Published:Updated:

`பணத்தோடு உணர்வுகளையும் கட்டுப்படுத்த வேண்டும்!' வாரன் பஃபெட்டின் சக்சஸ் ஃபார்முலா

Warren Buffett
Warren Buffett ( AP / Nati Harnik )

உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் மானசீக குருவாக இருக்கும் வாரன் பஃபெட் ஆகஸ்ட் 30-ம் தேதி அன்று தனது 90-வது வயது பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறார். அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே...

11 வயதில் பங்குச் சந்தை முதலீட்டைத் தொடங்கினார் வாரன் பஃபெட் என்பது பலரையும் ஆச்சர்யப்பட வைக்கும் செய்தி. அதைவிட ஆச்சர்யமான செய்தி, பங்குச் சந்தையில் வந்த வருமானத்துக்கு 13 வயதில் வருமான வரி கட்டினார் என்பது.

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை அளிக்கும் தகவல்படி, 8,600 கோடி டாலர் சொத்து மதிப்பு உடையவர் வாரன் பஃபெட். ஆனால், தன்னுடைய சொத்தில் 99 சதவிகிதத்தைத் தானமாக வழங்க உறுதி அளித்திருக்கிறார். 90 வயதானாலும் இன்றைக்கும் முதலீடு தொடர்பான விஷயங்களில் தெளிவாக முடிவெடுக்கிறார் வாரன் பஃபெட். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முதலீட்டுப் பாடங்கள் நிறைய உள்ளன. அவற்றில் சிலவற்றை இப்போது நாம் பார்ப்போம்.

புரியாத தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம்

புரியாத தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம் என்பது வாரன் பஃபெட் சொல்லித் தரும் முக்கியமான பாடமாகும். இதுவரை தனக்கு நன்கு புரிந்த துறையில் மட்டுமே பஃபெட் முதலீடு செய்திருக்கிறார். புரிந்த துறையில் முதலீடு செய்யும்பட்சத்தில் அந்தத் துறையில் நடக்கும் மாற்றங்கள் மூலம் தொழிலின் சாதக, பாதங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்பது வாரன் பஃபெட்டின் கருத்தாகும்.

இந்த ஒரு காரணத்தினால்தான் முன்பு டெக்னாலஜி பங்குகளில் அவர் முதலீடு எதையும் செய்யவில்லை. காரணம், தனக்கு டெக்னாலஜி துறை பற்றி எதுவும் தெரியாது என்று நினைத்ததுதான். இதனால் பல ஆயிரம் கோடி டாலரை லாபமாக ஈட்டும் வாய்ப்பை அவர் இழந்திருக்கிறார். என்றாலும், அதற்காக அவர் ஒருபோதும் வருந்தியதில்லை. தற்போது அவர் ஆப்பிள் பங்குகளில் கணிசமாக முதலீடு செய்திருக்கிறார். ஆப்பிள் முதலீடு அவருக்குக் கணிசமான லாபத்தைத் தந்திருப்பது நிஜம்.

பணம் முக்கியம் பாஸ்!

எப்போதும் பணம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துபவர் வாரன் பஃபெட். இப்படிச் சொல்வதற்கு இரண்டு காரணம். ஒன்று, பணம் இருந்தால் எதிர்பாராத நஷ்டங்களில் இருந்து தப்பிக்க முடியும். இரண்டாவது, பணம் இருந்தால்தான் புதிய முதலீடுகள் குறித்து யோசிக்க முடியும். இருக்கும் பணத்தை மொத்தமாக முதலீடு செய்துவிட்டால் அதன்பிறகு புதிய முதலீட்டுக்கு வாய்ப்பு கிடைக்காது. சந்தையில் எப்போதும் வாய்ப்புகள் உருவாகும் என்பது அவரின் கொள்கையாகும். முதலீட்டுக்கு மட்டுமல்ல; தனிப்பட்ட வாழ்க்கைக்கும் ஓரளவுக்கு பணத்தைக் கையில் வைத்திருப்பது மிகவும் அவசியம்.

பேராசை மற்றும் உற்சாகம்

சந்தையில் முதலீடு செய்வதற்கு எப்படி அறிவு, பணம் தேவையோ... அதேபோல உணர்வுகளையும் கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். அடுத்தவர் பேராசையுடன் சந்தையை அணுகும்போது சந்தையில் இருந்து நாம் வெளியேற வேண்டும். அடுத்தவர்கள் சந்தையில் இருந்து விலகி வேறு வாய்ப்புகளைத் தேடும்போது சந்தைக்குள் நாம் நுழைய வேண்டும். கேட்பதற்கு எளிதாக இருக்கும் இந்த யோசனையைச் செயல்படுத்துவது கடினம். காரணம், நாம் சந்தையின் மனநிலையிலே இருக்க விரும்புவோம்.

கடந்த மார்ச் மாதம் இந்தியப் பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. நம் கண்ணுக்குத் தெரிந்து பல முதலீட்டாளர்கள் நஷ்டத்துடன் பங்குகளை விற்றனர். ஆனால், அந்தச் சமயத்தில் துணிந்து முதலீடு செய்தவர்கள் இப்போது 30% லாபத்தில் இருக்கிறார்கள். கடந்த பல மாதங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட பில்லியன் டாலர் பணத்தை வைத்திருந்த வாரன், சந்தை இறங்கிய பிறகு முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறார். இப்படி பணத்தோடு உணர்வுகளையும் கட்டுப்படுத்த தெரியவேண்டும்.

வாரன் பஃபெட்..!
வாரன் பஃபெட்..!

நீண்ட கால முதலீடு

தற்போது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு சரியான உதாரணம் வாரன் பஃபெட்தான். தற்போது புதிதாக முதலீட்டைத் தொடங்கும் முதலீட்டாளர்களுக்கு ஓர் ஆண்டு என்பதே பெரிய சாதனையாக இருக்கும்பட்சத்தில், 20 ஆண்டுகளுக்கு மேலே சில பங்குகளை பஃபெட் முதலீட்டைத் தொடர்ந்து வருகிறார். அடுத்த பத்தாண்டுகளுக்கு முதலீட்டைத் தொடர்வதாக இருந்தால் மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்பார் அவர். நாம் சில சதவிகிதப் பங்குகளை வாங்குவதாக இருந்தாலும் முழுமையான நிறுவனத்தை வாங்கும்போது எவ்வளவு எச்சரிக்கையாக இருப்போமோ, அந்த அளவுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த நிறுவனம் சார்ந்த அனைத்துத் தகவல்களையும் நாம் முழுமையாகப் படித்துப் புரிந்துகொண்டு முடிவெடுக்க முடியும் என்பார்.

இது பங்குச் சந்தையின் வடிவமைப்பு என்பது பஃபெட்டின் பிரபலமான வாசகம்.

பொறுமையில்லாமல் இருப்பவர்களிடமிருந்து பொறுமையாக இருப்பவர்களுக்கு லாபம் கைமாறும்.
வாரன் பஃபெட்

டைவர்சிஃபிகேஷன் தேவையில்லை

முதலீட்டாளர்கள் பலரும் பல நிறுவன பங்குகளில் முதலீடு செய்திருப்பார்கள். கேட்டால், ரிஸ்க்கை குறைக்கிறோம் என்று சொல்வார்கள்.

``ஒரு பங்கின் மீது நம்பிக்கையில்லாமல் முதலீடு செய்துவிட்டு உங்கள் அறியாமையை மறைக்க டைவர்சிஃபிகேஷன் என்று சொல்லாதீர்கள்’’ என பஃபெட் கூறுவார்.

அதிக நிறுவனங்களில் முதலீடு செய்வது பைத்தியகாரத்தனம் என அவர் கடுமையாக விமர்சனம் செய்வது உண்டு. அதற்காக பஃபெட் ஒரே பங்கில் மொத்த முதலீட்டையும் செய்ய சொல்லவில்லை. அதிக எண்ணிக்கையில் அதிக துறைகளில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும் என்பதே பஃபெட்டின் ஆலோசனையாகும்.

பங்குச் சந்தை பாலபாடங்களை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லி, பங்கு முதலீட்டின் மூலம் அவர்களையும் பணக்காரர்களாக மாற்ற நினைக்கும் வாரன் பஃபெட் 100 ஆண்டுகளைக் கடந்தும் வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்..!

Happy Birthday to Warren Buffett..!

அடுத்த கட்டுரைக்கு