைவாக இருந்தாலும் கூட, ஒரு மிகப் பெரிய கார்ப்பஸ் (தொகுப்பு நிதி) இலக்கை உங்களால் அடைய முடியும்.

பாதகங்கள்: முதலீட்டுக்கான சரியான பங்குகளைத் தேர்ந்தெடுப்பது என்பது அதிக ரிஸ்க்கான விஷயம். அதற்குச் சந்தை குறித்த நிபுணத்துவம் தேவை. பங்குகள் விலை மிகவும் ஏற்ற இறக்கம் கொண்டது என்பதால், அதன் விலை, சமயங்களில் வயிற்றைக் கலக்கும் வகையில் இறக்கத்துக்கு உள்ளாகலாம். எனவே, ரிஸ்க் எடுக்கும் மனோபாவமும், பங்குகளை விற்று விடாமல் அதைத் தொடர்ந்து வைத்திருக்கக் கூடிய மனஉறுதியும் தேவை.

Share Market Doubts
Share Market Doubts

மியூச்சுவல் ஃபண்டுகள்

மியூச்சுவல் ஃபண்ட் என்பது பங்குகள், கடன் பத்திரங்கள் அல்லது தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்யக்கூடிய ஒரு தொகுப்பு முதலீட்டு வாகனம் ஆகும். இதை முதலீட்டு நிபுணர்கள் நிர்வகிக்கின்றனர். முதலீடுகளுக்கான தேர்வையும், அவற்றை நிர்வகிப்பதையும் ஃபண்ட் மேனேஜர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். இதற்கு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை வாங்குகின்றன. கடைசியில், எந்த வகையான சொத்தில் நீங்கள் முதலீடு செய்திருக்கிறீர்களோ, அதுதான் வருவாயைத் தீர்மானிக்கிறது.  

பொதுவாக, பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் என்பது சந்தையுடன் தொடர்புடையதாக இருக்கும். அதே சமயம், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்மூலமான வருவாய், வைப்பு நிதி வருவாயைக் காட்டிலும் சிறிது அதிகமாக இருக்கும்.

சாதகங்கள்: மியூச்சுவல் ஃபண்டுகள், பங்கு மற்றும் கடன் சார்ந்த சந்தைகளின் நிபுணர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. பல்வேறு வகையான மியூச்சுவல் ஃபண்டுகள் என்பதன் அர்த்தம், உங்கள் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கேற்ற ஒரு நிதித் திட்டத்தை நீங்கள் கண்டறிய முடியும் என்பதுதான்.

ஓப்பன் எண்டட் ஃபண்டுகளானது நீங்கள் எந்த நேரத்திலும் அதிலிருந்து வெளியேறக்கூடிய  வசதியைக் கொண்டுள்ளதுடன், தேவைக்கேற்றவாறு முதலீட்டு உத்திகளை மாற்றிக்கொள்ளக் கூடியதாகவும் உள்ளன. வங்கி அல்லது கார்ப்பரேட் எஃப்.டி-க்களைக்காட்டிலும் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான வரி குறைவாகவே உள்ளது.

பாதகங்கள்: அதேசமயம், முதலீடுகளை இப்படி விருப்பத்துக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தாவிட்டால், அது பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும். 

எளிதாக வெளியேறுதல், லாக்இன் பீரியட் இல்லாத மியூச்சுவல் ஃபண்டுகளை,  ஒருவேளை சரியான நோக்கத்துக்குப் பயன்படுத்தாவிட்டால், அது நீண்ட கால வருவாயில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். மியூச்சுவல் ஃபண்டுகள், நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறதா  என்பதை உறுதி செய்துகொள்ள, நீங்கள் அவ்வப்போது கண்காணித்து வர வேண்டும்.

நீங்கள் எதைப் பரிசீலிக்க வேண்டும்?

தற்போது பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் குறித்த அம்சங்களை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்பதால், உங்களுக்குப் பொருத்தமான முதலீடு எதுவாக இருக்கும் என்பதை நீங்களே கண்டறியலாம். இதற்கு உங்களது தேவைகள் மற்றும் உங்களது ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகிய இரண்டு முக்கிய விஷயங்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

முதலில், ரிஸ்க் என்றால் என்ன என்பதை நாம் புரிந்துகொள்வோம். வருவாய் உத்தரவாதமின்மையும், இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் கொண்டதுதான் ரிஸ்க். உதாரணமாக, எந்தவொரு பங்கு சார்ந்த முதலீட்டின் வருவாயும் ஏற்ற இறக்கத்துடனேயே  இருக்கும். அதுகுறித்து முன்கூட்டியே எதுவும் சொல்ல முடியாது. அதேசமயம், பி.பி.எஃப் மற்றும் நிரந்தர வைப்பு நிதி போன்ற கடன் சார்ந்த திட்டங்கள், ரிஸ்க் குறைவானதாகவும், வருவாயை முன்கூட்டியே கணிக்கக்கூடியதாகவும் உள்ளன.

Investment Options
Investment Options

இவையெல்லாவற்றையும்விட, வருவாய் ஏற்ற இறக்கத்தின் போதும், அதிக ரிஸ்க் மற்றும் இழப்புகளின்போதும் மனஉறுதியுடன் இருக்கும் திறன் கொண்டவராகவும் நீங்கள் இருக்க வேண்டும். ஆனால், அதிக ரிஸ்க்கை நீங்கள் ஏன் எடுக்க வேண்டும்? 

ஏனெனில், அதிக ரிஸ்க் கொண்ட வர்த்தகப் பரிமாற்றம், அதிக வருவாயையும் கொடுக்கும். ஆகவே, பங்கு சார்ந்த (பங்குகள் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்) முதலீடு ரிஸ்க்கானது. அதேசமயம், நீண்ட காலத்தில் கிடைக்கும் வருவாய் அந்த ரிஸ்க்கை ஈடுசெய்துவிடும். அதே சமயம், கடன் சார்ந்த (எஃப்.டி-க்கள், பி.பி.எஃப், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்) முதலீடு ரிஸ்க் குறைவானது என்பதால், வருவாயும் குறைவாகவே இருக்கும். 

இரண்டாவதாக, உங்களது தேவைகள். உங்கள் பணத் தேவைக்கான நோக்கத்தின் அடிப்படையில் உங்களுடைய தேவைகள் குறித்து நீங்கள் முடிவெடுக்கலாம். குறுகிய காலத்துக்கானது, நீண்ட காலத்துக்கானது என இதை இரண்டு வகைகளாகப் பிரித்து முதலீடு செய்யலாம்.

இதை எளிதாகச் சொல்வதானால், ஏழு ஆண்டுகளுக்கு மேலானதை நீண்ட கால முதலீடாகக் கருதலாம். நோக்கம் எதுவுமில்லாமல், உங்கள் தேவைகள் போக உபரியாக உள்ள பணத்தைச் சேமிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் எனில், அந்தப் பணம் உடனடிப் பயன்பாட்டுக்கானது இல்லை எனலாம்; நீண்ட கால முதலீடாகவே அதைக் கருதலாம். 

உங்கள் விருப்பத்துக்குரிய முதலீட்டை எப்படித் தேர்வு செய்வது?

இதற்கு இரண்டே எளிய விதிமுறைகள்தான் உள்ளன. ஒன்று, நீண்ட காலத்துக்கானது; அதிக ரிஸ்க் எடுத்தால் அதற்கேற்ற வருவாய் கிடைக்கும். இரண்டு, இன்னும் அதிக ரிஸ்க் எடுத்து, ஈக்விட்டி முதலீடுகளை அதிகப்படுத்தினால் அதற்கேற்ற வருவாய் கிடைக்கும்.

இங்கே சில விஷயங்களைச் சொல்லியாக வேண்டும். குறுகிய காலத் தேவைகள் மற்றும் அவசரகால நிதிக்கு, உங்களுக்கு நிலையான வருவாய் அவசியம் என்பதுடன், எளிதில் பணமாக மாற்றத்தக்கதாகவும் மற்றும் குறைந்த ரிஸ்க் கொண்டதாகவும் இருக்க வேண்டும். இதற்கு வங்கி எஃப்.டி-க்கள் அல்லது கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகியவற்றை நீங்கள் பரிசீலிக்கலாம்.

Investment (Representational Image)
Investment (Representational Image)

நீண்ட கால லாக்இன் கொண்டது என்பதால் பி.பி.எஃப் சரிப்பட்டு வராது. ஆனால், குறுகிய காலத் தேவைகளுக்கு, அது ஓராண்டுக்கோ அல்லது மூன்றாண்டுகளுக்கோ, வருவாய் எவ்வளவு கவர்ச்சிகரமாக தெரிந்தாலும் ஈக்விட்டி சார்ந்த முதலீட்டுத் திட்டங்களைப் பயன்படுத்தாதீர்கள்.

நீண்ட கால அல்லது ஐந்தாண்டு கால வரையறை அடிப்படையில் சொத்து உருவாக்குவதில், அதிக வருவாய் தரக்கூடிய பங்கு சார்ந்த முதலீடுகளையும் சேர்த்துக்கொண்டால், உங்களால் அதிக சொத்துகளைச் சேர்க்க முடியும். அது என்.பி.எஸ் மூலமாகவோ அல்லது மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது நேரடிப் பங்குகள் மூலமாகவோ இருக்கலாம்.

அதேசமயம், பங்கு சார்ந்த முதலீடுகளை, நீண்ட கால அடிப்படையிலும், சந்தைக்கு வசதியாகவும் அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். ஐந்தாண்டு காலத்துக்கு மேற்பட்ட முதலீடுகளில், உங்களது ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து, 60% - 80% வரை பங்கு சார்ந்த முதலீடுகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

அதேசமயம், உங்கள் அனைத்து முதலீடுகளையும் பங்குகளில் முதலீடு செய்துவிட வேண்டாம். அப்படிச் செய்தால், அது உங்களது ஒட்டுமொத்த முதலீட்டு போர்ட்ஃபோலியோவையும் மிக அதிக ரிஸ்க் கொண்டதாகவும், கட்டுப்பாடற்ற ஏற்ற இறக்கம் கொண்டதாகவும் ஆக்கிவிடும்.

முதலீட்டு நோக்கத்திலான இன்ஷூரன்ஸ் திட்டங்களில் பெரிய வருவாய் எதுவும் இருக்காது என்பதால், இந்தப் பட்டியலிலிருந்து அவற்றை நீங்கள் நீக்கிவிடலாம். அதற்குப் பதிலாக போதுமான அளவில் டேர்ம் இன்ஷூரன்ஸ் ( உங்கள் ஆண்டு வருமானத்தில் குறைந்தது 10 மடங்கு தொகையை காப்பீடாக எடுக்க வேண்டும்) மற்றும் மருத்துவக் காப்பீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

மேலே சொல்லப்பட்டுள்ள  முதலீட்டுத் திட்டங்களில், எதில் முதலீடு செய்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டால், இந்தத் திட்டங்களில்  எவ்வளவு வருவாய் கிடைக்கிறது, எந்த அளவுக்கு ரிஸ்க் உள்ளது, முதலீட்டின்மூலம் சிறப்பான வருமானம் பெற எவ்வளவு காலம் முதலீடு செய்ய முடியும் எனப் பல விஷயங்களைப் பார்க்க வேண்டும்.

அதற்குப் பிறகு, உங்களுக்கென ஒரு அஸெட் அலோகேஷனை உருவாக்கி,  உங்களுடைய தேவைகளுக்கு ஏற்றபடி போர்ட்ஃபோலியோவை உருவாக்கிக்கொள்வது புத்திசாலித்தனம்!
 
தமிழில்: பா.முகிலன்

- அஷ்வினி அருள்ராஜன், பங்குச் சந்தை பகுப்பாளர்
அடுத்த கட்டுரைக்கு